இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெரும்பாலும் சினிமாவில் நடிகைகள் திருமணத்திற்கு முன்னரே அதிகமான படங்களில் நடித்து அதன் மூலம் திரையுலகில் சாதித்து தங்களுக்கென ஒரு தனி அங்கீகாரத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் திருமணமாகி கையில் குழந்தையோடு சினிமாவில் நுழைந்து, எண்ணற்ற பல படங்களில் வெவ்வேறு மாறுபட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்தியவர் நடிகை சௌகார் ஜானகி. இவர், தன் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பெரும்பாலும் சோகக் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் அனுதாபம் பெற்ற நடிகையாகவே பார்க்கப்பட்ட போதிலும்... பிந்தைய காலங்களில் காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்து பாவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, தான் ஒரு சகலகலா நடிகை என பெயர் எடுத்தார். அப்படிப்பட்ட மகா நடிகையான சௌகார் ஜானகிக்கு இன்று (12.12.2023) 92வது பிறந்தநாள். இவரது திரைப்பயணம் குறித்தும்… திரைத்துறையில் அவர் செய்த சாதனைகள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

சௌகார் ஜானகியின் ஆரம்பகால வாழ்க்கை

இந்தியத் திரைத்துறையில் 73 வருடங்கள் தாண்டி தொடர்ந்து நடித்து வரும் சௌகார் ஜானகியின் நிஜ பெயர் சங்கரமஞ்சி ஜானகி. ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில், தெலுங்கு பேசும் நடுத்தர குடும்பத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வெங்கோஜி ராவ், சச்சி தேவி தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தை ஆந்திராவிலுள்ள தயாராம் சன்ஸ் என்கிற பேப்பர் மில்லில் பணியாற்றினார். பிறகு பெங்காலில் உள்ள ஷட்டகர் பேப்பர் மில் என பல மாநிலங்களுக்கும் அவர் பணி மாறிய காரணத்தால் சௌகாரால் பள்ளிப் படிப்பை சரியாக தொடர முடியாத நிலை இருந்தது. இந்த சமயத்தில்தான் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சிறிது காலம் வசித்தபோது, சாரதா வித்யாலயா பள்ளியில் படித்த சமயத்தில் சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் சௌகார் ஜானகி. இவரது குரல் நன்றாக இருந்ததால், அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், பெரியவர்கள் பங்கு பெறும் நாடகத்திலும் பேச வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து படித்துக் கொண்டும், வானொலி நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் இருந்த நேரத்தில், ஒருமுறை இவர் பங்கு பெற்ற வானொலி நாடகம் ஒன்றைக் கேட்ட தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, வானொலி நிலையத்தை தொடர்பு கொண்டு சௌகார் ஜானகி பற்றி விசாரித்திருக்கிறார். பிறகு, தான் எடுக்கும் "குண சுந்தரி கதா' என்கிற படத்தில் நடிக்கவும் அழைத்திருக்கிறார். ஆனால் இதற்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. உடனடியாக சௌகார் ஜானகியை, உறவினர் சங்கரமஞ்சி சீனிவாசராவ் என்பருக்கு 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.


குடும்பம் மற்றும் மார்டன் தோற்றங்களில் காட்சியளிக்கும் சௌகார் ஜானகி

மகிழ்ச்சியான வாழ்க்கை தனக்கு அமைந்து விட்டதாக எண்ணிய சௌகார் ஜானகி, திருமணத்துக்குப் பிறகு விஜயவாடாவில் சத்திய நாராயணபுரம் என்ற பகுதியில் ஒரு சிறிய வீட்டில் கணவருடன் வசித்து வந்தார். பின்னர் கணவரின் வேலை காரணமாக மீண்டும் சென்னை வந்தவருக்கு பேரதிர்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. முதல் பெண் குழந்தை யக்ஞ பிரபா பிறந்த சமயத்தில் கணவரின் வேலையில் சிக்கல் ஏற்படவே அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலை பறிபோனது. இதனால் உறவினர்களின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது உறவினர்கள் உதவி செய்ய முன் வந்தாலும் எவ்வளவு காலத்திற்கு அவர்களையே நம்பி இருப்பது என்று, எப்போதோ தன்னைத் தேடி வந்த சினிமா வாய்ப்பை இப்போது நாம் தேடிப் போனால் என்ன என்று அவருக்கு தோன்றவே, இது பற்றி கணவருடன் ஆலோசித்திருக்கிறார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, கணவரையும் அழைத்துக் கொண்டு கைக்குழந்தையுடன், தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

