இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தீபாவளி என்றவுடன் அனைவருக்கும் முதலில் கண்முன் வந்து நிற்பது புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு, பலகாரம் இவைகளாகத்தான் இருக்கும். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே எல்லோரும் தயாராகத் தொடங்கி விடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் இந்த பண்டிகைக்காக காத்திருப்பார்கள். இது ஒருபுறம் என்றால், தீபாவளியின் இன்னொரு முக்கியமான நிகழ்வு புதிதாக திருமணமான தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து தங்களது முதல் தீபாவளியை, மாமியார் வீட்டிற்கு சென்று எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து தடபுடலான விருந்துடன் தலை தீபாவளியாக கொண்டாடுவதுதான். இது காலம் காலமாக தமிழர் பண்பாட்டில் உள்ள ஒன்றுதான் என்றாலும், இதற்காகவே காத்திருந்து தீபாவளி பண்டிகையையொட்டி திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் விற்பனைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள அதே வேளையில், கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன. இதையொட்டி இந்த வருடம் திருமணம் செய்து கொண்ட சினிமா நட்சத்திரங்கள், சீரியல் நடிகர் - நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் என பலர் தங்களது தலை தீபாவளியைக் கொண்டாடவுள்ளனர். அந்த வகையில், இதில் எந்தெந்த ஜோடிகள் தலை தீபாவளியை இந்த 2023 ஆம் ஆண்டில் கொண்டாடுகின்றனர் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்

தமிழ் திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் ‘சூது கவ்வும்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் அசோக் செல்வன். இதற்குப் பிறகு ‘தெகிடி’ என்கிற படத்தின் மூலம் நன்கு அடையாளம் பெற்ற இவர், தொடர்ந்து ‘பீட்சா-2 தி வில்லா’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஓ மை கடவுளே’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘நித்தம் ஒரு வானம்’ என பல படங்களில் நடித்தார். இதன் பிறகு கடைசியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி சரத்குமார் நடித்து வெளிவந்த ‘போர் தொழில்’ திரைப்படம் இவருக்கு நல்லதொரு வெற்றியை பெற்றுத் தந்த படமாக அமைந்தது. இப்படங்களின் மூலம் அதிக அளவிலான பெண் ரசிகர்களை பெற்ற அசோக் செல்வன் ‘தும்பா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகியப் படங்களில் கதையின் நாயகியாக நடித்த பிரபல நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை நீண்ட நாட்களாக காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் வைத்து மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தின் போது அசோக் செல்வனின் பெண் ரசிகைகள், கீர்த்தி பாண்டியனின் நிறத்தை கேலி செய்து போட்ட டுவீட்கள் வைரலாகி பெரும் பேசு பொருளாக மாறியது. இதனால் ட்ரெண்ட் ஆனா இந்த ஜோடி இந்த ஆண்டு தங்களது தல தீபாவளியை அவர்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளனர்.


நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்

கெளதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன்

நவரச நாயகன் கார்த்திக் மகன் என்ற அடையாளத்துடன் ‘மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்திருந்தாலும், தன் தனித்துவமான திறமையால் மட்டுமே பல லட்சம் ரசிகர்களை பெற்றிருக்கிறார். ‘வை ராஜா வை’, ‘முத்துராமலிங்கம்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘மிஸ்டர்.சந்திரமௌலி’, ‘தேவராட்டம்’ என வரிசையாக நடித்தவருக்கு இப்படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு வெற்றிப்படங்களாக அமைந்தன. இதில் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகி மஞ்சிமா மோகனை காதலித்தவர், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரையுலகில் அறிமுகம் ஆன நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதன்பிறகு ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’,’காலத்தில் சந்திப்போம்’, ‘துக்ளக் தர்பார்’, என வரிசையாக நடித்தவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். உடல் எடை அதிகரிப்பால்தான் வாய்ப்புகள் வரவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், "இன்னும் மூன்றே மாதங்கள் தான்.. விரைவில் படங்களில் நடிப்பேன்” என்று கூறி உடல் எடையைக் குறைப்பதில் அதிக தீவிரம் காட்டி வருவதுடன், தற்போது அதற்கான சிகிச்சையிலும் உள்ளார். இந்த நிலையில் இவர்களது தலை தீபாவளி என்ன மாதிரியாக இருக்கப்போகிறது... மஞ்சிமா மோகன் எவ்வாறு காட்சியளிக்கப் போகிறார் என்பதை எதிர்பார்த்து அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் புகைப்படங்கள்

ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார்

சினிமா பின்புலம் உள்ள குடும்பத்தில் பிறந்த ஹரிஷ் கல்யாண் 2010 ஆம் ஆண்டு ‘சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ‘அரிது அரிது’, ‘சட்டப்படி குற்றம்’, ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ என நடித்தவருக்கு எந்த படமும் பெரிய அளவில் அடையாளத்தை பெற்றுத் தரவில்லை. இந்த நேரத்தில் 2017 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு 2வது வெற்றியாளன் என்ற அடையாளத்தை பெற்ற ஹரிஷ், இதற்கு பிறகுதான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கினார். அண்மையில் கூட கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மஹேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், தமிழில் ‘எல்ஜிஎம்’ என்று சொல்லப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்ததாக ‘பார்க்கிங்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர் டிசம்பர் 1 அன்று அதன் வெளியீட்டிற்காக காத்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அன்று மிகப்பெரிய தொழிலதிபரின் மகளான நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹரிஷ் கல்யாண் அண்மையில் தான் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி முடித்தார். அதனையொட்டி மனைவியுடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்த ஆண்டு நவம்பர் 12 அன்று தனது முதல் தலை தீபாவளியை கொண்டாட உள்ளார்.


