இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

"புஷ்பான்னா Flower-னு நெனச்சியா Fire-ரே" என்று வித்தியாசமான உடல் மொழியுடன் நடிகர் அல்லு அர்ஜுன் பேசிய இந்த வசனத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தெலுங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த 'புஷ்பா' படத்தில் இடம்பெற்றிருந்த இந்த வசனம் இந்தியா முழுவதும் பிரபலமாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஒரு சம்பவம் என்றால், கமர்ஷியலாக வெளிவந்து வெற்றி பெற்ற இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை அல்லு அர்ஜுன் பெற்றதும் பிரமிப்பான ஒரு நிகழ்வுதான். அந்த அளவுக்கு பல சிறப்புகளை கொண்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இதனையொட்டி, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘புஷ்பா’ படம் குறித்தும், இதன் உண்மை பின்னணி என்ன என்பது குறித்தும், அல்லு அர்ஜுனின் கேரியரில் எந்த அளவுக்கு இப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.

ஐகானிக் ஸ்டார் டு பான் இந்தியா ஸ்டார்

தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய அளவிலும் நன்கு அறியப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருபவர்தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது பூர்வீகம் தெலுங்கு என்றாலும் இவர் பிறந்தது படித்தது எல்லாமே சென்னையில்தான். இவரது குடும்பமே கலை குடும்பம் என்பதால் சினிமா வாய்ப்பு என்பது எளிதாகவே அமைந்துவிட்டது. தந்தை ஒரு சினிமா தயாரிப்பாளர், மாமா சிரஞ்சீவி தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இப்படி சுற்றி சுற்றி அனைவரும் திரையுலகிற்குள்ளேயே இருந்ததால் தன் மாமா சிரஞ்சீவியின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் 2003-ஆம் ஆண்டு ‘கங்கோத்ரி’ என்ற படத்தின் வாயிலாக ஹீரோவாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இங்கு ஆரம்பித்த இவரது திரைப்பயணம் ‘ஆர்யா’, ஆர்யா 2’, ‘பன்னி’, ‘வருது’, ‘வேதம்’, ‘DJ’, ‘அல வைகுந்தபுரமுலூ’ என வருடத்திற்கு ஒரு படம் என்ற போதிலும், அவை அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்து தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அதிலும் நடிப்பைத்தாண்டி தன் நடனத்தால் அனைவரையும் வசீகரித்த அல்லு அர்ஜுன் பல பெண்களின் கனவு நாயகனாகவும், சாக்லேட் பாயாகவும் வலம் வர ஆரம்பித்தார்.


சிறுவயதில் மாமா சிரஞ்சீவியுடன் நடிகர் அல்லு அர்ஜுன்

இப்படி திரைப்பயணம் வெற்றிகரமான பாதையில் சென்று கொண்டிருந்த நேரத்தில்தான், அந்த வெற்றியை இன்னும் உச்சம் தொடும் வகையில் கொண்டு சேர்த்தது ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பான் இந்தியா படமாக வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி இந்திய அளவில் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடி தீர்க்கப்பட்டது. சுகுமாரன் என்பவரது இயக்கத்தில் வெளிவந்திருந்த ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனுடன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா, ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். செம்மர கடத்தலை மையமாக கொண்டு வெளிவந்த இப்படத்தில் புஷ்பவாக வரும் அல்லு அர்ஜுனின் நடிப்பும் சரி, படத்தின் பாடல்களும் சரி வேற லெவல் என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு பட்டையை கிளப்பியதுடன், படத்தில் இடம்பெற்றிருந்த சமந்தாவின் ஊ சொல்றியா மாமா.. பாடல் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடப்பிடித்து, பட்டி தொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கியது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலக அளவில் 360 கோடி ரூபாய்க்கு வசூல் சாதனை நிகழ்த்தியது. இதுதவிர ஒரு கமர்ஷியல் படமாக வெளிவந்த ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், அதுவரை எந்தவொரு தெலுங்கு ஹீரோவுக்கும் கிடைக்காத பெருமையாக முதல் முறையாக அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா பாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் கிடைத்தது. இந்த நிகழ்வை அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர் மட்டுமன்றி ஒட்டுமொத்த ரசிகர்களும், தெலுங்கு திரையுலகினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வட இந்தியாவை கலக்கிய 'புஷ்பா'


புஷ்பா; தி ரைஸ் திரைப்படத்தில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் அல்லு அர்ஜுன்

