
(24-02-1974 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
சிவாஜி கணேசனை கடுமையாகத் தாக்கி, எம். ஜி. ஆர். பேசினார்.
“சுபாஷ் சந்திர போஸ் ரோட்டில் நாம் எப்படி எப்படி இருந்தோம் என்பதையெல்லாம் நான் வெளியிடும் அளவுக்கு என்னை வம்புக்கு இழுக்காதே!" என்று எம். ஜி. ஆர். கூறினார்
செங்கல்பட்டில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் பேசுகையில் எம். ஜி. ஆர்., சொன்னதாவது:-
பழைய கதை
“1943-ம் ஆண்டில் இருந்து எனக்கு சிவாஜியை தெரியும், 1944-ல் நான் 'ராஜகுமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தேன். அப்பொழுது சிவாஜி நாடக மேடைகளில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். 'பராசக்தி' படத்தில்தான் சிவாஜி முதல் முதலாக நடித்தார். அதற்கு உதவி செய்தவர் அண்ணாதுரைதான். அந்தப் படத்தில் நடிக்க சிவாஜி ரூ. 75 ஆயிரம் வாங்கினார். மாடர்ன் தியேட்டர்சாரின் 'திரும்பிப்பார்' படத்தில் நடிக்க சிவாஜி சேலத்துக்குப் போக வேண்டியிருந்தது. நான்தான் எனது காரைக் கொடுத்து, அவரை சேலத்துக்கு அனுப்பி வைத்தேன். தி. மு. க.வில் சேர்ந்து, சிவாஜி கணேசன் புகழ் பெற்றார். பிறகு கட்சியை விட்டு வெளியேறினார்.
'பராசக்தி' படத்தில் சிவாஜி நடிக்க உதவியவர் அண்ணாதான் - எம்.ஜி.ஆர்.
எதிரியா?
சிவாஜியை நான் எதிரியாகக் கருதுகிறேனாம். எதிரியாகக் கருத அவரிடம் என்ன இருக்கிறது?
படத்தில் நடிக்க, நான் வாங்கும் பணத்தில் முக்கால்வாசி பணம்கூட சிவாஜிக்குக் கிடைப்பது இல்லை.
என்னுடன் போட்டி போட்டு நடித்து, சினிமா உலகில் இருந்து என்னை விரட்ட இவரால் முடியாது.
நான் சொந்தப் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறேன். இதிலும் சிவாஜி என்னோடு போட்டி போட முடியாது. வசூலிலும் என் படங்களை சிவாஜி படங்கள் மிஞ்சுவது இல்லை. பிறகு ஏன் இவரை என் எதிரியாகக் கருதப்போகிறேன்?
சுபாஷ் ரோட்டில்
இனிமேலாவது இப்படி பேசுவதை சிவாஜி நிறுத்த வேண்டும். சுபாஷ் சந்திர போஸ் ரோட்டில் நாம் (சிவாஜியும், எம். ஜி. ஆரும்) எப்படி எப்படியெல்லாம் இருந்தோம் என்பதைச் சொல்லும் அளவுக்கு என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம். சிவாஜிக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஒரு நல்ல தமிழ் நடிகர் இப்படி கெட்டுப்போகிறாரே என்று வேதனைப்படுகிறேன். அவர் திருந்தட்டும் இனியாவது” என்று எம். ஜி. ஆர். கூறினார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். & நடிகர் திலகம் சிவாஜிகணேசன்
சிவாஜி எச்சரிக்கை!
உனது வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன்! என்று எம். ஜி. ஆருக்கு சிவாஜி கணேசன் எச்சரிக்கை செய்தார். "நீர் யோக்கியன் என்றால், ஒரு படத்தில் நடிக்க எவ்வளவு பணம் வாங்குகிறாய் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" என்று சிவாஜி கூறினார்.
எம். ஜி. ஆரின் தாக்குதலுக்கு பதில் அளித்து, சிவாஜி கணேசன் கூறியதாவது:-
குழப்பம்:
"அண்ணன் எம். ஜி. ஆர். பலவித தொல்லைகளுக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கிறார். யார் யார் மீதோ உள்ள ஆத்திரத்தை என் மீது கொட்டியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் அப்படி இருந்தார்... இப்படி இருந்தார் என்று சொன்னால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்து, என்னைப் பற்றி ஏதேதோ சொல்லியிருக்கிறார். இதேபோல, அண்ணன் எம். ஜி. ஆர். அப்படியிருந்தார்.. இப்படியிருந்தார்... என்றெல்லாம் நானும் சொல்ல வெகு நேரம் ஆகாது. அதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவது இல்லை.
சவால்!
அண்ணன் எம். ஜி. ஆரின் மாபெரும் நடிப்பைப் பற்றி உலகத்துக்கே தெரியும். அதைப்பற்றி நான் வேறு கூற வேண்டுமா? ஆனால், அந்த நடிப்புக்கு அவர்தான் அதிகப் பணம் வாங்குவதாக அடிக்கடி சொல்லிக் கொள்ளுகிறார். நானும் அப்படித்தான் கேள்விப்படுகிறேன். எனக்கு மகிழ்ச்சியே. ஒரு படத்தில் நடிக்க உண்மையாக அவர் எவ்வளவு பணம் வாங்குகிறார் என்பதையும் பகிரங்கமாக அறிவிப்பாரேயானால், எல்லோருக்கும் சவுகரியமாக இருக்கும். சொல்லுவாரா?
அறிஞர் அண்ணாவை பின்பற்றிய இரு திலகங்கள்
அண்ணா சொன்னது!
'50 வயதுக்கு மேல் இளம் கதாநாயகிகளுடன் ஓடிப் பிடித்து காதல் செய்யாமல், வயதுக்கு ஏற்ற வேடங்களை ஏற்று நடிக்க வேண்டும்' என்று அறிஞர் அண்ணா சொன்னார். நான் அண்ணா வழியில் செல்லுகிறேன்.
ஆனால், அண்ணாவின் பெயரில் கட்சி வைத்திருப்பவர், அண்ணாவின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துகிறவர், அண்ணா வழியில் நடப்பதாகக் கூறுகிறவர், அண்ணாயிசம் பேசுகிறவர், என்ன செய்கிறார்? நான் சொல்லித்தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை.
வயதானவர்
'இனியும் என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம்' என்று எம். ஜி. ஆர். கூறியிருக்கிறார். அவரை (எம். ஜி. ஆரை) பற்றி பல பெரிய விஷயங்களைச் சொல்ல, அவர் என்னை ஆளாக்க வேண்டாம் என்று நானும் சொல்லிக் கொள்ளுகிறேன். பாவம்... அண்ணன் வயதானவர். அவருக்குள்ள குழப்பத்தில் என் மீது சாடுகிறார். நான் சிறியவன். அவரது தாக்குதலை தாங்கிக்கொள்ள எனக்கு சக்தி உண்டு."
இவ்வாறு சிவாஜி கணேசன் கூறினார்.