முதல் திரைப்பட வாய்ப்பு


சங்கரமஞ்சி ஜானகியாக இருந்தவர் சௌகாராக மாறிய தருணத்திலான புகைப்படங்கள்

கணவர் மற்றும் கை குழந்தையுடன் சௌகார் ஜானகி சினிமா வாய்ப்பு கேட்டு வந்திருப்பதை கண்ட பி.என்.ரெட்டி, தான் இப்போது படம் எடுப்பதில்லை, வேண்டுமானால் என் தம்பி நாகிரெட்டியிடம் சொல்கிறேன். அவரை சென்று பாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார். அண்ணனின் வார்த்தையை தட்டாமல், சௌகார் ஜானகியை வரவழைத்து ஏழு விதமான பாவங்களில் வசனம் பேச வைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார் நாகிரெட்டி. அத்தனையிலும் இவரது திறமை பளிச்சிடவே, விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்கு படத்தில் அவரது 19வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் ஜானகியின் தோற்றமும், நடிப்பும் இயல்பாக இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே அன்றுமுதல் ஜானகி, ‘செளகார் ஜானகி’ ஆனார். இவர் அறிமுகமான சமயத்தில்தான் பி.பானுமதி, கண்ணம்பா, டி.ஆர்.ராஜகுமாரி, மாதுரிதேவி போன்றவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தனர். இருப்பினும் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரின் பாராட்டையும் பெற்றதால், யார் இந்த பெண் என்று சௌகாரை அழைத்து பாராட்டினாராம் பானுமதி. இதனையடுத்து மாடர்ன் தியேட்டர்ஸின் "வளையாபதி" படத்தில் பாரதிதாசன் எழுதிய தமிழ் வசனத்தை பேசி நடித்த இவர், பிறகு ஜெமினி, ஏ.வி.எம். என வரிசையாக முன்னணி நிறுவனங்கள் தயாரித்த படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். இதில் குறிப்பாக பாக்கியலக்ஷ்மி, படிக்காத மேதை, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும் போன்ற "பா" வரிசைப் படங்கள் பலவற்றிலும் நடித்த இவருக்கு, அதன் வாயிலாக நல்ல புகழும் கிடைத்தது. மேலும் எம்.ஜி.ஆருடன் "ஒளி விளக்கு", சிவாஜியுடன் "உயர்ந்த மனிதன்" என்று தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருப்பதைப் போலவே தெலுங்கிலும் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் போன்றவர்களுடனும், கன்னடத்தில் ராஜ்குமாருடனும் நடித்து தென்னிந்திய அளவில் புகழ் பெற்றார்.

