இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தோரின் மனதில் நந்தினியும், குந்தவையும் எந்த அளவிற்கு நின்றார்களோ அதே அளவிற்கு சாதாரண படகோட்டி பெண்ணான பூங்குழலியும் கட்டாயம் நிற்பார். கல்கி அந்த கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போதே பூங்குழலியின் எளிமையையும், அவளுடைய அழகினையும், கொடியிடையையும், துணிச்சலையும் ஒன்றுசேர்த்து வார்த்தைகளால் வர்ணித்திருப்பார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கு இயக்குநர் மணிரத்னம் உயிர்கொடுக்க நினைத்தபோது கண்முன் தோன்றியவர்தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு பூங்குழலியை ரசித்து வர்ணித்தவர்கள் ஏராளம். அந்த அளவிற்கு தனது நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருப்பார் ஐஸ்வர்யா. அப்படி இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்ட இவர் தமிழ், மலையாளம் என முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார். மருத்துவம் படித்த ஐஸ்வர்யா நடிப்புத்துறையில் நுழைந்தது எப்படி? நடிப்பு மட்டுமல்ல; தயாரிப்பாளராகவும் வலம்வரும் இவருடைய திரை வளர்ச்சி எங்கிருந்து ஆரம்பித்தது என்பது குறித்தெல்லாம் இங்கு காணலாம்.

யார் இந்த ஐஸ்வர்யா லட்சுமி?

கோலிவுட்டில் தமிழ் கதாநாயகிகளைவிட கேரள வரவுகள்தான் அதிகம். அப்படி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்டவர்தான் ஐஸ்வர்யா லட்சுமியும். ஆரம்பகால பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே படித்த ஐஸ்வர்யா, மேல்நிலை பள்ளிப்படிப்பை திருச்சூரில் முடித்தார். தொடர்ந்து தனது எம்பிபிஎஸ் படிப்பை எர்ணாகுளத்தில் படித்து முடித்தார். 2014ஆம் ஆண்டு கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தபோதே மாடலிங்கிலும் கவனம் செலுத்திவந்த ஐஸ்வர்யா, பல்வேறு வார இதழ்களின் முன்பக்க அட்டை மாடலாக வலம்வந்தார்.


பெற்றோருடன் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

அதேபோல் அக்‌ஷயா ஜுவல்லர்ஸ், காரிக்கின்னத் சில்க்ஸ், எழ்வா பொட்டிக், செம்மனூர் ஜுவல்லர்ஸ் போன்ற பல்வேறு நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகளுக்கும் மாடலிங் செய்திருக்கிறார். இருப்பினும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த ஐஸ்வர்யாவுக்கு முதலில் நடிகையாகும் எண்ணம் மனதில் இல்லையாம். மாடலிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால், 2017ஆம் ஆண்டு நடந்த சினிமா ஆடிஷனில் கலந்துகொண்டார். அதில் செலக்ட் ஆனதால் நிவின் பாலியுடன் சேர்ந்து ‘நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி மலையாள திரையுலகில் காலடி எடுத்துவைத்த ஐஸ்வர்யாவை கைதூக்கிவிட்டது அடுத்து வெளியான ‘மாயாநதி’ திரைப்படம். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்புக்காக பாராட்டுக்களையும் ஃபிலிம்ஃபேர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றார். படமும் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து, ‘வரதன்’, ‘விஜய் சூப்பரும் பௌர்ணமியும்’, ‘அர்ஜெண்டினா ஃபேன்ஸ் காட்டூர்கடவு’, ‘பிரதர்ஸ் டே’ என அடுத்தடுத்து படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின. 2019ஆம் ஆண்டு விஷாலுடன் சேர்ந்து ‘ஆக்‌ஷன்’ என்ற படத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமானார். ஆனால் மலையாளத்தில் கிடைத்ததைப் போன்ற வரவேற்பு இவருக்கு ஆரம்பத்தில் தமிழில் கிடைக்கவில்லை.


