இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுமுடக்கத்திற்கு பிறகு திரைத்துறையில் பல்வேறு மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், திரைப்படங்கள்மீதான மக்களின் அணுகுமுறையும், கண்ணோட்டமும்கூட பெரிதளவில் மாறியிருக்கிறது. ஓடிடி, வெப் தொடர்கள் என தியேட்டர்களை தாண்டி மக்கள் வேறு தளங்களை தங்களது பொழுதுபோக்குக்காக தேர்வுசெய்து வருகின்றனர். ஓடிடி தளங்களின் வரவால் பழைய படங்களுக்கு மக்கள் மத்தியில் இன்னும் நல்ல வரவேற்பு இருப்பதை புரிந்துகொண்ட சில நிறுவனங்கள் தங்களது பழைய படங்களை தியேட்டர்களிலும் ரீ-ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட, அந்த திட்டமும் தற்போது மிகவும் சக்சஸாகி இருக்கிறது. கடந்த ஒருசில ஆண்டுகளாக, ஏற்கனவே தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வசூல்சாதனை புரிந்த பல திரைப்படங்கள் தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் ‘கில்லி’ மற்றும் தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சச்சின்’ போன்றவை மீண்டும் வசூல்சாதனை புரிந்திருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்த வரிசையில் இணைகிறது ‘சுந்தரா டிராவல்ஸ்’. 2002ஆம் ஆண்டு மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு இணைந்து கலக்கிய முழுநீள காமெடி படமான இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே இணையவாசிகள் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பல நகைச்சுவை படங்கள் அதன்பிறகு வெளியான போதிலும் ‘சுந்தரா டிராவல்ஸ்’க்கு இன்னும் மவுசு குறையாமல் இருக்க என்ன காரணம்? பார்க்கலாம்.

மனிதனை கலக்கும் டிராவல்ஸ்! ‘சுந்தரா டிராவல்ஸ்’

முரளி, வடிவேலு, வினு சக்கரவர்த்தி மற்றும் பி. வாசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. இந்த படத்தை மலையாள இயக்குநர் தாஹா இயக்கியிருந்தார். 2001ஆம் ஆண்டு திலீப் மற்றும் ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் முன்னணி ரோல்களில் நடிக்க உருவான திரைப்படமான ‘ஈ பறக்கும் தள்ளிகா’ என்ற மலையாள படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்ட படம்தான் இது. கோபி கிருஷ்ணா மற்றும் அவரது நண்பனான அழகு ஆகிய இரண்டு பேரும் வைத்திருக்கும் ஒரு பழைய பேருந்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. இதில் கோபியாக முரளியும் அழகுவாக வடிவேலுவும் நடித்திருக்கின்றனர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெயர்பெற்ற நபரான கோபியின் அப்பாமீது பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, விவகாரம் கோர்ட்வரை செல்கிறது. ஒரு கட்டத்தில் பேருந்தின் உரிமையாளர் கோபியின் அப்பா இழப்பிற்கு ஈடாக ஒரு பேருந்தை கொடுப்பதாகக் கூற கோபியும் அதற்கு ஒத்துக்கொள்கிறார். ஆனால் ஒரு பழைய பேருந்தை கோபியின் தலையில் கட்டிவிட்டு, கேஸிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். வேறு வழியில்லாமல் அந்த பேருந்துடன் தனது வாழ்க்கையை தொடர்கிறார் கோபி. அந்த பேருந்துதான் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தொட்டாலே கழன்றுவிழும் பாகங்கள், ஆங்காங்கே ஓட்டை, பின்னால் நிற்பவரை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும் கரிய புகை என மோசமான நிலையில் இருக்கும் அந்த பேருந்தை தனது அப்பாவின் நினைவாக வைத்திருப்பதாகக் கூறி, சென்னைக்கு கொண்டுவந்துவிடுகிறார். கூடவே அவரது நெருங்கிய நண்பரான அழகுவும் வருகிறார். வெளிநாடு செல்லும் கனவோடு இருந்த அழகுவின் பாஸ்போர்ட்டை கோபியின் பேருந்திலிருந்த எலி ஒன்று கடித்து குதறிவிட, தனது கனவை கெடுத்த அந்த எலியை கொல்ல முயற்சிக்கிறார் அழகு. அப்போது காவல்துறை அதிகாரி வீரப்பனுடன் சந்திப்பு நேர்கிறது. இந்த தோற்றத்தில் வினு சக்ரவர்த்தி நடித்திருக்கிறார். அவருடனான மோதல் போக்கு தொடர்ந்து நீடிக்க, ஒரு கட்டத்தில் அந்த பேருந்து ஓட்டுவதற்கு தகுதியற்றது என நகரைவிட்டு வெளியேற கட்டளையிடுகிறது ஆர்.டி.ஓ. அந்த சமயத்தில் அழகுவுக்கும் கோபிக்கும் இடையே தகராறு ஏற்பட அந்த சண்டை காவல் அதிகாரியான வீரப்பனின் வீட்டுக்குள்ளேயே சென்றுவிடுகிறது. அதில் மூவரும் மாறி மாறி தாக்கிக்கொள்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த வீரப்பன் பேருந்தை தர மறுக்கிறார். ஆனால் அந்த பேருந்தில் நடமாடும் ஹோட்டல் ஒன்றை தொடங்குவதாகக் கூறி லோன் பெற்றுத்தருகிறார் கோபியின் நலம்விரும்பியான கிருஷ்ணம் பிள்ளை (டெல்லி கணேஷ்). இதனால் பேருந்து திரும்ப கிடைத்துவிடுகிறது.


