இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் விஜய்

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள ‘தளபதி 68’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்த விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதை கேள்விப்பட்ட விஜய் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியவுடன் நேராக தந்தை எஸ்.ஏ.சி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு சில ஆண்டுகளாக பேசாமல் இருந்தனர். எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா சதாபிஷேக நிகழ்வில் கூட விஜய் கலந்து கொள்ளாதது பேசு பொருளாக மாறியது. பின்னர் ஷோபாவின் முயற்சியால் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கியதன் பயனாகத்தான் ‘வாரிசு’ பட விழாவில் விஜய்யின் அப்பா - அம்மா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் விஜய் தனது தந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, அவரோடு மனம் விட்டு பேசியது அம்மா ஷோபாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யும், தந்தை எஸ்.ஏ.சியும் அமர்ந்திருக்க, இருவருக்கும் இடையில் ஷோபா மகிழ்ச்சியுடன் நின்றிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளன.


விஜய்யுடன் அப்பா சந்திரசேகர், அம்மா ஷோபா

2வது திருமணத்திற்கு தயாராகும் நாக சைதன்யா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவரும், நடிகை சமந்தாவும் 5 ஆண்டுகள் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு, அக்டோபர் 06 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டது. தற்போது இருவரும் அவரவர் பாதையில் பிஸியாக பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒருபுறம் சமந்தா மயோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாக சைதன்யா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகவும், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவ்வப்போது சில தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. இந்த தகவல்களை நாக சைதன்யா முற்றிலும் மறுத்து வந்த நிலையில், திரையுலகை சாரதா தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை நாகர்ஜுனா தனது மகனுக்கு 2வது திருமணம் செய்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் தமிழில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘கஸ்டடி’ படத்தில் நடித்திருந்த நாக சைதன்யா, தற்போது தெலுங்கு படங்களிலும், ‘தூதா’ என்ற வெப் தொடரிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

அட்லீ இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படம் வெளியாகி இதுவரை 600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியால் இயக்குனர் அட்லீ மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். இந்த நிலையில் இவரைப்பற்றி ஒரு புதிய தகவலும் தற்போது உலா வருகிறது. அது என்னவென்றால் பாலிவுட் பக்கம் சென்று படம் இயக்கிய அட்லீ இப்போது டோலிவுட் பக்கம் செல்ல இருக்கிறாராம். ‘புஷ்பா’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெறப்போகும் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தான் அடுத்த படத்தினை அட்லீ இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை. அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்த படத்திற்கான கதை விவாதங்களிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அல்லு அர்ஜுனிடம் கதை சொல்ல அட்லீயும் நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.


நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லீ

கமலுடன் இணையும் ஜெயம் ரவி, துல்கர் சல்மான்…

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அவரின் 234 வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் மணிரத்னம் தற்போது பிசியாக இருக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ‘விக்ரம்’, இந்தியன் 2’ பட பாணியில் மல்டி ஸ்டார் நடிகர், நடிகைகள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அதற்கு ஏற்ப ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்றவர்களிடம் மணிரத்னம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அந்த இடத்திற்குத்தான் துல்கர் சல்மான் பேசப்பட்டு வருகிறாராம். மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வினோத் என்பவர் இயக்கம் படத்தில் கமல் நடித்து வருவதால், இப்படம் முடிந்த பிறகே மணிரத்னம் படத்தில் நடிப்பாராம். இதில் அவர் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


கமலுடன் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி

பான் இந்தியா படமாக மாறிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தற்போது பான் இந்தியா படமாக மாறியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசரை தமிழ் தனுஷ், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர். 2014ல் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தை போலவே இப்படமும் ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளதாகவும், நிச்சயம் முதல் படத்தை போன்றே இப்படமும் ட்ரெண்ட் செட் படமாக அமையும் எனவும் படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.


'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' போஸ்டர்

அட்லீ மனைவியுடன் நடனம் ஆடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சக நடிகைகள் மட்டுமின்றி அனைவருடனும் சுமூகமாக பழகக் கூடியவர். இதனால் திரையுலகில் இவருக்கு நட்பு வட்டாரம் அதிகம். இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில், அட்லீயின் வீட்டிற்கு வருகை தந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அங்கு பிரியாவுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் டூயட் பாடலுக்கு இருவரும் கலக்கலாக நடனம் ஆடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு நடிகர் வருன் உட்பட தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலரும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.


நடனம் ஆடிய நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அட்லீ மனைவி பிரியா

ஜகா வாங்கிய ‘சலார்’

‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, பான் இந்தியா ஹீரோவாக மாறிய நடிகர் பிரபாஸ் சமீப காலமாக நடித்து வரும் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பிரபாஸ் நடித்து முடித்துள்ள ‘சலார்’ திரைப்படமாவது அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செப்டம்பர் 28ல் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் திருப்தி அளிக்காததால் அதை மீண்டும் மேம்படுத்துவதற்காக படத்தின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.


பிரபாஸின் 'சலார்' திரைப்படம்

Updated On 25 Sep 2023 6:58 PM GMT
ராணி

ராணி

Next Story