இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்றாலே ஒரே குதூகலம்தான். அதிலும் நட்சத்திரங்களின் கொண்டாட்டங்கள் என்றால் சொல்லவா வேண்டும். அவர்களின் ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அந்த அளவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், இன்று நாம் இரண்டு நட்சத்திரங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை பார்க்க இருக்கிறோம். இருவருமே தென்னிந்திய திரைவானில் அறிமுகமாகி, பின் பல்வேறு மொழிகளில் தங்கள் திறமையால் சிறகை விரித்தவர்கள். இரண்டு நட்சத்திரங்களுமே தங்களது பிறந்தநாளை ஒரேநாளில் கொண்டாடுகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. அவர்கள் வேறு யாருமில்லை. ரோஜா படத்தில் பட்டிக்காடு என்ற செல்ல பெயருடன் ரோஜாவாக வந்து நம்மை கொள்ளை கொண்டுபோன நடிகை மதுபாலாவும், ‘டூயட்’ படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் 'ஆசை' வில்லனாக நமக்கெல்லாம் பரிட்சயமான பிரகாஷ் ராஜும்தான். இதில் ஒற்றுமை என்னவென்றால் இருவருமே இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட பொக்கிஷங்கள் என்பதுதான். இப்படி பெருமை வாய்ந்தவர்களின் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பாக அவர்களின் சினிமா திரைப்பயணம் குறித்த தகவல்கள், பெற்ற வெற்றிகள், விருதுகள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

அழகியாக 'அழகன்' படத்தில்...

‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் எப்படி நமக்கு அலுப்புத்தட்டாதோ அப்படித்தான் கதாநாயகி மதுபாலாவும். இன்றைக்கும் அதே அழகுடனும், இளமையுடனும் வலம் வந்து நம்மை வசியம் செய்து கொண்டிருக்கிறார். பத்மமாலினி என்கிற இயற்பெயர் கொண்ட மதுபாலா 1969ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி சென்னையில் பிறந்தார். தன்னுடைய பள்ளி படிப்பை மும்பையில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து வந்த சமயத்தில்தான், இவரது அப்பா பத்மமாலினி என்றிருந்த இவரின் பெயரை மது மாலினி என மாற்றியுள்ளார். இதற்கு பிறகு தன்னுடைய கல்லூரி படிப்பை மும்பை பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். இவரின் அத்தை மகள்தான் இந்திய அளவில் பிரபலமான நடிகையாகவும், கனவுக்கன்னியாகவும் அறியப்படும் ஹேமமாலினி. அத்தகையதொரு இடத்திற்கு தானும் செல்ல வேண்டும் என்கிற ஆசை மதுபாலாவிற்கு இருந்து வந்துள்ளது. இந்த சமயம் மதுபாலாவின் புகைப்படம் ஒன்று எதேச்சையாக கே.பாலச்சந்தரின் கண்களில் பட, அவர் விசாரித்துள்ளார். பின்னர் ஹேமமாலினியின் உறவினர் என்பது தெரிந்தவுடன் அவரை நேரில் அழைத்துவரச்சொல்லி ஹேமமாலினியின் அம்மாவிடம் சொல்ல, உடனடியாக அவரும் தாமதிக்காமல் பிள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மதுவை ஆடை கூட மாற்ற விடாமல் அழைத்துக்கொண்டு பாலச்சந்தரின் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அங்கு மதுபாலாவை நேரில் பார்த்த இயக்குநர் சிகரம் டெஸ்ட் ஏதும் வைக்காமல் நவம்பர் மாதம் வா படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று சொல்லிவிட்டாராம்.


