இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுவாகவே தமிழ் திரையுலகில் ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்து போட்டி போடுவது என்பது எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தனுஷ், சிவகார்த்திகேயன் காலம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் - அஜித் என்ற இருபெரும் நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளன. அதேபோன்று புதிதாக தொடங்கியுள்ள இந்த 2024-ஆம் ஆண்டிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் திரைக்கு வந்து நான்கு ஹீரோக்களின் படங்கள் போட்டி போட காத்துள்ளன. இருப்பினும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது என்னவோ நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள ‘அயலான்’ படங்களைத்தான். இதுவரை இவ்விருவரின் எந்தெந்த திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வந்து போட்டிப் போட்டுள்ளன. வெற்றி வாய்ப்பு இருவருக்குமே எப்படி இருக்கும்? போன்ற தகவல்களை இங்கே காணலாம்.

தனுஷ், சிவகார்த்திகேயன் நட்பும், பிரிவும்

திரையுலகில் சாதிப்பதற்கு அழகு தேவையில்லை. திறமை இருந்தால் போதும் என்பதற்கு உதாரணம்தான் நடிகர் தனுஷ். இன்று இவர் தொடாத உயரங்களே இல்லை எனலாம். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷின் தோற்றத்தை பார்த்து இவனெல்லாம் ஹீரோவா? என்று கேலி செய்யாதவர்கள் இல்லை எனலாம். ஆனால் அன்று பேசிய பலரின் வாய்க்கு பூட்டு போடும் விதமாக அவர் நிகழ்த்தி காட்டிய மாயாஜாலங்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் பல தடைகளை, அவமானங்களை கடந்து இன்று தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் தன்னுடைய திறமை என்ன என்பதை நிரூபித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களை கடந்து இன்று உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் நடிகர் தனுஷ் போன்றுதான், அவரது நெருங்கிய நண்பராக ஒரு காலத்தில் அறியப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயனும். சினிமா பின்புலம் ஏதும் இன்றி, ஒரு சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது கலை வாழ்க்கையை தொடங்கினார். சிவகார்த்திகேயனை பெரிய திரைக்கு அழைத்து வந்தது என்னவோ தனுஷ் என்றுதான் சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில் முதல் படமாக பாண்டிராஜின் ‘மெரினா’ படம் அமைந்திருந்தாலும், அப்படம் வெற்றிபெறாத நிலையில், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘3’ படத்தில் தனது நண்பனாக குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது சிவாவிற்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது.


தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் சந்தித்துக்கொண்ட தருணங்கள் மற்றும் இணைந்து நடித்த காட்சி

இதன்பிறகு ‘மனம் கொத்தி பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும், தனுஷ் தயாரிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளிவந்த ‘எதிர்நீச்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியையும், சிவாவிற்கு என்று ஒரு அங்கீகாரத்தையும் தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. இதனால் தனுஷ் - சிவகார்த்திகேயனுக்கு இடையே ஒரு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே நாளடைவில் இருவருக்கும் இடையே விரிசலையும் ஏற்படுத்தியது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இன்றுவரை இவர்கள் பிரிந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பதை அவர்களும் பொது வெளியில் எங்கேயும் பேசவில்லை. ஆனால் சில பத்திரிக்கைகளிலும், பத்திரிக்கையாளர்கள் கொடுத்த சில பேட்டிகளிலும் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் வளர உதவியாக இருந்த ஒரே காரணத்திற்காக, பல தருணங்களில் சிவா தனது கண்ட்ரோலில் இருந்து, தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பதாகவும், அவர் நினைப்பது போலவே தான் இருந்தால், திரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்பதாலேயே சிவகார்த்திகேயன், தனுஷிடம் இருந்து பிரிந்து சென்று செயல்பட ஆரம்பித்ததாகவும், இதுவே அவர்கள் பிரிவுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் அவரவர் பாதையில் தனித்தனியாக பயணிக்க ஆரம்பித்தது மட்டுமின்றி அவரவருக்கு என்று தனி கூட்டணியும் உருவாக்கி செயல்பட்டனர். இவர்களின் இந்த செயல்பாடு கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகவும் மாறியது. ஒரு கட்டத்தில் தங்களது படங்களில் இடம்பெறும் வசனங்கள் அல்லது பாடல் வரிகள் வாயிலாக மறைமுகமாக தாக்கி கொள்ளவும் செய்தனர்.

