இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எவ்வளவு கடினமான ரோல்களாக இருந்தாலும், அதை வெகு சாதாரணமாக கையாண்டு நடித்து தனக்கென்று தனி முத்திரை பதித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் வெற்றியாளராக தன் அடையாளத்தைப் பதிவு செய்து, அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர் கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 'ஃபர்ஹானா', 'ரன் பேபி ரன்', 'சொப்பன சுந்தரி', 'தீரா காதல்', 'புலிமடா', ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என ஆறு படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியுள்ளார். தான் நடிக்கும் படங்கள் நல்ல வசூலை பெறுகிறது என்பது தெரிந்தும், தனது சம்பள விஷயத்தில் கறார் காட்டாமல் இருப்பதால் என்னவோ, இன்று பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் விருப்பத் தேர்வாகவும் இருந்து வருகிறார். இப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நாளை (10.01.24) தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள ஐஸ்வர்யா.. சிறுமியாக இருக்கும் போதே தந்தையின் மறைவு, வெற்றிகரமான கதாநாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல கட்ட போராட்டங்கள் என கடினமான காலங்களை கடந்துவந்துள்ளார். அவர் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை

தன் இயல்பான நடிப்பாலும், எதார்த்தமான அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 1990-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி, ராஜேஷ் மோகன், நாகமணி தம்பதியருக்கு கடைக்குட்டி மகளாக தெலுங்கு பேசும் குடும்பத்தில் சென்னையில் பிறந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பிறந்தது 3 அண்ணன்கள் ஆவர். இவரது தந்தை ராஜேஷ் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் மட்டுமின்றி அவரது அப்பா அதாவது ஐஸ்வர்யாவின் தாத்தாவும் டோலிவுட்டில் நடிகராக இருந்தவர். அதேபோன்று அவரது அத்தை ஸ்ரீ லட்சுமியும் தெலுங்கு திரையுலகில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். இப்படி சினிமா பின்புலம் உள்ள குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா தனது 8 -வது வயதில் தந்தையை இழந்தார். தந்தை மறைந்தாலும் நம் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அண்ணன்கள் இருக்கிறார்கள்.. அம்மா இருக்கிறார். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஐஸ்வர்யா தன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி பள்ளிக்கல்வியை சென்னையில் செயல்பட்டுவரும் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் முடித்தார். கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் தொடர்ந்தார். அப்போது கல்லூரி மேடைகளில் நடனம் ஆட வேண்டும் என்று நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு நடனத்தின் மீது ஆசை ஏற்பட அம்மாவும் ஒரு நடனக்கலைஞராக இருந்ததும் காரணமாக இருக்கலாம். இப்படி படிப்பு, நடனம் என்று குடும்பத்தை பற்றி கவலையே இல்லாமல் ஐஸ்வர்யா மிகவும் சந்தோஷமாக இருந்ததற்கு காரணம் அவரின் அம்மா நாகமனிதான். ஏனென்றால், அப்போது பிள்ளைகள் அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த வகையிலும் அவர்கள் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று ஆக்ரா, மும்பை பகுதிகளுக்கு 4 அல்லது 5 நாட்கள் ரயிலிலேயே பயணம் செய்து சேலை எடுத்து வந்து விற்பனை செய்து, தன் நான்கு பிள்ளைகளையும் வளர்த்துள்ளார். அப்போதெல்லாம் தனது கஷ்டத்தை பெரிதாக நினைக்காமல் அவர் பிள்ளைகளுக்காக ஓடி ஓடி கஷ்டப்பட்டாலும், இது இன்னும் கொஞ்ச காலம்தான். சீக்கிரம் என் மூத்த மகன் ராகவேந்திரா குடும்ப பொறுப்புகளை பார்க்க ஆரம்பித்துவிடுவான் என்று மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்த போதுதான், தன் குடும்பத்தை பற்றி சிறிதும் யோசிக்காமல், தன்னை தானே மாய்த்துக் கொண்டாராம் அவர். தங்களது அடுத்த நம்பிக்கை மூத்த மகன்தான். அவர்தான் தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் அவர் எடுத்த அந்த முடிவு ஐஸ்வர்யா குடும்பத்திற்கு பேரிடியாக வந்து விழுந்தது மட்டுமின்றி தனது அண்ணனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பது இன்றுவரை தெரியவில்லை என்று ஐஸ்வர்யாவே பலமுறை தெரிவித்துள்ளார். பின்னர் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தவர்கள், இரண்டாவது அண்ணன் படித்துக்கொண்டிருக்கிறான், அதனால் குடும்பத்திற்கு நாம் உதவியாக இருப்போம் என்று 3-வது அண்ணனான மணிகண்டன் பிபிஓ அதாவது படித்துக்கொண்டே இரவு நேர கால் சென்டர் வேலைக்கு போக ஆரம்பித்தார்.