இந்தி மற்றும் தமிழ் படங்களில் மதுபாலாவின் தோற்றம்

அப்படி கே.பாலச்சந்தரின் அறிமுகம் என்ற அடையாளத்தோடு 1991-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழகன்’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமானார். இதே சமயத்தில் ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்து, நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து 'ஃபூல் அவுர் காந்தே' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாள திரையுலகிலும் அறிமுகமான மதுபாலா, அங்கு மம்மூட்டி, மோகன்லால், முகேஷ் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதே வேளையில், தமிழில் மீண்டும் பாலச்சந்தரின் இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பு வர, அதனையும் ஏற்று 1992-ஆம் ஆண்டு ‘வானமே எல்லை’ படத்தில் நடித்தார். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை அழுத்தமாக சொன்ன இந்த படம் மதுபாலாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இருப்பினும், மதுபாலா என்ற நடிகையை தென்னிந்திய அளவில் புகழ் பெறச்செய்தது என்னவோ மணிரத்னத்தின் ‘ரோஜா’ திரைப்படம்தான்.

'ரோஜா' தந்த தேசிய அடையாளம்

‘வானமே எல்லை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது மதுபாலாவை அழைத்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர், உன்னை மணிரத்னம் பார்க்க வேண்டும் என்று அழைத்திருக்கிறார். அவரது வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வா என அனுப்பி வைத்தாராம். மதுபாலாவும் மணிரத்னம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும், மனைவி சுஹாசினியும் சில மேக்கப் டெஸ்ட் எடுத்தது மட்டுமின்றி வசன பேப்பர் ஒன்றையும் கொடுத்து படிக்கச் சொன்னார்களாம். பின்னர் எல்லாம் ஓகே ஆகி அந்த படத்தில் கமிட் ஆனவருக்கு அப்போது தெரியாது இந்த படம் நம்மை இந்திய அளவில் பிரபலப்படுத்தப்போகிறது என்பது. மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கும், மதுபாலாவிற்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி அந்த சமயம் பலராலும் ரசிக்கப்பட்டதுடன், அவரின் அப்பாவித்தனமும், வலுவான நடிப்பும் வலி நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த படத்தில் தனக்கு கிடைத்த முதல் பாராட்டு குறித்து நேர்காணல் ஒன்றில் மதுபாலா பகிர்ந்திருந்தார். அதில் “என்னுடைய அத்தை மகளான ஹேமமாலினி ‘ரோஜா’ படத்தை பார்த்துவிட்டு ‘நீ ஒரு மிகச்சிறந்த நடிகை’ என்று பாராட்டி கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்” என்று தெரிவித்திருந்தார். இதுதவிர மதுபாலாவின் அப்பாவோ, தொடர்ந்து மகளை ஊக்குவிக்கும் விதமாக ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா போன்று நீயும் மிச்சிறந்த நடிகை என்று கூறி உத்வேகப்படுத்திக்கொண்டே இருப்பாராம்.


மணிரத்னத்தின் 'ரோஜா' திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடன் மதுபாலா

இப்படி ‘ரோஜா’ படத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க துவங்கிய மதுபாலா அடுத்த ஆண்டே தமிழில் மீண்டும் 'ஜென்டில்மேன்' என்கிற மெகா ஹிட் படத்தில் நடித்தார். 1993ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு, தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டும் வருகிறது. இப்படி தான் நடித்த அத்தனை படங்களிலுமே சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தி 90-களில் பலருக்கும் விருப்பமான நடிகையாக இருந்த மதுபாலா தற்போதும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு, அமெயா மற்றும் கெயா என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையிலும், இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடனும், புதுப்பொலிவுடனும் காட்சியளிக்கும் மதுபாலா இன்று (26.03.24) தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவர் இன்னும் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற வாழ்த்துவோம்.

