இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

யோகிபாபு பந்துக்கு சிக்ஸர் அடித்த தோனி

கிரிக்கெட் வீரர் கூல் கேப்டன் தோனியின் ‘தோனி என்டர்டைன்மென்ட்’ தயாரித்து வெளிவரும் முதல் தமிழ் படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா நடித்த இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ‘தோனி என்டர்டைன்மென்ட்’ மூலம் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தயாரித்துள்ளார்.


தோனியின் மனைவி சாக்ஷி

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் யோகிபாபு பேசியபோது, "இந்தப் படத்துல நடிச்சா தோனி ‘சைன்’ போட்ட பேட் கிடைக்கும்னு டைரக்டர் சொன்னாரு. அதனால நடிக்க ஒத்துக்கிட்டேன்" என்று சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது. தோனியிடம் யோகி பாபு, "என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ப்பீங்களா?" என்று கேட்டார். அதற்கு தோனி, "ராயுடு ஓய்வு பெற்றுவிட்டார் அந்த இடம் காலியாகதான் இருக்கிறது. நான் சி.எஸ்.கே நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால் நீங்கள் விளையாடுவதற்கும், ப்ராக்டீஸுக்கும் ‘கால் சீட்’ தரவேண்டும். நீங்க படத்துல நடிக்கிறதுல பிஸி ஆயிட்டீங்களே" என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இதைக் கேட்டதும் அரங்கம் முழுவதும் சிரிப்பொலியால் அதிர்ந்தது.

யோகி பாபு கால் சீட் கொடுப்பதில் குளறுபடி செய்வதாக பேச்சு இருந்து வருகிறது. ஒருவேளை ‘எல்ஜிஎம்’ படத்திலும் இது நடந்திருக்கலாம். அதைத்தான் தோனி இப்படி நகைச்சுவையாக சுட்டிக்காட்டினாரோ என்று நினைக்கத் தோன்றுவதாக அமைந்துவிட்டது இந்த நிகழ்வு.

லொல்லு சபாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ‘பாபு’, அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ படத்தில் அறிமுகமாகி யோகி பாபு ஆனார். அதன்பிறகு ‘பையா’, ‘கலகலப்பு’, ‘பட்டத்து யானை’, ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கோலமாவு கோகிலா’, ‘தர்மபிரபு’, ‘கூர்கா’, ‘கோமாளி’, ‘தர்பார்’, ‘பொம்மை நாயகி’ என அவரது ‘கேரியர் கிராபை’ மேல்நோக்கி ஏற்றி வந்த அவர், இதுவரை 175-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் யோகி பாபு ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.


விழாவில் பேசும் மகேந்திர சிங் தோனி

தோனி கையெழுத்திட்ட பேட்

யோகி பாபுவிற்கு கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். அவர் விளையாடுவதை சமூக வலைதளத்தில் பதிவிடுவார். ‘எல்ஜிஎம்’ இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தன்னுடைய கையெழுத்திட்ட பேட்டினை யோகி பாபுவுக்கு பரிசாக அளித்தார் தோனி.


Updated On 8 Aug 2023 5:04 AM GMT
ராணி

ராணி

Next Story