ஆல் டைம் ஃபேவரிட் காமெடி படமான ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் முரளி - வடிவேலு - ராதா

ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக நினைத்து கோபியும், அழகுவும் அடுத்த திட்டத்தை நோக்கி நகர புது பிரச்சினையாக வந்து சேர்கிறார் பசந்தி என்ற பெண். குறவர் இனப் பெண் போல வேடமிட்டுக்கொண்டு அந்த பேருந்துக்குள் வந்து செட்டிலாகிவிடும் அந்த பெண்ணை விரட்டிவிட கோபியும் அழகுவும் முயற்சிக்கின்றனர். அதற்குள் ஹோட்டல் தொடங்க லோன் வாங்கிய வங்கியிலிருந்தும் இருவருக்கும் சிக்கல் வருகிறது. அந்த பிரச்சினையிலிருந்து யாரோ ஒரு பெண் காப்பாற்ற, அவர் காயத்ரி என்பது தெரியவர, அந்த காயத்ரியும் தங்களுடன் தங்கியிருக்கும் பசந்தியும் ஒரே நபர் என்பதும் தெரியவர கதை விறுவிறுப்பாகிறது. எதனால் காயத்ரி தனது அடையாளங்களை மறைத்து தங்களுடன் தங்கியிருந்தார் என்பதற்கான பதிலும் கிடைக்க, கடைசியில் காயத்ரியுடன் கோபி எவ்வாறு ஒன்றுசேருகிறார் என்பதுதான் கதை. படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க காமெடியாக மட்டுமே சென்றாலும் இறுதியில் காதல், பாசம், பிரிவு என பலதரப்பட்ட உணர்ச்சிகள் அழகாக காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக, படம் முழுக்க நகைச்சுவை இருந்தாலும் அப்பா என்று சொன்னதுமே சென்ட்டிமென்ட் ஆகும் கோபி, எங்கு எலியை பார்த்தாலும் ஆவேசமடையும் அழகு, எவ்வளவுதான் பிரச்சினை இருந்தாலும் தேவைப்படும்போதெல்லாம் உதவும் பேங்க் மேனேஜர் மற்றும் இன்ஸ்பெக்டர் என நகைச்சுவைக்குள் சென்ட்டிமென்ட்டை வைத்து கதையை ஆரம்பம் முதல் முடிவு வரை கொண்டுசென்றிருப்பார் இயக்குநர் தாஹா.


