இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

“அச்சச்சோ நா என்ன பன்னுவ பெருமாளே” எனும் ஒற்றை டயலாக் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர்தான் நடிகை சரண்யா மோகன். முன்னணி நடிகர், நடிகைகளுக்கு க்யூட் தங்கையாகயும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தாலும் எந்த ஒரு அலட்டலும் இல்லாத இயல்பான தோரணைப் பேச்சு. “மல அடிவாரத்துல ஒரு அழகான கிராமம்... நினைக்கும்போதெல்லாம் மழை பெய்யுறா மாதிரி ஒரு அழகான க்ளைமேட்...குட்டி வீடு... அதுல எப்பவும் பறவைகள் சத்தம் கேட்டுட்டே இருக்கணும்” என்னும் தெறி பட டயலாக்கிற்கு ஏற்ப ஒரு அழகான, அனைவரின் கனவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நடிகை சரண்யா. திருமணத்திற்கு பின் நடிப்பின் பக்கம் தலைகாட்டாத நடிகை சரண்யா, சோஷியல் மீடியாக்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதுபற்றி இங்கு காண்போம்.


யாரடி நீ மோகினியில் நயனுக்கு தங்கையாக நடித்த சரண்யா

சினிமா அறிமுகம்...

ஃபாசில் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த ‘அனியாதி பிராவு’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை சரண்யா. அதே ஆண்டில் உருவான இப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காதலுக்கு மரியாதை’ என்ற விஜய் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சரண்யா. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளங்களில் பல படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தார். பின்னர் கடந்த 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் - சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் ஒரு கனவு' திரைப்படத்தில் ஸ்ரீகாந்தின் தங்கையாக, குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருப்பார். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும், இப்படம்தான் சரண்யாவிற்கு தமிழில் நல்ல அடையாளத்தைப் பெற்று தந்தது.

ஆனால் இப்படத்தை விருப்பம் இல்லாமல்தான் நடித்தாராம் சரண்யா. யாரடி நீ மோகினி ரிலீஸுக்கு முன்பே சரண்யாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. அப்படி வந்த படம்தான் இவர் கதாநாயகியாக அறிமுகமான வெண்ணிலா கபடிக் குழு. இப்படத்திற்காக உயரமும், கொஞ்சம் எடையும் கூட வேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார். இதனால் சரண்யா தான் நடிக்கவில்லை என கூறியுள்ளார். பின்னர் வேறு ஹீரோயினை வைத்து ஷுட்டிங்கும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு சரண்யா இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்துள்ளது. இதனால் மீண்டும் வந்து எந்த மாற்றமும் செய்ய வேண்டாம், நீங்கள் அப்படியே நடித்தால் போதும் எனக் கேட்டுள்ளார். அதன்பின் சரண்யா ஒப்புக் கொண்டு நடித்துள்ளார். வெண்ணிலா கபடிக்குழு தமிழில் ஹிட் ஆனதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் சரண்யாவைத்தான் கதாநாயகியாக நடிக்க சொல்லியுள்ளனர். ‘பீமிலி கபடி ஜட்டு’ என தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதாநாயகனாக நானி நடித்தார். இப்படம் நானியின் திரைப்பயண வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


வெண்ணிலா கபடிக்குழு படத்தில் கதாநாகியாக அறிமுகமான சரண்யா

ஹிந்தியில் நடிக்க முதலில் சரண்யா தயங்கியுள்ளார். பின்னர் தமிழ், தெலுங்கில் என்ன காட்சிகள் வருமோ அது மட்டும்தான் எடுக்கப்படும் என இயக்குநர் சொன்னதற்கு பின் ஹிந்தியில் நடித்துள்ளார். அதன்பின் அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம், ஈரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார். கதாநாயகி, தங்கை, குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும், கவர்ச்சி, ஆபாசம் இல்லாமல் குடும்பங்கள் ரசிக்கும் படமாக, நல்ல கதையுடன் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என தனக்கென சில கட்டுப்பாடுகளை வைத்தும் நடித்துள்ளார் சரண்யா. இதுவும் ரசிகர்களால் தற்போதுவரை நினைவுக்கூறப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. திருமணத்திற்கு பின் நடிப்பு பக்கம் தலைகாட்டாத சரண்யா, நல்ல கதைகள், நல்ல படக்குழு அமைந்தால் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.


கணவர் மற்றும் குழந்தைகளுடன் நடிகை சரண்யா

திருமணம்...

