இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

விவாகரத்து எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், திரை பிரபலங்களிடையேயும் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. எப்போது யார் தங்களது இணையை பிரிவதாக அறிவிக்கப்போகிறார்கள்? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திடீர் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தனுஷ் - ஐஸ்வர்யா, ஜி.வி பிரகாஷ்குமார் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி என பிரபலங்களின் விவாகரத்து செய்திகளே அடங்காத நிலையில் அடுத்து தங்களது விவாகரத்தை அறிவித்திருக்கிறார்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் - சாயிரா பானு தம்பதி. இன்னும் சில மாதங்களில் 30 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை நிறைவு செய்வார்கள் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் வெளியான இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதே சமயம் ரஹ்மான் விவாகரத்து அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்திற்குள் அவருடைய குழுவில் பணியாற்றி வந்த இசைக்கலைஞர் மோகினி டேவும் தனது விவாகரத்தை அறிவிக்க, இவர்கள் இருவரையும் தொடர்புபடுத்தி பல்வேறு வதந்திகள் பரவின. இந்நிலையில்தான் ரஹ்மானின் வழக்கறிஞர் விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

முடிவுக்கு வந்த 29 வருட திருமண வாழ்க்கை

காதல் பாடல்களுக்கு பெயர்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஏனோ காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்து, மிக இளம்வயதிலேயே இசைத்துறையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் ‘ரோஜா’, ‘பாம்பே’ போன்ற படங்களின் பாடல்களால் புகழின் உச்சத்தில் இருந்த ரஹ்மான் அடுத்தடுத்து படங்களில் இசையமைக்கும் பணிகளில் பிஸியாக இருந்ததால் அவருக்கு காதலிக்க நேரமில்லை என்று தனது அம்மாவிடம் சொல்லிவிட்டாராம். 29 வயதில் அவருக்கு திருமணம் செய்ய அவருடைய அம்மா பெண் தேடியபோது, பெண் பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும், அதேசமயம் சிம்பிளாக இருக்கவேண்டும், குறிப்பாக நான் இசையமைப்பதற்கு ஏற்றவகையில் எனக்கு எந்த பிரச்சினையும் கொடுக்காத பெண் வேண்டும் என்று கூறினாராம். அதன்படி ரஹ்மானின் அம்மா அவருக்கு பார்த்துவைத்த பெண்தான் சாயிரா பானு. முதன்முதலாக சாயிராவை பார்த்தபோது என்னை பிடித்திருக்கிறதா? என அவர் கேட்க, அவரும் ஆம் என பதில் சொல்ல இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இருவரும் உருகி உருகி காதலிக்க தொடங்கினார்களாம். இப்படி ரஹ்மான் - சாயிரா திருமணம் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் கதீஜாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.


ஏ.ஆர். ரஹ்மான் - சாயிரா பானு திருமண புகைப்படம்

மகளுக்கு திருமணம் நடைபெற்ற போதிலும் சற்றும் காதல் குறையாத தம்பதியாக வலம்வந்த ரஹ்மானும் சாயிராவும் பல்வேறு பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களிடையே இருக்கும் புரிதல் மற்றும் காதல் குறித்து பகிர்ந்துவந்தனர். மேலும் கோலிவுட், பாலிவுட் பார்ட்டிகள், விருந்துகள் மற்றும் விசேஷங்களிலும் தம்பதியாக கலந்துவந்தனர். இந்நிலையில் நவம்பர் 19ஆம் தேதி ரஹ்மானின் மனைவி சாயிரா தனது கணவரை பிரிவதாக அவருடைய வழக்கறிஞர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தனது கணவர் ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்திருக்கிறார். ஒருவர்மீது ஒருவர் ஆழமாக அன்பை வைத்திருந்த போதிலும் பதட்டங்களும், சிரமங்களும் தீர்க்கமுடியாத இடைவெளியை உருவாக்கியது. அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்தால் ஆழமான யோசனைக்குப் பிறகே பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். யாராலும் அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யமுடியாது. வலி மற்றும் வேதனையில்தான் சாயிரா இந்த முடிவை எடுத்திருக்கிறார். வாழ்க்கையில் இந்த கடினமான சூழ்நிலையை கடக்கும் நேரத்தில் அவர்களுடைய தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ரஹ்மானின் மகன் அமீனும் தனது இன்ஸ்டாகிராமில், ‘இந்த நேரத்தில் எங்களுடைய தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம், புரிந்துகொண்டமைக்கு நன்றி!’ என்று பதிவிட்டிருந்தார். தனது மனைவியின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான ஒருசில மணிநேரங்களில் ரஹ்மானும் தனது எக்ஸ் தளத்தில், ‘முப்பது வருடங்களை எட்டுவோம் என்று நாங்கள் நம்பியிருந்தோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது. உடைந்த இதயங்களின் கனத்தில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில், அர்த்தத்தைத் தேடுகிறோம். உடைந்த துண்டுகளால் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை.


