இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(13.01.1985 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது.)

நான்தான் உங்கள் விஜயகாந்த் பேசுகிறேன்! "உங்கள் விஜயகாந்த்" என்று சொல்லுகிறேனே, ஏன்? என்று கேட்கிறீர்களா? நான் உங்கள் விஜயகாந்த்தானே! நீங்கள் தானே என்னை இந்த அளவு வளர்த்துவிட்டவர்கள்; வளர்த்துக்கொண்டு இருப்பவர்கள். ரசிகர்களான நீங்கள் எனது படங்களை போட்டி போட்டுக் கொண்டு பார்க்காவிட்டால் , நான் எங்கேயோ, எப்படியோ இருந்திருக்க வேண்டும்! தொடக்கக் காலத்தில் அப்படித்தானே அலைந்து கொண்டு இருந்தேன். தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும் என்னை உங்கள் முன் ஒரு நடிகனாக கொண்டு வந்து நிறுத்திவிட்டது!

ரசிகர் வேண்டும்

ஒரு நடிகனுக்கு படம் கிடைத்தால் மட்டும் போதாது. அவனது நடிப்பை ரசிக்க மக்கள் வேண்டும்; படம் தியேட்டரில் நிற்க வேண்டும். படம் எத்தனை நாள் தியேட்டரில் நிற்கிறதோ, அதற்கேற்பதானே அந்த நடிகனுக்கு "ரேட்"டும் கூடுகிறது; படமும் குவிகிறது. ஒரு நடிகன் நிலைத்து நிற்பதற்கும், நிலைகுலைந்து போவதற்கும் காரணம் ரசிகர் கூட்டம்தான் என்பதை நான் முழுமையாக உணருகிறேன். எனவேதான் சொன்னேன். உங்கள் விஜயகாந்த் என்று! நீங்கள் இன்றி நான் இல்லையே!


நடிகர் விஜயகாந்த் இளமை கால புகைப்படங்கள்

கைமாறு

என் மீது நீங்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள். உங்களில் ஒருவனாக எண்ணி பாராட்டுகிறீர்கள்! போற்றுகிறீர்கள்! இதற்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன். ஒரு நடிகர், அவருடைய ரசிகர்களுக்குச் செய்யும் உண்மையான கைமாறு அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதும் ஒன்று! நீங்கள் என்னிடம் இருந்து என்னென்ன எதிர் பார்க்கீறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

கடிதம்

நான் என்றைக்கும் உங்களில் ஒருவனாக தமிழ் மணம் பரப்பும் நடிகனாகத் திகழவேண்டும் என்று நீங்கள் உள்ளக் கிடக்கை எல்லாம் எழுத்தால் வடித்து தினமும் கடிதமாக எனக்கு எழுதித் தள்ளிக்கொண்டு இருக்கிறீர்களே! ஓய்வு கிடைக்கும் பொழுது எல்லாம் உங்கள் கடிதங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். எனது நடிப்பை விமர்சிப்பவர்களும் அதிகம்! சண்டையில் இன்னும் புதுமையைப் புகுத்த வேண்டும்; குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும். சண்டைக் கதாநாயகன் என்று இல்லாமல், ஒரு குணச்சித்திர நடிகர் என்றும் பெயர் எடுக்க வேண்டும் என்று எனக்கு எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள். "எப்போது திருமணம்? பெண் தேடி விட்டீர்களா?" என்று குடும்பப் பாசத்தோடும் எனக்கு எழுதுகிறீர்கள்! என்னே உங்கள் அன்பு; பாசம்!


நடிகர் விஜயகாந்த் மற்றும் 'வைதேகி காத்திருந்தாள்' பட போஸ்டர்

உங்களில் ஒருவனாக நினைத்து தினசரி நீங்கள் எழுதும் கடிதங்களைப் பார்க்கும்பொழுது எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா? எனக்கு ஏணியாக இருந்துவரும் உங்களது எண்ணங்கள் நிறைவேற்றுவது எனது தலையாய கடமை அல்லவா? அடுத்து வரும் எனது படங்களில் நீங்கள் வித்தியாசமான சண்டை முறைகளைக் காணலாம். நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். "வைதேகி காத்திருந்தாள்" படம் எனக்கு புது உற்சாகத்தைத் தந்துள்ளது. விஜயகாந்துக்கு சண்டை செய்ய மட்டும் அல்ல; நடிக்கவும் தெரியும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், படங்களை ஏற்றுக்கொண்டு வருகிறேன். எனது நடிப்பைப் பார்த்து நீங்கள் பாராட்ட வேண்டும்! அதன்மூலம், வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரவேண்டும். அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம், உங்களைச் சேர வேண்டும்.

Updated On 25 Oct 2023 4:55 AM GMT
ராணி

ராணி

Next Story