இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர், நடிகைகள் பலர் அரசியலில் இருக்கின்றனர். சிலர் அரசியல் பேசுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதுண்டு. அப்படியே பேசினாலும் அதில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகிவிடுவர். அப்படிப்பட்ட ஒருசில நடிகர், நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். 90களின் தொடக்கத்தில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் எப்போதும் சமூக பிரச்சினைகள் மற்றும் அரசியலில் ஆர்வம் காட்டுவதுண்டு. அதுபோல், ரஜினியின் அரசியல் குறித்து அவர் பேசியது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் வைரலானது. அதனைத் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக கூட்டங்களில் ஆர்வம் காட்டிவந்த கஸ்தூரி, கடந்த ஆண்டு தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் பல தரப்புகளிலும் எதிர்ப்புகளை சந்தித்தார். அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கஸ்தூரியின் அந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், சிறையில் இருந்த நேரத்தில் தனது குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைகளுக்கு உள்ளானார்கள் என்பதை ஒரு தாயாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்திருக்கிறார். ஒருசில வாரங்களுக்கு முன்பு அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில் ஒரு தாயின் உணர்ச்சிகள் குறித்து அவர் பேசியிருப்பது பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கிறது.

நடிப்பும் அரசியல் ஆர்வமும்

சென்னையைச் சேர்ந்த ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கஸ்தூரி. பள்ளிக்காலத்திலேயே மிகவும் நன்றாக படிக்கக்கூடிய இவர், கல்லூரிக்கு சென்றபிறகு படிப்பைத் தாண்டி மாடலிங் துறையிலும் ஈடுபட்டார். 1992ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வெல்வதற்கு முன்பே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 1991ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின்மூலம் திரையுலகில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து அறிமுகமானாலும் அப்போதிருந்தே அரசியல்மீதும் சமூக பிரச்சினைகள்மீதும் நாட்டம்கொண்ட கஸ்தூரி, அடிக்கடி அரசியல் கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. சினிமா தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சமூக ஊடகங்களில் பயன்பாடு பெருகத் தொடங்கிய பிறகு, திரைப்படங்கள் குறித்தும், அரசியல் கருத்துகளையும், சமூக கருத்துகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தைரியமாக பதிவிடுவதுடன் அதன் விளைவுகளையும் தைரியமாக சந்தித்து வருகிறார். குறிப்பாக, 2017ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்தும், அதற்கு அவர் தகுதியானவரா என்பது குறித்தும் கேள்வி எழுப்ப, அதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். அதுமுதல் இவர் பதிவிடும் கருத்துகள் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள்வரை பலரின் கவனத்தையும் பெற்றன. அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீ டூ இயக்கம் பற்றியும், திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் பற்றியும் மீடியா முன்பு துணிச்சலாக பேசினார்.


இளம் நடிகையாக மற்றும் தற்போதைய தோற்றத்தில் கஸ்தூரி

சிறைக்குச் சென்ற கஸ்தூரி

இப்படி பொதுவெளியில் பேசி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் கஸ்தூரி, 2024ஆம் ஆண்டு இறுதியில் பிராமணர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு சமூகத்திற்கு எதிராக பேசியதுடன் பிராமணர்களை பாதுகாக்க புதிய சட்டம் வேண்டும் என்றும் பேசினார். இதனால் கஸ்தூரிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழும்பின. இதனையடுத்து தான் அவ்வாறு பேசியதற்காக வருத்தம் தெரிவித்து பேட்டியளித்தார். ஆனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நிறைய காவல்நிலையங்களில் புகாரளிக்கப்பட்டன. தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கஸ்தூரிமீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்த தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை தேடும்பணியில் ஈடுபட்டிருக்க, முன் ஜாமின்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2 தனிப்படைகள் அமைத்து கஸ்தூரியை தேடிவந்த போலீசார் ஹைதராபாத்தில் அவரை கண்டறிந்து கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு நவம்பர் 22ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த கஸ்தூரி, தான் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை எனவும், ஆந்திராவில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் தெரிவித்தார்.


நடிகை கஸ்தூரி கைதானபோது...

ஒரு தாயாக நான்!

