இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(16.04.1989 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை உண்டு! எனக்கு திருப்பு முனையாக அமைந்தது என் திருமணம்! நளினியை கைப்பிடிப்பதற்கு எத்தனையோ எதிர்ப்புகள்! போராட்டங்கள்! நானும் நளினியும் திடமாக நின்று அவற்றை வென்றோம். கைப்பிடித்தோம். அந்தவேளை - எனக்கு நல்லவேளை!

திருமணத்துக்கு முன்பு சராசரி நடிகனாக இருந்த எனக்கு, திருமணத்துக்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின! அதிர்ஷ்டம் இப்படித்தான் வருமோ?

எங்கள் திருமண வரவேற்புக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நேரில் வந்து வாழ்த்தினார்! அதுவரை இருந்த எதிர்ப்புகள் தூள் தூளாகிப் போனது! முகத்தை சுளித்துக் கொண்டு இருந்தவர்கள், முகமலர்ச்சியோடு எங்களை வரவேற்றார்கள்!


நடிகர் ராமராஜன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நேரில் வந்து வாழ்த்திய தருணம்

குழந்தை

திருமணமான ஓரிரு மாதத்திலேயே, நளினி கர்ப்பமுற்றாள்! அவளை பரிசோதித்த டாக்டர்கள் "நளினியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள்" என்றனர். முதல் பிரசவமே, இரட்டை குழந்தையா? ராமராஜன் என்ன ஆகப்போகிறானோ என்று அச்சுறுத்தினர் பலர். ஆனால், நாங்கள் அச்சப்படவில்லை! இரட்டையர்களை ஆவலோடு எதிர்பார்த்தோம்! அந்த நாளும் வந்தது! டாக்டர்கள் சொன்னது போலவே, எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. பொதுவாக, இரட்டைக் குழந்தைகள் என்றால் இரண்டும் பெண்ணாக இருக்கும். அல்லது ஆணாக இருக்கும் என்பார்கள்! ஆனால், எங்களுக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக இருவர் பிறந்தார்கள்!

திருமணத்துக்குப் பிறகு, மளமளவென்று உயர்ந்து கொண்டிருந்த நான், குழந்தைகள் பிறந்த பிறகு, முன்னணி நடிகர் ஆனேன். என் செல்வங்கள், எனக்கு செல்வத்தை கொட்டிக் கொடுக்கத் தொடங்கினர். ஒரு நேரத்தில் என்னை உதாசீனப் படுத்தியவர்கள் கூட, இன்று என்னைத் தேடி வருகிறார்கள்! இரவு படப்பிடிப்பு முடிந்து சோர்வோடு வீடு திரும்பினால், எனக்காக நாலைந்து தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்? இதை என்னவென்று சொல்லுவது? எல்லாம் குழந்தைகள் பிறந்த அதிர்ஷ்டம் என்றே நான் எண்ணுகிறேன்!


இருவேறு தோற்றங்களில் நடிகர் ராமராஜன்

இன்று பலபேர் என்னைத் தேடி வரலாம், மொய்க்கலாம்! ஆனால், நான் என்றும் பழைய ராமராஜனே! நான் கஷ்டப்பட்ட போது, எனக்கு உதவியவர்களை நான் இதுவரை மறந்தது இல்லை; இனி மறக்கவும் மாட்டேன். சாதாரணமாக இருந்த என்னை, சாதாரண தயாரிப்பாளர்கள்தானே உயர்த்தினார்கள்! இன்றும் அவர்களுக்குத்தான் முதலிடம்! அதன் பிறகே, மற்றவர்களுக்கு!

தொழில்

தொழில் கடமையோடு, எனக்கு அரசியல் கடமையும் இருக்கிறது! எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்ததால், நான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்! அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிரிந்தபோது, நான், எம்.ஜி.ஆரின் வாரிசான ஜெயலலிதா பக்கம் நின்றேன். தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டேன். இப்பொழுது இரு அணிகளும் இணைந்துவிட்டன! அ.தி.மு.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது! அ.தி.மு.க.வை அரியணையில் ஏற்றும்வரை, நான் ஓயமாட்டேன்! எப்பொழுதும் எம்.ஜி.ஆர். புகழ் பாடிக்கொண்டிருப்பேன்.

Updated On 5 Feb 2024 6:55 PM GMT
ராணி

ராணி

Next Story