இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

19 வயதில் சினிமா பிரவேசம், 10 வருடத்தில் 5 சூப்பர் ஹிட் படங்கள்., பாலிவுட் வரை பிரபலமாகி தற்போது ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தைக் கொடுத்து இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் அட்லீ. இவரது இயக்கத்தில்., ஷாருக்கானின் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், இயக்குனர் அட்லியின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.

அட்லீயின் ஆரம்ப வாழ்க்கை

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ, மதுரை திருப்பரங்குன்றத்தை பூர்வீகமாகக்கொண்டவர். இருப்பினும் அட்லீ பிறப்பதற்கு முன்பாகவே இவரது குடும்பம் முழுவதுமாக சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டது. அருண்குமார் என்ற இயற்பெயருடைய அட்லீ 1986-ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே சினிமாவில் மிகப்பெரிய நடன இயக்குனராக வர வேண்டும் என்ற கனவோடு தனது கலைப் பயணத்தை தொடங்கிய இவர், கலா மாஸ்டரிடம் நடனம் கற்றுக் கொண்டார். அதன் மூலம் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா, கோபிகா, ரேவதி நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடனக் குழுவில் பணியாற்றினார். பின்னர் சென்னை சத்யபாமா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். அவர் தேர்தெடுத்தது சினிமா தொடர்பான படிப்பு என்பதால் கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து ‘என் மேல் விழுந்த மழைத் துளி’ என்ற குறும்படம் எடுத்தார். இவர் தயாரித்த இந்த குறும்படம் அவரது கல்லூரியில் பிரபலமானது மட்டுமின்றி அவரது குறும்படம் அவருக்கு பல விருதுகளையும் பெற்றுத்தந்தது. இதனால் நடன இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவு கொஞ்சம் கொஞ்சமாக களைந்து திரைக்கதை இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவு அட்லீயை தொற்றிக்கொண்டது.


இயக்குனர் அட்லீ மற்றும் அவரது குறும்படம்

இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட அறிமுகம்

மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்து கல்லூரி பட்டப் படிப்பை முடித்த அட்லீ, தான் எடுத்த குறும்படங்களை தமிழில் பிரமாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் இயக்குனர் ஷங்கரிடம் போட்டுக் காண்பித்து, தன்னை உதவி இயக்குனராக சேர்த்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அப்போது இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து 'எந்திரன்' படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அட்லீயின் மேனரிசங்கள் கொஞ்சம் ரஜினியோடு ஒத்துப்போனதால், 'எந்திரன்' படத்தில் ரஜினியோடு இணைந்து பணியாற்றுவதற்கு இவரது உதவி தேவைப்படும் என்று தனது உதவி இயக்குனர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டார். அட்லீ 'எந்திரன்' படத்தில் ரஜினியின் மாதிரி காட்சிகளை எடுப்பதற்காக முதலில் உதவி இயக்குனராக சேர்க்கப்பட்டிருந்தாலும் நாளடைவில், அவரின் வேகமும், விவேகமும் ஷங்கரை வெகுவாக கவர்ந்தன. இதனால் ஷங்கரின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவராக மாறிப்போனார் அட்லீ. ஷங்கர் தனது 'எந்திரன்' படத்தின் முக்கியமான வேலைகளை அவரிடம் நம்பி ஒப்படைத்தார். அட்லீயும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் மிக நேர்த்தியாக செய்து முடித்து தன்னுடைய குருநாதரிடம் பாராட்டுகளை பெற்றார். 'எந்திரன்' படம் வெற்றியடைந்த பிறகு ஷங்கரிடம் இருந்து வெளியே வந்து தனியாக படம் இயக்க முடிவு செய்தார் அட்லீ. அதன் முதல் முயற்சியாக 'முகப்புத்தகம்' என்ற குறும்படத்தையும் இயக்கினார். அந்த குறும்படம் பலரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதால் ஒரு முழு நீள திரைப்படம் எடுக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார். அந்த சமயம் இயக்குனர் ஷங்கர் 'நண்பன்' படத்தினை எடுக்க ஒப்பந்தம் ஆக, மீண்டும் அட்லீயை அழைத்து உதவி இயக்குனராக பணியாற்ற கூறினார். அட்லீயும் குருநாதரின் சொல்லை தட்ட முடியாமல் விஜய்யின் 'நண்பன்' படத்தில் பணியாற்றினார். அப்போதுதான் விஜய்யுடன் அட்லீக்கு அறிமுகம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி விஜய்யின் மனதிற்கு நெருக்கமான ஒருவராகவும் மாறிப்போனார்.