என்னதான் கஸ்தூரி பொதுவெளியில் அப்படி பேசியதற்காக கைதுசெய்யப்பட்டாலும் அந்த சமயத்தில் ஒரு தாயாக தனது குழந்தைகளை பிரிந்திருந்த வலி குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். கஸ்தூரியின் கணவர் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்ததால் திருமணத்திற்கு பிறகு அங்கு சென்றுவிட்டார். இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை தான் விடநினைக்கவில்லை என்றும், ஆனால் தனது மகளுக்கு உடல்நலம் சரியில்லாதபோது இரண்டரை ஆண்டுகள் அனைத்தையும் விட்டுவிட்டு மகளை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்ததாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இப்போது சினிமாவில் அவ்வப்போது மட்டுமே நடிப்பதற்கு காரணம், தனக்கு அம்மா வேலை செய்ய பிடித்திருப்பதுதான் என்றும் தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, “இப்போது என் மகள் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறாள். வாரத்திற்கு மூன்று முறை போன் செய்து என்னோடு பேசுவாள். அந்த போன் காலுக்காக நான் காத்துக்கொண்டிருப்பேன். அதன்பிறகு என் சந்தோஷம் என்றால் எனது மகன். அவனுக்கு 10 வயதுதான் ஆகிறது. கடந்த ஆண்டு என்னை தனிப்படை வைத்து போலீஸ் தேடியதாக செய்திகள் வெளிவந்தன. எனக்கு ஒரு போன் செய்திருந்தாலே நான் கிடைத்திருப்பேன். அந்த சமயத்தில் நான் இன்ஸ்டா, ட்விட்டர் போன்றவற்றில் போஸ்ட் போட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் நான் ஹைதராபாத்தில் ஒளிந்துகொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. நான் வேலைநிமித்தமாக கடந்த 5 வருடங்களாக ஹைதராபாத்தில்தான் இருக்கிறேன். அப்போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாவிட்டாலும் என்னுடைய மகளுக்கு தெரிந்திருந்தது. இதைப் பற்றி சொல்ல நான் போன் செய்தபோதே அவள் என்னிடம், ‘இட்ஸ் ஓகே நான் பார்த்துக்குறேன். என்னைப்பற்றி கவலப்படாத’ என்று கூறினாள். நான் வெளியே வந்ததும் ஒரு உயில் எழுதினேன். ஏனென்றால் சிறைவாசம் என்பது வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு அனுபவம்” என்று சிறையில் இருந்ததை பற்றி பகிர்ந்தார்.


கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மனு மிஷன் தொடங்கிய கஸ்தூரி

மனு மிஷன் தொடங்கியதன் நோக்கம்!

அதனைத் தொடர்ந்து தனது வாழ்க்கையையே புரட்டிப்போட்ட தனது மகளின் உடல்நல பிரச்சினை குறித்தும் பேசியிருந்தார். ஏனென்றால் கஸ்தூரியின் மகளுக்கு சிறுவயதில் ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக சுமார் ஏழரை வருடங்கள் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. சுமார் இரண்டரை வருடங்கள் கேன்சர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் ஒரே சோஃபாவில் தான் இருந்ததாக கண்ணீர்மல்க தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் கஸ்தூரி. “நான் 3 முறை மரணத்தை பார்த்திருக்கிறேன். அதில் 2 முறை தோற்றுவிட்டேன். மூன்றாவது முறை என் மகளை தொடவந்த மரணத்தை நாங்கள் ஜெயித்துவிட்டோம். என் கணவர்தான் கடவுளுக்கு அடுத்து என் மகளை காப்பாற்றினார். அதனாலேயே எல்லாருக்கும் பிள்ளைகள் குறித்து இருக்கும் கனவை போன்று எனக்கு இருக்கவில்லை. என் மகள், அது படிக்க வேண்டும், இது படிக்க வேண்டும், முதல் மதிப்பெண் வாங்கவேண்டும் என்றெல்லாம் நான் நினைத்தது இல்லை. என் மகள் பெரியவளானால் போதும் என்ற கனவு மட்டுமே எனக்கு இருந்தது. அந்த கனவு எனக்கு நிறைவேறிவிட்டது. என் பெற்றோரை இழந்தபோது நான் தைரியமாக இருந்தேன். ஆனால் நான் பெற்ற பிள்ளை உயிருக்கு போராடியபோது பயமாக இருந்தது. அந்த மருத்துவமனை முழுக்க குழந்தைகள் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பார்கள். அங்கு இரண்டரை வருடங்கள் என் மகள் படுத்திருந்த பெட்டிற்கு அருகே இருந்த சோஃபாவில் நானும் இரண்டரை ஆண்டுகள் படுத்திருந்தேன். அங்கு பல குழந்தைகள் இறந்ததை பார்த்தேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரில், பொருளாதாரரீதியாக யாராவது ஒருவர் வேலைக்கு சென்றிருப்பார். ஒருவர் அங்கிருந்து குழந்தையை பார்த்துக்கொள்வார். எங்களிடம் வசதி இருந்ததால் பிள்ளையை காப்பாற்றினோம். ஆனால் அப்படி முடியாதவர்களுக்கு உதவவே நான், மனு மிஷன் என்ற ஒரு இயக்கத்தை தொடங்கினேன். அதன்மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவியை செய்துகொண்டிருக்கிறேன். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு நோய் வந்தால் குடும்பத்தின் வருமானம், உடன் பிறந்த மற்ற குழந்தைகளின் படிப்பு, கவனிப்பு எல்லாமே கட்டாகிவிடும். அதற்குத்தான் நான் உதவிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் கண்ணீருடன்.

Updated On 20 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story