இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் திரிஷா. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடித்துவரும் இவர் தமிழ், தெலுங்கு என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார். அதுபோக, கதாநாயகியை மையப்படுத்திய கதைகளிலும் நடித்துவருகிறார். 41 வயதாகியும் திருமணமாகாத திரிஷா, அவ்வப்போது சில ஹீரோக்களுடன் இணைத்து பேசப்படுவதுண்டு. அப்படி இதுவரை 5 படங்களில் சேர்ந்து நடித்து பெஸ்ட் ஆன்ஸ்க்ரீன் ஜோடி என பெயர்பெற்ற விஜய் - திரிஷா குறித்த வதந்திகள்தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. குறிப்பாக, விஜய் கட்சி தொடங்கிய பிறகு திரிஷாவும் அக்கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு போஸ்ட்டை பதிவிட்டிருக்கிறார். திரிஷாவின் திரை வாழ்க்கை குறித்தும், விஜய்யுடன் இவர் இணைத்து பேசப்படும் வதந்திகள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார்

சென்னையில் பிறந்து வளர்ந்த திரிஷா, பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மாடலிங் மற்றும் விளம்பரங்களில் தோன்ற ஆரம்பித்தார். அதன்பிறகு 1999ஆம் ஆண்டு ‘மிஸ் சென்னை’ பட்டத்தை வென்ற இவர், ‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக நடித்து திரையுலகில் காலடி எடுத்துவைத்தார். அதன்பின்னர், ஷியாமுடன் ‘லேசா லேசா’ படத்தில் ஹீரோயினாக கமிட்டானார். ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பே சூர்யாவுடன் இவர் நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. முதல் இரண்டு படங்களுமே ஹிட் படங்களாக அமைந்துவிட்டதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் திரிஷாவை தேடிச்சென்றன.


‘குருவி’ படத்தில் விஜய் - திரிஷா

ஆனால் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு திரிஷா அளித்த ஒரு பேட்டியில், “மாடலிங் செய்ய எனக்கு பிடித்திருக்கிறது. யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. நடிப்புத்துறையில் வரமாட்டேன். மாடலிங்கில் ஜொலிக்கத்தான் தயாராகி வருகிறேன். கண்டிப்பாக சினிமாவுக்கு மட்டும் வரவே மாட்டேன்” என்று கூறியிருந்தார். சினிமாவுக்கு வந்தபிறகு, தான் மிகவும் ஈஸி - கோயிங் பர்ஸன் எனவும், எனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டதாகவும் கூறிவிட்டார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் திரிஷா. அங்கும் மகேஷ் பாபு, பிரபாஸ், வெங்கடேஷ், பவன் கல்யாண் என டாப் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழிலும், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி, கமல், தனுஷ் என இவர் ஜோடி சேராத ஹீரோக்களே இல்லை எனலாம். இருப்பினும் சினிமாவை பொருத்தவரை பலருடன் சேர்ந்து நடித்தாலும் ஒருசிலருடைய ஜோடியைத்தான் ரசிகர்கள் பெரிதும் விரும்புவார்கள். அப்படி தமிழில் விஜய் - திரிஷா சேர்ந்து நடித்த ‘கில்லி’ திரைப்படம் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக, இப்படத்தில் இருவருடைய கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் ‘திருப்பாச்சி’, ‘குருவி’, ‘ஆதி’ என அடுத்தடுத்த படங்களிலும் இந்த ஜோடியே மீண்டும் இணைந்தது. குறிப்பாக, சோஷியல் மீடியாக்களின் பயன்பாடானது அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்தே அடுத்து விஜய் - திரிஷா இருவரும் எப்போது ஜோடி சேர்வார்கள்? என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்து வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்விதமாக கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ வெளியானது. 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடிசேர்ந்த விஜய் - திரிஷா, இப்படத்தில் லிப் லாக் காட்சிகளில்கூட தயக்கமின்றி நடித்து அசத்தினர். இதனால் ‘கில்லி’ படத்தின் வேலு - தனலட்சுமியையும், ‘லியோ’ படத்தின் பார்த்திபன் - சத்யா ஜோடியையும் ஒப்பிட்டு பல்வேறு மீம்ஸ்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இப்படி ‘கில்லி’ படம் குறித்த மீம்ஸ்கள் ட்ரெண்டானதைத் தொடர்ந்து அப்படம் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவுடன் ரூ. 20 கோடி வசூல் சாதனையும் படைத்தது. இதனால் இருவருக்குமிடையே இருக்கும் நெருக்கம் குறித்து வதந்திகள் பரவத் தொடங்கின.


திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட விஜய் - திரிஷா

விஜய் - திரிஷா குறித்த வதந்திகள்

‘கில்லி’ படத்திலிருந்தே விஜய் - திரிஷா இருவருக்குமிடையே தனிப்பட்ட உறவு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணமே இருந்தன. இடையே நடிகை கீர்த்தி சுரேஷுடன் கிசுகிசுக்கப்பட்டார் விஜய். அதனால் சிறிதுகாலம் திரிஷா பக்கம் போகாமல் இருந்தனர் நெட்டிசன்கள். இருப்பினும் விஜய்யின் பண்ணைவீட்டிற்கு அடிக்கடி திரிஷா சென்றுவருவதாகவும், அதனால் இருவருக்குமிடையே தனிப்பட்ட உறவு இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமே இருந்தன. இதற்கிடையே குடும்பத்தை விட்டு விஜய் தனியாக வசித்துவருவதாக செய்திகள் வெளியான நிலையில, விஜய் - திரிஷா இடையே இருக்கும் உறவு உண்மைதான், அதனால்தான் விஜய் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு மனைவி பிரிந்திருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இதுகுறித்து திரிஷா - விஜய் இருவருமே வாய் திறக்காமல் இருந்த நிலையில், விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவது இல்லை எனவும், முழுநேர அரசியலில் இறங்கப்போவதாகவும் அறிக்கை வெளியிட்டார். அதனால் அனைவருடைய கவனமும் விஜய்யின் அரசியல் கட்சி பக்கம் திரும்பியது. ஒருபுறம் திரைப்படங்கள், மறுபுறம் கட்சிப்பணிகள், கல்வி விழாக்கள் என விஜய் ஓடிக்கொண்டிருந்தாலும் மீண்டும் விஜய் - திரிஷா சர்ச்சை தற்போது வைரலாகப் பேசப்படுகிறது.


'லியோ’ பட வெற்றி விழாவில் விஜய் - திரிஷா

ரீல் டூ ரியல் ஜோடி?

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து திரிஷா ஒரு போஸ்ட்டை பகிர்ந்திருந்தார். அதுதான் இப்போது பூதாகரமாக வெடித்திருக்கும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துவிட்டது. அந்த போஸ்ட்டில், விஜய்யுடன் லிஃப்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, காதல் பாடல் ஒன்றையும் போட்டிருந்தார் திரிஷா. ‘ஃபோட்டோ ஓகே, ஆனால் பிறந்தநாள் வாழ்த்துக்கு காதல் பாடல் எதற்கு? என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர் நெட்டிசன்கள். இதனால் திரிஷாவும், விஜய்யும் காதலித்து வருவது உறுதியாகிவிட்டதாகக் கூறி, ஏற்கனவே திரிஷா பதிவிட்டிருக்கும் புகைப்படங்களையும் தோண்டி வருகின்றனர். அதில் பல ஃபோட்டோக்களில் விஜய்யுடன் இருப்பதற்கான தடயங்களைக் குறிப்பிட்டு அவற்றையும் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்துவருவதால் திரிஷா எப்போதும் விஜய் வீட்டிலேயே இருக்கிறார் எனவும், குறிப்பாக, விஜய் அலுவலகம் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்தான் சமீபத்தில் திரிஷாவும் குடியேறியிருப்பதால் இருவரும் ஒரே வீட்டில்தான் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன. ஆனால் இதுவரை இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக பேசவில்லை. இதுகுறித்து மூத்த சினிமா விமர்சகர்கள் கூறுகையில், நெருப்பில்லாமல் புகையாது. விஜய் - திரிஷா இடையே சினிமாவைத் தாண்டிய உறவு இருப்பது உறுதியாக தெரிகிறது. ஆனால் சினிமாவில் இதெல்லாம் சகஜம்தான். இத்தனை நாட்கள் அமைதிகாத்த இருவரும் தற்போது பொதுவெளிகளில் இதுபோன்ற போஸ்ட்களை பதிவிடுவதன்மூலம் தங்களுடைய காதலை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவதாகவும் கூறுகின்றனர். மேலும் விஜய் கட்சியில் திரிஷா சேரவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே திரிஷாவை அரசியலுக்கு வரச்சொல்லி அவருடைய ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தற்போது விஜய் கட்சியில் சேர திரிஷா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக தமிழாசிரியர் ஒருவரை வைத்து மேடைகளில் பேச நன்றாக தமிழ் கற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அரசியலில் அடுத்த எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவாக விஜய் - திரிஷா உருவெடுப்பார்கள் என்றும் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.


விஜய் மற்றும் திரிஷாவின் ’லியோ’ திரைப்பட ஷூட்டிங் க்ளிக்

திரிஷாவின் பதிலடி

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே திரிஷா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுகுறித்து பழைய பேட்டி ஒன்றில், “கிசுகிசுக்கள் என்பது என்னுடைய வேலையில் ஒருபகுதியாகப் பார்க்கிறேன். பெரும்பாலும் என்னைப் பற்றிய வதந்திகளை படிக்கும்போது சிரிப்புதான் வரும். சில நேரங்களில் இதுபோன்ற தகவல்கள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்று தோன்றும். ஆனால் அதற்கெல்லாம் நான் பெரிதாக ரியாக்ட் செய்யமாட்டேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், மற்றவர்களின் கருத்துகளை கண்டுகொள்ளவே கூடாது என்பதுபோன்ற கேப்ஷனை பதிவிட்டு தனது சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதன்மூலம் தன்னை பற்றி பரவும் வதந்திகளை திரிஷா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரிஷா, அடுத்து கதாநாயகியை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். அதற்கடுத்து கமலுடன் சேர்ந்து மற்றொரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் திரிஷா தனது வேலையில் கவனமாக ஓடிக்கொண்டேதான் இருக்கிறார்.

Updated On 9 July 2024 4:21 AM GMT
ராணி

ராணி

Next Story