இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். அப்பா ஒரு இந்தியர் என்றாலும் அம்மா பிரிட்டிஷ்காரர் என்பதால் இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் பிரிட்டனில்தான். மாடலிங் மூலம் இந்திய திரையுலகில் நுழைந்த கத்ரீனாவிற்கு ஆரம்ப படங்கள் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்த படங்கள் மாபெரும் வெற்றியை கொடுத்து இந்தி திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக்கியது. அவ்வப்போது இந்தி நடிகைகள் தமிழ் திரையிலும் தோன்றுவதுண்டு. ஆனால் பாலிவுட்டில் 20 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கும் கத்ரீனா, தற்போது முதன்முறையாக தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே பல க்ளாமர் நடனங்களால் தென்னிந்தியாவில் ரசிகர்களை பெற்றிருந்தாலும் தமிழில் நடிப்பது இதுவே முதன்முறை. முதல் படத்திலேயே தனக்கென ரசிகர்களை உருவாக்கிவிட்டார் கத்ரீனா. இவருடைய திரை வெற்றி, திருமணம் மற்றும் காதல்கள் குறித்து ஒரு ரீவைண்ட்.


குடும்பத்தினருடன் மற்றும் இளம்வயதில் கத்ரீனா

லண்டன் டு பாலிவுட்

லண்டனில் வளர்ந்த கத்ரீனா கைஃபின் தந்தை முகமது கைஃப், ஒரு ஹாங்காங் வாழ் காஷ்மீர்காரர். இவருடைய தாயார் சூசன்னா ஒரு பிரிட்டிஷ்காரர். 6 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதர் என பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கத்ரீனாவின் அப்பா, அம்மா இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிறு வயதிலேயே அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர். அறக்கட்டளை பணிகளில் அம்மா ஈடுபட்டு வந்ததால் சிறுவயதில் ஹாங்காங்கில் வளர்ந்த கத்ரீனா, பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். கத்ரீனாவின் அம்மா, அறக்கட்டளை பணி நிமித்தமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளார். குறிப்பாக, மதுரை உசிலம்பட்டியிலுள்ள ஒரு பள்ளியில் அவர் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றியதால் சிறுவயதிலேயே கத்ரீனா இங்கு வந்து போனதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் தொட்டப்ப நாயக்கணூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் கத்ரீனா பங்குதாரராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தனது 14வது வயதில் எதேச்சையாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விளம்பர படம் ஒன்றில் நடித்த கத்ரீனா, மாடலிங் துறையையே தனது கெரியராக தேர்ந்தெடுத்தார். விளம்பர படங்களால் பிரபலமடைந்த கத்ரீனாவுக்கு 2003ஆம் ஆண்டு இந்தியில் கைசத் குஸ்தாத் இயக்கிய ‘பூம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும் கத்ரீனாவின், அழகிய முகம் மற்றும் அப்பாவித்தனமான லுக்கிற்காக விளம்பர வாய்ப்புகள் தேடிவந்து கொட்டின. அப்படி எல்.ஜி, கோலா, ஃபெவிகால், லாக்மி மற்றும் வீட் விளம்பரப் படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான மாடல் அழகியானார்.


கத்ரீனாவின் ஆரம்பகால பாலிவுட் படங்கள்

இந்தியில் முதல் படம் தோல்வியை சந்தித்த போதிலும் அடுத்து தெலுங்கில் 2004ஆம் ஆண்டு ‘மல்லீஸ்வரி’ என்ற படத்தில் நடித்து, அந்த படம் ஹிட்டடித்ததால் மீண்டும் பாலிவுட்டில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘மைனே ப்யார் க்யூன் க்யா?’ மற்றும் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘நமஸ்தே லண்டன்’ போன்ற படங்கள் வசூல் ரீதியாக மெகா ஹிட்டடித்தன. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிவந்த நிலையில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றார். தொடர்ந்து ‘ஏக் தா டைகர்’, ‘தூம் 3’ மற்றும் ‘பேங் பேங்’ போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை அளித்தார். ஆரம்பத்தில் தனக்கு இந்தி மொழி பரிட்சயமில்லாததால் கதைகளை புரிந்துகொள்வதிலும், அவற்றை தேர்ந்தெடுப்பதிலும் தனக்கு சிறு குழப்பங்கள் இருந்ததாகவும், மேலும் நடிக்கும்போது டயலாக்குகளை பேசுவதற்கு சிரமபட்டதாகவும் கத்ரீனா தனது நேர்காணல்களில் பேசியிருக்கிறார்.

