இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடிகள் காரணமாக பேசுபொருளாகி பலதரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாகவும், இதனை தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் ரசிகர்கள் ஒருபுறம் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். மறுபுறமோ இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட அதிக கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டு ரசிகர் என்று மட்டும் அல்லாமல் அப்போது அங்கு வந்த முதலமைச்சரின் வாகனமே இன்னலுக்கு உள்ளானது என்பதுதான் அதிர்ச்சி கலந்த உண்மை. இதனால் பள்ளிகரணை சட்டம், ஒழுங்கு காவல் துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மோசமான நிகழ்வுக்கு, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஏசிடிசி நிறுவனம் முழு பொறுப்பேற்று மன்னிப்பு கோரி உள்ளதோடு, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் வருத்தம் தெரிவித்திருந்தாலும், இந்த குளறுபடிகளுக்கு காரணம் என்ன ? இனிவரும் காலங்களில் இத்தகைய பிரச்சனைகள் வராமல் எப்படி தவிர்க்கலாம் என்பதை இங்கே காணலாம்.

30ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரகுமான்...

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கடந்த 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த இவரது இசைப் பயணம், அடுத்தடுத்து ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘பம்பாய்’ என ஆரம்பித்து இன்று ‘மாமன்னன்’ வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கில படங்களுக்கும் இசை அமைத்துள்ளதோடு, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக 2 ஆஸ்கர் விருதையும் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்தவர். இது தவிர கோல்டன் குளோப், பாஃப்டா மட்டுமின்றி பலமுறை தேசியத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தற்போது சினிமாவுக்கு வந்து 30 வருடம் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக 'ஏஆர்ஆர் திரைப்பட விழா' கடந்த ஆகஸ்ட் 4 முதல் 9 வரை சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற பெயரில் சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நாளன்று சென்னையில் திடீரென கனமழை பெய்ததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுஉள்ளாகினர். மேலும் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பனையூர் வரை வந்த ரசிகர்கள், கூட்டமாக திரும்பி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு, சென்னை ஈ.சி.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் அப்போதே ஏற்பட்டது.


இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான்

டிக்கெட் விற்பனையில் நடந்த குளறுபடி!

இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும், முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் ஒருபுறம் அறிவிக்க, மறுபுறமோ மீண்டும் டிக்கெட் விற்பனை நடைபெற துவங்கியுள்ளது. அதில் கோல்டு, சில்வர், பிளாட்டினம், வி.ஐ.பி, என 1000 ரூபாயில் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை பல பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதோடு நின்று கொண்டே பார்ப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட், மீண்டும் இந்த செப்டம்பர் மாதத்திலும் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் என மிகப் பெரிய கூட்டம் ஒருபுறம் சேர, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோ அவற்றை எல்லாம் பெரியளவில் கவனிக்காமல் டிக்கெட் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தி வந்துள்ளனர். இது தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது ஒருபுறம் இருக்க... சுமார் 25 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வசதி செய்யப்பட்ட அரங்கை நோக்கி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வர தயாராகினர். இந்த செயலினால் செப்டம்பர் 10 அன்று மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப்போகிறோம் என்று அப்போது ஏ.ஆர்.ரகுமானோ, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ எதிர்பார்க்கவில்லை.


