இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

`இவ்ளோ நாளா இவங்க எங்க போனாங்க..’ என ரசிகர்களே ஆச்சர்யப்பட்டு கேட்கும் அளவிற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகில் கம்பேக் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா ஷெட்டி. செப்டம்பர் 7ஆம் தேதி `மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்தப் படத்தில் மாடர்ன் மனநிலைகொண்ட பெண்ணாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. குறிப்பாக பல ஆண்டுகளுக்குப் பிறகு எடையை குறைத்து ஃபிட்டாகவும், க்யூட்டாகவும் தெரிகிறார்.

அனுஷ்காவின் திரை வாழ்க்கை

ஸ்வீட்டி என்று அன்பாக அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தவர். 2005ஆம் ஆண்டு `சூப்பர்’ என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு `ரெண்டு’ திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தமிழிலும் அறிமுகமானார். ஆரம்பத்தில் கவர்ச்சித் தோற்றங்களில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்புகள் வந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அனுஷ்கா, தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையானார்.


`ரெண்டு’ திரைப்படத்தில்

ஹிட் படங்கள்

2009ஆம் ஆண்டில் வெளிவந்த `அருந்ததி’ திரைப்படம்தான் அனுஷ்காவின் நடிப்புத்திறனை வெளிக்காட்டும் விதமாக அமைந்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த இந்த திரைப்படம், நந்தி, கலைமாமணி போன்ற உயரிய விருதுகளை அனுஷ்காவிற்கு பெற்றுத் தந்தன. `பில்லா’ தெலுங்கு ரீமேக்கில் கவர்ச்சியான தோற்றம் என்றாலும், தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் ஜோடியாக நடித்த ‘வேட்டைக்காரன்’. இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டாகி அனுஷ்காவை பிரபலமாக்கின. இதனால் கோலிவுட்டில் மீண்டும் மார்க்கெட்டை பிடித்தார் அனுஷ்கா. அதன்பிறகுதான் சூர்யாவுடன் `சிங்கம்’ படத்தில் ஜோடிசேர்ந்தார். அந்த படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் அனுஷ்காவை கொண்டுசேர்த்தன.


`அருந்ததி’ கதாபாத்திரத்தில் அனுஷ்கா

`அருந்ததி’, `நாகவல்லி’ போன்ற படங்களில் இவருடைய கம்பீரம், அழகு மற்றும் ஆக்ரோஷமான நடிப்பை யாராலும் மறக்கமுடியாது. அடுத்தடுத்த படங்களில் பிஸியான அனுஷ்காவிற்கு கதாநாயகியை முக்கியப்படுத்திய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தன. தமிழில், விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும், தெலுங்கிலும் நாகர்ஜூனா, பிரபாஸ், ரவி தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற பல நடிகர்களுடனும் ஜோடிசேர்ந்தார். தொடர்ந்து பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றார்.

அருந்ததியை அடுத்து அனுஷ்காவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்தது ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி - 1. உலக அளவில் பாராட்டுக்களை பெற்ற இத்திரைப்படத்தில் அடிமைப்பெண்ணாக நடித்திருந்தார். முதல் பாகம் அனுஷ்காவின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். அதன்பிறகு வெளியான ’ருத்ரமாதேவி’ திரைப்படம் ஆரம்பத்தில் நல்ல வசூல் சாதனை புரிந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.