அதன்பிறகு சிறு இடைவெளி எடுத்த கத்ரீனா 2017ஆம் ஆண்டு ‘டைகர் சிந்தா ஹை’ படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து ‘சூர்யவன்சி’, ‘டைகர் 3’ போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தமிழில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார்.


பெரிய ஹீரோக்களுடன் கத்ரீனா நடித்து மெகா ஹிட்டடித்த திரைப்படங்களின் காட்சிகள்

மொழி பிரச்சினை இருந்தபோதும் பாலிவுட்டில் கால் பதித்தது பற்றி கத்ரீனா தனது அனுபவத்தை பகிர்கையில், “நான் மிகவும் லக்கியாக கருதுகிறேன். நான் வெளியே இருந்து வந்தபோதிலும், யாருடனும் தொடர்பு இல்லாதபோதிலும் எனக்கு இங்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஆனால் எனக்கு இந்த இண்டஸ்ட்ரி இயங்குவதைப் பற்றி புரிந்துகொள்வதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. எனக்கு மாடலிங் துறைமீதுதான் ஆர்வம் அதிகம். ஆனால் திரைத்துறையில் நுழைந்தது எதிர்பாராதது” என்று கூறியிருந்தார்.

காதல் தோல்விகள்

இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்த காலத்தில் கத்ரீனா கைஃபை கைதூக்கிவிட்டவர் சல்மான் கான் என்ற டாக் இப்போதும் பாலிவுட்டில் இருக்கிறது. 2005ஆம் ஆண்டு ‘மைன் ப்யார் க்யூன் க்யா’ திரைப்படத்தில் இணைந்து நடித்த கத்ரீனாவுக்கும் சல்மான் கானுக்குமிடையே அப்போதே காதல் இருந்தது. ஆனால் 2010ஆம் ஆண்டு, ‘இந்த காதல் தன்னை திணறவைப்பதாக’ எஸ்.எம்.எஸ் மட்டும் செய்துவிட்டு சல்மானுடனான தனது காதலை முறித்துக்கொண்டார் கத்ரீனா. காதலை முறித்துக்கொண்டதற்கான காரணம் என்னவென்று இருவரும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் 2023ஆம் ஆண்டு ‘டைகர் 3’ படம் வெளியான பிறகு அளித்த நேர்காணலில்கூட இருவரும் இன்றுவரை நல்ல நண்பர்களாக இருப்பதாக கத்ரீனா கூறியிருக்கிறார்.


முன்னாள் காதலர்களான சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபீருடன் கத்ரீனா

ஆனால் ரன்பீருடன் ஏற்பட்ட இணக்கம்தான் சல்மானுடனான ப்ரேக் - அப்பிற்கு காரணம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘அஜாப் ப்ரேம் கி கசாப் கஹானி’ படப்பிடிப்பின்போது பாலிவுட்டின் காதல் மன்னனான ரன்பீர் கபூரை 2008 - 2009 க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் டேட் செய்ய ஆரம்பித்தார். இதற்கிடையே தீபிகா படுகோனை காதலித்து வந்த ரன்பீர் அவருடன் ப்ரேக் -அப் செய்துவிட்டு, கத்ரீனாவை காதலிக்கத் தொடங்கினார். இதனால் ரன்பீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக தீபிகா படுகோனே ஒருபுறம் புலம்பிக்கொண்டிருக்க, மற்றொரு புறம் காதல் பறவைகளாக சுற்றித் திரிந்தனர் ரன்பீரும், கத்ரீனாவும். ஆனால் இந்த காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை. ‘2016ஆம் ஆண்டு ‘ஜகா ஜசூஸ்’ படபிடிப்பின்போதே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். அதன்பிறகு விருது விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ரன்பீரை பார்த்தால்கூட தனது கசப்பை முகபாவனைகளில் கத்ரீனா வெளிப்படுத்திய வீடியோக்கள் சமூக ஊடங்களில் பரவி வைரலாகின.

