இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குடும்பம், காதல், ஆக்சன் என எப்படிப்பட்ட கதைக்களமாக இருந்தாலும் அதில் அப்படியே கனகச்சிதமாக பொருந்திப் போய்விடும் நடிகர் யாரென்றால் அது நம் ஜெயம் ரவியாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வேடங்களிலும் அந்த பாத்திரப்படைப்பாகவே வாழ்ந்து நம்மையும் ரசிக்க வைத்துவிடும் இவர், பொறுப்பான மகனாக, உண்மையான காதலனாக, அன்புத் தம்பியாக என படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாகவே வாழ்ந்து வரக்கூடிய நல்ல மனிதர். ரொமான்டிக் ஹீரோவாக, சாக்லேட் பாயாக நமக்கெல்லாம் அறிமுகமான ஜெயம் ரவி சமீபகாலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வித்தியாசமான கதைக்களங்களுடன் வெளிவந்து வெற்றி பெறுவது மட்டுமின்றி ஏபிசி என அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் ‘ஜீனி’ என்கிற படத்தில் இதுவரை அவர் எந்த படத்திலும் செய்யாத புதிய முயற்சியாக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,‘ஜெயம்’ ரவி இதுவரை கடந்து வந்துள்ள வெற்றிப்பயணம் குறித்தும், தற்போது தயாரிப்பில் இருந்து வரும் ‘ஜீனி’ படம் குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஜெயத்துடன் துவங்கிய சினிமா பயணம்

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘ஜெயம்’ ரவி, தந்தை மற்றும் அண்ணன் ராஜா ஆகியோரின் வழியை பின்பற்றி சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். படிப்பை முடித்துவிட்டு சினிமாத்துறைக்குள் நுழைந்தவரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய பெருமை அவரின் அண்ணன் மோகன் ராஜாவையே சேரும். அண்ணன் - தம்பி இருவருமே ஒரே படத்தில்தான் தமிழ் திரையில் அறிமுகமானார்கள். அதுவும் 2002-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தினை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்து வெளியிடலாம், அதன் மூலம் நாமும் இயக்குநராக களமிறங்கலாம் என்று அதற்கான முயற்சியில் இறங்கிய மோகன் ராஜா, அப்படத்தில் தனது தம்பி ரவியையே ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தினார். ஹீரோயினாக சதா அறிமுகமாக இவர்களுடன் தெலுங்கு நடிகரான கோபிசந்த், ராஜீவ் , பிரகதி, நிழல்கள் ரவி, நளினி, செந்தில், சுமன் செட்டி மற்றும் ரமேஷ் கண்ணா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆர்.பி. பட்நாயக் என்ற பெயரில் ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி இசையமைத்திருந்த இப்படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. பாடல்கள் மட்டுமின்றி படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து முதல் படத்திலேயே ரவிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது. அதுமட்டுமின்றி அதுவரை வெறும் ரவி என்ற பெயரிலேயே அறியப்பட்டவர், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு படத்தின் பெயரான ஜெயமும் சேர்ந்து ஜெயம் ரவியாக புகழ் பெற்றார். அண்ணன் - தம்பி இருவரும் இணைந்த முதல் படமே பாக்ஸ் ஆபிசில் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனை நிகழ்த்தியதை தொடர்ந்து மீண்டும் இரண்டாவதாக அதே கூட்டணியில் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற படத்தினை எடுக்க, இப்படமும் ‘அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்ற போதிலும் முதல் படத்தினை போலவே இரண்டாவது படமும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இதுதவிர இப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக தமிழக அரசின் விருதும் ஜெயம் ரவிக்கு கிடைக்கப்பெற்றது.