தங்களது பெற்றோர் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு தனியுரிமை அளிக்கக்கோரிய பிள்ளைகள்

இந்த உடைந்த அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும் நேரத்தில் எங்களுடைய தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கு நன்றி’ என்று பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து இவர்களுடைய மூத்த மகள் கதீஜா, இந்த விவகாரத்தில் இருவரின் தனியுரிமைக்கும் மதிப்பளிக்குமாறு தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதேபோல் இரண்டாவது மகள் ரஹீமாவும், இது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை என்றும், அதில் தலையிட்டு அறிவுரை கூறி சோக எமோஜிக்களை பதிவிட நமக்கு உரிமையில்லை என்றும், என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது அவர்களுக்கு தெரியும், எனவே அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள் என்றும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரஹ்மானின் விவாகரத்து அறிவிப்பைத் தொடர்ந்து அதுதொடர்பாக பல்வேறு கருத்துகளும், ஹேஷ்டேக்குகளும் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அவர்களுடைய தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு பிள்ளைகள் மூன்றுபேரும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

மோகினி டே விவாகரத்துடன் தொடர்பு

ரஹ்மான் - சாயிரா விவாகரத்து அறிவிப்பு வெளியான ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே ரஹ்மானின் குழுவில் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் பாசிஸ்ட் மற்றும் பின்னணி பாடகியும் இசைக்கலைஞருமான மோகினி டேவும் தனது கணவரும் இசையமைப்பாளருமான மார்க் ஹார்ட்சச்சை பிரியப்போவதாக அறிவித்தார். மோகினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எனது அன்பான நண்பர்கள், குடும்பம், ரசிகர்கள் மற்றும் ஃபாலோவர்களுக்கு, நானும் எனது கணவர் மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இது பரஸ்பரமான பிரிவு என்பதை முதலில் என் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருப்போம்.


ரஹ்மானின் குழுவில் இணைந்து பணியாற்றும் மோகினி டேவும் விவாகரத்து அறிவிப்பு

நாங்கள் இருவரும் வாழ்க்கையில் வெவ்வேறு விஷயங்களை விரும்புவதால் விவாகரத்து மூலம் பிரிவதே சிறந்த வழி என்பதை முடிவு செய்திருக்கிறோம். ஆனாலும் MaMoGi மற்றும் Mahini Dey உள்ளிட்ட பல குழுக்களில் இணைந்தே வேலை செய்வோம். நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் பெருமைகொள்கிறோம். மேலும் அது எந்த நேரத்திலும் நிற்காது. எங்களுக்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எங்களுடைய இந்த முடிவுக்கும் தனியுரிமைக்கும் மதிப்பளியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஏ.ஆர் ரஹ்மானின் குழுவில் இணைந்து பணியாற்றிவரும் மோகினி இதுவரை உலகளவில் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹ்மான் மட்டுமல்லாமல் ஸ்டீவ் வை, ஜாஹிர் உசைன், ரஞ்சித் பரோட் போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார் மோகினி டே. 29 வயதேயான இவர் இந்தியாவின் சிறந்த பேஸ் கிட்டாரிஸ்ட் என உலகளவில் நன்கு அறியப்பட்டவர்.

ரஹ்மான் வழக்கறிஞர் விளக்கம்

ஒன்றாக இணைந்து பணியாற்றிவரும் இருவரும் அடுத்தடுத்து தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், ரஹ்மான் - சாயிரா விவாகரத்தில் மோகினிக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. சிலர் இருக்கலாம் என்று கூறினாலும், ரஹ்மான் அதுபோன்று செய்யமாட்டார் என ஒருதரப்பினர் கூறிவந்த நிலையில், ரஹ்மானின் வழக்கறிஞர் வந்தனா ஷா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்திருக்கிறார். அதன்படி மோகினி டேவிற்கும் ரஹ்மானிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறியிருக்கிறார். மேலும் சாயிராவும் ரஹ்மானும் கலந்தாலோசித்து தங்களுடைய சொந்த விருப்பத்தின்பேரில்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதேசமயம் இந்த முடிவை அவ்வளவு சுலபத்தில் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், ஜீவனாம்சம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், இருவருமே ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்ததால் போலியாக எதுவும் சொல்லமுடியாது என்றும் கூறியுள்ளார். மோகினி டேவின் விவாகரத்து குறித்தும் பேசிய வந்தனா ஷா, ஏ.ஆர்.ஆருடன் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியிருக்கும் மோகினி, கொல்கத்தாவைச் சேர்ந்த மார்க் ஹார்ட்சச் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்ததாகவும், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து குறித்து அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பும் ரஹ்மானின் அறிவிப்பும் அடுத்தடுத்து வந்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.


ரஹ்மான் மற்றும் மோகினி டே குறித்து விளக்கமளித்த வழக்கறிஞர் வந்தனா ஷா

விவாகரத்து தொடர்பான செய்திகள் ஒருபுறம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் அதே வேளையில், மலையாளப்படமான ஆடுஜீவிதத்திற்கு இசையமைத்ததற்காக ஏ.அர். ரஹ்மானுக்கு ஹாலிவுட்டின் உயரிய விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் சார்பாக விருதை பெற்றுக்கொண்டார் அப்படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி. இதுதவிர, ரஹ்மான் இசையமைத்த ‘பெரியோனே’ பாடல் Feature film category-இல் பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் மற்றும் மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் என சிறப்பு பெயர்களோடு அழைக்கப்படும் ரஹ்மான் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். மேலும் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பிரிவு என்பது உலகளவிலான அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வலியுறுத்தி பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே தனது விவாகரத்து குறித்து சில யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும், சிலர் கற்பனை பேட்டிகளை அளித்திருப்பதாகவும் கூறியுள்ள ரஹ்மான், அந்த வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை நீக்கவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்கள்மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து தனது கணவர் பற்றி அவதூறு பரப்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சாயிரா. அந்த ஆடியோவில், ரஹ்மான் ஒரு சிறந்த மனிதர் என்றும், அவரைப்போல அற்புதமான மனிதரை பார்க்கவே முடியாது என்றும் கூறியுள்ள அவர், தனது உடல்நல குறைபாடு காரணமாகத்தான் கணவரை பிரிவதாகவும், சிகிச்சைக்காக, தான் தற்போது மும்பையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Updated On 2 Dec 2024 12:45 PM GMT
ராணி

ராணி

Next Story