இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘வாழு; வாழவிடு!’ என்ற தாரக மந்திரத்தை தனது வாழ்க்கையில் கடைபிடித்து வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையில் இருப்பவர்களும்கூட ‘ஜென்டில்மேன்’ என மதிக்கத்தக்க வகையில் நடந்துகொள்ளும் இவர், சுமார் 10 ஆண்டுகளாக பொதுவெளியில் தலைகாட்டுவதை முற்றிலும் தவிர்த்துவந்தார். இப்படியிருக்கையில் கடந்த சில வாரங்களாகவே எங்கு திரும்பினாலும் அஜித் குறித்த செய்திகள்தான் ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக பத்ம பூஷண் விருது வென்ற மகிழ்ச்சியை குடும்பத்துடன் அஜித் பகிர்ந்துகொண்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வலம்வர தொடங்கிய கையோடு இவரது கடந்தகாலம் குறித்த செய்தியும் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அது ஹீரா - அஜித் காதல் குறித்த செய்திதான். ஹீராவும் அஜித்தும் எப்படியெல்லாம் காதலித்தனர்? அஜித்துக்காக ஹீரா என்னவெல்லாம் செய்தார்? அப்படியிருந்தும் அஜித் ஏன் ஹீராவை விட்டுவிட்டு ஷாலினியை திருமணம் செய்தார்? அஜித் உண்மையிலேயே ‘ஜென்டில்மேன்’ தானா? போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் விவாதமாகவே மாறியிருக்கின்றன.

இளம்நாயகன் அஜித்தும் காதல்களும்!

திரைத்துறையில் இருந்தாலே பல்வேறு கிசுகிசுக்களையும் வதந்திகளையும் சந்திக்கவேண்டி இருக்கும். அதற்கு எந்த நடிகர், நடிகைகளும் விதிவிலக்கல்ல. 90களின் தொடக்கத்தில் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்கவந்த நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் தமிழ் சரியாக பேசவராததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருந்தாலும் மிகவும் ஹேண்ட்ஸம் ஹீரோ என்பதாலேயே அப்போது பல நடிகைகள் இவருக்கு ரசிகராகினர். ஆரம்பத்தில் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் அஜித் இணைத்து பேசப்பட்டார் என்றாலும், சுவலட்சுமி, ஸ்வாதி மற்றும் ஹீரா போன்ற நடிகைகளுடன் அஜித்துக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய பத்திரிகைகளில் எழுதப்பட்டன. குறிப்பாக, ‘ஆசை’ படத்தில் அஜித்தின் துறுதுறு நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. அதேசமயம் சுவலட்சுமியுடனான காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாக அமைந்தன. அந்த சமயத்தில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அஜித் தனது அடுத்தடுத்த கதாநாயகிகளுடனும் சேர்த்து பேசப்பட்டார். அதில் குறிப்பாக, ‘வான்மதி’ படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த ஸ்வாதி என்பவரை அஜித் காதலித்துவருவதாகவும், இருவரும் ஒன்றாக ஊர்சுற்றுவதாகவும் பேசப்பட்டது. இப்படியிருக்கையில், 90களின் கனவுகன்னியாக வலம்வந்த ஹீராவுடன் அஜித்துக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக திரைப்படங்களில் சேர்ந்து நடிப்பதற்கு முன்னமே காதலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, திருமண வாழ்க்கையில் திருப்தியின்றி சுற்றிவந்த முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சரத்குமாருக்கு ஹீரா மீது காதல் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே அடுத்தடுத்து 4 படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தார். அதேநேரம் குறுகிய காலத்தில் புகழின் உச்சத்திற்கு சென்று திடீரென காணாமல்போன நடிகைகளில் ஒருவர் ஹீரா. அதற்கு காரணம் அவருடைய காதல் தோல்வி என்று சொல்லப்படுகிறது.