ஆக்சனில் கலக்க வரும் ‘கேப்டன் மில்லர்’

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 12-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 'கில்லர் கில்லர்', 'உன் ஒளியிலே' மற்றும் 'கோரனாரு' ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதற்கிடையில் தனுஷின் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதிரடி காட்சிகள் நிறைந்திருந்த இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு 3 கோடி பார்வையாளர்களையும் கடந்து மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.


'கேப்டன் மில்லர்' ட்ரெய்லரில் தனுஷ் இடம்பெறும் மாஸான காட்சிகள்

அர்ப்பணிப்பு மற்றும் உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 3-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் நிச்சயம் பொங்கலுக்கு வெளிவரவுள்ள படங்களில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படம்தான் சிறந்த படமாக இருக்கும் என்ற பேச்சும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரூ.30 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் கேரியரில் இதுவரை வெளியான படங்களில் இந்த படம்தான் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் 'அயலான்' படத்தை காட்டிலும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் மிகவும் கம்மியான தொகைக்கே விற்பனை ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

அனிமேஷனில் அசத்த வரும் ‘அயலான்’

'மாவீரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் 'அயலான்'. நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இப்படத்தை இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்‌ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. பின்னர் 2018 ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி 2021 ஜனவரி வரை நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் 2022 நவம்பர் மாதத்தில் தொடங்கி நடைபெற்ற நிலையில், தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும் தயாரிப்பு தரப்பு இப்படத்திற்காக இதுவரை 70 கோடிக்கும் மேல் சிஜி-க்காகவே செலவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர் காட்சிகளில் ஏலியன் மற்றும் சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், அண்மையில் இப்படத்தின் ஒரு சிறிய வீடியோவை படக்குழு வெளியிட்டது. மேலும் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும், அதற்காக டீசரை படக்குழு தயார் செய்து வருவதாகவும், கடந்த அக்டோபர் 6 அன்று அதை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் பணிகள் மேலும் தாமதம் ஆன நிலையில், 2024 பொங்கல் வெளியீடாக 12-ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குட்டீஸ்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், பொங்கல் ரேஸில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்துடன் சிவகார்த்திகேயனின் 'அயலான்' படமும் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.40 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் இதுவரையிலான திரைவாழ்க்கையில் அதிகபட்ச தொகைக்கு விற்பனையான முதல் படமாக 'அயலான்' உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியாகினும் அதிக பொருட்செலவில், மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

முதல் முறையாக மோதும் துருவங்கள்


சிவகார்த்திகேயனின் 'அயலான்' மற்றும் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் போஸ்டர்ஸ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘3’ படத்தில் இணைந்த தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நட்பில், நாளடைவில் விரிசல் ஏற்பட்டு, பின்னர் அவரவர் பாதையில் தனித்தனியாக பயணிக்க ஆரம்பித்து தங்களது கேரியரில் வெற்றி தோல்வி என மாறி மாறி படங்களை கொடுத்து வருகின்றனர். இருவருமே தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி மாஸ் கிளப்பி வரும் நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ ஆகிய படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோன்று 2024-ஆம் ஆண்டு தொடங்கியுள்ள இந்த முதல் மாதத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12-ஆம் தேதி இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்து போட்டி போட காத்துள்ளன. இவர்களுடன் நடிகர் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’, அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் 1‘ ஆகிய படங்கள் வந்தாலும், தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்தான் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களாக உள்ளன. இதில் எந்த நடிகரின் படம் வெற்றி பெற்றாலும், அது ரசிகர்களுக்கத்தான் கொண்டாட்டமாக இருக்கும். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'மாரி 2' திரைப்படமும், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த 'கனா' திரைப்படமும் கடந்த 2018 டிசம்பர் 21 அன்று ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி நேருக்கு நேர் மோதி இருந்தாலும், நேரடியாக இரு நடிகர்களும் நடித்துள்ள பிரம்மாண்ட படங்கள் மோதிக்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On 15 Jan 2024 6:32 PM GMT
ராணி

ராணி

Next Story