
தமிழ் திரையுலகிலும் தொலைக்காட்சி உலகிலும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையினைப் பதித்தவர் அனு ஹாசன். நடிகை, தொகுப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் சமூக ஆர்வலர் என பல துறைகளிலும் தன்னை நிரூபித்துள்ள இவர், பலருக்கும் ஒரு முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார். இன்று (ஜூலை 15-ஆம் தேதி) தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடும் அனு ஹாசனின் வாழ்க்கை, குடும்பம், கல்வி, திரைப்படப் பயணம், தொலைக்காட்சி சாதனைகள், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் சமூக பங்களிப்புகள் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
கல்வியோடு கலை ஆர்வம்
அக்கா சுஹாசினியுடன் நடிகை அனு
அனுராதா சந்திரஹாசன் என்ற இயற்பெயர் கொண்ட அனு ஹாசன், 1970-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். கலை மற்றும் திரையுலக பின்னணியைக் கொண்ட புகழ்பெற்ற ஹாசன் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். இவரின் தந்தை சந்திரஹாசன், தாய் கீதாமணி இருவரும் தத்தமது துறைகளில் மிகவும் பிரபலமானவர்கள். உலகநாயகன் எனப் போற்றப்படும் கமல்ஹாசன் இவரின் சித்தப்பா ஆவார். மேலும், பிரபல நடிகையும், திரைப்பட இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம், அனு ஹாசனின் சகோதரி உறவுமுறை ஆவார். தற்போது சென்னையில் வசித்துவரும் அனு ஹாசன், தனது ஆரம்ப மற்றும் பள்ளிப் படிப்பை திருச்சிராப்பள்ளியிலேயே மேற்கொண்டார். அவர் முதலில் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்திய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர், RSK மேல்நிலைப் பள்ளியிலும் தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, தனது உயர் கல்விக்காக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிலானியில் அமைந்துள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிட்ஸ் பிலானியில் சேர்ந்தார். அங்கு அவர் இயற்பியல் மற்றும் மேலாண்மையில் முதுகலை (M.Sc) பட்டம் பெற்று, தனது கல்வித் தகுதியை வலுப்படுத்திக் கொண்டார். இப்படி அனு ஹாசன் வெறும் கல்வித் தகுதிகளுடன் நின்றுவிடவில்லை, அவர் உடற்திறன் மற்றும் கலைத்திறன்களிலும் சிறந்து விளங்கி மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், கூடைப்பந்து விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், திருச்சி மாவட்ட கூடைப்பந்தாட்டக் குழுவிற்காக பல போட்டிகளில் பங்கேற்று, தனது விளையாட்டு திறமையையும் நிரூபித்துள்ளார்.
திரையுலகில் அடையாளம்
அனு ஹாசனின் சினிமா வாழ்க்கை 1995-ஆம் ஆண்டு சுஹாசினி மணிரத்னம் இயக்கிய ‘இந்திரா’ திரைப்படம் மூலம் துவங்கியது. இதில் அரவிந்த்சாமி, நாசர், ராதாரவி போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த அனு, தமிழ் திரையுலகில் ஒரு வலுவான அறிமுகத்தைப் பெற்றார். இந்தப் படம் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை வென்றதுடன், குறிப்பாக "நிலா காய்கிறது" என்ற பாடல் மூலம் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றது. ‘இந்திரா’ திரைப்படத்தின் வெற்றி அனு ஹாசனுக்கு சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெற்று தந்த போதும் தொடர்ச்சியாக கதாநாயகியாக அவர் நடிக்கவில்லை. துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பே அவரை அதிகம் தேடி வந்தது. அதில் 2001-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ படத்தில் அவரது சிறு வயது தாயாக ஒரு சிறப்புப் தோற்றத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ திரைப்படத்தில் நடிகர் மாதவனின் சகோதரியாக அனு ஹாசன் நடித்தது, விமர்சகர்களிடம் பரவலான பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்தில் அவரது யதார்த்தமான நடிப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த துணை நடிகை விருதையும் வென்றார். இது அவரது நடிப்புத் திறமைக்கு கிடைத்த மிக முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்பட்டது.
‘இந்திரா’ திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடன் அனு ஹாசன்
‘ரன்’ படத்திற்குப் பிறகு, ‘நள தமயந்தி’, ‘ஆஞ்சனேயா’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘சர்வம்’, ‘ஆதவன்’ போன்ற பல படங்களில் துணை மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்து கவனம் பெற்று வந்த அனு, தமிழ் தவிர பிற மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதில் 2010 முதல் 2014-ஆம் ஆண்டுவரை பல்வேறு மொழிகளில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர், இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக மாறினார். அவற்றில் ‘மாஞ்சா வேலு’, ‘இரண்டு முகம்’ போன்ற தமிழ்ப் படங்களும், ‘Dead Point’ (அரேபியப் படம்), ‘Red Building Where the Sun Sets’ (ஆங்கிலக் குறும்படம்) போன்ற பன்னாட்டுப் படைப்புகளும் அடங்கும். மேலும், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த அனு ஹாசன், 2020-ஆம் ஆண்டில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான ‘புத்தம் புதுக் காலை’ படத்தில் "சரஸ்" என்ற பாத்திரத்தில் தோன்றி அன்றாட வாழ்வின் யதார்த்தங்களையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி, மீண்டும் ஒரு முறை தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை நிரூபித்தார்.