20களின் தொடக்கத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிரபலமானபோது உருவாக்கப்பட்ட எலி கேரக்டர்

டிஜிட்டல் மோகம்

‘சுந்தரா டிராவல்ஸ்’ மட்டுமல்லாமல் 90களின் இறுதி மற்றும் 20களின் தொடக்கத்தில் வெளியான படங்களின் வெற்றிக்கு மற்றொரு காரணம் என்றால் அது டெக்னாலஜி வளர்ச்சி. செல்லுலாய்ட் திரைப்படங்களிலிருந்து டிஜிட்டல் என்ற வார்த்தை அதிகம் பேசப்பட்ட காலத்தில் இப்படம் வெளியானது. கேமரா மட்டுமல்லாமல், படத்தொகுப்பு, ஒலிப்பதிவு, இசை என திரைப்படங்களில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒவ்வொரு துறைகளிலுமே டிஜிட்டல் வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. 1994ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ திரைப்படத்தில்தான் முதன்முதலில் இந்தியாவிலேயே ஆவிட் என்ற படத்தொகுப்பு சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் முன்பே ஒருசில படங்களில் டிஜிட்டல் ஒலிப்பதிவு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ஏ.ஆர் ரஹ்மானின் வரவுக்கு பிறகு ‘ரோஜா’ படத்தின்மூலம்தான் இந்தியாவில் டிஜிட்டல் ஒலிப்பதிவு வேகமெடுக்க தொடங்கியது. 20களின் தொடக்கத்தில் டிஜிட்டல் கேமராக்கள் வலம்வரத் தொடங்கின. அதற்கு முன்பே ‘காதலன்’, ‘காதலர் தினம்’, ‘ஜீன்ஸ்‘ போன்ற படங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும் இதுபோன்ற டெக்னாலஜிகள் குறித்த படிப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின. அதனால் அப்போது வெளியான பல மாடர்ன் கதையம்சம் கொண்ட படங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. அதுபோல், சாதாரண நகைச்சுவை கதையான ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்திலும் ஆரம்பம் முதல் இறுதிவரை வடிவேலுக்கு எதிரியாக காட்டப்படுகிற பலதரப்பட்ட எலிகளை கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கி இருப்பர். இது அப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


ரீ -ரிலீஸ் குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் சுந்தரா டிராவல்ஸ்

வெற்றியடையுமா சுந்தரா டிராவல்ஸ்!

ஒருசில படங்கள்தான் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். அதுபோன்ற படங்களில் ஒன்றுதான் ‘சுந்தரா டிராவல்ஸ்’. முரளி மற்றும் வடிவேலு ஆகிய இருவரின் திரைப்பயணத்திலுமே மைல் கல்லாக அமைந்த படம் எனலாம். இப்போது வெளியாகும் திரைப்படங்கள் ஒருசில வாரங்கள் தியேட்டர்களில் ஓடினாலே வெற்றிப்படங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், 2000களில் 100 நாட்கள் முதல் ஒரு வருடம் வரைகூட சில படங்கள் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்திருக்கின்றன. இதுவரை அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம் என்ற சாதனையை தக்க வைத்திருக்கிறது ‘சந்திரமுகி’ திரைப்படம். அந்த படத்திற்கு அடுத்து அதிக நாட்கள் தியேட்டர்களில் ஓடிய படம் என்றால் அது ‘சுந்தரா டிராவல்ஸ்’தான். திரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் வெளியிடுவதிலும் டிஜிட்டல் முறை பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருந்த காலகட்டம் அது என்பதால் தியேட்டர்களுக்கு ஏற்றவாறு திரைப்படங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகிற ‘சுந்தரா டிராவல்ஸ்’ இந்தகால டெக்னாலஜிக்கு ஏற்றவாறு மெருகேற்றி ரிலீஸ் செய்யப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் உரிமையை சிவபெருமான் என்பவர் பெற்றிருக்கிறார். இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் ‘கில்லி’ திரைப்படம் ரூ. 50 கோடிக்கும்மேல் வசூல்சாதனை படைத்தது. அதனையடுத்து ‘சச்சின்’ திரைப்படம் ரூ. 10 கோடிக்கும்மேல் வசூல் சாதனை புரிந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் இன்றும் விரும்பி ரசித்து பார்க்கப்படுகிற ‘சுந்தரா டிராவல்ஸ்’ இம்மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் இந்த படம் இதுவரை வெளியான படங்களின் வசூல்சாதனையை முறியடிக்குமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Updated On 6 May 2025 6:01 PM IST
ராணி

ராணி

Next Story