இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(14.01.1990 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

இப்பொழுது எல்லாம் பத்திரிகைக்காரர்களைப் பார்க்கவே எனக்கு பயமாக இருக்கிறது!. பத்திரிகைக்காரர்கள் எல்லாம் சேர்ந்து, எனக்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்து, அமெரிக்காவுக்கு மூட்டைகட்டி அனுப்பி விடுவார்களோ என்று பயப்படுகிறேன். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால், நடிகர் - நடிகைகளின் திருமணம் பத்திரிகைகளில்தான் நிச்சயிக்கப்படுகிறது. பத்திரிகைக்காரர்கள்தான் நடிகர் - நடிகைகளை சேர்த்து வைக்கிறார்கள். இதைப் பார்க்கும்பொழுது பயப்படாமல் இருக்க முடியுமா?

காதல் வராதா!

நடிகைகளை காதல் பண்ண வைப்பதும். ஒரு நடிகருடன் சேர்த்து வைப்பதும் பத்திரிகைகள்தான் என்று நான் அடித்துச் சொல்லுவேன். ஒரு நடிகை ஒரு நடிகருடன் தொடர்ந்து சேர்ந்து நடித்தால், உடனே இருவருக்கும் 'இது' என்று பத்திரிகைகளில் காது, மூக்கு வைத்து எழுதிவிடுகிறார்கள். இந்த செய்தி வருமுன் நடிகைகளுக்கு அந்த எண்ணமே இருந்திருக்காது. ஆனால், செய்தியைப் படித்ததும். அவர்களின் மனதில் ஒரு சபலம் ஏற்பட்டுவிடும். நடிகைகள் தனியாக இருப்பது பத்திரிகைக்காரர்களுக்குக் கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது! அதுதான் கிசுசிசுக்களை எழுதி, இப்படி எதையாவது கிளப்பிவிட்டு விடுகிறார்கள்!!

நல்லதும் கெட்டதும்!


அழகிய புன்னகையுடன் வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கும் நடிகை ராதா

இது சிலநேரம் நல்லதாக முடிகிறது. பலநேரம் கெட்டதாகிவிடுகிறது. அந்த நடிகருக்கும் நடிகைக்கும் இடையே காதல் மலரும், வளரும். இருவரும் திருமணமும் செய்துகொள்வார்கள். இது நன்மை! அந்த நடிகைக்குத் திருமணமாமே! திருமணத்துக்குப் பிறகு நடிப்பாரோ, மாட்டாரோ என்று பேச்சு அடிபடத் தொடங்கும். புதிய தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யத் தயங்குவார்கள். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களை விரைவில் முடித்துக்கொள்ள முயற்சிப்பார்கள். அந்த நடிகை கொஞ்சம் கொஞ்சமாக நட்சத்திர மதிப்பை இழந்துவிடுவார். "எனக்கு இப்பொழுது திருமணம் இல்லை" என்று சில நடிகைகள் மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டிய பரிதாபம்கூட ஏற்பட்டுவிடுகிறது. ஒரு நடிகை உண்மையாகவே ஒரு நடிகரை காதலிக்கலாம். ஆனால், அந்த செய்தி பத்திரிகையில் வெளிவந்ததும் என்ன நடக்கிறது! அந்தக் காதலை முறிக்க நடிகையின் பெற்றோர் முயற்சி செய்கிறார்கள். காதலை முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள். நடிகரை சந்திக்கக் கூடாது அவருடன் போனில் கூட பேசக்கூடாது என்று தடைவிதிக்கிறார்கள்.

எத்தனை திருமணம்!

என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! இந்த பத்திரிகைக்காரர்கள் எனக்கு இதுவரை எத்தனை திருமணம் நடத்தி வைத்துவிட்டார்கள்! முதலில் எனக்குக் கேரளாவில் மாப்பிள்ளை தயாராக இருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டார்கள். பிறகு என் அக்கா அம்பிகா எனக்கு அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் என்று செய்திகள் வந்தன. நல்லவேளை, எந்த நடிகருடனும் சேர்ந்து என்னை முடிச்சுப் போடவில்லை. அதுவரை நான் பிழைத்துக் கொண்டேன்.


பாடல் காட்சிகளில் நடிகை ராதாவின் ரியாக்சன்ஸ்

எப்பொழுது திருமணம்?

எனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். நானும் ஒரு பெண்தானே? ஆனால், எப்பொழுது நடக்கும் என்று எனக்கே தெரியாது! அம்மா பார்த்து சொல்லும் மாப்பிள்ளைக்கு நான் கழுத்தை நீட்டுவேன். "ராதா காதல் வராதா" என்று கேட்காதீர்கள். நான் யாரையும் காதலிக்கவும் இல்லை. காதலிக்கப் போவதும் இல்லை!! எல்லாவற்றுக்கும் நேரம் வரவேண்டும் என்பார்கள். அந்த நேரம் வரட்டும், அப்பொழுது என் திருமணம் நடக்கட்டும். அதற்கு முன், பத்திரிகைக்காரர்கள் அதை இதை எழுதி, எனக்குத் திருமணத்தை நடத்தி வைத்து, என்னை விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் சின்னப் பெண். திரையுலகில் எவ்வளவோ சாதிக்க வேண்டும் என்று ஆசையுடன் இருக்கிறேன். 'எனக்கு அமெரிக்காவில் மாப்பிள்ளை தயார்! திருமணத்துக்குப்பின் அமெரிக்காவில் குடியேறப் போகிறேன்' என்று எல்லாம் எழுதி என் ஆசையைக் கெடுத்து விடாதீர்கள்.

Updated On 19 Feb 2024 6:22 PM GMT
ராணி

ராணி

Next Story