திருமணம் மற்றும் புகைப்பட ஷூட்டின் போது நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார்

ஹன்சிகா மோத்வானி

ஹிந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 'ஷகலக பூம் பூம்' என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சி தொடர் மூலமாக தமிழில் பிரபலமானார். பின்னர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'தேசமுத்ருடு' என்ற படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் ஜோடியாக தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தவர், பிறகு நடிகர் தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். இதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் காதல்’, விஜய்யுடன் ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’, ‘மான் கராத்தே’, ‘ஆம்பள’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’, ‘வாலு’, ‘புலி’ என வரிசையாக நடித்தார். இப்படங்கள் வாயிலாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட ஹன்சிகாவை, ரசிகர்கள் அனைவரும் குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர். இந்த நிலையில், தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதியர் ஒரு வருடத்தை நிறைவு செய்து முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட உள்ள அதே வேளையில், அதற்கு முன்பாக நவம்பர் 12 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி தனது கணவருடன் இணைந்து தலை தீபாவளியை கொண்டாட உள்ளார்.


திருமண நிகழ்வில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் மகிழ்ச்சியான தருணங்கள்

நடிகர் கவின்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனாக நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். ‘பீட்சா’, ‘இன்று நேற்று நாளை’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களின் மூலம் துணை நடிகராக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் 2019 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ என்ற படத்தின் வழியாக கதாநாயகனாக அறிமுகமானர். இதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததையடுத்து, ‘லிப்ட்’, ‘டாடா’, ஆகிய படங்களில் நடித்து இன்னும் புகழின் உச்சத்திற்கு சென்றார். இதில் அண்மையில் வெளிவந்த ‘டாடா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இதற்கிடையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது லாஸ்லியாவுடன் சேர்த்து பேசப்பட்ட இவர், தொடர்ந்து அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் எழுந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென நடிகர் கவின் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அன்று நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிகளும் தங்களது முதல் தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் இவர்களது தலை தீபாவளி கொண்டாட்டத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


நடிகர் கவின், மோனிகா திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்பட தொகுப்பு

டிவி புகழ் நாஞ்சில் விஜயன்

நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட நாஞ்சில் விஜயன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘அது இது எது’, ‘கலக்கப்போவது யாரு’ போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர். பெரும்பாலும் பெண் வேடம் ஏற்று தனது காமெடியான உடல்மொழியால் பலரை சிரிக்க வைத்த இவர், கொரோனா ஊரடங்கு சமயத்தில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் யூடியூபர் சூர்யாதேவியை பேட்டி எடுத்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி கைது வரை சென்றார். இப்படி பல சர்ச்சைகளில் சிக்கிய அவர், ஒரு பக்கம் சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வள்ளி திருமணம்' தொடரில் நடித்திருந்த இவர், தற்போது வெள்ளித்திரையில் நுழைந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். ரியாலிட்டி ஷோக்கள், நடிப்பு, காமெடி என்று மிகவும் பிஸியாக இயங்கி வரும் இவர் அண்மையில் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், தற்போது நாஞ்சில் விஜயன் தனது மனைவியுடன் இணைந்து தங்களது தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.


நாஞ்சில் விஜயன் - மரியா திருமண புகைப்படம்

விஜய் டிவி புகழ் தீனா

திருவாரூரை பூர்வீகமாக கொண்ட தீனா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணியாற்றி, தொலைக்காட்சியில் என்ட்ரி ஆனார். பின்னர் அதில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய இவர் தொடர்ந்து நடிகர் தனுஷின் பா.பாண்டி படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் புகழ் பெற்றார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் ஒரு சாதாரண போட்டியாளராக தொலைக்காட்சிக்குள் நுழைந்து தற்போது நகைச்சுவை நடிகர், தொகுப்பாளர் என பல பரிமாணங்களை பெற்று மிகவும் பிஸியான நபராக வலம் வந்து கொண்டிருக்கும் தீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று கிராஃபிக் டிசைனரான பிரகதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தற்போது தீனா - பிரகதி தம்பதிகளும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட காத்திருக்கின்றனர். இவர்களைத் தவிர இன்னும் இந்த ஆண்டு தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாட உள்ள நட்சத்திர நடிகர், நடிகைகள் அனைவருக்கும் ராணி டிஜிட்டல் சார்பாக மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.


தீனா - பிரகதி திருமண புகைப்படங்கள்

Updated On 13 Nov 2023 6:28 PM GMT
ராணி

ராணி

Next Story