இப்படி தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நல்ல பீக்கில் இருக்கும்போதே கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பரில், சரண்யா மோகன் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணன் என்ற தனது நீண்டநாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆனந்த பத்மநாபன், அன்னபூர்ணா என 2 குழந்தைகள் உள்ளனர். சரண்யாவின் கணவர் அரவிந்திற்கும் சினிமா மீது ஆர்வம் அதிகம். எப்போதும் படங்கள் பார்த்துக் கொண்டே இருப்பாராம். தற்போது படம் ஒன்றிற்கு கதையும் எழுதி வருகிறாராம். அரவிந்தின் குடும்பத்தினர் அனைவரும் சரண்யாவிடம் அன்பாக இருப்பார்களாம். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லையாம். சரண்யாவாகத்தான், கணவர், குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும், குழந்தைகளின் முக்கியமான நேரத்தில் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நடிப்பை நிறுத்தினாராம். இப்போது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால், இனிமேல் நல்ல கதைகள் கிடைத்தால் நடிப்பேன் என சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.

மேலும் நேர்காணலில் சமூக வலைத்தளப் பக்கங்கள் குறித்து பேசிய சரண்யா, நான் பெரிதாக சமூக வலைத்தள பக்கங்களில் இல்லை. அப்போதெல்லாம் ஃபேஸ்புக்தான் இருந்தது. அதையும் நான் அதிகமா யூஸ் பண்ணவே மாட்டேன். இப்போதும்கூட என் கணவர் சொல்லித்தான் இன்ஸ்டாகிராமிலும், டிக் டாக்கிலும் அக்கவுன்ட் ஆரம்பிச்சேன். நம்மளோட நடிப்பை ரசிச்சவங்க, நாம நல்லாயிருக்கணும்னு நினைச்சவங்க நிறைய பேர் இப்போ சோஷியல் மீடியாவில் இருக்குறதுனால, அவங்களுக்கு நாம எப்படி வாழுறோம் என்பதை பகிர்ந்துக்க இந்த மீடியமை யூஸ் பண்ண வேண்டும் என என் கணவர் அடிக்கடி சொல்லிட்டு இருப்பார். அதனால சோஷியல் மீடியாவில் அக்கவுண்ட் ஆரம்பிச்சு, அதன் மூலமா என்கிட்ட பேசுறவங்ககிட்டேயும் பேசிட்டு இருக்கேன். நான் என்ன பண்றேன் என்பதையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். அதுவும் ஒருவகையில் ஜாலியாகத்தான் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.


கொரோனா காலக்கட்டத்தில் சரண்யாவிடம் நடனம் கற்றுக்கொண்ட சிம்பு

சரண்யாவிடம் நடனம் கற்றுக்கொண்ட சிம்பு...

சரண்யா நடிகை என்பதை தாண்டி ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார். சிறுவயதில் இவரது அப்பாவும், அம்மாவும் நடன வகுப்பு நடத்தி வந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து சரண்யாவும், அவரது தங்கையும் இந்த வகுப்பை தொடர்ந்துள்ளனர். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டியபாரதி என்ற நடன வகுப்பையும் தொடங்கியுள்ளார் சரண்யா. முதலில் தனது வீட்டில் வைத்து நடனம் கற்றுக் கொடுத்து வந்த சரண்யா, சமீபத்தில்தான் வீட்டிற்கு அருகே புதிய நடனப்பள்ளி ஒன்றையும் கட்டியுள்ளார். இப்போது இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடனம் கற்று வருகின்றனர். இதனிடையே நடிகர் சிம்பு கொரோனா காலக்கட்டத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்வதற்காக கேரளா சென்றுள்ளார். அப்போது அவருடைய தலையில் லேசாக அடிப்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் சரண்யாவின் கணவர் குறித்து கூறியுள்ளனர்.

கொரோனா காலக்கட்டம் என்பதால் அருகில் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. சரண்யா கணவர் பல் மருத்துவர் என்பதால், எனக்கு தெரிந்ததை வந்து பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார். இப்படி சந்தித்துக்கொள்ள அப்போது, சரண்யாவிடம் இங்கு தனக்கு பரத நாட்டியம் சொல்லி கொடுக்க ஆண் பரதநாட்டிய கலைஞர்கள் யாராவது இருக்கிறார்களா என சிம்பு கேட்டுள்ளார். சரண்யா அதுபோல் இந்த இடத்தில் யாரும் இல்லை. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நானே சொல்லி தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்துதான் சரண்யா, சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தாராம். வெறும் இரண்டு வாரங்கள் என்பதால் என்ன என்ன அடிப்படையோ அதை மட்டும்தான் கற்றுக் கொடுத்ததாகவும், சிம்பு தனது பயிற்சியின்போது மிகவும் அர்ப்பணிப்போடு இருந்தாகவும் சரண்யா தெரிவித்தார். இதுபோல பல சுவாரஸ்ய தகவல்கள் குறித்து நேர்காணலில் பேசிய சரண்யா, நல்ல வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் எனக் கூறியுள்ளார். இதனால் சரண்யா மோகனை விரைவில் திரையில் எதிர்பார்க்கலாம்.

Updated On 5 Aug 2025 12:32 PM IST
ராணி

ராணி

Next Story