இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திரையுலகில் அறிமுகமானதிலிருந்தே கவர்ச்சிக்கு இடம்கொடுக்காமல் ‘ஹோம்லி கேர்ள்’ மற்றும் ‘புன்னகை அரசி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு பலரின் மனதிலும் கனவுக்கன்னியாக வலம்வந்த நடிகைகளில் ஒருவர்தான் சினேகா. ஒரு நடிகை எப்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாதிரி அழகாக இருக்கமுடியும்? அப்படியே தன்னை பராமரித்தாலும் மார்க்கெட் குறையாமல் இருக்குமா என்ன? என்ற கேள்விகளை சமீபகாலமாக இவரிடம் முன்வைத்து வருகின்றனர். தனது எதார்த்தமான நடிப்பால் விஜய், அஜித், தனுஷ், கமல், சூர்யா என பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளில் சினேகாவும் ஒருவர். தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் இவர், இப்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இதனிடையே சொந்தமாக பிசினஸ் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் திருமண நாள் கொண்டாடிய சினேகாவின் பழைய பேட்டிகள் தற்போது இணையங்களில் பரவி ட்ரெண்டாகி வருகின்றன. சினேகா நடித்த படங்கள் குறித்தும், திரையுலக அனுபவம் குறித்தும், திருமண வாழ்க்கை மற்றும் பிசினஸ் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

டாப் ஹீரோக்களுக்கு ஜோடி!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தெலுங்கு பின்னணிகொண்ட குடும்பத்தில் கடைசி மகளாக பிறந்தவர் சினேகா. சுகாசினி எனும் இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தனது பெயரை சினேகா என மாற்றிக்கொண்டார். சிறுவயதிலேயே இவரது குடும்பம் ஷார்ஜாவுக்கு குடிபெயர்ந்ததால் அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார் சினேகா. தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள பண்ருட்டி என்னும் தனது சொந்த ஊரில் குடும்பத்துடன் குடியேறிய இவர் முதலில் ‘இங்ஞனே ஒரு நீலபக்‌ஷி’ என்ற படத்தின்மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகுதான் ‘என்னவளே’ என்ற படத்தின்மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவான ‘காதல் சுகமானது’ திரைப்படம் சினேகாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தாலும், ‘ஆனந்தம்’ படத்தில் இடம்பெற்ற பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல்தான் பட்டித்தொட்டியெங்கும் இவரை பிரபலமாக்கியது. இதுகுறித்து 2003ஆம் ஆண்டு சினேகா அளித்திருந்த பேட்டியில், “ஒரு படத்தை தேர்ந்தெடுக்கும்போது ஏதேனும் ஒரு சீனிலாவது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருக்கவேண்டும். படம் முழுக்க நன்றாக நடித்திருக்கிறார் என்ற பெயரை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த சீனில் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொன்னாலே போதும். இந்த சீன் ரசிகர்களை கவரும் என்று நான் புரிந்துகொண்டுதான் அதன் அடிப்படையில் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பேன். ‘பல்லாங்குழி பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சிறுசிறு குழந்தைகள்கூட என்னிடம் வந்து அந்த பாடலை பாடி காண்பிப்பார்கள். ஒரு கிராமத்திற்கு ஷூட்டிங்குக்கு போயிருந்தபோது படம் பார்க்காத வயதானவர்கள்கூட, அந்த பாடலை பார்த்துவிட்டு பக்கத்துவீட்டு பெண் போல தோன்றியதாக என்னிடம் கூறினார்கள்” என்று தெரிவித்திருந்தார்.


சினேகாவை முன்னணி நட்சத்திரமாக உருவாக்கிய கதாபாத்திரங்கள்

‘ஆனந்தம்’ படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் சினேகாவுக்கு கிடைத்தது. தொடர்ந்து ‘புன்னகை தேசம்’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘உன்னை நினைத்து’, ‘வசீகரா’, ‘பார்த்திபன் கனவு’, ‘ஜனா’, ‘ஆட்டோகிராப்’ என அடுத்தடுத்து நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். ‘ஆட்டோகிராப்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலும் சினேகாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் பலரின் மோட்டிவேஷனல் பாடலாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