அம்மா நாகமணி மற்றும் அண்ணன் மணிகண்டனுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த நேரம் இரண்டாவது அண்ணன் தனது ஹோட்டல் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவில் படிப்பை முடித்து, 40 ஆயிரம் சம்பளத்தில் பணியிலும் சேர்ந்தார். அப்போதுதான் அவரது அம்மா கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாராம். அப்போது ஐஸ்வர்யாவும் வணிகவியலில் பட்டம் பெற்று சன் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியில் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து அதில் பங்கேற்றார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று செல்லும் நேரத்தில் கருணையே இல்லாத காலதேவன் ஐஸ்வர்யாவின் இரண்டாவது அண்ணனையும் ஒரு விபத்தில் அழைத்துக்கொண்டார். ஒருநாள் நண்பர்களுடன் வெளியில் சென்றிருந்த பொழுது ஏற்பட்ட கார் விபத்தில், உடன் பயணித்த 2 நண்பர்கள் தப்பித்துக்கொள்ள, ஐஸ்வர்யாவின் அண்ணன் மட்டும் மறைந்து போனார். எந்த அண்ணன்களால் குடும்ப சூழல் மாறி மேலே வந்துவிடுவோம் என்று மனதை தேற்றிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்தார்களோ அவர்கள் இருவருமே உயிரோடு இல்லை என்று நினைக்கும் போது அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். இதனால் மிகவும் மனம் உடைந்து போன குடும்பம் அடுத்து என்ன செய்வது? நமது குடும்பத்தில் மட்டும் ஏன்? அடுத்தடுத்து இப்படியொரு மோசமான நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுகிறது என்று தவித்த போது, மிகவும் மன உறுதிப்படைத்த ஐஸ்வர்யா, எதற்கும் சோர்ந்து போய் அமர்ந்து விடக்கூடாது... வாழ்க்கை அழைத்து செல்லும் பாதையில் நாமும் சென்று, வரும் பிரச்சினைகளை சந்தித்துதான் பார்ப்போம் என்று குடும்பமாக முடிவெடுத்து மீண்டும் ‘மானாட மயிலாட’ பகுதி-3 நிகழ்ச்சியில் பங்குகொண்டு வெற்றியாளராக முத்திரை பதித்தார். இங்குதான் ஐஸ்வர்யாவின் குடும்பம் தலைநிமிர ஆரம்பித்தது.


'மானாட மயிலாட' நிகழ்ச்சி மேடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

திரை அறிமுகம் நிகழ்ந்தது எப்படி?

அம்மாவின் சுமையை குறைக்க வேண்டும் என்றால் நாம் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றால்தான் முடியும் என்று கலைத்துறையிலேயே ஏதாவது முயற்சிக்கலாம் என்று முதலில் சீரியலில் நடிக்க முயற்சித்துள்ளார். அங்கு அடையாளம் தெரியாத சிறு சிறு வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தவருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 ரூபாய் வரை சம்பளம் கிடைத்துள்ளது. இது ஒருபுறம் சந்தோஷத்தை தந்தாலும், சீரியலில் வந்து நடிக்கும் பெரிய பெரிய ஹீரோயின்கள் வாங்கும் சம்பளம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தன் அம்மாவிடம் பகிர்ந்து கொண்ட போது, அவர்கள் எல்லாம் சினிமாவில் கதாநாயகிகளாக கொடிகட்டிப் பறந்துவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களது திறமைக்கு அப்படி கொடுப்பதுதான் சரி என்று சொல்லவும், பிறகென்ன நாமும் சினிமாவில் முயற்சிப்போம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்தாராம். அப்படி வாய்ப்பு தேடி செல்லும் போதெல்லாம் பல இடங்களில் அவரது நிறம், அணிந்திருக்கும் உடை, தோற்றம், குரல் ஆகியவற்றை பார்த்து அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிவிடுவார்களாம். மேலும் சில இடங்களில் உனக்கெல்லாம் எதற்கு ஹீரோயின் வாய்ப்பு? நீயெல்லாம் ஹீரோயினோட தோழிக்கு தோழியாக நடிக்கக் கூட தகுதி இல்லாத நபர் என்று கடும் வார்த்தைகளால் வசைபாடவும் செய்வார்களாம். அப்போது அவர்களுக்கெல்லாம் ஐஸ்வர்யா சொன்ன ஒரே பதில், ஏன் மாநிறமா இருந்தா நாங்க எல்லாம் ஹீரோயினா நடிக்கக்கூடாதா? நானும் ஹீரோயினா வந்து காட்டுறேன் என்று தொடர் முயற்சிகளில் இறங்கினார் ஐஸ்வர்யா. அப்படி அவருக்கு முதல் முறையாக வந்து அமைந்ததுதான் நீதானா அவன் திரைப்படம். இப்படத்தில் ஹீரோயின் வாய்ப்பு இல்லை என்றாலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்பிறகு தொடர்ந்து 4, 5 படங்களில் நடித்தும் பெரிதாக அடையாளம் கிடைக்கவில்லை. பிறகு ப.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி படம் ஓரளவுக்கு அவருக்கு அடையாளத்தை பெற்றுத்தர, விஜய் சேதுபதியுடன் நடித்த ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘கதை திரைக்கதை வசனம்’, ‘திருடன் போலீஸ்’ போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றிப்படங்களாக இல்லை என்றாலும், பலரின் கவனத்தை ஈர்க்கும் படங்களாக, ஐஸ்வர்யாவின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரும் படங்களாக அமைந்தன.


