இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(05-07-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

சாவித்திரியின் கண்கள் கலங்கின. "என் அப்பா என்னவோ தெரியவில்லை. ரொம்ப கோபமாக இருக்கிறார். கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, எல்லோரையும் சுட்டு பொசுக்கி விடுவேன் என்று புலி போல உறுமிக்கொண்டு இருக்கிறார்‘". எங்கே என்னை சுட்டு விடுவாரோ என்று பயமாக இருப்பதாக சாவித்திரி சொன்னாள்.

சாவித்திரி பாசம்

கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா? என்று எக்காளமிட்டவனைப் போல, நான் ஒரு சிரிப்பு சிரித்தேன். ஆனால், உதட்டில் சிரிப்பு வந்தாலும், உள்ளம் "திக் திக்" என்று அடித்துக் கொண்டது.

இது என்னம்மா பட்டாசு கட்டா சுட்டு பொசுக்குவதற்கு, அதுவும் அப்பா, மகளை சுடுவாரா? நீ எதற்கும் பயப்படாதே! நான் வேண்டுமானால் உன்னை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்றேன்.

"உங்களையும் சுட்டுவிடுவாரோ என்று பயந்துதான், இந்த இராத்திரியில் இங்கே ஓடி வந்தேன்" என்று கண்ணீர் சிந்தினாள், சாவித்திரி.


காதல் காட்சி ஒன்றில் ஜெமினி கணேசன்-சாவித்திரி

என் உயிர் மீது சாவித்திரிக்கு எவ்வளவு அன்பு? அவளது அன்பை உணர்ந்த அதே நேரம், என்னடா வம்பாய் போச்சு என்றும் நான் திண்டாடினேன். ஒரு வயது பெண் வீட்டிற்கு வந்து, நிர்க்கதியாக நிற்கிறேன் என்று சொன்னால், என்ன செய்வது? வீட்டில் தங்க வைக்க முனைந்தால், எந்த வீட்டுக்காரிதான் சும்மா இருப்பாள்?

ஆனால், என் வீட்டில் நடந்தது வேறு.

மகா பதிவிரதையாகவும், பரம சாதுவாகவும் மிகவும் நல்லவளாகவும், இரக்கம் மிகுந்தவளாகவும், கணவனே கண்கண்ட தெய்வம் என்று பரிபூரணமாக நம்பியிருப்பவளுமான என் மனைவி அலமேலு ("பாப்ஜி" என்பது செல்லப் பெயர்) அங்கே வந்தாள். தனக்கே உரிய இரக்க மனப்பான்மையுடன், "அய்யோ, பாவம் தன்னந்தனியா இப்படி வந்துவிட்டாள். சரி அவளை இங்கேயே படுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். மற்றதை காலையில் பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டாள். இதைத்தான் விதியின் விளையாட்டு என்று சொல்ல வேண்டும்!


கையில் சிகரெட்டுடன் ஸ்டைலிஷாக காணப்படும் ஜெமினி கணேசன்

ஆலோசனை

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நாங்கள் (ஜெமினி - சாவித்திரி) இணையும் முடிவை எடுக்க வைத்தாலும், நாங்கள் அவசரப்படவில்லை. ஸ்டுடியோ நண்பர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரிடமும் ஆலோசனை கேட்டோம். ஒன்றுமே புரியாதபோது, கோவிலுக்குச் சென்று ஆண்டவனிடம் மண்டியிட்டு முறையிட்டோம்.


'பாசமலர்' திரைப்படத்தில் கணவன், மனைவியாக ஜெமினி-சாவித்திரி

அந்த நேரத்தில் நானும் சாவித்திரியும் “நர்சு ஸ்டுடியோ"வில் (நர்சு ஸ்டுடியோ இப்போது கிண்டியில் குளிர்பானம் தயாரிக்கும் இடமாக மாறியிருக்கிறது) "பிரேம பாசம்" என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்தோம். காலஞ்சென்ற வேதாந்தம் ராகவையா டைரக்டு செய்தார். ஸ்டுடியோ முதலாளி லக்ஷ்மிநரசு என்பவர், (நரசு என்றுதான் அவரை அழைப்பார்கள்) உழைப்பால் உயர்ந்தவர். என் மீது பிரியம் அதிகம் கொண்டவர். நரசுவிடம் சென்று யோசனை கேட்டேன்.

(தொடரும்)

Updated On 6 May 2025 10:57 AM IST
ராணி

ராணி

Next Story