இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சுற்றுலா நிறுவனம் தொடங்கிய நடிகர் அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடைபெறும் தேதி தாமதமாகிக் கொண்டே வந்த நிலையில், ஒரு வழியாக அஜர்பைஜானில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில், மோட்டார் சைக்கிள் பிரியரான அஜித் சமீபகாலமாக ஐக்கிய அரபு நாடுகள் உட்பட பல்வேறு இடங்களுக்கு தனது இருசக்கர வாகனத்திலேயே பயணம் மேற்கொண்டு வந்தார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவர், தற்போது மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்ய விரும்புவோரை வழிநடத்தி அவர்களின் பயணத்திற்கு உதவுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜித்தின் அந்த புதிய நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ராஜஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். பயணம் மேற்கொள்பவர்களுக்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் வழிகாட்டுவதுடன், பயிற்சியும் வழங்குவார்கள். எங்களது நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டிற்கு வரும் 23ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் இந்த புதிய அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


'விடா முயற்சி' போஸ்டர் மற்றும் நடிகர் அஜித்

தெறிக்க விடும் வசனங்கள்... மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்... புதிய சாதனை படைத்த 'லியோ'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். சர்வதேச அளவில் வருகிற 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22-ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிளான ‘நா ரெடி’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி லைக்குகளையும் அள்ளிக் குவித்தது. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஜய்யின் குட்டி ஸ்டோரிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக வந்த அறிவிப்பு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த படத்தின் டிரெய்லர் 05 ஆம் தேதி மாலை வெளியானது. சென்னையில் முக்கியமான இடங்களில் டிரெய்லர் வெளியீடு நடந்தது. 2.43 நிமிடம் ஓடும் டிரெய்லரில் விஜய் தொடங்கி அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என காட்சிகள் மிரள வைக்கின்றன. டிரெய்லரில் ஆரம்பம் முதல் முடியும் வரை விஜய் பேசும் வசனங்கள் மாஸ்ஸாக இருக்கின்றன. மேலும் விஜய்யின் மிரட்டல் தோற்றமும், காஷ்மீரின் அழகும், அனிருத்தின் பிஜிஎம்-மும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. “ஊரை ஏமாத்தலாம்… உலகை ஏமாத்தலாம்… என்னை ஏமாத்த முடியாது” என்று இடம்பெறும் வசனம் நம் கவனத்தை ஈர்க்கிறது. டிரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.


'லியோ' டிரெய்லரில் நடிகர் விஜய்

திரைப்படமாகும் டைட்டன் நீர்மூழ்கி விபத்து

111 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை காண்பதற்காக ‘டைட்டான்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஜூன் மாதம் சென்றது. அதில் 5 பேர் பயணம் செய்த நிலையில், கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. கடலோர காவல்படையின் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு அழுத்தம் காரணமாக நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியிலேயே உடைந்து சிதறியதில் அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டைட்டான நீர்மூழ்கி கப்பலின் விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், அதனை ஜேம்ஸ் கேமரூன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை அவர் மறுத்திருந்த நிலையில், தற்போது மைண்ட்ரியாட் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம், இந்த சம்பவத்தை படமாக்க முன்வந்திருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு ஜஸ்டின் மேக்ரி கோர் மற்றும் ஜோனதன் கீசே ஆகியோர் திரைக்கதை எழுதுகின்றனர்.’சால்வேஜெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டைட்டன் நீர்மூழ்கி விபத்து மற்றும் ஜேம்ஸ் கேமரூன்

‘என் வயிற்றில் அடித்தது போல் இருந்தது’ நடிகர் சித்தார்த்

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆறுதலாக நிற்பதே அவசியமானது என்பதை உணர்த்தும் விதமாக சித்தார்த் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளிவந்த ‘சித்தா’ திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அதே நாளில் பிரமாண்ட பேனரில் உருவான ‘சந்திரமுகி 2’, ஜெயம் ரவியின் ‘இறைவன்’, ஆகிய படங்கள் வெளியான போதிலும் விமர்சன ரீதியாக சித்தார்த்தின் ‘சித்தா’ படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில், ‘சித்தா’ படத்தினை கர்நாடகாவிலும் வெளியிட முடிவு செய்த நடிகர் சித்தார்த் அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்று அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அரங்கிற்குள் நுழைந்த கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் ரகளையில் ஈடுபட்டு, சித்தார்த்தை வெளியேற்றினர்.