கவனம் தந்த "காஃபி வித் அனு"
அனு ஹாசன் தனது தொலைக்காட்சிப் பயணத்தை 2000-ஆம் ஆண்டில் சித்ரா பானர்ஜி திவாகருணி எழுதிய "Sister of My Heart" நாவலை அடிப்படையாகக் கொண்ட "அன்புள்ள நண்பியே" என்ற தொடர் மூலம் தொடங்கினார். இந்த முதல் தொடரிலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர், தொடர்ந்து "அவன் அவள் அவர்கள்", மலையாளத்தில் "விவாஹிதா" மற்றும் "அம்மாவுக்கு ரெண்டுல ராகு" போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து, தனது நடிப்புத் திறமையை பன்முகப்படுத்தினார். இப்படி சினிமா, சீரியல் என அனு ஹாசன் அடுத்தடுத்த பாதைகளில் பயணித்தாலும், அவரது பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு என்றால், அது அவர் தொகுத்து வழங்கிய "காஃபி வித் அனு" என்ற பேட்டி நிகழ்ச்சிதான். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரையும் நேர்காணல் செய்து, அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வெளிக்கொண்டு வந்தது. அனு ஹாசனின் தெளிவான பேச்சுத் திறமை, துடிப்பான ஆளுமை மற்றும் கூர்மையான கேள்விகள் இந்த நிகழ்ச்சியின் பெரும் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
‘புத்தம் புதுக் காலை’ படத்தில் "சரஸ்" என்ற பாத்திரத்தில் அக்கா சுஹாசினியுடன்...
"காஃபி வித் அனு" நிகழ்ச்சி அனு ஹாசனுக்கு ஒரு தொகுப்பாளராகவும், ஊடக ஆளுமையாகவும் தனித்துவமான அடையாளத்தை வழங்கியதை தொடர்ந்து, அவர் "அணுவளவும் பயமில்லை", சமையல் நிகழ்ச்சியான "என் சமையலறையில்", உரையாடல் நிகழ்ச்சியான "வாங்க பேசலாம்" மற்றும் "கண்ணாடி" போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது தொலைக்காட்சிப் பயணத்தை விரிவுபடுத்தினார். இது தவிர டப்பிங் கலைஞராகவும் தனது தடத்தைப் பதித்துள்ள அனு, ரவீனா டாண்டன், பிரீத்தி ஜிந்தா, கீது மோகன்தாஸ் போன்ற நடிகைகளுக்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், கமல்ஹாசனின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்திற்கு லைன் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ள அனு, இயக்கத்திலும் ஆர்வம் கொண்டவர் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அனு ஹாசன் 1995-ஆம் ஆண்டு ஸ்ரீ விகாஸ் என்பவரை மணந்தார், ஆனால் இந்தத் திருமணம் 2005-இல் விவாகரத்தில் முடிந்தது. பின்னர், 2010-ஆம் ஆண்டில் தனது நீண்ட நாள் நண்பரான பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கிராஹம் ஜேவை இரண்டாவதாகத் திருமணம் செய்தார் அனு. எனினும், இந்த உறவும் 2014-இல் முடிவுக்கு வந்தது.
சமூக பொறுப்பும், சாதனையும்
கணவர், குழந்தையுடன் அனு ஹாசன்
இப்படி சினிமா, சீரியல், விளையாட்டு என பல்வேறு துறைகளில் பல்வேறு திறமைகளை கொண்ட அனு ஹாசன், சமூகப் பங்களிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு "Ask How India" என்ற சமூக விழிப்புணர்வு இயக்கத்தில் பங்கேற்று பல சமூகப் பிரச்சனைகள் குறித்த வீடியோக்களை வெளியிட்டார். "Just for Women" என்ற பெண்களுக்கான மாத இதழுக்கு கட்டுரைகள் பலவும் எழுதி வருகிறார். இது தவிர அந்நிறுவனமே நடத்தி வரும் யூடியூப் சேனலில் "GET, SET, COOK with Anu Hasan" என்ற சமையல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்த அனு, ஜாஸ் இசை பாடகியாக US Consulate in Kolkata நிகழ்ச்சியிலும் பங்கேற்று தன் இசை திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் 2015-ஆம் ஆண்டில் "Sunny Side Up" என்ற சுயமுன்னேற்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி தனது எழுத்துத் திறனையும் வெளிப்படுத்தியுள்ள அனுஹாசன், சாகச விளையாட்டுகளான பஞ்ஜி ஜம்பிங், ஸ்கூபா டைவிங் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இவ்வாறு தனது தன்னம்பிக்கை உரைகள், எழுத்துகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாகவும், சுயசிந்தனையுள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருந்துவரும் அனு ஹாசன், 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் மேலும் பல வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் பெற, இந்த இனிய நாளில் நாமும் வாழ்த்துவோம்!