கூட்ட நெரிசலால் அவதிப்பட்ட ரசிகர்கள்

நெரிசலில் சிக்கித் தவித்த ஈ.சி.ஆர் சாலை

செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க காலையில் இருந்தே ரசிகர்கள் பனையூரில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டி நோக்கி வரத் தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஈ.சி.ஆர் சாலையில் வாகனங்கள் அதிகளவில் அணிவகுப்பது வழக்கம். கூடவே ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியும் சேர்ந்து கொண்டதால் அந்த சாலையே திக்குமுக்காடிப்போனது. இந்த நேரத்தில் நீலாங்கரையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு முதலமைச்சரும் வந்ததால் நெரிசலில் சிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கும் ஏற்பட்டது. மேலும் மாலை ஏழு மணிக்குத்தானே நிகழ்ச்சி என்ற எண்ணத்தில் தாமதமாகச் சென்ற பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதோடு, நுழைவாயிலை கூட அவர்களால் எட்டி பார்க்க முடியவில்லை. இதில் டிக்கெட் குளறுபடி வேறு நிகழ்ந்ததால் மாலை 3 மணிக்கே இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் நுழைந்த பல ரசிகர்கள் முன்கூட்டியே சென்று இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டதோடு, 1000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியவர்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கான கட்டண பகுதியை ஆக்கிரமித்திருந்தனர். அதனால் குறுகிய நேரத்திலேயே அரங்கு நிறைந்ததால் வாசல் கதவுகளும் மூடப்பட்டு அதிக பணம் கொடுத்து டிக்கெட் பெற்றவர்கள் கூட உள்ளே செல்ல முடியாமல் வெளியே பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகினர். இருந்தும் இங்கு நடக்கும் சங்கடங்கள் எதுவும் தெரியாமல் இசை கச்சேரி ஒருபுறம் துவங்கி இரவு 11 மணி வரை நடந்து வர, உள்ளே இருந்தவர்களுக்கோ தண்ணீர் முதல் உணவு விநியோகம் வரை அனைத்திலும் கூச்சலும், குழப்பமும் நீடிக்க, ஈ.சி.ஆர் சாலையோ போக்குவரத்து நெரிசலில் சிக்கி தத்தளித்து போனது.


போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்

சமூக வலைதளங்களில் கொதித்தெழுந்த ரசிகர்கள்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்று பாதிக்கப்பட்ட ரசிகர்கள் தங்களின் வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததோடு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் திரும்பிச் சென்றவர்களுக்கு டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையெனில் வேறு ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இது ஒருபுறம் இருக்க வேறு சிலரோ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு ரகுமானை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்கவும் துவங்கினர். அதில் குறிப்பாக நடிகர் கார்த்தி, சரத் குமார், பார்த்திபன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை குஷ்பு போன்ற திரை பிரபலங்களும் அடங்குவர்.இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனர் ஹேமந்த், "தயவுசெய்து ரகுமான் சாரை தாக்காதீர்கள். இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதற்கு நாங்களே முழு பொறுப்பேற்றுக் கொள்கிறோம். டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியைக் காண முடியாத அனைவருக்கும் நிச்சயம் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், டிக்கெட் இருந்தும் பங்கேற்க இயலாத 4000 பேருக்கு டிக்கெட் நகலை சரி பார்த்து கட்டணத்தை இ-மெயில் மூலம் ஏ.ஆர்.ரகுமானே திருப்பி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இசை நிகழ்ச்சியில் எங்கே தவறு நடந்தது?

மக்கள் கூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பே, 'Dry Run' என்று சொல்லப்படும், சோதனை ஓட்டம் நடத்தியிருக்கவேண்டும். ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தினர் அதனை செய்தார்களா என்ற கேள்வி பலரது தரப்பிலும் எழுந்துள்ளது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அல்லது முந்தைய நாளில் இருந்தே போக்குவரத்து தடங்கள் மாற்றி அமைக்கப்படும். ஆனால் இந்த நிகழ்வில் அதுபோன்ற மாற்றங்கள் எதுவும் முன்கூட்டியே செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனாலேயே பல மணி நேரம் ஆயிரக்கணக்கான மக்கள் நெரிசலில் சிக்கி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதில் விபரீதமான அதேநேரம் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த கூட்ட நெரிசலில் தமிழக முதலமைச்சரின் வாகனமும் சிக்கியதுதான். முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு, திட்டமிடலுடன் புறப்படும் முதலமைச்சரின் 'கான்வாய்' (convoy) இந்த வழியாகத்தான் வரப்போகிறது என்பது தெரிந்தும் போலீஸ் தரப்பில் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக செயல்பட்டிருப்பார்கள் என்ற கேள்வியும் இங்கு முன்வைக்கப்படுகிறது.

மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கப்பட்டிருந்த நிலையில், 41 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் போலீசார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கடந்த முறை அனுபவம் வாய்ந்த குரூப் 4 செக்ரியூட்டிகளை நிறுவனம் பாதுகாப்புக்காக பயன்படுத்தியதாகவும், இந்த முறை அனுபவமில்லாத கல்லூரி மாணவர்களை குறைந்த சம்பளத்தில் தன்னார்வலர்களாக பணியில் அமர்த்தி பாதுகாப்பில் ஈடுபட வைத்ததும் தெரிய வந்துள்ளது. அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு போதிய பயிற்சிகள் அளிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வைத்ததாலேயே இந்த குளறுபடி நிகழ்ந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது விசாரணைக்கு உரிய விளக்கங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு தாம்பரம் காவல் ஆணையரகம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது.