ஜெயம் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை சதா

இப்படி முதல் இரண்டு படங்களில் ஜெயம் ரவிக்கு கிடைத்த வரவேற்பால், பிற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு தேடி வர, அதன்படி ‘தாஸ்’, ‘மழை’, ‘இதயத் திருடன்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பு அளவுக்கு வெற்றி கிடைத்ததா என்றால், சுமார் என்ற அளவில்தான் இருந்தது. இதனால் மீண்டும் மூன்றாவது, நான்காவது என வரிசையாக அண்ணன் இயக்கத்தில் நடித்தார். அப்படி 2006-ஆம் ஆண்டு ‘உனக்கும் எனக்கும்’, 2008-ஆம் ஆண்டு ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய படங்களில் நடித்தவருக்கு படமும் சரி, படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சரி மிகப்பெரிய வெற்றியை தந்தன. மேலும் இவ்விரண்டு படங்களும் தெலுங்கு ரீமேக்தான் என்றாலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த “ஆகாயம் மண்மீது”, “பூப்பறிக்க நீயும் போகாதே”, “சம்திங் சம்திங்”, "அடடா அடடா", “காதலுக்கு கண்கள் இல்லை”, “உயிரே உயிரே” போன்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களின் வரிசையில் உள்ளன. இப்படி அன்றைய இளசுகளின் இதயங்களை வருடிச் செல்லும் வகையில், காதல், குடும்ப சென்டிமென்ட் கலந்த படங்களாக நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாகவும், கனவு நாயகனாகவும் மாறிய ஜெயம் ரவி இதற்கு பிறகு சற்று வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.


'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் 'அடடா அடடா' பாடல் காட்சியில் ஜெயம் ரவி, ஜெனிலியா

வித்தியாசத்தில் வித்தைக்காட்டிய 'ஜெயம்' ரவி

2K கிட்ஸ்களின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த ஜெயம் ரவி இடையிடையே ‘எங்கேயும் காதல்’, ‘தில்லாலங்கடி’, ‘ரோமியோ ஜூலியட்’ போன்ற காதல் படங்களில் நடித்தாலும் 2009-ஆம் ஆண்டிற்கு பிறகு 'பேராண்மை', 'தனி ஒருவன்', 'மிருதன்' (முதல் தமிழ் சாம்பி மூவி) , 'டிக் டிக் டிக்' (முதல் ஸ்பேஸ் மூவி) , 'கோமாளி' போன்ற படங்களிலும் நடித்து தனது வித்தியாசமான கதை தேர்வாலும், தேர்ந்த நடிப்பாலும் பாராட்டப்பட்டார். அதிலும் 2009-ஆம் ஆண்டு எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘பேராண்மை’ படத்தில் பழங்குடியின மக்களில் ஒருவராக, நமது நாட்டின் செயற்கைகோள் ஏவும் முயற்சியைத் தடுக்கும் நோக்கோடு வரும் அந்நிய சக்திகளை தடுத்து நிறுத்த என்.சி.சி மாணவிகளுடன் சேர்ந்து போராடும் பயிற்சியாளர் துருவனாக வரும் ஜெயம் ரவி தன் நடிப்பால் மிரட்டியிருந்தார். இதேபோன்று அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் எப்போதும் காதல் நாயகனாக நடித்துக்கொண்டிருந்த ஜெயம் ரவி முதல் முறையாக ஏ.எஸ்.பி மித்ரன் ஐபிஎஸ்-ஆக, அரவிந்த் சாமியுடன் இணைந்து ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்திருந்த நடிப்பு பாராட்டப்பட்டதுடன், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.


'எங்கேயும் காதல்' மற்றும் 'பேராண்மை' படத்தின் காட்சிகள்

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இப்படம் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, வெறும் ஆங்கில மொழி படங்களில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ‘ஜாம்பி’ ஜானர் தொடர்பான கதை களத்தினை தேர்வு செய்து ‘மிருதன்’ என்ற படத்தில் நடித்தவருக்கு படம் பெரிதாக வெற்றி அடையாவிட்டாலும், குழந்தைகளால் விரும்பி ரசிக்கப்பட்டது. இப்படத்திற்கு பிறகு, சக்தி சௌந்தர்ராஜன் என்பவரது இயக்கத்தில் தன் மகன் ஆரவ்வுடன் இணைந்து மெஜிஷியன் வாசுதேவனாக ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்தார். ஜெயம் ரவி நடிப்பில் முதல் ஸ்பேஸ் மூவியாக வந்த இப்படத்திற்கு இளைஞர்களிடம் கிடைத்த பாராட்டினை விட குழந்தைகளிடம் கிடைத்த மிகப்பெரிய வரவேற்புதான் அதிகம். இப்படியாக எல்லா ஜானர் கதை களங்களிலும் நடித்து மிகச்சிறந்த நடிகராக வலம் வந்த ஜெயம் ரவிக்கு யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அதுவும் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர அருண்மொழி வர்மனாக நடித்து அசத்தினார்.