ஐஸ்வர்யா ராஜேஷின் ஆரம்பகால படத்தின் காட்சிகள்

மாற்றத்தை ஏற்படுத்திய ‘காக்கா முட்டை’

2011 தொடங்கி 4 ஆண்டுகளில் 11 படங்களில் நடித்தும் ஐஸ்வர்யாவிற்கு வெற்றிப்படங்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இருந்தும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவிற்கு வரப்பிரசாதமாக வந்து அமைந்த படம்தான் ‘காக்கா முட்டை’. எம்.மணிகண்டன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத மைல்கல் படமாக அமைந்தது. அதுவும் இப்படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அம்மா வேடம் ஏற்று நடிக்க தயங்கும் பல நடிகைகளுக்கு மத்தியில், திரைக்கு வந்து பெரிதாக வெற்றிகள் கொடுக்காத நிலையிலும், அடுத்தக்கட்ட வாய்ப்புகளை பற்றியெல்லாம் யோசிக்காமல் 24 வயதே நிரம்பிய ஒரு பெண் இப்படி சினிமாவில் அம்மா வேடம் ஏற்று நடித்திருந்தது அன்று ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தியது. மேலும் படத்தில் ஐஸ்வர்யாவின் எதார்த்தமான நடிப்பும், தோற்றமும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இப்படத்தில் ஐஸ்வர்யாவின் மகன்களாக நடித்த இரண்டு சிறுவர்களுக்கும், 62வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் விருதுகள் கிடைக்கப்பெற்ற அதே வேளையில், இப்படத்தில் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை ஐஸ்வர்யா பெற்றார். ‘காக்க முட்டை’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரே ஆண்டில் ஏழு, எட்டு படங்களில் நடிக்கும் அளவுக்கு வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. அப்படி அருள்நிதியுடன் ‘ஆறாது சினம்’, உதயநிதியுடன் ‘மனிதன்’, விஜய் சேதுபதியுடன் ‘தர்மதுரை’, விதார்த்துடன் ‘குற்றமே தண்டனை’ என நடித்தவருக்கு விஜய் சேதுபதியுடன் நடித்த ‘தர்மதுரை’ திரைப்படம் மற்றுமொரு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் தமன்னா, விஜய் சேதுபதியின் நடிப்பைத்தாண்டி, எல்லோர் மனதிலும் கடைசிவரை வலியை ஏற்படுத்தி நின்றது என்னவோ காமுக பட்டி அன்புச்செல்வியாக வந்து நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ்தான். இந்த வெற்றிகளை தொடர்ந்து தமிழைத்தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பயணிக்க ஆரம்பித்தார்.


ஐஸ்வர்யா ராஜேஷின் 'காக்க முட்டை' மற்றும் 'தர்மதுரை' படத்தின் காட்சிகள்

சாதித்தது எப்படி?