பெண்களை அலரவிட்ட 'ஆசை' வில்லன்

தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களாக இருந்தாலும் தன் நடிப்புத்திறமையால் எல்லோரையும் அசர வைத்துவிடும் பிரகாஷ்ராஜ், ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு மொழிகளுக்கு அப்பாற்பட்டு, தென்னிந்திய திரையுலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடிய ஒருவரான இவர், வில்லன், குணச்சித்திரம் என எப்பேர்ப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் பிரித்து மேய்ந்து அந்த இடத்தில் வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியாதபடி செய்துவிடும் வல்லமை பெற்றவர். நாடகப் பின்னணியில் இருந்து திரையுலகிற்கு வந்த வெகு சிலரில் மிக முக்கியமான இடத்தை பெற்ற பிரகாஷ் ராஜ் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். மேடை நாடகங்களில் நடிக்கும் அனுபவம் பெற்ற இவர், அதன் வாயிலாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான கன்னடத் தொடர்களிலும் நடித்து கன்னட மக்களிடம் புகழ் பெற்றார். அந்த அனுபவமே அவரை கன்னட சினிமாவுக்கும் அழைத்துச்சென்று சிறு சிறு வேடங்களில் நடிக்க உதவியது. அந்த நடிப்பு அனுபவம்தான் கே.பாலச்சந்தரின் ஆஸ்தான நாயகிகளில் ஒருவரான நடிகை கீதாவின் அறிமுகத்தை கொடுத்ததாகவும், அவர்தான் பிரகாஷ் ராஜை தன் குருநாதருக்கு அறிமுகப்படுத்தி முதல் வாய்ப்பை பெற்றுக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் பிரகாஷ் ராஜ் என்ற ஒரு அற்புத கலைஞனை பார்த்த முதல் கணமே பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்துவிட, அவர் அப்போது எடுக்க இருந்த ‘டூயட்’ படத்தில் வில்லனாக அறிமுகம் செய்துவைத்தார். அப்படத்தில் ஸ்டார் ஹீரோ சிற்பி என்ற கதாபாத்திரத்தில், இளைய திலகம் பிரபு, ரமேஷ் அரவிந்த் ஆகியோருடன் நடித்தவருக்கு, படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட் என்றாலும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து, ‘நிலா’, ‘பம்பாய்’, ‘புள்ளகுட்டிக்காரன்’ என வரிசையாக நடித்தாலும், ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் திரும்பிப் பார்க்கும்படியான அடையாளத்தை கொடுத்தது என்னவோ இயக்குநர் வசந்தின் ‘ஆசை’ படம்தான்.


'ஆசை' படத்தில் பிரகாஷ் ராஜ்

1995 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் மேஜர் மாதவனாக நடிப்பில் மிரட்டியிருப்பார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் மனோஜ் கே.ஜெயன்தானாம். ஆனால் தனது சிஷ்யப்பிள்ளை வசந்திடம் “இந்த வேடத்திற்கு பிரகாஷ் சரியாக இருப்பான், அவனை நடிக்கவை” என்று சொல்லி ஆலோசனை கூறியதே கே.பாலச்சந்தர்தானாம். அப்படித்தான் குருநாதரின் அறிவுறுத்தலின் பேரில் ஆசை படத்தில் பிரகாஷ் ராஜை நடிக்க வைத்தார் வசந்த். பாலச்சந்தரின் அறிமுகம் என்றும் சோடை போகாது என்பதை நிரூபிக்கும் விதமாக அவரும் தன் நடிப்பால் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்து ஆச்சரியப்படுத்தினார் பிரகாஷ். 1995-ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித், சுவலட்சுமி, ரோகிணி ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த பிரகாஷ்ராஜ் நடிப்பில் தனி முத்திரை பதித்தார். அதிலும் பிரகாஷ்ராஜ் தன் மனைவியாக வரும் ரோகிணியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரின் தங்கையான சுவலட்சுமியை அடைவதற்வதற்காக செய்யும் வில்லத்தனம் இன்று பார்த்தாலும் பதைபதைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வித்தியாசம் காட்டி அவர் நடித்திருந்த அவரின் நடிப்பு பெண் ரசிகைகள் பலரது மத்தியிலும் வியப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியது. இப்படம் வெற்றியடைந்த அதே சமயத்தில் எதை பற்றியும் யோசிக்காமல் தனக்கு வாய்ப்பளித்து வாழவைத்த குருநாதர் பாலச்சந்தருக்காக திரைப்படங்களில் நடித்துக்கொண்டே 'ஆசை' படம் வெளிவந்த அதே ஆண்டில் ’கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடிகை கீதாவுடன் இணைந்து நடித்து அதன் வாயிலாகவும் மக்கள் மத்தியில் புகழ் பெற்றார் பிரகாஷ் ராஜ்.