மறக்க முடியாத படம் மற்றும் பாடல்கள்

தென்னிந்திய திரையுலகில் எத்தனையோ நட்சத்திர நடிகர்களுடன் சௌகார் ஜானகி இணைந்து நடித்திருந்தாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும், இவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியை என்றுமே மறக்க முடியாது. ஏனென்றால் நடிகர் திலகத்துடன் ஜோடியாக மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று அவர் நடித்ததால்தான். இதற்கு உதாரணமாக 1964 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதிய பறவை’ திரைப்படத்தை சொல்லலாம். தாதா மிராசி இயக்கத்தில், சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் சௌகார் ஜானகி நடிப்பில் வெளிவந்த இப்படம் அன்று ஹாலிவுட்டுக்கு இணையாக பேசப்பட்டது. இதில் பலரையும் வெகுவாக கவர்ந்த "பார்த்த ஞாபகம் இல்லையோ" எனும் பாடல் சௌகார் ஜானகிக்கு என்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதில் சௌகார் காட்டும் மென்மையான நாகரீகமான நடன அசைவுகள், சுட்டும் விழி பார்வையில் கண்களை உருட்டி உருட்டி செய்யும் முகபாவனைகள், இன்று பார்த்தாலும் மனதை மயக்கும். இந்த பாடல் மட்டுமல்ல சௌகார் ஜானகி நடித்த படங்களில் இடம் பெற்ற பல பாடல்கள் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்களாக அமைந்துள்ளன. அதில் குறிப்பாக ‘குமுதம்’ படத்தில் வரும் “கல்லிலே கலைவண்ணம் கண்டான்”, ‘பார் மகளே பார்’ படத்தில் “நீரோடும் வைகையிலே” என்ற பாடல், ‘எதிர்நீச்சல்’ படத்தில் இடம்பெற்ற “அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா”, ‘இருகோடுகள்’ படத்தில் வரும் ”புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் ருக்மணிக்காக” போன்ற பாடல்களை என்றுமே நம்மால் மறக்க முடியாது.


சௌகார் ஜானகியின் வித்தியாசமான திரைப்பட காட்சிகள்

இதில் குறிப்பாக, ‘ஒளி விளக்கு’ படத்தில் வரும் “இறைவா உன் மாளிகையில்” என்ற பாடல் எம்.ஜி.ஆர்., உடல் நிலை சரியில்லாமல் ப்ரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து பிரபலம் ஆனது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த பாடலில் வரும் வேண்டுதலுக்கு ஏற்றவாரு, எம்.ஜி.ஆர்.-ம் அன்று முழு உடல்நிலை தேறி வீடு திரும்ப, ஒரு நாள் சௌகார் ஜானகி அவரைச் சந்திக்க நேரில் சென்றுள்ளார். அப்போது, `நான் மருத்துவமனையில் இருந்த போது நீ நடித்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததாமே என்று கூறி நெகிழ்ந்தாராம் எம்.ஜி.ஆர். மேலும் தமிழ் படங்களில் சுசிலா பாடிய பாடல்களில் மாஸ்டர் பீஸ் பாடல் என்றால் 1961-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாக்யலக்‌ஷ்மி’ படத்தில் செளகார் ஜானகிக்காக பாடிய “மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி!” என்ற பாடலை சொல்லலாம். இதில் கணவனை இழந்த ஒரு விதவை பெண்ணின் துயரத்தை உணர்வு பூர்வமான கவிதை வரிகளில் பாடி அனைவரையும் கண்கலங்க வைத்திருப்பார் சௌகார் ஜானகி.

கே.பாலசந்தர் கொடுத்த திருப்புமுனை

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, திரைப்படங்கள் மட்டுமின்றி, மேடை நாடகங்களிலும் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "மெழுகுவர்த்தி" நாடகம் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட முறை மேடையேறி நடித்துள்ளார். அதில் கே.பாலசந்தர் இவரது நடிப்புத்திறமையை நன்கு புரிந்து கொண்டதால்தான் அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘நீர்க்குமிழி’, ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’, ‘தில்லு முள்ளு’ போன்ற பல படங்களில் நடிக்க வைத்ததோடு, அவரது பன்முகத்திறமையையும் வெளிக்கொண்டு வந்தார். தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்களுடன் சௌகார் ஜானகி இணைந்து பணியாற்றி இருந்தாலும் பாலசந்தருக்கும் இவருக்கும் இடையேயான புரிதல் என்பது பல மறக்க முடியாத கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவில் உருவாக்க வழிவகுத்தது. அதற்கு உதாரணமாக கே.பாலசந்தர் இயக்கத்தில் 1968ஆம் ஆண்டு வெளிவந்த 'எதிர்நீச்சல்' படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாக, ஐயர் மாமி வேடத்தில் பட்டு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நகைச்சுவையில் கலக்கிய இவர், நடிகர் நாகேஷுக்கு எதிராக செய்யும் வில்லத்தனம் வாயிலாகவும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.