இயக்குனர் ஷங்கர் மற்றும் எந்திரன் படத்தில் ரஜினியுடன்

'ராஜா ராணி' பார்த்து அசந்து போன விஜய்

'நண்பன்' படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தானே படங்களை இயக்க முடிவு செய்த அட்லீ அதற்காக கதை விவாதங்களில் ஈடுபட்டார். அப்படி தமிழில் முதன்முதலில் அவர் இயக்கி வெளிவந்த காதல்-காமெடி படமான 'ராஜா ராணி' மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் முதலில் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனையும், ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில் ஜெய்யையும் தான் நடிக்க வைப்பதாக இருந்தாராம் அட்லீ. அதற்கு முன்னதாக திரையுலகில் பல பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தவரும், தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த தனது நண்பருமான மகேந்திரன் என்பவரிடம் தான் எடுக்க போகும் படம் பற்றி கூறினாராம். பின்னர் அவரின் வழிகாட்டுதல் படி படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஏற்கனவே அட்லீ முடிவு செய்திருந்த கதாபாத்திரங்களின் நாயகர்கள் மாறி ஆர்யா, ஜெய், நயன்தாரா ஆகியோரை வைத்து எடுக்கப்பட்ட 'ராஜா ராணி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒ௫ கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் இரண்டு மடங்கு வசூலை அப்போது ஈட்டியது. 'ராஜா ராணி' படத்தை எடுத்திருந்த விதமும், அதன் வெற்றியும் விஜய்யை வெகுவாக கவர்ந்துவிடவே, உடனடியாக அடுத்த நாளே அட்லீயை தொடர்புகொண்டு அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். அதற்காக தனது வீட்டிற்கு வரும்படி விஜய், அட்லீக்கு அழைப்பு விடுத்தார். தளபதியின் வீட்டிற்கு சென்ற அட்லீ, ஒரு புதிய படத்திற்கான ஐடியாவையும் கொடுத்தார். விஜய்க்கும் அந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் இருவரும் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். அந்த படம் தான் 2016 ஆம் ஆண்டு விஜய் - அட்லீ கூட்டணியில் முதல் முறையாக வெளியான 'தெறி' திரைப்படம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.


அட்லீ விஜய் சந்திப்பு

பாக்ஸ் ஆபிஸை கலக்கிய விஜய் - அட்லீ கூட்டணி

'தெறி' படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீயின் மனதில் இன்னொரு புதிய யோசனை தோன்றியது. அப்போது அவர் சல்மான் கானின் 'பஜ்ரங்கி பைஜான்' படத்தை பார்த்திருந்தார். அவருக்கு படம் மிகவும் பிடித்திருந்ததால், படத்தின் எழுத்தாளரும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையுமான வி.வி.விஜேந்திர பிரசாத்தை சந்தித்தார். அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த அட்லீ, மனதில் இருந்த கருத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்த யோசனைதான் 'மெர்சல்' திரைப்படம் உருவாக காரணமாக இருந்ததோடு, அந்த படத்தின் திரைக்கதையை விஜேந்திர பிரசாத் எழுதவும் வழி வகுத்தது. விஜய் கதாநாயகனாக நடித்த இந்தப் படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அது மட்டுமின்றி 135 கோடிக்கு மேல் வசூலும் செய்தது. இதையடுத்து இருவரின் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவந்த 'பிகில்' படமும் வெற்றிப்படமாக அமைய தொடர் தோல்வியே பார்த்திராத வெற்றி இயக்குனர் என்ற பெயர் இவருக்கு கிடைத்தது. அதே வேளையில் படங்களின் கதை மற்றும் திரைக்கதை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் இவர் மீது முன் வைக்கப்பட்ட போதிலும், விஜய்யின் அறிவுரைகளை பின்பற்றி என் அண்ணன் எவ்வழியோ அவ்வழியே நானும் என்று கூறி தன்னை நோக்கி வந்த எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறத் தொடங்கினார்.