டிக்கெட் குளறுபடிகளால் தவித்த ரசிகர்கள்

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி ரத்தான நிகழ்வோடு ஒப்பிட்டால் இந்த முறை நடந்த பிரச்சினைகள் பரவாயில்லை என்கிறார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர். காரணம் கடந்த முறை மழையின் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக மாலை 4.55 மணியளவில் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்தபோது. மாலை 4 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்திற்கு வந்திருந்தவர்கள் அங்கு இருந்து கிளம்பவே 8 மணி ஆகிவிட்டதாம். ஆனால் இந்த முறை நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்திற்கு விரைவாக வந்தவர்களை மாலை 4.30 மணிக்கெல்லாம் உள்ளே செல்ல அனுமதித்ததோடு, நிகழ்ச்சி 7 மணிக்குத் துவங்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது போலவே, சரியாக 7.10க்கெல்லாம் நிகழ்ச்சியை தொடங்கிவிட்டார்களாம். இருந்தும் அதிக நேரம் ஆட்களை உள்ளே அனுமதித்துக் கொண்டே இருந்ததால், நிகழ்ச்சி முடியும் வரை வந்தவர்கள் இடம் தேடி அலைந்தது மற்றவர்களுக்குத் இடையூறு கொடுத்ததாகவும் கூறுகிறார்கள். அந்த நேரங்களில் நிகழ்ச்சியில் நிறுத்தப்பட்டிருந்த பவுன்சர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லையாம். ஒவ்வொரு முறையும் அவர்களை கூப்பிட்டுச் சொன்ன பிறகு தான் சில வசதிகளை செய்து தந்தார்களாம். அப்போதெல்லாம் எங்களுக்கு தெரியவில்லை வெளியே இப்படி ஒரு களேபரம் நடந்து வருகிறது என்பதே. அந்த சமயத்தில் எங்களது குடும்பத்தினரும், நண்பர்களும் போன் செய்து எங்களது பாதுகாப்பு குறித்து விசாரித்தபோதுதான் வெளியே நடந்து வந்த குழப்பங்கள் குறித்தே எங்களுக்கு தெரிய வந்தது என்கிறார்கள் அவர்கள்.


ஏமாற்றம் அடைந்த ரசிகர்களின் கொந்தளிப்பு

அடுத்தடுத்த சிக்கலில் ஏ.ஆர்.ரகுமான்…

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அண்மை காலமாக தொடர்ந்து அவ்வப்போது ஏதாவது சிக்கல்களில் மாட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு உதாரணம் கடந்த ஜனவரி மாதம் அவரது ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டி ஸ்டூடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட் மேன் குமார் என்பவர் பலியான சம்பவத்தை சொல்லலாம். இந்த சம்பவத்திற்கும், ரகுமானுக்கு தொடர்பு இல்லை என்றாலும் தனது ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் போதுமான பாதுகாப்பு பணிகளை செய்யாததாலேயே இந்த கோர நிகழ்வு நடந்ததாக பலரும் ரகுமானை விமர்சனம் செய்தனர். பின்னர் இந்த நிகழ்விற்காக வருத்தம் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணமும், தனியாக ஒரு இசை நிகழ்ச்சியும் நடத்தி அதில் இருந்து வந்த பணத்தை லைட்மேன் யூனியனுக்கு கொடுத்தார்.


லைட் மேன் குமார் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி

இந்த பிரச்சினையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தனது 30 ஆண்டுகால இசை நிகழ்வை கொண்டுவதற்காக நடத்தப்பட்டு வரும் இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியிலும் தற்போது பிரச்சனை ஏற்பட்டிருப்பது அவரை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. இத்தனை ஆண்டுகளில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் மட்டுமின்றி சமீபத்தில் தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூர் போன்ற பிற மாவட்டங்களிலும் வெற்றிகரகமாக இசை நிகழ்ச்சியை நடத்தியவருக்கு தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியால் மோசமான அனுபவம் ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் கூறியிருந்த கருத்து ஒன்றில், ‘என்னை சிலர் எல்லா நேரங்களிலும் மிகச் சிறந்தவர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான்தான் இப்போது பலி ஆடாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று வேதனை தெரிவித்திருந்தார். இனிவரும் காலங்களில் ஏ.ஆர்.ரகுமான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்துடன் எடுத்துவைக்க வேண்டும் என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகிறன.


Updated On 25 Sep 2023 6:56 PM GMT
ராணி

ராணி

Next Story