சௌகார் ஜானகி நடித்த 'உயர்ந்த மனிதன்' மற்றும் 'எதிர்நீச்சல்' திரைப்படங்களின் காட்சிகள்

இதேபோன்று இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மற்றொரு வெற்றிப் படமான 'இரு கோடுகள்' படத்திலும் ஜெமினியின் முதல் மனைவியாக வரும் சௌகார் ஜானகி, காதல், பிரிவு, சோகம் என்று பல உணர்ச்சிகளை காட்டி கலங்க வைத்திருந்தார். இதில் உச்சபட்சமாக சிறிது இடைவேளைக்குப் பிறகு, பாலசந்தர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி 'தில்லு முல்லு' படத்தில் மீனாட்சி துரைசாமியாக வரும் இவர், தன் நடிப்பால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். குறிப்பாக, படத்தில் பல தில்லு முல்லு வேலைகள் செய்யும் ரஜினியுடன், சௌகாரும் சேர்ந்து தேங்காய் சீனிவாசனை ஏமாற்றும் காட்சிகள் எவர்கிரீன் காமெடி சரவெடி என்றே சொல்லலாம். இப்படி தன் முழு திறமையையும் வெளிக்கொண்டு வர கே.பாலசந்தர் காரணமாக இருந்ததால், தான் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்த போது அதனை இயக்கும் பொறுப்பை அவருக்கே கொடுத்தார் சௌகார் ஜானகி. அதன்படி "காவியத் தலைவி", "ரங்க ராட்டினம்" ஆகிய இரண்டு படங்களையும் சொந்தமாகத் தயாரித்து அதிலும் வெற்றி கண்டார்.

விருதுகளும், சாதனைகளும்

90களுக்குப் பிறகும் கமலின் ‘வெற்றி விழா’, மம்முட்டியின் ‘அழகன்’, அர்ஜூனுடன் ‘கொண்டாட்டம்’, அஜித்துடன் ‘தொடரும்’ என நடித்தவர், மீண்டும் 14-வருடங்களுக்கு பிறகு நடிகர் கிருஷ்ணா நடித்து வெளிவந்த ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவிற்கு பாட்டியாக நடித்தார். அதற்குப் பிறகு படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்தவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘தம்பி’ படத்தில் அவர்களின் மாற்றுத்திறனாளி பாட்டியாக நடித்து கவனம் பெற்றார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘பிஸ்கோத்’ படத்தில் நடித்தவர் அதன் பிறகு வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 73 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் பயணித்து வரும் இவர், 1970-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது, 1984-ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, 1985-ல் மகாநதி சாவித்திரி விருது, 1990-ல் எம்.ஜி.ஆர். விருது, 2004-ல் நடிகர் திலகம் சிவாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது, 2020-ல் தமிழக அரசின் புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது என எண்ணற்ற விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.


வெவ்வேறு காலகட்டங்களில் சௌகார் ஜானகி விருது பெற்ற தருணங்கள்

அனைத்திற்கும் மகுடமாக, கலைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்ததற்காக இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது, சௌகார் ஜானகிக்கு 2022-ல் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இப்படி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள சௌகார் ஜானகி எந்த மொழியானாலும், துவக்க காலம் முதலே அவரே டப்பிங் பேசுவாராம். இதுதவிர சமையல், தோட்டக் கலையில் வல்லவரான இவருக்கு பிறந்தவர்கள் இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் யக்ஞ பிரபா சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகள்தான் நடிகை வைஷ்ணவி. இவர் 90களில் பல படங்களில் நடித்திருக்கிறார். மற்றொரு மகனும், மகளும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இன்று(12.12.2023) 92வது பிறந்தநாளை கொண்டாடும் சௌகார் ஜானகி ஆரம்பத்தில் பல வலிகளை சந்தித்திருந்த போதிலும், தனது திறமையால் அதிலிருந்து மீண்டு சாதனை படைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பெண்களால் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி இன்றும் சமுதாயத்தில் நிலவி வரும் நிலையில், அன்றே ஜெயித்துக் காட்டிய சௌகார் ஜானகி என்றுமே சரித்திர நாயகிதான்.

Updated On 18 Dec 2023 6:41 PM GMT
ராணி

ராணி

Next Story