இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘தளபதி 68’ படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் மீனாட்சி சௌத்ரி. தெலுங்கில் சிலப் படங்களில் நடித்திருக்கும் இவர், தமிழில் விஜய் ஆண்டனியுடன் ‘கொலை’ என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் தனது இரண்டாம் படத்திலேயே முன்னணி ஹீரோவுடன் ஜோடி சேர்வதால் சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறார். இந்தப் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் இந்த மீனாட்சி சௌத்ரி? திரையுலகில் எப்படி என்ட்ரி ஆனார் என்பது குறித்து பார்க்கலாம்.

யார் இந்த மீனாட்சி சௌத்ரி?

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவைச் சேர்ந்தவர் மீனாட்சி சௌத்ரி. இவருடைய தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். பூப்பந்து மற்றும் நீச்சல் வீராங்கனையான இவர் இளங்கலை பல் மருத்துவம் முடித்திருக்கிறார். இருப்பினும், இவருக்கு சினிமா மீதே ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் முதலில் மாடலிங்கில் அடியெடுத்து வைத்த இவர் 2017ஆம் ஆண்டு மிஸ் IMA பட்டத்தை வென்றார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு ஃபெமினாவின் ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்று மாடலிங் துறையில் தெரிந்த முகங்களில் ஒருவரானார். அதன்பின்பு நடிப்பு வாய்ப்புகள் தேடிவரவே அதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் மீனாட்சி.


மிஸ் கிராண்ட் இந்தியா பட்டம் வென்றபோது...

திரைத்துறையில் மீனாட்சி

‘அவுட் ஆஃப் லவ்’ என்ற வெப் தொடரின் மூலம் நடிப்புத்துறையில் அறிமுகமானார் மீனாட்சி. பிபிசியின் ‘டாக்டர் ஃபாஸ்டர்’ என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அதில் 22 வயதான ஆலியா காஷ்யப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மீனாட்சி. திருமணான ஒருவருடன் உறவில் இருப்பதால் வரும் துன்பங்கள், மன அழுத்தங்கள் மற்றும் பின் விளைவுகளை இந்தக் கதை கூறியிருக்கும். மீனாட்சி தனது பல் மருத்துவ படிப்பைத் தொடர்வதை விட்டுவிட்டு மாடலிங் மற்றும் வொர்க் ஷாப்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அங்குதான் தெலுங்கு நடிகர் சுஷாந்த் அக்கினேனியை சந்திருக்கிறார். அப்போது சுஷாந்துக்கு இவர் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என்றோ, மாடல் என்றோ தெரிந்திருக்கவில்லை. அதன்பின்பு சுஷாந்திடம், படத்தில் இணைந்து நடிக்க தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார் மீனாட்சி. அப்படி இருவரும் இணைந்ததுதான் ‘இச்சட வாஹனமுலு நீலுபரடு’ என்ற தெலுங்கு படம். இதன்மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார்.


மீனாட்சியின் திரை அறிமுகம்

தனது சினிமா என்ட்ரி குறித்து மீனாட்சி கூறுகையில், “முதலில் நாங்கள் இருவரும் சந்தித்தபோது எங்கள் இருவருக்கும் நாங்கள் என்று தெரிந்திருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. எனக்கு அவர் நடிகர் என தெரியவில்லை. அவருக்கு நான் மாடலிங் டைட்டில் வின்னர் என தெரியவில்லை. வொர்க்‌ஷாப் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு சுஷாந்த் என்னை அழைத்து கதையை கூறினார். அதில் நடிக்க ஒத்துக்கொண்டேன். கடைசியில் வொர்க்‌ஷாப்தான் என்னுடைய ஆடிஷனாக அமைந்தது” என்கிறார் சிரித்துக்கொண்டே.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்

‘இச்சட வாஹனமுலு நீலுபரடு’ திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் ‘கில்லாடி’ மற்றும் ‘ஹிட்: தி செகண்ட் கேஸ்’ போன்ற படங்களில் நடித்தார் மீனாட்சி. அதன்பிறகு விஜய் ஆண்டனியுடன்‘கொலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன்மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அந்தப் படத்தில் மாடலிங்காகவே நடித்திருந்தார் மீனாட்சி. அதன்பிறகு மகேஷ் பாபுவுடன் ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தவிர, மேலும் நான்கைந்து தெலுங்குப் படங்களில் கமிட்டாகி இருக்கிறார் மீனாட்சி. இந்நிலையில் தற்போது தமிழில் ‘தளபதி 68’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மீனாட்சி சௌத்ரி. தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் இணைவதால் தமிழ் ஆடியன்ஸ் இடையே தற்போது பிரபலமாகி வருகிறார்.


தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்களில்...

‘தளபதி 68’ ஹீரோயின்

ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியானது ‘லியோ’. மெகா வெற்றிபெற்ற இந்தத் திரைப்படத்தின் கொண்டாட்டம் ஓய்வதற்கு முன்பே விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. தற்காலிகமாக ‘தளபதி 68’ என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். முதன்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அதில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, லைலா, வைபவ், அபர்ணா தாஸ், ஜெய் மற்றும் மைக் மோகன் போன்றோர் நடிக்கின்றனர்.


தளபதி விஜய்யுடன் மீனாட்சி

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், யார் இந்த மீனாட்சி சௌத்ரி? என்று ரசிகர்கள் ஒருபுறம் தேடிவருகின்றனர். ரசிகர்களின் தேடலுக்கு விருந்தாக அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தி வருகிறார் மீனாட்சி. 26 வயதான மீனாட்சி தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே மாஸ் ஹீரோவுடன் ஜோடி சேர்வதால் தமிழ் திரையுலகில் தனக்கான தனியிடத்தை பெறுவார் என்றும், இதனால் இவருக்கு திரையுலகில் அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 20 Nov 2023 6:25 PM GMT
ராணி

ராணி

Next Story