எப்படி எளிமையாக இருக்கும் ஒரு நடிகை இவ்வளவு திறமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார்? என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு கேட்டபோது, “எல்லாரும் நடிகர்கள் என்றாலே ஏசியிலேயே இருக்கிறார்கள், காரில்தான் போகிறார்கள் வருகிறார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் சோகமான சீன்களை கொடுப்பார்கள். சோகமான நேரத்தில் சந்தோஷமான சீன்களில் நடிக்கவேண்டி இருக்கும். எங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு ரசிகர்களை நடிப்பால் திருப்திப்படுத்தவேண்டும் என்பதுதான் நடிகர்களின் நோக்கம். என்னுடைய சிரிப்புக்கு ‘புன்னகை அரசி’ என பெயர் ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய சிரிப்புக்கு காரணமே அவர்கள்தான். ஒரு படம் நடித்து முடிக்கும்போது ஆடியன்ஸுக்கு பிடிக்கும்படி நடித்திருக்கிறோம் என எனக்கு திருப்தியாக இருக்கவேண்டுமென நான் நினைப்பேன். அதற்காக கண்ணாடி முன்பு நின்றெல்லாம் நடித்து பார்க்கமாட்டேன். ஸ்பாட்டில் என்ன சீன் கொடுத்தாலும் நடித்துவிடுவேன். ஆனால் கதையும் கேரக்டரும் எப்படி என்பதை முன்கூட்டியே கேட்டு தெரிந்துகொள்வேன்” என்றார். முன்னணி ஹீரோக்களுடன் நடித்தாலும் க்ளாமர் பக்கம் போவதில் தனக்கு விருப்பமில்லை எனவும், வெளிநாட்டில் வளர்ந்தபோதிலும் தன்னுடைய அண்ணன்கள் இருவரும் ஆடைகளில் எப்போதுமே கவனமாக இருந்ததால் அதுவே பழகிவிட்டது எனவும் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் சினேகா.


சினேகா - பிரசன்னா காதல் திருமண புகைப்படங்கள்

காதல் சர்ச்சையும் திருமணமும்

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகா, சமீபத்தில்தான் தனது 12வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். ஆனால் பிரசன்னாவிற்கு முன்பே பல ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் சினேகா. ராகவா லாரன்ஸ், அப்பாஸ், பிரசாந்த் போன்ற நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் சேர்ந்து நடித்தபோது காதல் பற்றிக்கொண்டதாக அப்போது பேசப்பட்ட நிலையில், ஸ்ரீகாந்துடன் இணைந்து ‘பார்த்திபன் கனவு’ படத்தில் நடித்தபோது காதல் பற்றிக்கொண்டதாக அந்த சமயத்தில் பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையே நடிகை சினேகாவை காதலிப்பதாகவும், தான் ஒரு பிஸினஸ்மேன் என்று சொல்லிக்கொண்டும் ஒரு நபர் வதந்திகளை பரப்பிய நிலையில் அது முற்றிலும் பொய் எனவும், அந்த நபர் யாரென்றே தெரியாது எனவும் ஓபனாக கூறிவிட்டார் சினேகா. இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் திடீரென தானும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து வருவதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்தார். 2009ஆம் ஆண்டு இருவருக்கும் வெகு விமரிசையாக திருமணமும் நடந்தது. தங்களுடைய காதல் குறித்து பழைய பேட்டி ஒன்றில் பிரசன்னா பகிர்கையில், “அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் சேர்ந்து நடித்ததிலிருந்து நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒரு கட்டத்தில் எங்களை அறியாமலேயே அது காதலாக மாறிவிட்டது. அமெரிக்காவில் காதல் தொடங்கியிருந்தாலும் டெவலப் ஆனது என்னவோ சென்னையில்தான். சினேகா வெளிநாட்டில் வளர்ந்திருந்தாலும் நமது கலாசாரத்திற்கு இங்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட அங்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஒரு தமிழ்ப்பெண்ணாகத்தான் வளர்ந்திருக்கிறார்” என்று கூறினார். கடந்த சில ஆண்டுகளில் பலமுறை சினேகாவும், பிரசன்னாவும் விவாகரத்து பெறப்போவதாக அவ்வப்போது வதந்திகள் வருவதுண்டு. அதேபோல, சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் பிரியவுள்ளதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், தங்களது 12வது திருமண நாளை விமரிசையாக கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறது சினேகா - பிரசன்னா தம்பதி.

குழந்தைகள்தான் உலகம்

தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சினேகா கூறுகையில், “ஆரம்பத்தில் நாங்கள் இருவருமே எப்போதும் சண்டை போட்டுக்கொள்வோம். பிரசன்னாவிற்கு என்னுடைய காதல் தோல்விகள் குறித்தும் சோகங்கள் குறித்தும் நன்றாக தெரியும். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அழகாக இருக்கிறது. ஏதாவது எனக்காக மாற்றிக்கொள்ளுங்கள் என்று பிரசன்னாவிடம் கூறும்போது உடனே அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் மாற்றிக்கொள்கிறேன் என்று கூறுவார். அதனாலேயே இப்போது சண்டைகள் வருவதில்லை” என்று கூறினார்.


