இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சித்தார்த். இவர் நடிகர் என்பதை தாண்டி பின்னணி பாடகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் பல்வேறு தளங்களிலும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சித்தார்த்தின் திரை வாழ்க்கை என்பது பல்வேறு ஏற்ற இறக்கங்களை கொண்டதாகவே இன்று வரை இருந்து வருகிறது. ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் முன்னாவாக நமக்கெல்லாம் திரையில் அறிமுகமான சித்தார்த், தற்போது தனது சொந்த தயாரிப்பில் சித்தாவாக வந்து பலரது மனங்களையும் கவர்ந்துள்ளார். கதாநாயகன், காதலன், சாக்லேட் பாய், நண்பன் என்று பல பரிமாணங்களில் திரையில் தோன்றி நம்மை ரசிக்க வைத்தவர், முதன் முறையாக சித்தப்பாவாக அதாவது ஒரு பெண் குழந்தைக்கு தாயுமானவனாக புது பரிமாணத்தில் தோன்றி அதிலும் முத்திரை பதித்துள்ளார். இந்நிலையில் இன்று சித்தாவாக நடிப்பில் மிளிர்ந்துள்ள சித்தார்த்தின் திரைப்பயணம், ஒரு நடிகராக, தயாரிப்பாளராக அவர் கண்ட வெற்றி, தோல்விகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்….

சித்தார்த்தின் ஆரம்ப கால வாழ்க்கை

1979இல் சென்னையில் சூரியநாராயணன் என்பவருக்கு மகனாக பிறந்தவர்தான் சித்தார்த். இவருக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. இருப்பினும் படிப்பு என்பது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்திருந்த சித்தார்த் சென்னையில் உள்ள டிஏவி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்ததோடு, பின்னர் டெல்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இதனையடுத்து டெல்லி கிரோரி மால் என்ற கல்லூரியில் சேர்ந்து, அங்கு இளங்கலையில் பி.காம் ஹானர்ஸ் மற்றும் மும்பை எஸ்பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார்.

அதற்கு முன்னதாக இளங்கலை படிக்கும் போதே, ​​நண்பர்களுடன் சேர்ந்து நாடகக் குழு ஒன்றை ஆரம்பித்து மேடை நாடகங்களை நடத்தி வந்தவர், அதில் தானும் ஒரு அங்கமாக நடித்து வந்தார். இதன் மூலமாகத்தான் தனது நடிப்புத் திறனை மேம்படுத்தினார். இது தவிர கல்லூரியில் படிக்கும் காலங்களிலேயே, கல்லூரிகள் அளவில் நடத்தப்படும் பேச்சு போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறந்த பேச்சாளராக விளங்கியது மட்டுமின்றி அதற்காக பல விருதுகளையும் பெற்று வந்துள்ளார்.


இளமைக் காலங்களில் நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமாவில் என்ட்ரி

கல்லூரி படிப்பை முடித்த கையோடு சினிமாவுக்குள் நுழைய முடிவு செய்த சித்தார்த், நடிப்பை தேர்ந்தெடுக்காமல், இயக்கம் என்ற துறையை தேர்ந்தெடுத்தார். அதற்காக தன் மானசீக குருவாக மிகவும் நேசித்த இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அப்படி மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது தனது குருநாதர் கேட்டுக்கொண்டதற்காக 2002ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் பேருந்து பயணியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு தான் ‘பாய்ஸ்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் எழுத்தாளர் சுஜாதா தான். தானும் தன் குருநாதர் மணிரத்னம் போல் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருந்த சித்தார்த் முதலில் தேடி வந்த அந்த கதாநாயகன் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம். ஆனால் சித்தார்த் ஏற்கனவே சுஜாதா குடும்பத்திற்கு நன்கு பரிச்சயமான நபராக இருந்தால், சுஜாதா மனைவியின் வற்புறுத்தலின் பேரில் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். பின்னர் தனது குருநாதரின் அனுமதி பெற்று ‘பாய்ஸ்’ படத்தின் மூலமாக 2003-ல் திரைத்துறைக்குள் வந்தவர், அப்படத்திலேயே ஷங்கரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றிக் கொண்டு 5 நாயகர்களில் ஒருவராக முதன்மையான பாத்திரத்தில் நடித்தார். இதன்முலம் பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறிப்போன சித்தார்த், ‘பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவதாக 2004-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மல்டி - ஸ்டார் திரைப்படமாக வெளிவந்த ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் திரிஷாவிற்கு ஜோடியாக நடித்தார். இப்படமும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத்தந்தது.