`பாகுபலி’ திரைப்படத்தில்

மார்க்கெட்டை குறைத்த எடை ஏற்றம்

டெடிகேட்டேடான நடிகையான அனுஷ்கா, ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த `இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக 20 கிலோ உடல் எடையை ஏற்றினார். இந்த படம் தெலுங்கிலும் `சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், “முதலில் இந்த படத்திற்காக ஒப்பனைசெய்து (prosthetics) போட்டோஷூட் நடத்தினோம். எனது உடல் குண்டாகத் தெரிந்தாலும், கைகளும் முகமும் ஒல்லியாகவே தெரிந்தது. உடலும், முகமும் பொருந்தாததால் ஸ்க்ரீனில் நன்றாக இருக்காது. நான் உடல் எடையை ஏற்றுகிறேன் என்று கூறினேன்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அவ்வளவு மெனக்கெட்டு நடித்த அந்த படம் தெலுங்கில் வெற்றிபெற்றாலும் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அந்த படத்திற்காக எடையை கூட்டிய அனுஷ்காவால் எடையை குறைக்கமுடியவில்லை. எடையை குறைப்பதற்காக பல நாடுகளுக்கு சிகிச்சைக்காகச் சென்றார். இருப்பினும் அவரால் முன்பிருந்த அளவிற்கு கட்டுக்கோப்பான உடல்வாகை பெறமுடியவில்லை. முடிந்த அளவிற்கு எடையை குறைத்து படங்களில் நடித்துவந்தார். இருந்தாலும் முன்புபோல் தனது ரசிகர்களை திருப்திப்படுத்த முடியவில்லை.


`இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்தில்

பாகுபலி முதல் பாகத்தில் ஏமாந்துபோன ரசிகர்களை இரண்டாம் பாகத்தில் அழகு இளவரசியாகத் தோன்றி திருப்திபடுத்தினார். அதிலும் கர்ப்பிணியாக, வயதான தாயாக என மூன்று கதாபாத்திரங்களையும் வேறுபடுத்தி தனது நடிப்பை வெளிக்காட்டினார். சுமார் 250 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் 1700 கோடி வசூல் சாதனை படைத்தது. அதிக வசூல் சாதனை படைத்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது பாகுபலி - 2.

பிரபாஸுடன் காதல்?

பாகுபலி திரைப்படத்தில் அனுஷ்காவுடன் ஜோடி சேர்ந்த பிரபாஸுடன் அவருக்கு காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின. அதற்குமுன்பே இருவரும் ஜோடியாக நடித்திருந்தாலும் பாகுபலி ஷூட்டிங்கின்போதுதான் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும், நட்பாகத்தான் அனுஷ்காவுடன் பழகிவருவதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரபாஸ். ”ஒன்றுக்கு மேற்பட்ட படத்தில் இணைந்து நடித்தாலே ஹீரோ, ஹீரோயின் இருவரும் காதலிப்பதாகத்தான் பேசுவார்கள். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம்” என்று கூறியிருந்தார்.


அனுஷ்கா குறித்த காதல் வதந்திகள்

அதன்பிறகு வெளிநாட்டுக்குச் சென்று உடல் எடையை குறைத்த அனுஷ்கா, வேறு ஒருவரை டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின. வெளிநாட்டில் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோல் ஒரு புகைப்படமும் வெளியானது. ஆனால், அந்த நபர் அனுஷ்காவின் உடல் எடையை குறைக்க உதவிய மருத்துவர் என தெரியவந்தது. அதன்பிறகு படவாய்ப்புகளை தட்டிக்கழித்த அனுஷ்கா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

மீண்டும் திரையில்...

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. இந்தப் படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பி.மகேஷ் பாபு இயக்கியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.


மிஸ்.ஷெட்டி மிஸடர்.பொலிஷெட்டி போஸ்டர்

இப்படத்தில், மாடர்ன் ஷெஃப்பாக நடித்திருக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லாத ஒரு பெண் . அதற்காக சரியான ஒரு ஆணைத் தேடுகிறார். கதாநாயகன் தனக்கு சரிபட்டு வருவார் என்ற நோக்கில் அவரை பின் தொடர்கிறார்.

ஆனால் ஸ்டாண்ட் - அப் காமெடியனான ஹீரோ, ஹீரோயின்மீது காதல்கொண்டு அவரது கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார். இருவருக்குமிடையேயான ஊடல்களும், கூடல்களும்தான் படத்தின் கதையாக இருக்குமென தெரிகிறது. ட்ரெய்லரின் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே அனுஷ்கா அழகாக தெரிகிறார். நடை, உடை, பாவனை என அனைத்திலும் வித்தியாசம் காட்டுகிறார். இந்த கம்பேக் மூலம் மீண்டும் தனது ரசிகர்களின் மனதில் அனுஷ்கா இடம்பிடிப்பாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Updated On 11 Sep 2023 6:53 PM GMT
ராணி

ராணி

Next Story