விஜய் அட்லீ திரைப்படங்கள்

ஷாரூக் மூலம் கிடைத்த பாலிவுட் என்ட்ரி

'பிகில்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார் அட்லீ . அதற்காக அவர் புதிய கதை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். இந்த நேரம் பாலிவுட்டில் இருந்து அவரே எதிர்பார்த்திராத வகையில் ஷாரூக்கானிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், பின்னர் வந்த அழைப்பு உண்மைதான் என்பதை தெரிந்துகொண்டு நேராக ஷாருக்கானை பார்க்க சென்றுள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன்பு 'எந்திரன்' பட ஷூட்டிங் சமயத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, ஒருமுறை மும்பையில் இருந்த ஷாரூக்கான் வீட்டின் கேட் கதவுகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டாராம். இந்த முறை அதே ஷாரூக்கான் வீட்டின் வாயில் கதவுகள் அட்லீக்காக திறக்கப்பட்டன. அங்கு அவர் சொன்ன கதை ஷாரூக்கானுக்கும் பிடித்து போகவே 'ஜவான்' படத்தின் அடுத்தகட்ட பணிகள் மிக வேகமாக மேற் கொள்ளப்பட்டது. கௌரி கான் தயாரிப்பில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகிய இப்படம் கொரோனா, பட்ஜெட் பிரச்சினை, கருத்து முரண்பாடு போன்ற பல சிக்கல்களால் சில காலம் தத்தளித்தது. இருப்பினும் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவந்துள்ள 'ஜவான்' தற்போது மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.


பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் அட்லீ

சிங்கப் பெண்களை உருவாக்கிய அட்லீ

பொதுவாகவே அட்லீ தனது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக திரைக்கதை அமைப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர். இதனை அவரது முதல் படமான ராஜா ராணியில் வரும் ரெஜினா (நயன்தாரா) கதாபாத்திரம் துவங்கி, 'தெறி' மித்ரா (சமந்தா), 'மெர்சல்' ஐஸ்வர்யா (நித்யா மேனன்) என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக 'பிகில்' படத்தில் வரும் கால்பந்து வீராங்கனைகளின் பாத்திரப் படைப்பு என்பது மிக சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்ததோடு, அதில் வரும் 'சிங்கப் பெண்ணே'பாடல் இன்றும் பல பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் குரலாக ஒலித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள 'ஜவான்' படத்திலும் நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி உட்பட பிற பெண் கதாபாத்திரங்களை வீரம் மிக்க மங்கைகளாக காட்டியுள்ள அட்லீ, தனது படங்களில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருக்கிறார். இதனை வெளிப்படுத்தும் விதமாக எங்கு சென்றாலும், எந்த மேடை ஏறினாலும் தன் மனைவியையும் உடன் அழைத்து செல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதே போல் ஒவ்வொரு மேடையிலும் தனது அம்மா மற்றும் மனைவி குறித்து பேசும் பழக்கம் கொண்டுள்ள இவர், விஜய் குறித்து பேசாமல் எந்த மேடையை விட்டும் இறங்கியதில்லை. தற்போது வெளிவந்துள்ள 'ஜவான்' படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, அட்லீ தொடர்ந்து பாலிவுட்டில் பயணிக்கப் போகிறாரா... அல்லது மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.அட்லீ உருவாக்கிய சிங்கப்பெண் கதாபாத்திரங்கள்

Updated On 18 Sep 2023 6:50 PM GMT
ராணி

ராணி

Next Story