நடிகர் சித்தார்த் இயக்குனர் மணிரத்னத்துடன் பணியாற்றிய படங்களின் காட்சிகள்

தெலுங்கில் உச்சத்திற்கு சென்ற சித்தார்த்…

தமிழில் முதல் இரண்டு படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சித்தார்த் அங்கும் முதல் படத்திலேயே வெற்றி முத்திரையை பதித்தார். 2005 ஆம் ஆண்டு நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா முதல் முறையாக இயக்குனராக அறிமுகமான ‘நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டனா’ என்ற படத்தில் சித்தார்த்தும் கதாநாயகனாக அறிமுகம் ஆக இப்படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தினை தான் அடுத்த ஆண்டே இயக்குனர் மோகன் ராஜா தமிழில் தனது தம்பியான ஜெயம் ரவி மற்றும் திரிஷாவை வைத்து ‘உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் ’ என்ற பெயரில் எடுத்தார். இதையடுத்து தெலுங்கு திரையுலகில் இருந்து சித்தார்த்தை நோக்கி நிறைய பட வாய்ப்புகள் வர, அங்கு பெண்களின் கனவு நாயகனாகவும், சாக்லேட் பாயாகவும் வலம் வர ஆரம்பித்தார். இந்த நேரம் தெலுங்கில் வெளிவந்த ‘பொம்மரிலு’ திரைப்படம் இவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல, ஹிந்தி திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு அவரை தேடி வர ஆரம்பித்தது. குறிப்பாக 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ரங் தே பசந்தி’ என்ற இந்தி படத்தில் அமீர்கான் மற்றும் சோஹா அலி கான் ஆகியோருடன் இணைந்து ‘பகத்சிங்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்த சித்தார்த் அன்று பலரின் கவனத்தையும் பெற்றார் . மேலும் இப்படங்கள் அனைத்திலும் தனது சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் அள்ளிக் குவித்தார்.


பல்வேறு மொழிப் படங்களில் காட்சியளிக்கும் சித்தார்த்

தயாரிப்பாளர் அவதாரம்

தெலுங்கு, ஹிந்தி என்று மாறி மாறி மிகவும் பிஸியாக நடித்து வந்த சித்தார்த், அங்கு கிடைத்த வரவேற்பால் தமிழ் பக்கம் தலை காட்டாமல் இருந்தார். இருந்தும் அந்த பரபரப்பான நேரத்தில் அவர் மனதில் என்ன தோன்றியதோ திடீரென மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி சாதிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 6 வருட இடைவெளிக்குப் பிறகு ‘180’ என்ற படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தார். படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாவிட்டாலும், வித்தியாசமான கதைக்களம் கொண்டதால் ஓரளவிற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது. இதுவரை நடிகர், கதாசிரியர், பாடகர் என்று பல அவதாரங்கள் எடுத்தவர் முதல் முறையாக தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். அதன்படி இடாகி எண்டெர்டைன்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அதில் முதல் படமாக பாலாஜி மோகன் இயக்கத்தில், அமலாபாலுடன் இணைந்து ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தினை எடுத்தார். இப்படம் விமர்சனரீதியாக இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என்று மாறி மாறி நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் தமிழில் இவர் நடித்து வெளிவந்த ‘ஜிகர்தண்டா’, ‘காவியத்தலைவன்’, ‘எனக்குள் ஒருவன்’, ‘அரண்மனை 2’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘அவள்’, போன்ற படங்கள் இவருக்கு ஓரளவு வெற்றிப்படங்களாக அமைந்தன. இதில் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ஜில் ஜங் ஜக் , அவள், தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சித்தா’ ஆகிய படங்கள் இவர் சொந்த தயாரிப்பில் வெளிவந்து வெற்றி தந்த படங்கள் ஆகும்.


வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த சித்தார்த்

சித்தார்த் சித்தாவாக மாறியது எப்படி?

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து முகத்தில் அறைந்தாற் போல் பேசும் படைப்பாக வெளியாகியிருக்கிறது சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம். இதே கதைக்களத்தில் தான் நடிகை சாய் பல்லவி நடிப்பில், கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘கார்கி’ என்ற படமும் வெளியாகி பலரது மத்தியிலும் கவனம் பெற்றது. ‘சித்தா’ படத்தில் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் வரும் சித்தார்த் ஒரு சூழ்நிலையில் அண்ணனை இழந்ததால் மொத்த குடும்ப பொறுப்பையும் ஏற்று தன் அண்ணி மற்றும் அண்ணன் மகளுடன் மதுரையில் ஒரு சிறு நகரத்தில் வசித்து வருகிறார். அப்போது தன் அண்ணன் மகளின் பள்ளி தோழியால் ஒரு பெரிய சிக்கல் வருகிறது. அந்தப் சிக்கலில் இருந்து மீண்டு வரும் நேரத்தில், தன் அண்ணன் மகளுக்கு நடக்கும் சில தவறான நிகழ்வுகளால் மனமுடைந்து போகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘சித்தா’ படத்தின் கதை . இந்த படத்தினை ’பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ என வெவ்வேறு பாணியில் திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார். சித்தார்த் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு பலரின் உள்ளங்களையும் பதற வைத்துள்ளது.


'சித்தா' திரைப்படத்தில் அண்ணன் மகளுடன் சித்தார்த்

இப்படம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய நடிகர் சித்தார்த், “இது என்னுடைய முதல் படம். நான் அப்படி சொல்வதற்கு காரணம் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை உண்மை மாறாமல் அப்படியே எடுத்துள்ளோம். இப்படத்திற்காக இரண்டு வருடம் மெனெக்கெட்டு உள்ளோம். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக எந்தவித சமரசமும் இல்லாமல் உண்மையை மட்டுமே படமாக்க வேண்டும் என நினைத்தேன். அதன்படி படத்தினை எடுத்திருக்கிறேன். எனது இந்த முதல் படத்தினை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. ‘சித்தா’ படத்தினை பார்த்துவிட்டு எனது குருநாதர் மணிரத்னமும், எனது இன்னொரு மானசீக குருவான கமல்ஹாசனும் என்னை வெகுவாக பாராட்டினார்கள்” என்று கூறியிருந்தார். இப்படி அனைவரின் பாராட்டைப் பெற்று வரும் ‘சித்தா’ திரைப்படம் சித்தார்த்திற்கு மற்றுமொரு வெற்றி மகுடமாக அமைந்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.

Updated On 9 Oct 2023 6:58 PM GMT
ராணி

ராணி

Next Story