இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

'அன்னக்கிளி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்து ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து 5 தசாப்தங்களுக்கும் மேலாக யாரும் அசைத்து பார்த்திட முடியாத ஒருவராக இன்றும் வலம் வருகிறார் என்றால் அது இசைஞானி இளையராஜாவாக மட்டும்தான் இருக்க முடியும். 70கள் தொடங்கி இன்றைய 2கே கிட்ஸ்கள் வரை இசைஞானியின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 1980 மற்றும் 90களில் இவரது இசையால் வெற்றிகொண்டு உச்சம் பெறாத இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய உன்னதமான இசையால் ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் நெஞ்சங்களையும் கட்டிப்போட்ட மேஸ்ட்ரோ இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்க உள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தகவல்கள் உலா வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் நடிகர் தனுஷ். இளையராஜாவின் இந்த பயோபிக் படத்தில், இசைஞானியாக நடிக்கப்போகிறவர் தனுஷ்தான். அதுகுறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்…

தனுஷ் வாழ்வில் இளையராஜா

32 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் இமயம் பாரதிராஜா பாணியிலேயே நமது கிராமிய மணம் மாறாமல், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதுதான் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படம். இத்தனைக்கும் அப்படத்தின் கதாநாயகனாக நடித்த ராஜ்கிரண் துவங்கி இயக்குநர் வரை அதில் பணியாற்றிய பெரும்பாலான நபர்கள் அந்த சமயம் புதுமுகங்கள் தான். இருந்தும் அப்படம் வெள்ளிவிழாக் கொண்டாடியது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் பணியாற்றியவர்களின் அயராத உழைப்புதான் என சொல்லப்பட்டாலும், படத்தின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்தவர் இசைஞானி இளையராஜாதான். குறிப்பாக நீண்ட போராட்டங்களையும், அவமானங்களையும் சந்தித்து ஒரு படத்தையாவது எடுத்து விடமாட்டோமா என்ற ஏக்கத்தில் இருந்த கஸ்தூரிராஜாவுக்கு, இப்படம் கை தூக்கிவிட்டது மட்டுமின்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர காரணமாக இருந்தது இளையராஜாவின் இசைதான்.


'என் ராசாவின் மனசிலே' திரைப்பட போஸ்டர்

இதனாலேயே இன்றும் இளையராஜாவை பற்றி பேசினால் நெகிழ்ந்துபோகும் இயக்குநர் கஸ்தூரிராஜா, இசைஞானி என்றுமே என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அதே நேரம் என்றுமே மறக்க முடியாத ஒரு அங்கம் என்று பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதேபோன்று இளையராஜா குறித்து தந்தை கஸ்தூரி ராஜாவிற்கு இருக்கும் அதே கருத்துதான் மகன் தனுஷிற்கும் எப்போதும் உள்ளது. நடிகர் தனுஷ் எந்த விழா மேடை ஏறினாலும், அந்த மேடையில் இசைஞானி பற்றி அவர் பேசாமல் இறங்கியதே இல்லை. இப்படி மேடை நிகழ்வுகளில் மட்டுமின்றி தனது தனிப்பட்ட பேட்டிகளின் போதும் இளையராஜா மீது கொண்டுள்ள மானசீகமான அன்பு எப்பேற்பட்டது என்பதை தன் வார்த்தைகளால் மிக அழகாக வர்ணித்து கூறியுள்ளார். அதன் வெளிப்பாடே கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் அவர் ஏற்றிருந்த இசைஞானியின் ரசிகனாக வரும் கதாபாத்திரம் என்று கூட சொல்லலாம்.


நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

இப்படி படங்கள் என்று மட்டுமல்லாமல் தனுஷின் சொந்த வாழ்க்கையிலும் இளையராஜா மற்றும் அவரை சார்ந்தவர்கள் பல மாற்றங்களை உணர்வு பூர்வமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். காரணம் தந்தை கஸ்தூரி ராஜாவிற்கு எப்படி இளையராஜா கைகொடுத்து தூக்கிவிட்டாரோ, அதேபோன்று குடும்ப கஷ்டத்தை போக்க ஒரு படம் எடுக்கலாம் என்று அப்பா, மகன்கள் என குடும்பமாக இணைந்து 'துள்ளுவதோ இளமை' படத்தினை எடுத்த போது அதற்கு இசையமைத்து கொடுத்தார் யுவன் சங்கர் ராஜா. அன்று தனுஷ், செல்வராகவனுடன் கை கோர்த்த யுவன் சங்கர் ராஜா பல படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியது மட்டுமின்றி வெற்றி இயக்குநர், வெற்றி நடிகர் என்ற அடையாளத்தினை தனுஷ் மற்றும் செல்வராகவன் பெற பெரிதும் உதவியுள்ளார். அந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசிய நடிகர் தனுஷ் அன்று யுவன் எங்களோடு இல்லையென்றால், நாங்கள் என்றோ காணாமல் போயிருப்போம். தெருவில் நின்றிருக்க வேண்டிய எங்களை இப்படி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர் அவர் மட்டும்தான் என வெளிப்படையாக பேசினார். இப்படி அப்பா இசைஞானி இளையராஜா தொடங்கி, மகன் யுவன் சங்கர் ராஜா வரை தனுஷ் மற்றும் செல்வராகவன் குடும்பத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். இதனாலேயே நடிகர் தனுஷிற்கு இளையராஜாவின் மீதான மரியாதையும், அன்பும் அளவு கடந்த ஒன்றாகவே இன்று வரை இருந்து வருகிறது.


அழகான தருணத்தில் இசைஞானி இளையராஜாவுடன், நடிகர் தனுஷ்

இசைஞானியின் ரசிகனாக நான்

பிறக்கும் போதே சினிமா பின்புலம் உள்ள ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த நடிகர் தனுஷ், குழந்தைப் பருவத்தில் இருந்தே சினிமா பாடல்களை விரும்பி கேட்கும் ஒருவராகவே இருந்துள்ளார். அதிலும் சிறுவயதிலிருந்தே இசைஞானியின் பாடல்களை கேட்டு வளர்ந்த நடிகர் தனுஷ் நாளாக நாளாக அவரின் தீவிர பக்தராகவே மாறிவிட்டார். இதனால் நடிகர் தனுஷ் எந்த ஒரு மேடை ஏறினாலும் அங்கு இளையராஜாவைப் பற்றியோ, அவரின் பாடல்களை பற்றியோ பேசாமல் இருக்க மாட்டார். அந்த அளவிற்கு இளையராஜாவின் ஒவ்வொரு பாடலிலும் இருக்கும் இசை நுணுக்கங்களை துல்லியமாக கவனித்து ரசிப்பதோடு அதனை வளர்ந்து வரும் பிற இசையமைப்பாளர்களிடமும் கூறி, நீங்களும் இதை பின்பற்றினால் இன்னும் பாடல் அற்புதமாக வரும் என்று அவர்களையும் உத்வேகப்படுத்துவாராம். அப்படி ஒருமுறை அவர் இயக்கிய 'ப.பாண்டி' படத்திற்கு இசையமைத்த வளர்ந்து வரும் இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான சியான் ரோல்டனிடம், நடிகர் தனுஷ் இசைஞானியின் பாடல்களில் உள்ள இசை நுணுக்கங்களை சிலாகித்து பேசி அவரை போன்றதொரு பாணியில் 'ப.பாண்டி' படத்திற்கு இசையமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்க, அந்த பேச்சில் உருவாக்கப்பட்டதுதான் 'பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்' பாடல். இது மட்டுமின்றி அப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலுமே இளையராஜாவின் இசையை பின்பற்றி உருவாக்கப்பட்டது போல் இருக்கும். அந்த அளவிற்கு இளையராஜாவின் இசையை நேசிக்கும் நடிகர் தனுஷ், அதனை அவர் முன்பே பலமுறை வெளிப்படுத்தி பேசியிருக்கிறார்.


நடிகர் தனுஷ் மற்றும் இசைஞானி இளையராஜா

இதேபோன்று இசைஞானி இளையராஜாவும் தனுஷ் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டவர் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘மாரி 2’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் தனுஷ் ’வானம் பொழியாம பூமி விளையுமா கூறு’ என்ற பாடலை எழுத, அப்பாடலை நிறைய திருத்தங்கள் செய்து கொடுத்து இசைஞானி பாடினார். அப்பாடல் பதிவின் போது 'இளையராஜாவை சந்தித்தது கடவுளின் தரிசனம் எனக்கு நேரில் கிடைத்தது போல் இருந்தது. அவர் பாடுவதற்காக நான் எழுதிக்கொடுத்த அந்த பாடலைத் திருத்திக்கொடுத்தது மட்டுமின்றி மிக அழகாக அவருக்கே உரிய ஸ்டைலில் பாடிக்கொடுத்தார். அன்று அவருடன் இருந்த போது நடந்த நிகழ்வுகளை, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஒரு பக்தனாக என் வாழ்நாள் முழுவதும் ஒரு பொக்கிஷமாகவே பாதுகாப்பேன்’ என்று தனுஷ் கூறியிருந்தார். இது தவிர ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் வெளிவந்த 'அத்ரங்கி ரே' படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, அங்கும் அவர் இசைஞானி குறித்து பேச தவறவில்லை. சமையல் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதே நேரம் மிகவும் தெய்வீகமான ஒரு கலை. அந்த கலையை நாம் விரும்பி செய்ய செய்ய அது நம் ஆன்மாவோடு கலந்துவிடும். அப்படிப்பட்ட சமையல் கலையை தவிர்த்து எனக்கு ஒன்று பிடிக்கும் என்றால் அது இளையராஜாவின் இசைதான். அவர் என்னுடைய கடவுள். நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். அவர்தான் என் அம்மா, என் தாலாட்டு எல்லாமே என்று பேசியிருந்தார் தனுஷ்.