குழந்தைகளுடன் சினேகா - பிரசன்னா தம்பதி

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். எப்போதும் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு சினேகா தவறியதில்லை என பிரசன்னா கூறியிருக்கிறார். “குழந்தைகள் இப்போது வளரும் வயதில் இருப்பதால் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தேவை. அதனாலேயே வெளியூர்களில் ஷூட்டிங் என்றால் வேண்டாமென்று சொல்லிவிடுகிறேன். என்னால் குழந்தைகளை விட்டுவிட்டு செல்லமுடியாது. குழந்தைகளை தாண்டி வேறு உலகம் இல்லை. வீட்டில் சினிமா பற்றி பேசுவதே இல்லை. குழந்தைகள் இருவரையுமே எங்களுடைய படங்களை பார்க்க விடுவதில்லை” என்று சினேகாவும் பொறுப்பான அம்மாவாக பேசுகிறார்.

பிசினஸில் கலக்கும் சினேகா

நடிகைகள் என்றாலே ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிசினஸில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது சில நடிகைகள் அதற்கு விதிவிலக்காக காஸ்மெட்டிக், மேக்கப் என இறங்கி வருகிறார்கள். எப்போதும் ஆடைகளின்மீது அதிக ஆர்வம்கொண்ட சினேகா தற்போது ‘சினேகாலயா’ என்ற பெயரில் பொட்டிக் ஒன்றை திறந்திருக்கிறார். ஆரம்பத்தில் சினேகா போட்ட ஆடைகளையே திரும்ப திரும்ப போடுகிறார் என விமர்சிக்கப்பட்டாராம். அதனாலேயே ஒருமுறை போட்ட ஆடையை திரும்ப போடக்கூடாது என முடிவெடுத்தாராம். சினேகாவின் அக்கா சங்கீதா ஒரு ஃபேஷன் டிசைனர். அவரும் பொட்டிக் ஒன்றை நடத்திவருகிறார். கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து விருது விழாக்கள், திருமணங்கள், பேட்டிகள் மற்றும் ஷோக்களில் கலந்துகொள்ளும்போது சினேகாவின் உடைகள் எப்போதும் தனிக்கவனம் பெறுவதுண்டு. அவற்றையெல்லாம் பெரும்பாலும் அவருடைய அக்காதான் வடிவமைப்பதாக சினேகா பலமுறை கூறியிருக்கிறார். குறிப்பாக, சினேகாவிற்கு பட்டுப்புடவைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனாலேயே தற்போது புடவை பொட்டிக் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.


சினேகாவின் பொட்டிக் ‘சினேகாலயா’

தனது கடையில் வைத்திருக்கும் புடவைகள் குறித்து அவர் பகிர்கையில், “பிசினஸ் என்று வருகையில் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. எனது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தவேண்டும் என்பதில் முனைப்பாக செயல்படுகிறேன். சினேகாலயாவில் வைத்திருக்கும் ஒவ்வொரு புடவையையும் வெவ்வேறு ஊர்களுக்கு நானே சென்று பார்த்துதான் வாங்கி வருவேன். ஒருசில இடங்களுக்கு தவிர்க்கமுடியாத காரணங்களால் என்னால் போகமுடியாமல் போய்விட்டாலும் எனது மேனேஜரை அனுப்பி வீடியோ கால் செய்து, பார்த்துதான் வாங்குவேன். வீட்டிலும் போனிலேயே புடவை டிசைன்களை அனுப்பச்சொல்லி பார்த்துக்கொண்டே இருப்பேன். இப்போது சோஷியல் மீடியாவில் இதுகுறித்து விளம்பரம் செய்தாலும், வெகு சீக்கிரத்தில் ஆன்லைனிலும் விற்பனை செய்யவிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

கோடிகளில் புரளுகிறாரா?

ஒருபுறம் குடும்பம்-குழந்தைகள், மறுபுறம் பிசினஸ் என ஓடிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார் சினேகா. இப்போது சினேகாவின் சொத்துமதிப்பு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடிவரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடிவரை சம்பளம் வாங்குகிறாராம். அதுபோக ரியாலிட்டி ஷோக்களிலும் ஜட்ஜாக வருகிறார், விளம்பரங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். சினிமா தாண்டி பொறுப்புகள் பல இருப்பதால் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறாராம். இப்போது சினேகா ‘கோட்’ படத்தில் நடித்துவருகிறார். அதில் விஜய் மூன்று கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒரு விஜய்க்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் சினேகா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீடும் இவருக்கு இருக்கிறது. அதுபோக விலையுயர்ந்த கார்களும் வைத்திருக்கிறாராம். ‘கோட்’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை கேட்டுவருகிறாராம் சினேகா.

Updated On 27 May 2024 6:36 PM GMT
ராணி

ராணி

Next Story