'புஷ்பா' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக இருந்தபோதிலும், கதைப்படி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடியாளாக இருக்கும் ஒருவன் டான் ஆகி பின்னர் பெரிய ஆளாக மாறும் கதைகள் பார்த்து பார்த்து பழகிய ஒன்றுதான் என்றாலும், புஷ்பாவும் அதே பாணியில் எடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு சாரார் தங்களது விமர்சனங்களை முன்வைக்கவும் தவறவில்லை. இருந்தும் படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு, பாடி லாங்குவேஜ், ரியாக்சன் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடவே, தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக பீகார், ஒடிஷா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்களை இப்படம் வெகுவாக கவர்ந்ததோடு, டப் செய்யப்பட்டு இணையத்தில் வெளிவந்தபோது அதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு புஷ்பாவிற்கு கிடைத்தது. இதனால் தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில்தான் அதிக வசூல் சாதனையையும் இப்படம் நிகழ்த்தியது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது மட்டுமன்றி படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன் வட மாநில மக்களுக்கு தன் மனமார்ந்த நன்றியினையும் அப்போதே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘புஷ்பா தி ரூல்’ திரைப்படம். இரண்டாம் பாகமாக வெளிவரவுள்ள இப்படம், முதல் பாகத்தினை போலவே மிகப்பெரிய மாஸை தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுவதும் ஏற்படுத்தும் என்று அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

பட்டையை கிளப்ப வரும் 'புஷ்பா 2'


புஷ்பா கெட்டப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனா

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் வெற்றிக்கு அல்லு அர்ஜுனின் நடிப்பு, படத்தில் இடம்பெற்றிருந்த ஆக்சன் காட்சிகள், பகத் பாசிலின் வில்லத்தனம், ராஷ்மிகா மற்றும் சமந்தாவின் பாடல் காட்சிகள் ஆகியவை மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டன. இந்த நிலையில், 3 வருட இடைவேளைக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் அதிக எதிர்பார்ப்புடன், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை, முதல் பாகத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்க, முதல் பாகத்திற்கு இசையமைத்திருந்த தேவி ஸ்ரீ பிரசாத்தே இதற்கும் இசையமைத்துள்ளார். அல்லு அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க, இவருடன் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் வைசாக்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 'புஷ்பா 2' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில் நாடு முழுவதும் புஷ்பா குறித்த விவாதங்கள் நடந்துக்கொண்டிருக்க, அவர் எங்கே போய்விட்டார் என கேள்வி எழும்பும்பொழுது இரவில் புலிகளின் நடமாட்டத்தை அறிவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கேமராவில் புஷ்பா சிக்குவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ அந்த சமயம் வைரல் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரவும் வைத்தது.

இப்படியான சூழ்நிலையில், படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திர போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து, படத்தின் நாயகனான அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். அந்த டீசர், தெலுங்கானாவில் பழங்குடியின மக்களால் நடத்தப்படும் திருவிழாவில் இருந்து தொடங்குகிறது. அதனையடுத்து அல்லு அர்ஜுன் நெற்றியில் திலகமிட்டு, காதில் தோடு, காலில் சலங்கை, கழுத்தில் மாலை, சேலை அணிந்து வித்தியாசமான பெண் வேடத்தில் நடந்து வந்து மாஸாக காட்சியளிக்கிறார். மேலும் அப்போது அவர் காட்டும் உடல்மொழி மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.


புஷ்பா 2; தி ரூல் படத்தில்அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புதிய தோற்றம்

இந்த டீசர் வெளியானதில் இருந்தே அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருவதுடன், சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று வெளியாக உள்ள இப்படத்தில் சமந்தா ரூத் பிரபு மற்றும் சஞ்சய் தத் இருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ‘புஷ்பா 2’ குறித்து கருத்து தெரிவித்திருந்த படத்தின் நாயகியான ராஷ்மிகா, முதல் பாகத்தை விட, 2-ஆம் பாகம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் அதற்காக அனைவரும் எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் உற்சாகமாக பேசியுள்ளார். இதனால் படத்தின் வெளியீட்டு நாளை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்துள்ளனர். இரண்டாம் பாகமும் முதல் பாகத்தினை போன்று மாபெரும் வெற்றிபெற்றால், மூன்றாம் பாகமும் எடுக்க வாய்ப்பிருப்பதாக படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.

Updated On 22 April 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story