இளையராஜா இசையில், நடிகர் தனுஷ் பாடல் பாடிய இனிமையான தருணம்

அதே போல் மற்றொரு முறை இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தனுஷ் கலந்துகொண்ட போது இருவரிடையேயும் ஒரு உரையாடல் நடைபெற்றது. அந்த உரையாடலில் பேசிய நடிகர் தனுஷ் ‘விடுதலை’ படத்தில் சாருடைய இசையில் ஒரு பாடல் பாடினேன். அந்த பாடலை பாடும்போது அவர் என் அருகிலேயே இருந்தது ஒருவித படபடப்பாகவே இருந்தது. அதனால் சார் நீங்க எப்பவும் கூடவேதான் இருப்பீங்களா என்று கேட்டேன். உடனே என்னை சற்று நிமிர்ந்து பார்த்தவர் 'நான் எப்ப உன் கூட இல்லை' என்று கேட்டார். நானும் பதிலுக்கு ஆமா சார் என் அம்மாவுடைய கருவில் இருக்கும் போதிலிருந்தே நீங்க என் கூடவேதான் இருக்கீங்க என்று சொன்னேன் என்று கூறியிருந்தார். இந்த அளவிற்கு அளவு கடந்த பாசத்தை இருவரும் கொண்டிருப்பதாலோ என்னவோ தற்போது இளையராஜாவாகவே வாழத் தயாராகிக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.


நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது இளையராஜாவுடன், நடிகர் தனுஷ்

இளையராஜாவாக மாறும் ரசிகன்

இசைஞானியின் பாடல்களை இன்றைக்கு கேட்டாலும் நம் மெய் மறந்து போகும் வகையில்தான் இருக்கும். அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கும் பல நேரங்களில் தாலாட்டாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு இசை மேதையின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருப்பதாகவும், அதனை இசைஞானியே தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தகவல்கள் பரவி வந்தன. பின்னர் அதுகுறித்து எந்த பேச்சும் அடிபடாமல் இருந்ததால், இது வெறும் பேச்சளவில் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில், திடீரென எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக இசையமைப்பாளர் இளையாராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு முன்னரே இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க, தான் ஆர்வமாக இருப்பதாக இயக்குநர் பால்கி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்போது பேசிய அவர் 'இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதில் தனுஷ் நடித்தால், என்னைப்போன்ற ஒரு ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய பாக்கியம் எனக்கு கிடைக்கும். இதைவிட ஒரு மிகச்சிறந்த பரிசை நான் தனுஷிற்கு கொடுக்க முடியாது என்று நினைக்கிறேன்' என கூறியிருந்தார்.


இளையராஜாவுடன் நடிகர் தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா

இந்நிலையில், இளையராஜா வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுக்க இருப்பதை கனெக்ட் மீடியா மற்றும் மெர்க்குரி குழுமம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும், 2025-ம் ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இளையராஜா மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளதோடு, படம் குறித்த முழு அப்டேட் எப்போது வெளிவரும் என்கிற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே கார்த்திக் சுப்புராஜ் , லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குநர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை வைத்து படம் இயக்கும் போது ஃபேன் பாய் மொமெண்ட், ஃபேன் பாய் சம்பவம் போன்ற வசனங்களை அடிக்கடி சொல்வார்கள். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக் படம் வெளிவந்தால் இதைவிட பெரிய ஃபேன் பாய் சம்பவமாக எந்த படத்தையும் நிச்சயம் சொல்ல முடியாது.

Updated On 27 Nov 2023 6:39 PM GMT
ராணி

ராணி

Next Story