விக்கி கௌஷாலுடன் திருமணம்

ரன்பீருடன் ஏற்பட்ட ப்ரேக் -அப்பிற்கு பிறகு மன உளைச்சலில் இருந்த கத்ரீனா திரைத்துறையில் இருந்தே சிறிது ப்ரேக் எடுத்தார். இந்நிலையில் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கத்ரீனா, தன்னுடன் அதுவரை இணைந்து நடித்திராத தன்னைவிட 5 வயது குறைவான விக்கி கௌஷாலுடன் தான் நன்றாக இருப்பார் என கூறியதிலிருந்து இந்த காதல் தீப்பொறி பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதன்பிறகு ‘டேப்காஸ்ட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்கி, கத்ரீனாவிடம் “இதுபோன்ற சூழலை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா?” என்று கேட்டதில் தொடங்கிய இவர்களது பேச்சு, காதலாகி, பின்னர் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணத்தில் முடிந்தது.


கணவர் விக்கி கௌஷாலுடன்

இருவரும் டேட்டிங் செய்தபோது, 2019ஆம் ஆண்டு விருது விழா ஒன்றை ஹோஸ்ட் செய்த விக்கி, அத்தனை பேர் முன்னிலையில் வைத்து கத்ரீனாவை ப்ரொபோஸ் செய்த வீடியோக்கள் இன்றும் சமூக ஊடகங்களில் சுற்றிவருகின்றன. இந்நிலையில் கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக அவ்வபோது வதந்திகளும் பரவி வருகின்றன.

விஜய் சேதுபதியுடன் தமிழில்...

திருமணத்திற்கு பிறகு தமிழ் திரையிலும் அறிமுகமாகி இருக்கிறார் கத்ரீனா. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். 1960ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக் டார்ட் எழுதிய 'A Bird In A Cage' என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும் கதையில் எப்போதும்போல தனது இயல்பான நடிப்பை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் எப்போதும் தன்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கவேண்டும் என்று கவனத்துடன் திரையை கையாளும் கத்ரீனாவுக்கு எப்போதும் கேமிரா முன்பு சிறு தயக்கங்கள் இருக்கும் என்று பாலிவுட் திரையுலகில் பேசப்படுவதுண்டு.


‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்பட போஸ்டர்கள்

ஆனால் இந்த படத்தில் அப்படி எந்த சிரத்தையுமின்றி தனது யதார்த்தமான அதே சமயம், கதைக்கு தேவையான நடிப்பை கத்ரீனா அளித்திருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன. இருப்பினும், இந்தி மொழிக்கு ஏற்றவாறு டயலாக்குகள் அமைக்கப்பட்டிருப்பதால், தமிழில் பார்க்கும்போது பெரும்பாலான இடங்களில் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் போன்று டயலாக்குகள் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது இப்படம்.

‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ப்ரமோஷன்களுக்காக தமிழ்நாட்டில் வலம்வரும் கத்ரீனா, விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மேலும் தனது இத்தனைகால திரை அனுபவம் குறித்து பேசுகையில், “ஆரம்பத்தில் எனது இந்தி மிகவும் மோசமாக இருந்தது. அப்படியிருந்தும் திரைத்துறைக்குள் நுழைவதற்கான நம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். அதனால்தான் இப்போது தென்னிந்திய திரையுலகம் வரை சென்றிருக்கிறேன். மக்களும் என்னை நேசிக்கிறார்கள். என்னை மிகவும் லக்கியாக கருதுகிறேன்” என்று பெருமைப்படுகிறார்.

Updated On 29 Jan 2024 6:42 PM GMT
ராணி

ராணி

Next Story