முத்துப்பாண்டிக்கு கிடைத்த தேசிய விருதுகள்

'ஆசை' திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ‘சீதனம்’, ‘கல்கி’, ‘விஸ்வநாத்’, ‘பூமணி’, ‘அலெக்சாண்டர்’, ‘அரவிந்தன்’, ‘இருவர்’, ‘ராசி’, ‘நேருக்கு நேர்’ என படங்கள் வரிசைகட்டி வர அனைத்திலும் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே சென்றார் பிரகாஷ் ராஜ். இதில் பாலச்சந்தரின் ‘கல்கி’ படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதினையும், மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்திற்காக முதல் முறையாக தேசிய விருதினையும் வென்று புகழ்பெற்றார். இதற்கு பிறகு ‘தயா’, ‘அந்தப்புரம்’, ‘காஞ்சீவரம்’, ‘புட்டக்கனா ஹைவே’ படங்களுக்காகவும் தேசிய விருதுகளைத் தட்டித் தூக்கிய பிரகாஷ் ராஜ், இதுவரை 5 முறை பல்வேறு பிரிவுகளில் தேசிய விருது வென்ற நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற உச்ச நடிகர்களோடு மட்டும் அல்லாமல், அவர்களை தொடர்ந்து வந்த விஜய், அஜித், சூர்யா என பெரிய நட்சத்திரங்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். அதில், இன்றுவரை அனைவரும் ரசிக்கும்படியான ஒரு காம்போ என்றால் அது விஜய் - பிரகாஷ் ராஜ் காம்போதான். இவர்களின் காம்போவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இன்றும் உண்டு. காரணம் 'கில்லி' திரைப்படம்தான். கடந்த 2004-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தனலட்சுமி என்கிற கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார். அதேபோல் முத்துப்பாண்டி எனும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். இப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் இதற்கான மவுசு மக்களிடையே குறையவில்லை. குறிப்பாக இப்படத்தில் பிரகாஷ் ராஜின் நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் திரிஷாவை பார்த்து சொல்லும் ‘ஹாய் செல்லம்’ என்கிற வசனம் இன்றும் பலர் கிண்டலாக பேசும் வார்த்தையாகும்.


'கில்லி' படத்தில் முத்துபாண்டியாக மற்றும் விருதுடன் இருக்கும் பிரகாஷ் ராஜ்

நடிப்பை தாண்டி 2014ஆம் ஆண்டு பை லிங்குவல் படமான ‘தோனி’ மூலம் இயக்குநராக உருவெடுத்த இவர், அழகிய தீயே, மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் உள்ளிட்ட பல தரமான படங்களை தயாரித்தும் கவனம் பெற்றார். அரசியலிலும் ஆர்வம் உள்ள இவர் அவ்வப்போது பாஜக அரசிற்கு எதிராக கருத்துக்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், தெலங்கானா, கொண்டாரெட்டிப்பள்ளியில் உள்ள சில கிராமங்கள், கர்நாடகாவின் பண்ட்லாரஹட்டி கிராமம் போன்ற பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள கிராமங்களை தத்தெடுத்து பல உதவிகளும் புரிந்து வருகிறார். இப்படி சினிமா, அரசியல் என இரண்டு பாதைகளையும் தனக்கு பிடித்தவாறு தேர்வு செய்து பயணித்து வரும் பிரகாஷ் ராஜ், 1994 ஆம் ஆண்டு நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதா குமாரியை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகளும் சித்து என்ற ஒரு மகனும் இருந்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு மகன் சித்து உயிரிழந்தார். இதனால் பிரகாஷ் ராஜ், லலிதா குமாரி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டரீதியாக இருவரும் பிரிந்த நிலையில், 2010-ம் ஆண்டு பாலிவுட் நடன இயக்குநர் போனி வர்மாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போதும் பிஸியான நடிகராக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் பிரகாஷ் ராஜ் திரையுலகில் தனக்கென தனி ராஜாங்கத்தை படைத்து நட்சத்திர நடிகராக வலம் வருகிறார்.

Updated On 1 April 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story