இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(6.01.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

'சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் கதாநாயகி சுமதியின் குரலை படத்தில் கேட்பவர்களுக்கு, "எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதே!" என்று எண்ணத் தோன்றும்! அது தமிழ் ரசிகர்களுக்குக் கேட்டு பழகிய குரல்தான்!

"திக்குத் தெரியாத காட்டில்”, “அவன்தான் மனிதன்", "எங்க மாமா" மற்றும் ஏராளமான படங்களில் நடித்த சிறுமி சுமதிதான் இந்த கதாநாயகி. குமரி ஆகி, மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சுமதியை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்து, சித்திரம் ஆக்கியிருப்பவர் பாக்கியராஜ். 3 வயதில் "பொற்சிலை" என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிய சுமதிக்கு இப்பொழுது 24 வயதாகிறது! இதற்குள், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று எல்லா சினிமா உலகையும் கண்டவர் சுமதி. 150 படத்திற்கு மேல் நடித்து இருக்கிறார். குமரி ஆன பிறகு, சுமதி அதிகம் நடித்தது மலையாளப் படத்தில்தான்!

சுமதி நடித்த "இரவுகள் உனக்காக" என்ற மலையாளப் படத்தைப் பார்த்த பிறகுதான், "சுவர் இல்லாத சித்திரங்கள்" படத்துக்கு சுமதியை ஒப்பந்தம் செய்தார் பாக்கியராஜ். 5-ம் வகுப்பு வரைதான் சுமதி படித்தார். "படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை" என்று சொன்னார் சுமதி.

பெரிய குடும்பம்

சுமதியின் குடும்பம் மிகவும் பெரியது. உடன் பிறந்தவர்கள் 11 பேர். 7 ஆண்கள், 4 பெண்கள்.


சிறுமி மற்றும் இளம் நாயகியாக இருமாறுபட்ட தோற்றங்களில் சுமதி

"கதாநாயகி அனுபவம் பற்றி சுமதி சொன்னது”

வெட்கம்

"நான் கதாநாயகன் சுதாகரை, இந்தப் படத்துக்கு முன் நேரில் பார்த்தது இல்லை. எனவே படப்பிடிப்பின் போது, அவரை நேரில் பார்க்கவே வெட்கப்பட்டுக் கொண்டு நின்றேன், சுதாகர் என்னிடம் நெருங்கி வந்து, ''அம்மா வணக்கம், நான்தான் சுதாகர் என்பவர்" என்று கிண்டலாக வணங்கினார். எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. பிறகு வெட்கம் போய் பயம் வந்தது. ஓரிரு நாளைக்குப் பிறகுதான் சுதாகரிடம் நேருக்கு நேர் நின்று பேச முடிந்தது" என்று சுமதி சொன்னார்.

எதிர்பாராதது

நிருபர்: யார் யாரோ தமிழ் படங்களில் நடிக்கிறார்கள். நீங்கள் ஏன் மலையாளத்துக்குச் சென்றீர்கள்?

சுமதி: மலையாளத்தில் வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தன. அதனால், வருகிறபோது வரட்டும் என்று தமிழில் முயற்சி செய்யவில்லை. ஆனால் முதல் படத்திலேயே இப்படியொரு நல்ல பாத்திரம் கிடைக்கும் என்று நான் கனவு கூட காணவில்லை.

நிருபர்: மிகவும் குள்ளமாக இருக்கிறோமே என்று வாய்ப்புத் தேடவில்லையா?

சுமதி: நடிப்பதற்கு "குள்ளம்" ஒரு தடையாக இருக்கும் என்று நான் கருதவில்லை. நான் மிகவும் சின்னப் பெண், வளரும் பருவம் இருக்கிறது!

நிருபர்: பருவம் மாறினாலும், குரல் இன்னும் உங்களுக்கு மாறவில்லையே!

சுமதி: அப்படியா? (அதே குரலில் சிரிக்கிறார் சுமதி)

நிருபர்: 3 வயதில் இருந்து நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள், சினிமா உலகம் இப்பொழுது எப்படியிருக்கிறது?

சுமதி: என்னைப் போல அதுவும் வளர்ந்து இருக்கிறது. பரந்து உள்ளது.


மலையாளப் படம் ஒன்றில் சிறுமியாகவும், தமிழில் 'சுவரில்லா சித்திரங்கள்' படத்தில் நாயகியாகவும் சுமதியின் தோற்றம்

கவர்ச்சி

நிருபர்: ரசிகர்கள் உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்தால்...!

சுமதி: அதுவும் ஒரு வகை நடிப்புதானே!

நிருபர்: உங்கள் இலட்சியம் என்ன?

சுமதி: நான் நாயகியாக நடித்த முதல் படத்திலேயே, பாக்கியராஜ் எனக்கு நல்ல பெயர் கிடைக்கச் செய்து விட்டார். இந்தப் பெயரை கடைசிவரை காப்பாற்ற வேண்டும்!

Updated On 22 Jan 2024 6:33 PM GMT
ராணி

ராணி

Next Story