'சித்தா' திரைப்பட போஸ்டர் மற்றும் சித்தார்த் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியேற்றப்பட்ட நிகழ்வு

இந்நிலையில் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ‘சித்தா’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் கன்னட அமைப்பினரால் தான் பெங்களுருவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்து வருத்தப்பட்டு பேசியிருந்தார். அப்போது அவர், “ ‘சித்தா’ படத்தை எனது சொந்த தயாரிப்பில் தான் எடுத்துள்ளேன். அதனை நான்தான் புரோமோஷன் செய்ய வேண்டும். அதற்காக பெங்களுருவில் ஒரு சிறிய ஆடிட்டோரியத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தேன். அப்படியொரு நிகழ்வை நடத்தக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் சம்மந்தமே இல்லாத யாரோ சிலர் திடீரென வந்து அந்த செய்தியாளர் சந்திப்பை நிறுத்தியது எனது வயிற்றில் அடித்தது போன்று இருந்தது. இப்படி எங்களைப் போன்றவர்களின் வயிற்றில் அடிக்கலாமா? இனி இதுபோன்ற நிகழ்வுகள் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதனை சொல்கிறேன். கன்னட மக்களுடனோ அல்லது கன்னட திரையுலகினருடனோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு நடந்த நிகழ்வுக்காக குரல் கொடுத்து மன்னிப்பு கேட்ட கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

விஜய்-68 ல் இணைந்த மைக் மோகன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து ‘தளபதி 68’ படத்தில் பணியாற்ற உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ஒவ்வொரு நாளும் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் புதுப்புது அப்டேட்களை கொடுத்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தளபதி விஜய், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவை சேர்ந்த சிலர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் 3D VFx டீ ஏஜிங் கருவி மூலம் விஜய்யை ஸ்கேன் செய்து லுக் டெஸ்ட் எடுத்ததாக புகைப்படங்கள் பகிரப்பட்டது. இதன்மூலம் படத்தில் விஜய்யை மிக இளமையாக காண்பிக்க உள்ளதாக தெரிகிறது.


விஜய்-68 திரைப்படத்தில் நடிகர் மைக் மோகன்

இன்னும் சில நாட்களில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், கடந்த 02 ஆம் தேதி சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ‘தளபதி 68’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான முதல் பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 03ஆம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், படத்தில் புதிது புதிதாக நடிகர், நடிகைகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், ஏற்கனவே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. இப்போது பிரியங்கா மோகனுக்கு பதிலாக விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நாயகியாக நடித்த, மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் 80ஸ் களில் பலரின் காதல் நாயகனாக வலம் வந்த மைக் மோகனும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரசாந்த், லைலா, ஜெயராம், ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். ‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு இரட்டை கதாபாத்திரம் இருக்கும் என்று ரசிகர்களாலும், நெட்டிசன்களாலும் பேசப்பட்டு வருகிறது.

கோயில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ளது விஷ்ணுமாயா கோயில். இந்த கோயிலில் சிறப்பு பூஜை செய்ய ஆண்டுதோறும் ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் ஒரு வருடம் நீடிப்பார். கட்டளைதாரர் என்பவர், அந்த வருடம் முழுவதும் நடக்கும் பூஜைக்கு தேவையான பொருட் செலவுகளை அவர்கள்தான் ஏற்க வேண்டுமாம். இந்த நிலையில், கட்டளைதாரர் என்ற முறையில் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு நாரி பூஜைக்கு நடிகை குஷ்புவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட குஷ்பு அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் நாரி பூஜை செய்ய அழைக்கப்பட்டதை என்னுடைய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தான் இந்த பூஜைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுவும் கடவுளே அந்த நபரை தேர்வு செய்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது. அப்படியான ஒரு பெருமையை எனக்கு வழங்கியதற்காக கோயில் நிர்வாகத்தினருக்கு நன்றி. இந்த பூஜையில் எனது அன்புக்குரியவர்களுக்காகவும், உலக அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தேன். ஓம் சிவாய நமஹ” என கூறியுள்ளார்.


கேரள மாநிலம் திருச்சூர் விஷ்ணுமாயா கோயில் மற்றும் நடிகை குஷ்பு

தனது 170 படம் பற்றி ரஜினிகாந்த்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான ‘ஜெயில’ர் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் தனது 170 வது படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கும் இப்பாத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்படத்தில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு பணிகள் காந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி சென்னையில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் செல்கிறேன். இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. ‘ஜெயிலர்’ திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தற்போது நான் நடிக்கப் போகும் இந்த 170 வது படமும் கருத்துள்ள படமாக, பிரமாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.


170வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெய்பீம்’ ஞானவேல், அனிருத்

Updated On 16 Oct 2023 7:11 PM GMT
ராணி

ராணி

Next Story