பொன்னியின் செல்வன் தந்த அடையாளம்

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தொடங்கி பலரால் படமாக எடுக்க முயற்சி செய்யப்பட்ட இப்படம் மணிரத்னத்தால் மட்டுமே சாத்தியமானது. பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி, அருண்மொழி வர்மனாகவும், கார்த்தி, வந்திய தேவனாகவும் நடித்திருந்தனர். இதில் கதையின் தலைப்பான ராஜ ராஜ சோழனின் பெயரை தன்னுடைய பெயராகக் கொண்டு நடித்து அசத்தியிருந்த ஜெயம் ரவியின் அருண்மொழி வர்மன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி படம் வெளிவந்த பிறகு நல்ல வரவேற்பையும் பெற்றுக்கொடுத்தது.


'பொன்னியின் செல்வன்' படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அன்று இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் உலக அளவில் முதல் பாகம் நிகழ்த்திய சாதனை அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றிபெறவில்லை. இருப்பினும் படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதனால் ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவியின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக ‘பொன்னியின் செல்வன்’ அமைந்தது. ‘பொன்னியின் செல்வன்’ வெற்றியை தொடர்ந்து, ‘இறைவன்’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்தார் ஜெயம் ரவி. இதில் இயக்குநர் அகமத் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் கதையாக உருவாகி இருந்த 'இறைவன்' திரைப்படமாட்டும், தந்தை - மகள் இடையேயான பாசத்தை அழகாக சொல்லி வெளிவந்த ‘சைரன்’ படமாகட்டும் இரண்டுமே ‘பொன்னியின் செல்வன்’ அருண்மொழிவர்மன் கதாபாத்திரம் அளவுக்கு இல்லாவிட்டாலும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றன.

மெகா பட்ஜெட் படத்தில் 'ஜெயம்' ரவி

வரலாற்று சிறப்புமிக்க படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இயக்கி உலக அளவில் வெற்றிகண்ட இயக்குநர் மணிரத்னம் ‘நாயகன்’ படத்திற்கு பிறகு அதாவது 34-ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து ‘தக் லைஃப்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தில் முதலில் நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஏற்கனவே துல்கர் சல்மான் விலகிய நிலையில், தற்போது ஜெயம் ரவியும் விலகியுள்ளார். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவரது இடத்திற்கு தற்போது நடிகர் அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி இல்லை. அதற்கு பதிலாக வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாக்கி வரும் ‘ஜீனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இப்படத்தை இயக்க ஜெயம் ரவியுடன், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கபி உள்ளிட்ட பலர் நடிக்கினறனர்.


'ஜீனி' படத்தின் போஸ்டர் மற்றும் புதிய லுக்கில் ஜெயம் ரவி

குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் 24-ஆம் தேதி அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பபையும் ஏற்படுத்தியது. இதில் அற்புத கண்ணாடி குவளையில் இருந்து உடைத்துக்கொண்டு ஜெயம் ரவி வெளியே வருவது போன்று காட்டப்பட்டிருந்ததுடன், அவரது தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவரும் வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 26-ஆம் தேதி அன்று படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் கதாநாயகிகள் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபியுடன் நடிகை தேவயானி காணப்படுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் ரத்தம், வன்முறை என எதுவும் இல்லாமல் மிகவும் ஜாலியான படமாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருவதாக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 25-வது படம் என்பதனால் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. ஜெயம் ரவி அவரது கேரியரிலேயே முதல் முறையாக இதுபோன்றதொரு பிரம்மாண்டமான பொருட்செலவிலான படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து வருவது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ‘ஜீனி’ திரைப்படம் ஜெயம் ரவியின் திரைவாழ்வில் மற்றுமொரு வெற்றி மகுடமாக அமைய வாழ்த்துவோம்.

Updated On 15 April 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story