‘காக்க முட்டை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் ஐஸ்வர்யாவின் திரைவாழ்வில் முக்கிய படங்களாக பார்க்கப்பட்டாலும், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘கனா’ திரைப்படம் மிக முக்கிய படமாக ஐஸ்வர்யாவிற்கு அமைந்தது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சாதாரண ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒரு பெண் தன் தந்தைக்கு பிடித்த கிரிக்கெட்டில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்று விடாமுயற்சியோடு போராடி இறுதியில் எப்படி வெற்றி என்ற இலக்கை அடைகிறார் என்பதை தன் இயல்பான நடிப்பின் வாயிலாக ஐஸ்வர்யா நடித்து காண்பித்திருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஐஸ்வர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதே போன்று அடுத்த ஆண்டே சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி வெளிவந்த 'நம்ம வீட்டு பிள்ளை' படமும், ஐஸ்வர்யாவிற்கு ஒரு வெற்றி மகுடமாக அமைந்தது. இதன் பிறகு கதை தேர்வுகளில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்தவருக்கு தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குநராக பார்க்கப்படும் மணிரத்னம் அவர்களின் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, ‘செக்க சிவந்த வானம்’, ‘வானம் கொட்டட்டும்’, தனுஷுடன் ‘வட சென்னை’, ‘கபே ரணசிங்கம்’, ‘திட்டம் 2’(பிளான்.பி), ‘டிரைவர் ஜமுனா’ போன்ற படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து தன் முத்திரையை பதிவு செய்திருந்தார். இதில் குறிப்பாக க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளிவந்த 'திட்டம் இரண்டு' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த ஐஸ்வர்யா, காதல் ஆக்சன் இரண்டையும் இடத்திற்கு தகுந்தவாறு வெளிப்படுத்தி இருந்தார். கொரோனா காலகட்டத்தில் இப்படம் வெளிவந்ததால் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோன்று பெண் டாக்ஸி டிரைவரை மையமாகக் கொண்டு வெளிவந்த 'டிரைவர் ஜமுனா' படத்தில் நேர்மையான அரசியல்வாதியை காப்பாற்றும் துடிப்புமிக்க டிரைவராக நடித்திருந்த ஐஸ்வர்யா தன் அமைதியான கோபத்தை ஆற்றல் மிக்க நடிப்பினால் வெளிப்படுத்தி பலரையும் சபாஷ் போட செய்திருந்தார்.


'கனா', 'நம்ம வீட்டு பிள்ளை', 'வட சென்னை' படத்தின் காட்சிகள்

2023-ல் ஐஸ்வர்யா கொடுத்த வெற்றிப்படங்கள்

இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்டு நாயகியை மையப்படுத்தி வெளிவந்த ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மிளிர்ந்திருந்தார். ஹீரோயின் சென்ரிக் படமாக கடந்த ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த இப்படத்தில், இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் சென்னை ஐஸ்ஹவுஸின் நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக ஃபர்ஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படத்தில் அழுவது, எழுவது, பிரச்சினையை எதிர்கொள்ள போராடுவது, தனியொரு பெண்ணாக குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது என திரை முழுவதும் ஃபர்ஹானாவாக வாழ்ந்து நம்மை கவர்ந்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இதே ஆண்டில் ஜியென் கிருஷ்ணகுமார் என்பவரது இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து 'ரன் பேபி ரன்' படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் மிளிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திய குடும்பங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கையின் சுழலோட்டத்தை கண்ணாடியாய் காட்டி முகத்தில் அறையும் படைப்பாக, ஏற்கனவே மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் பதிப்பில் நடித்திருந்தார். ரீமேக் படமாக இருந்தாலும் நிமிஷா சஜயன் போல் அல்லாமல், சற்று வித்தியாசம் காட்டி பெண்களின் வலியை அழுத்தமாகவும், ஆணாதிக்கத்திற்கு எதிராக வெகுண்டு எழும் புரட்சி பெண்ணாகவும் இருவேறுபட்ட உணர்ச்சிகளை அற்புதமாக வெளிப்படுத்தி பாராட்டப் பெற்றார். இதன்பிறகு 'சொப்பன சுந்தரி' , ‘தீராக் காதல்’, ‘புலிமடா’ ஆகிய படங்களும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு வெற்றிப்படங்களாக அமைந்து 2023-ல் மறக்க முடியாத பெண் நடிகைகளின் பட்டியலில் இணைந்தார்.

தற்போது ‘கருப்பர் நகரம்’, ‘மோகன்தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’, ‘அஜயண்டே ரண்டம் மோஷனம்’, ‘ஹெர்’(her) என தமிழ் மற்றும் மலையாளத்தில் கைவசம் ஐந்து படங்களை வைத்திருக்கும் ஐஸ்வர்யா, வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு எப்போதும் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். கிடைத்தது ஒரு வாழ்க்கை.. வாழ்ந்துதான் பார்ப்போம் என்ற குறிக்கோளுடன் தனது அம்மா மற்றும் அண்ணனை மகிழ்வித்தது மட்டுமின்றி இன்று தனது தந்தை மற்றும் இரண்டு அண்ணன்களும் நம்மோடுதான் இருந்து தன்னை வழிநடத்தி வருகிறார்கள் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த படிக்கட்டுகளை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறார். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்ற தாரக மந்திரத்திற்கு உதாரணமாக விளங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திரையுலகில் மேலும் பல சாதனைகளை பதிவு செய்து தென்னிந்திய திரையுலகம் கொண்டாடும் நடிகையாக உச்சம் பெற ராணி டிஜிட்டல் சார்பாக வாழ்த்துவோம்.

Updated On 15 Jan 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story