அஜித்தை ஹீரா காதலித்ததால் ஒதுங்கிக்கொண்ட சரத்குமார்

சொல்லப்போனால் ஹீராமீது சரத்குமாருக்கு எவ்வளவு காதல் இருந்ததோ, அதைவிட அஜித்மீது ஹீராவுக்கு அதிக காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்பா, அம்மா இருவருமே ராணுவத்தில் மருத்துவர்கள் என்பதாலேயே பல ஊர்களில் வசித்த ஹீராவுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகள் அத்துப்படியாம். மேலும் இவர் மாடலிங்கிலும் இருந்ததால் பலமொழிப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. தமிழில் ஹீரா கதாநாயகியாக அறிமுகமான ‘இதயம்’ படத்தின் வெற்றி குறித்து சொல்லத் தேவையில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்துவந்த ஹீரா, அஜித்துடன் காதலில் விழ இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் அஜித்துக்கு அவ்வளவாக படங்கள் இல்லாததால் ஹீராவை பிக்கப் டிராப் செய்வதும், அவருடன் ஊர் சுற்றுவதுமாக இருந்துவந்துள்ளார். குறிப்பாக, சரத்குமாரிடம் இருந்து ஹீராவை விலக்கிவைத்துள்ளார். அதனால் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கிவந்துள்ளனர். இவர்கள் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கத் தொடங்கிய பிறகுதான் ராதிகாவை காதலிக்க தொடங்கினார் சரத்குமார். இப்படி அவர் ஹீராவின் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிவிட, அஜித்மீது ஹீராவின் காதல் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. படங்களில் தனக்கு கிடைத்த சம்பளத்தையெல்லாம் அஜித்தின் கெரியர் முன்னேற்றத்துக்காக ஹீரா செலவழிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட, அந்த சமயத்தில் அஜித்தின் படங்கள் வெற்றியடைய தொடங்கின. காதலை மறக்கமுடியாத ஹீரா, பலமுறை அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட்களுக்கே சென்று தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சியதாக அப்போதைய பத்திரிகைகளில் எழுதப்பட்டன. ஆனால் அஜித்தின் பெற்றோர் ஹீராவுடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்தான் அஜித்தும் அழுத்தம்திருத்தமாக ஹீராவுக்கு நோ சொல்லிவிட்டதாக சொல்லப்பட்டது. இதனால் மனமுடைந்த ஹீரா, படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.


கார் ரேஸில் வென்றபிறகு மனைவி ஷாலினிக்கு நன்றி தெரிவித்த அஜித்

அஜித்துக்காக சினிமாவுக்கு நோ சொன்ன ஷாலினி!

ஹீராவுடனான காதல் தோல்விக்கு பிறகு, தொடர்ந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அஜித். தொடர்ந்து இவருடைய படங்கள் வெற்றியடைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம்வந்தார். அந்த சமயத்தில் ‘அமர்க்களம்’ படத்தில் ஷாலினியுடன் ஜோடி சேர்ந்தார் அஜித். படம் முடிவதற்குள் இருவரும் உண்மையிலேயே காதலில் விழ, திருமணம் செய்துகொள்வது என முடிவெடுத்தனர். 2000ஆம் ஆண்டு அஜித் - ஷாலினி திருமணம் முடிந்த கையோடு, திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் ஷாலினி. அஜித்தின் கட்டாயத்தின்பேரில்தான் ஷாலினி நடிப்பதை நிறுத்தினார் என்று பேசப்பட்ட நிலையில், இருவரும் ஷூட்டிங்கிற்கு போனால் குடும்ப வாழ்க்கைக்கு செலவிட நேரம் இருக்காது என்பதால், நடிக்கவேண்டாம் என்ற முடிவை தானே விரும்பி எடுத்ததாகக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஷாலினி. படங்களில் நடிக்காவிட்டாலும் கணவர் அஜித்துடன் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, குழந்தைகளின் பள்ளி விழாக்களில் கலந்துகொள்வது என அவ்வப்போது வெளியே தலைகாட்டிவந்த ஷாலினி, சமூக ஊடகங்களின் வரவுக்கு பிறகு அதில் தொடர்ந்து அப்டேட் செய்துவருகிறார். அதேபோல் ஷாலினியை திருமணம் செய்துகொண்ட பிறகு அஜித்தும் புகைப்பழக்கத்தை கைவிட்டு, தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டார். திருமணத்திற்கு முன்புவரை அஜித்தின் நடவடிக்கைகள் குறித்து கிசுகிசுக்கள் பரவிவந்தாலும், திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள், நடிப்பு, கார் ரேஸ் என கொஞ்சம் கொஞ்சமாக தனது உலகத்தை சுருக்கிக்கொண்டார் அஜித். அஜித்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்குமே ஷாக் கொடுக்கும் வகையில் இருந்தாலும், அவருடைய பெருந்தன்மை மற்றும் குணத்தை பாராட்டி வருகின்றனர்.


ஜனாதிபதி கையால் பத்ம பூஷண் விருது பெற்றபிறகு மனைவி ஷாலினியுடன் போஸ் கொடுத்த அஜித்

புகழ்களை விரும்பாதவர்!

