இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப்புக்கும் பாலிவுட்டிற்கும் இடையே எப்போதும் ஒரு மோதல்போக்கு நீடித்துக் கொண்டே வருகிறது. அடிக்கடி பாலிவுட் படங்கள் மீதும், பாலிவுட் நடிகர்கள் மீதும் விமர்சனங்களை முன்வைக்கும் காஷ்யப், தற்போது ஹிந்தி கலைஞர்கள் முதுகெலும்பு அற்றவர்கள் என விமர்சித்துள்ளார். அதற்கான காரணம் என்ன? அதுபோல கூலி படத்தால் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து விமர்சிக்கப்பட காரணம் என்ன?உள்ளிட்ட சுவாரஸ்ய தகவல்களை இந்த வார சினி பைட்ஸ் பகுதியில் காணலாம்.


ஒரேநாளில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள்

தனக்குத்தானே போட்டி... சிவாஜி, ரஜினி வரிசையில் பிரதீப்!

ரவி மோகனின் கோமாளி, லவ் டுடே போன்ற படங்களை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இயக்கம் மட்டுமின்றி லவ் டுடே படத்தில் நடித்து மக்களிடையே நல்ல அறிமுகத்தையும் அவர் பெற்றுக் கொண்டார். அறிமுக படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து அடுத்ததாக நடித்த டிராகன் படமும் ஹிட் அடித்தது. இதனைத்தொடர்ந்து எல்ஐகே, டியூடு என இரண்டு படங்களில் அவர் நடித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் எல்ஐகே படத்தை இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி ஷெட்டியும், எஸ்ஜே சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் டியூடு படத்தை இயக்கியுள்ளார். இதில் மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகவுள்ளன. இரண்டு படங்களும் தீபாவளியை முன்னிட்டு அக்.17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஒரே நாளில், ஒரு நடிகரின் இரண்டு படங்கள் வெளியாவது இது முதல்முறை இல்லை என்றாலும், தயாரிப்பு நிறுவனங்கள் யோசிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


'சிரஞ்சீவி - அனுமன் - தி எடர்னல்' படக்குழுவை விமர்சித்த அனுராக் காஷ்யப்

“ஹிந்தி நடிகர்களுக்கு முதுகுத்தண்டு இருக்கிறதா?” அனுராக் காஷ்யப் காட்டம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் கலாச்சாரம் பிடிக்காததால், அதனைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தவர் இயக்குநர் மற்றும் நடிகருமான அனுராக் காஷ்யப். இந்நிலையில் பாலிவுட் நடிகர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என காட்டமான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். முழுவதுமாக ஏஐ உதவியுடன் 'சிரஞ்சீவி - அனுமன் - தி எடர்னல்' என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அபுடான்டியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது. இப்படம் ஹனுமன் ஜெயந்தி அன்று திரைக்கு வரும் என அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விஜய் சுப்பிரமணியத்தை டேக் செய்து பதிவிட்ட அனுராக், “எந்த ஒரு கலைஞரும் அல்லது தன்னைக் கலைஞராக கருதும் எவரும் தங்களுக்கு முதுகுத்தண்டு இருந்தால் சுப்ரமணியத்தைக் கேள்வி கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்களது நடிப்பைவிட ஏஐ சிறப்பாக நடிக்கிறதென நினைக்கும் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். தற்போது, ஹிந்தி திரைப்படத்துறை முதுகுத்தண்டு இல்லாத, கோழைத்தனமான கலைஞர்களுக்கான எதிர்காலமாக மாறுகிறது. சிறப்பாக செய்துள்ளீர்கள் சுப்ரமணியம். உங்களுக்கு வெட்கம் கிடையாது. நீங்கள் சாக்கடையில் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். காஷ்யப்பின் இந்த பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


தவெக 2வது மாநாட்டில் தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய்

தனி ஆள் இல்ல... கடல் நான்... விஜய் பகிர்ந்த செல்ஃபி வீடியோ!

தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் முதல்மாநாட்டை கடந்தாண்டு அக்டோபர் மாதம் விழுப்புரம், விக்கிரவாண்டியில் நடத்தினார். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவின் இரண்டாவது மாநாடு, ஆக.21ஆம் தேதி மதுரையில் நடைப்பெற்றது. இம்மாநாட்டிலும் முதல்மாநாட்டை போல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய், தவெகவின் ஒரேக் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் கூறினார். 2026 அரசியலில் இருகட்சிகளுக்கு இடையேதான் போட்டி.. அது திமுக, தவெக இடையேதான் எனத் தெரிவித்தார். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சியை தவெக அமைக்கும் எனவும் தெரிவித்தார். இதனிடையே மாநாட்டில் தனது தொண்டர்களுடன் விஜய் செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்தார். அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர் மம்மூட்டி உடல்நலம் தேறியுள்ளதாக தகவல்

வெல்கம் டைகர்... கொண்டாட்டத்தில் மம்மூட்டி ரசிகர்கள்!

சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் நடிகர் மம்மூட்டியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், உடல்நலக்குறைவால் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின. அந்தநேரம் நடிகர் மோகன்லால் மம்மூட்டி பெயரில் சபரிமலையில் அர்ச்சனை செய்தது ரசிகர்களிடையே சந்தேகத்தை இன்னும் வலுக்க செய்தது. இந்த நிலையில், உடல்நலப் பிரச்சனையிலிருந்து மம்மூட்டி சற்று மீண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மம்மூட்டிக்கு முத்தம் கொடுக்கும் பழைய புகைப்படத்தை நடிகர் மோகன்லால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் மம்மூட்டியின் உடல்நலம் மீண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


"கூலி" காப்பி அடிக்கப்பட்ட படம் என நெட்டிசன்கள் விமர்சனம்

அடுத்தடுத்து அடிவாங்கும் கூலி... லோகேஷ் கனகராஜின் ரியாக்‌ஷன் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இப்படத்தை விமர்சித்தாலும் வசூல் ரீதியாக கூலி வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். கூலி படம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த கௌரவர் படத்தின் காப்பி என குற்றச்சாட்டு எழுந்தநிலையில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, தன்னுடைய ஒரு படத்தின் சில காட்சிகள்போல, கூலி படத்தின் சில காட்சிகள் அமைந்துள்ளன என தெரிவித்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் லோகேஷ் கனகராஜை இன்னும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் விமர்சனங்களுக்கு மத்தியிலும் கூலி ரூ.500 கோடி வசூலை ஈட்டியுள்ளது.


கூலியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள அமீர்கான்

ரஜினிக்கு பீடி பற்ற வைக்கத்தான் அமீர்கானா?

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இம்மாதம் வெளியான கூலி படத்தில், அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். இதற்காக ரூ.20 கோடி அவர் சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து ரஜினிக்கு பீடி பற்ற வைக்கத்தான் அமீர்கானை லோகேஷ் அழைத்தாரா என புது வாதத்தை நெட்டிசன்கள் இணையத்தில் முன்வைத்து வந்தனர். இதற்கு நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ள அமீர்கான், ரஜினிக்கு பீடி பற்ற வைப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பதுதான் என்னுடைய வேலை. அதை பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ரஜினியின் தீவிர ரசிகன். அந்த ஒரு பெருமை எனக்கு போதும்” எனத் தெரிவித்துள்ளார்.


பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி

“தமிழ் சினிமா என்னைத் தேடும்” - நடிகை நோரா ஃபதேஹி!

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் நோரா ஃபதேஹி. ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது காஞ்சனா-4 படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அவர், நேர்காணல் ஒன்றில், “காஞ்சனா 4 எனக்கு தமிழில் முதல் படம். இந்தப் படம் வெளிவந்த பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள். இவரை புக் பண்ணுங்க என படக்குழு அலையப் போகிறது” எனக் கூறியுள்ளார். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவும் நடித்து வருகிறார். கோல்டுமைன் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.


புற்றுநோயால் இறந்த நீதிபதி பிராங்க் காப்ரியோ

காலமானார் “உலகின் மிகச்சிறந்த நீதிபதி”!

உலகின் மிகச்சிறந்த நீதிபதி என பலராலும் அழைக்கப்பட்ட பிராங்க் காப்ரியோ (88) கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ரோட் தீவின் பிராவிடன்ஸில் பிறந்த காப்ரியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியான காட் இன் பிராவிடன்ஸ் (caught in providence) மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டார். நீதிமன்ற வழக்குகள் விசாரணையின் நேரடி ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில், குற்றம் சாட்டப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கருத்திற்கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கி யாருடைய மனதும் புண்படாத வகையில் ஒரு தீர்ப்பை வழங்குவார். நீதிமன்ற அறையில் தனது நகைச்சுவை உணர்வுக்காக அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட இவர், இதுவரை ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார். காட் இன் பிராவிடன்ஸில் இவர் விசாரித்த வழக்கு வீடியோக்கள் அனைத்தும் பில்லியன்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளன. இவரது இறப்பு செய்தி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விஜய் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்

“அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு பதில் போடமுடியுமா?” - கமல்ஹாசன்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது அரசியல் மாநாடு மதுரை பராபத்தியில் நடைப்பெற்றது. இதில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு, தங்களின் கொள்கை எதிரி யார்? அரசியல் எதிரி யார்? கட்சியின் திட்டம் என்ன? என்பது போன்ற பல்வேறு விஷயங்களை விஜய் பேசியிருந்தார். மேலும், “நான் ஒன்றும் மார்க்கெட் போனதற்கு பின் அரசியலுக்கு வரவில்லை. பீக்கில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “விஜய் யாருடைய பெயரையாவது குறிப்பிட்டு பேசினாரா? அல்லது என் பெயரை சொல்லியுள்ளரா? அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா? அவர் என் தம்பி” என்று தெரிவித்தார்.

Updated On 26 Aug 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story