ஐஸ்வர்யாவுக்கு புகழ் பெற்றுத்தந்த திரைப்படங்களில் இருந்து காட்சிகள்

அதனையடுத்து தனுஷ் ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் எதிர்பார்த்த பெயரை பெற்றுத்தரவில்லை. அதன்பிறகு மீண்டும் மலையாளப் படங்களில் நடித்த ஐஸ்வர்யாவுக்கு ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கட்டா குஸ்தி’ போன்ற படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தன. குறிப்பாக, ‘கட்டா குஸ்தி’ படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. கட்டுக்கோப்பான இவருடைய உடல்வாகு மற்றும் இயல்பான முகபாவனை தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதிலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மெல்லிய உடையணிந்த படகோட்டி பெண் பூங்குழலியாக தோன்றி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். 2022ஆம் ஆண்டில் மட்டும் ஐஸ்வர்யா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என 9 படங்களில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், "மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் நான் நடித்துள்ள பூங்குழலி கதாபாத்திரத்திற்கு பலதரப்பட்டவர்களிடமிருந்தும் பாராட்டுகள் வந்து குவிகின்றன. அது என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.


ஐஸ்வர்யா தயாரிப்பில் உருவான ‘கார்கி’ மற்றும் ‘குமாரி’ திரைப்பட போஸ்டர்கள்

தயாரிப்பாளர் ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா லட்சுமி நடிகை மட்டுமல்ல; ஒரு தயாரிப்பாளரும்கூட. பொதுவாகவே திரையுலகை பொருத்தவரை நடிகர், நடிகைகள் குறிப்பிட்ட கால வளர்ச்சிக்குப் பிறகு, படங்களை தயாரிப்பதில் இறங்கிவிடுவார்கள். அப்படி பெரும்பாலான நடிகர்கள் தற்போது தயாரிப்பாளர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கும் ஐஸ்வர்யாவும் நடிகையாக அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலேயே தயாரிப்பாளராகவும் மாறிவிட்டார். தமிழில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘கார்கி’ படத்தை தயாரித்த ஐஸ்வர்யா, அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்றிருந்தார். அதேபோல், தானே கதாநாயகியாக நடித்த ‘குமாரி’ என்ற மலையாளப் படத்தையும் அவர் தயாரித்திருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபடுவார் என தெரிகிறது.

கமலுடன் விரைவில் திரையில்...

‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘கிங் ஆஃப் கோதா’ என்ற படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. அதனைத் தொடர்ந்து அசோக் செல்வனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் பள்ளிப்பருவத்தில் தன்னை காதலிக்க போட்டி போட்ட இரண்டு நண்பர்கள்மீதும் ஈர்ப்பு வரும் பெண்ணாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.


கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா லட்சுமி

காமெடி கதைக்களம் கொண்ட இப்படத்தில் இவரின் நடிப்பு ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஜெனிலியாவை நினைவுபடுத்துவதாக கூறுகின்றன விமர்சனங்கள். இப்படத்தைத் தொடர்ந்து கமலுடன் சேர்ந்து இவர் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். மணிரத்னம் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அதுவும் கமல்ஹாசன் ஹீரோ என்றால் சொல்லவா வேண்டும்? கமல் - மணிரத்னம் காம்போ என்பதாலேயே ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஐஸ்வர்யா. இந்த படத்திற்காக, தன்னை தேடிவந்த வேறு மூன்று பட வாய்ப்புகளை ரிஜெக்ட் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்திருக்கின்றனர். ஆனால் தேர்தல் காரணமாக ஷூட்டிங்கை கமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போனதால் துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்றோர் படத்திலிருந்து விலகிவிட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அருண் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா வருவார் என தெரிகிறது. மலையாளம், தமிழ் என மாறிமாறி நடித்துவரும் ஐஸ்வர்யா ‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு தெலுங்கு பக்கமும் கவனம் செலுத்தவிருக்கிறார் என்கின்றன திரை வட்டாரங்கள்.

Updated On 29 April 2024 6:20 PM GMT
ராணி

ராணி

Next Story