இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(13.11.1988 தேதியிட்ட 'ராணி' இதழில் வெளியானது.)

நடிகர் இராமராஜனைக் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை நளினி, இப்பொழுது நிறை மாத கர்ப்பிணி. இது தலைப்பிரசவம். எத்தனை படங்களில் கர்ப்பிணியாக நடித்து இருக்கிறார். இப்பொழுது உண்மையாகவே தாயாகப் போகிறார்! இந்த அனுபவம் எப்படிப்பட்டது? நளினி சொல்லுவதைக் கேளுங்கள்!

எங்கள் திருமணம் 1987 பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற்றது. ஓர் ஆண்டு இடைவேளைக்குப் பிறகு அதே பிப்ரவரியில் நான் முழுகாமல் இருந்தேன். இதை என் கணவரிடம் (இராமராஜன்) சொன்னதும், என்னை கட்டிப்பிடித்து சந்தோசப்பட்டார். எல்லா பெண்களுக்கும் ஏற்படும் கர்ப்ப அனுபவம்தான் எனக்கும். நடிகைக்கு என்று தனியாக எதுவும் இல்லை. நான் படங்களில் நிறைய கர்ப்பமாக நடித்து இருக்கிறேன். "ஓசை", "பிள்ளை நிலா" படங்களில் வயிற்றில் தலையணை கட்டிக் கொண்டு கர்ப்பமாக நடித்தேன். அந்தக் கர்ப்பத்தை, படப்பிடிப்பு முடிந்தவுடன் கலைத்து விடலாம். இது அப்படி அல்ல. இந்த கர்ப்பத்தில் குழந்தைக்குத் தாயாக போகிறோம் என்பதை நினைத்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.


நடிகர் ராமராஜன், நடிகை நளினி திருமணத்தின் போது எம்ஜிஆர்

15 நாளைக்கு ஒருமுறை குழந்தை வளர்ச்சி பற்றி டாக்டரிடம் பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறேன். டாக்டர்கள் நிறைய மாத்திரை, டானிக் எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள். நான் எதையும் ஒழுங்காக சாப்பிடவில்லை. "மாங்காய்", சாம்பல் என்று எதையும் சாப்பிடக்கூடாது. அது குழந்தையை பாதிக்கும்" என்று டாக்டர் சொன்னதை அப்படியே கடைப் பிடித்து வருகிறேன். மாங்காயைத் தொடுவது இல்லை. குழந்தை நன்றாக வளர்வதற்காக அம்மா, அப்பா சொல்லுவதையும் கேட்கிறேன். பக்திப் புத்தகங்கள் படிக்கிறேன்.


வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிகை நளினி

ஐந்து மாதம் வரை எனக்கு ஒன்றும் தெரியவில்லை. வாந்தி மயக்கம்தான் ஏற்பட்டது. சாப்பாட்டில் விருப்பம் இல்லாமல் இருந்தது. பழங்களும்- அதிலும் சீதா பழம், தயிர்ச் சோறு மட்டுமே சாப்பிட்டேன். ஐந்தாவது மாதம் என்னை டாக்டர் பரிசோதனை பண்ணினார். என் வயிற்றில் ஒரு எந்திரத்தை வைத்தார்கள். எதிரில் இருந்த டி.வி.யில் என் வயிற்றில் இரண்டு குழந்தை இருப்பது தெரிந்தது. அதில், ஒரு குழந்தை பெண் என்பதும் தெரிந்தது. அடுத்த குழந்தை தான் என்னவென்று தெரியவில்லை.


கணவர் மற்றும் குழந்தைகளுடன் நடிகை நளினி

இரட்டை குழந்தை என்றதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆறாவது மாதத்தில்தான் எனக்கு பயம் ஏற்பட்டது. "கவலைப்படக்கூடாது. வெளியூர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. வீட்டில் நன்றாக வேலை செய்ய வேண்டும். நடக்க வேண்டும்" என்று டாக்டர் கூறினார். ஏழாவது மாதம் எனக்கு வளைகாப்பு நடத்தினார்கள். இடக்கையில் 20 வளையல் போட்டார்கள். என் உறவுக்காரர்களும் நண்பர்களும் வளையல் போட்டார்கள். வளையல் போடும்போது உடையக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், ஒரு வளையல் உடைந்துவிட்டது. அன்று இரவு எனக்கு தூக்கமே இல்லை; வளையல் உடைந்துவிட்டதை நினைத்து.


நடிகை நளினி

இப்போதும் அந்த வளையலை உடைக்காமல் என் குழந்தை மாதிரி காப்பாற்றி வருகிறேன். என்னை இப்பொழுது அம்மா வீட்டில் வைத்து கவனித்து வருகிறார்கள். தீபாவளி முடிந்ததும் எனக்குப் பிரசவம் இருக்கும் என்று டாக்டர் சொன்னார். நாள் ஆக ஆக எனக்கு பயமாக இருக்கிறது. சில சமயங்களில் படுக்கத் தோணுது. படுத்தால் உட்காரத் தோணுது. எல்லாம் நல்லபடியாக நடக்க கடவுளை வேண்டி வருகிறேன்.

Updated On 16 Oct 2023 7:09 PM GMT
ராணி

ராணி

Next Story