நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் கதையின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வரும் காட்சிகளில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகளால் படம் பிக்கப்பாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, டைம் டிராவல் கான்செப்டில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சில்க் ஸ்மிதாவிடம் பேசும் காட்சிகள் வரும்போதெல்லாம் ரசிகர்களின் விசில் சத்தம் மற்றும் கைத்தட்டல்களால் திரையரங்கமே அதிர்ந்து போகிறது. இதனாலயே திரையரங்கை நோக்கி சாரை சாரையாக மக்கள் படையெடுத்து சென்று வருகின்றனர். தொடர் தோல்வியை சந்தித்து வந்த நடிகர் விஷாலுக்கு இப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்துள்ளது.

இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வெளியாகி கடைசி 5 நாட்களில் உலக அளவில் ரூ.62.11கோடி அளவிற்கு வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஷாலின் ஒரு படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷாலின் இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

Updated On 21 Sep 2023 9:57 AM GMT
ராணி

ராணி

Next Story