இப்படி ரியல் ‘ஜென்டில்மேன்’ என பெயர் எடுத்து வைத்திருக்கும் அஜித்தை அரசியலில் ஈடுபடுத்த ஒருகட்டத்தில் பலதரப்புகளிலிருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை வெளிப்படையாக கூறிவிட்டார். அதேபோல் தன்னுடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி சிலர் கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபட்டது தெரியவர, ‘மங்காத்தா’ படத்திற்கு பிறகு இனிமேல் தனக்கு ரசிகர் மன்றமே அமைக்கக்கூடாது என தெளிவாக கூறிவிட்டார். அதேபோல் பொதுநிகழ்ச்சிகளிலும் அரசியல் நிகழ்வுகளிலும் தலைகாட்டுவதை நிறுத்திக்கொண்டார். கடந்த ஆண்டு இனிமேல் யாரும் தன்னை ‘தல’ என்று அடைமொழி வைத்து அழைக்கவேண்டாம் என்றும், அஜித்குமார் என்ற தனது பெயரை மட்டுமே பயன்படுத்தி கூப்பிட்டாலே போதும் என்றும் சொல்லிவிட்டார். அஜித்தின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அவருடைய ரசிகர்கள் மேலும் மேலும் கவரப்பட்டுவந்த நிலையில்தான், தனக்கு மிகவும் பிடித்த கார் மற்றும் பைக் ரேஸிலும் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்துள்ளார் அஜித். தனது ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் மனைவி ஷாலினி பக்கபலமாக இருப்பதை பதிவுசெய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் அஜித், சமீபத்தில் உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ விருதை ஜனாதிபதி கையால் வாங்கியபிறகு அளித்த பேட்டியிலும், தனது மனைவிக்கு நன்றி தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில், “நான் மனதளவில் இன்னும் மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழ்வதாகவே உணர்கிறேன். இந்த விருதை பெறுவது அசாதாரணமான நிகழ்வாக தோன்றுகிறது. ஆனால் மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தருணங்கள்தான் உங்களை ஊக்குவிக்கும். நான் சரியான பாதையில் செல்வதாக உணர்கிறேன். நான் இந்த இடத்தை அடைவதற்கு முக்கிய காரணம் என் மனைவி ஷாலினி. அவருக்கு நன்றி சொல்வது என்னை சரியாக காட்டிக்கொள்வதற்காக அல்ல. திருமணத்திற்கு முன்பே ஷாலினி மிகவும் பிரபலமானவர்தான். எனக்காக சினிமாவை விட்டுவிட்டு என்னுடைய ஒவ்வொரு அடியிலும் உறுதுணையாக இருந்துவருகிறார். என்னுடைய தவறான முடிவுகளின்போதும்கூட மனம் தளராமல் உறுதுணையாக இருந்துள்ளார். அவருக்குத்தான் முழு பாராட்டுகளும் சேரவேண்டும்” என்று கூறியிருந்தார். அஜித்தின் இந்த பேட்டி வைரலாகிக்கொண்டிருந்த அதே நேரத்தில் மற்றொரு செய்தியும் உலாவரத் தொடங்கியது.


ஹீராவுடனான காதல் குறித்து பரவிவரும் செய்திகளால் வருத்தத்தில் ஷாலினி?

ஹீராவின் சமீபத்திய கட்டுரை கிளப்பிய பூகம்பம்!

திருமண வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவுசெய்த மகிழ்ச்சியை அஜித் - ஷாலினி தம்பதியர் கொண்டாட, அதே நேரத்தில் அவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்தும்விதமாக வெளியானது அஜித்தின் முன்னாள் காதலியான ஹீரா பெயரில் ஒரு கட்டுரை. ஹீரா பெயரில் இயங்கிவரும் ஒரு சமூக வலைத்தள பக்கத்தில் முன்னாள் காதல் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அந்த கட்டுரையில், “இளம்வயதில் என்மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட வீண்பழிகளால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் ஒரு நடிகரை பல வருடங்களாக காதலித்தபோதும், அவர் என்னை ஒரு ஏமாற்றுக்காரி என்றும், போதைக்கு அடிமையானவள் என்றும்கூறி அவமானப்படுத்திவிட்டுச் சென்றார். அவரை காதலித்தபோது அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் படுத்த படுக்கையில் இருந்தார். நான்தான் உடனிருந்து பார்த்துக்கொண்டேன். ஆனால் அதிலிருந்து அவர் மீண்ட பிறகு என்னை ஏமாற்றிவிட்டார். ஒரே இரவில் மிகவும் மோசமாக மாறிய அவர், எனது கௌரவம் மற்றும் நேர்மை மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தியதில் நான் மன வேதனை அடைந்தேன். தற்கொலைக்குக்கூட முயன்றேன். எந்த விளக்கமும் அளிக்காமல் என்னுடைய உறவை முறித்துக்கொண்டார். நான் அவரை சந்தித்து அழுதபோது, வேலைக்காரி போல இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்வேன். எனக்கு பிடித்தவருடன் என்னால் இருக்கமுடியும் என்று அவர் கூறிவிட்டார்” என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. ஹீரா பெயரில் வெளியாகி இருக்கும் இந்த கட்டுரையில் நடிகரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அது அஜித்தான் என்பது அனைவராலும் ஊகிக்க முடிகிறது. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அஜித் பொதுவெளியில் தலைகாட்ட தொடங்கியிருக்கிறார். அப்படியிருக்கையில் ஹீராதான் அந்த கட்டுரையை எழுதினாரா? அல்லது அஜித்மீது வன்மம் இருக்கும் யாரோ அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற கட்டுரையை எழுதினார்களா? என்பதுபோன்ற கேள்விகள் உலாவருகின்றன. இதற்கிடையே #justiceforheera என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி சமூக ஊடகங்களில் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர். எப்படியாயினும் இளம்வயதில் தவறு செய்த பலர் இப்போது திருந்தி வாழும் நிலையில், சுயமாக உழைத்து முன்னேறி தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கி வைத்திருக்கும் அஜித் குறித்து பேசுவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துவருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

Updated On 6 May 2025 12:08 AM IST
ராணி

ராணி

Next Story