இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அமலா பாலுக்கு விரைவில் திருமணம்!

பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தின் மூலம் பிரபலமானவர் அமலா பால். தமிழில் 'தெய்வத்திருமகள்', 'தலைவா', தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', 'ஆடை' உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். பின்னர் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் ஒருவருடன் லிவிங் டு கெதர் பாணியில் அமலா பால் வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அவரையும் பிரிந்தார். எப்போதுமே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், அவ்வப்போது சில ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில், இப்போது அவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். வட இந்தியாவை சேர்ந்த ஜெகத் தேசாய் என்பவரை தீவிரமாக காதலித்து வரும் அவர், அது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஜெகத் தேசாய், தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அமலா பாலுடன் நடனமாடும் அவர் காதலை வெளிப்படுத்துகிறார். அதை ஏற்றுக் கொண்டதும் அவருக்கு மோதிரம் அணிவிக்கிறார். இதையடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. சினிமா துறையை சேராத ஜெகத் தேசாய், குஜராத் மாநிலம் சூரத்தை பூர்வீகமாகக் கொண்டவராம். இப்போது கோவாவில் வசித்து வரும் இவர், விரைவில் அமலா பாலை திருமணம் செய்ய உள்ளாராம்.


நடிகை அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

பிரபாஸுக்கு வைக்கப்பட்ட 230 அடி கட் அவுட்!

'பாகுபலி' படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பான் இந்தியா நடிகராக வலம் வரும் இவர், 100 கோடி சம்பளம் வாங்கும் முதல் தெலுங்கு நடிகராகவும் அறியப்படுகிறார். இருப்பினும், 'பாகுபலி 2' படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த 'சாஹோ', 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்' போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளதால், அடுத்து வெளிவரவுள்ள 'சலார்' திரைப்படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'சலார்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் பிரபாஸ் தனது 44வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். இதனை முன்னிட்டு பிரபாஸின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது தெலுங்கு ரசிகர்கள் ஹைதராபாத்தின் குக்கட்பல்லியில் 230 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர். இதுவரை பல நடிகர்களுக்கு வைக்கப்பட்ட கட் அவுட் - டுகளிலேயே மிக உயரமான கட் அவுட்-டாக இதனை கூறுகின்றனர். மேலும் அந்த கட் அவுட்-டிற்கு பால் அபிஷேகம் மற்றும் மலர்களைத் தூவி பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள், பலருக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


'சலார்' திரைப்பட கட் அவுட் மற்றும் நடிகர் பிரபாஸ்

'கே.ஜி.எப்.' யாஷுக்கு ரூ.150 கோடி சம்பளம்!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். 'கே.ஜி.எப்.' என்கிற ஒற்றை படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் பெற்றுள்ள இவர், தன் அலட்டிக்கொள்ளாத நடிப்பாலும், ஆக்‌ஷனாலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாலிவுட் சினிமாவில் யாஷ் நுழைய இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கவுள்ள ராமாயணக் கதையை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கிறார்களாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராக உள்ள இப்படத்தில் ராவணன் வேடத்தில் யாஷ் நடிக்க இருக்கிறாராம் . மேலும் இதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் நிர்ணயித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. முதல் பாகத்தில் ராமர், சீதை தொடர்பான கதைக்களமும், இரண்டாவது பாகத்தில் ராமர், ராவண யுத்தம் தொடர்பான விஷயங்களும் படத்தில் இடம்பெறும் என கூறப்படுகிறது. அல்லு அரவிந்த், மது மந்தனா தயாரிக்கும் இப்படத்தில், நடிகர் யாஷ் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட உள்ளதாகவும், இதற்காக அடுத்த ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பில் யாஷ் கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் யாஷ் கால்ஷீட் எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்பதை பொறுத்து அவரது சம்பளத்திலும் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது .


ராவணன் வேடத்தில் நடிகர் யாஷ்

நடிகர் அவதாரமெடுக்கும் இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சிறுவயதிலிருந்தே மிக தீவிரமான தொண்டனாக ஈடுபட்டு வருபவர் இரா.முத்தரசன். அவரது அர்ப்பணிப்பின் பயனாக, தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றி வருகிறார். மிக எளிமையான நபராக அறியப்படும் இவர், தற்போது 'அரிசி' என்ற படம் மூலம் நடிகராக மாறியுள்ளார். முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் என்ற நடிகை நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை பி.சண்முகம் தயாரிக்க, எஸ்.ஏ.விஜயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குனர் பேசுகையில் ''அரிசி படம் முழுக்க விவசாய பின்னணியில் உருவாகிறது. அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டுமல்ல, அது மனித வாழ்வியலின் உயிர்நாடி. இதனை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்வதே இந்த படம். ஒரு கட்டத்தில், ஐயா முத்தரசனே விவசாயி கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று முடிவெடுத்து தயக்கத்தோடு அவரை அணுகியபோது, கதை அவருக்கு பிடித்துப் போக, இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 35 நாட்களாக நடந்து வருகிறது. விவசாயியாக நடிக்கும் முத்தரசன் பேசும் ஒவ்வொரு வசனமும் அர்த்தமுள்ளதாக இருக்கும். படம் நன்றாக வந்திருப்பதாக சொல்கின்றனர்'' என கூறினார். இந்நிலையில், விவசாயி கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ள முத்தரசனின் புகைப்படங்கள் வெளியாகி பலரிடமும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


'அரிசி' என்ற படம் மூலம் நடிகராக களமிறங்கியுள்ள இரா.முத்தரசன்

ரசிகர்களால் லோகேஷ் கனகராஜுக்கு ஏற்பட்ட காயம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும், வெளியான 6000 திரையரங்குகளில், முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 148 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனைப் படைத்துள்ளது. மேலும் நான்கு நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். அப்போது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரோமா திரையரங்குக்கு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில தினங்களுக்கு முன் சென்றிருந்த சமயத்தில் தியேட்டர் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அந்த சமயம் அங்கிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் லோகேஷ் சிக்கியதால், அவரது காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் பாலக்காடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பேசும்போது " உங்கள் அன்பிற்கு நன்றி கேரள மக்களே. கூட்டத்தில் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அடுத்து இரு இடங்களில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. உங்களை சந்திப்பதற்காக மீண்டும் வருவேன். அதுவரை இதே அன்புடன் லியோவை ரசித்து கொண்டிருங்கள்" என பதிவிட்டுள்ளார்.


'லியோ' பட போஸ்டர் மற்றும் ரசிகர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ்

தனுஷ் இயக்குனருடன் இணையும் சசிகுமார்

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். பின்னர் மீண்டும் தனுஷ் நடிப்பில் 'தங்க மகன்' என்ற திரைப்படத்தை இயக்கியவருக்கு அதில் வெற்றிக் கிடைக்கவில்லை. இயக்குனர் வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான இவர் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘அசுரன்’, ‘விடுதலை’, ‘வட சென்னை’, ‘பவர் பாண்டி’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தொடர்ந்து கேமராமேனகாவும், நடிகராகவும் பயணித்து வந்த வேல்ராஜ் தற்போது ‘விடுதலை’ 2 ம் பாகம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் படம் இயக்கவுள்ளார் வேல்ராஜ். ஜேஎஸ்பி பிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜேஎஸ்பி சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகாத இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும் செய்கிறார். மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.


நடிகர் சசிகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்

Updated On 6 Nov 2023 7:03 PM GMT
ராணி

ராணி

Next Story