இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் 1970-லிருந்து 1980 வரையிலான ஆண்டுகள் என்பது மிக முக்கியமான காலகட்டமாகும். குறிப்பாக, 70-களின் பிற்பகுதியில் பாலிவுட் சினிமாவின் தாக்கத்தினால் தமிழ் இசை உலகம் தள்ளாடி வந்த நேரத்தில் இளையராஜா என்கிற பொக்கிஷம் கண்டெடுக்கப்பட்ட காலம் இந்தக் காலம்தான். அதேபோல் எம்ஜிஆர், சிவாஜி காலம் மாறி ரஜினி, கமல் என்ற புதிய இளைய அலை அடிக்க ஆரம்பித்ததும் இதேகாலத்தில்தான். இந்த நிகழ்வுகளை தாண்டி மற்றொரு மாற்றமும் தமிழ் சினிமாவில் இதே காலகட்டத்தில்தான் நடந்தது. அதுதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து வெளிவந்த படங்களின் தாக்கம்.

பெண்மையின் பெருமை பேசிய இயக்குனர்கள்

பொதுவாகவே தமிழ் சினிமாகளில் பெண்கள் ஒரு ஸ்டீரியோ டைப் கதாபாத்திரங்களாகவே பல படங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றனர். குறிப்பாக, பணக்கார பெண் ஒருவர் உழைத்து நேர்மையாக வாழும் ஆண் ஒருவரை காதலிப்பார், ஆனால் தொடக்கத்தில் திமிராக காட்சிப்படுத்தப்படும் அந்த பெண், நாயகன் பாடம் புகட்டிய பின்னர் குடும்ப குத்துவிளக்காக மாறிவிடுவார். இப்படித்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு பிந்தைய ரஜினி, கமல் காலம்வரை பல படங்களில் பெண் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதிலும் படித்த பெண் என்றாலே அவர் திமிர் பிடித்தவர் என்கின்ற பிம்பம் தமிழ் சினிமாவில் காலங்காலமாக கட்டமைக்கபட்ட ஒன்றாக நிலவி வந்தது. இருப்பினும் சில இயக்குனர்கள் அவ்வப்போது பெண்மையின் பெருமையை பேசி வந்தாலும், 1970-களுக்கு பின்னால் வந்த இயக்குநர்கள் அந்த பிம்பங்களை முற்றிலுமாக உடைக்க முற்பட்டனர். குறிப்பாக, இயக்குநர் கே.பாலச்சந்தர், எஸ்.பி முத்துராமன், மகேந்திரன், துரை, ருத்ரைய்யா, பாரதிராஜா, ஆர்.சி.சக்தி போன்றவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெண்மையின் பன்முகத் தன்மையைப் பறைசாற்றின. மூத்த இயக்குநர்களான ஸ்ரீதர், ஏ.சி.திருலோகச்சந்தர், பீம்சிங் போன்றோர் இயக்கிய திரைப்படங்களும் பெண்மை வலிமையை உணர்த்தின.


தமிழ் சினிமாவில் பெண்களை முன்னிலைப்படுத்திய இயக்குநர்கள்

புதியவர்கள் கண்ட புரட்சிப் பெண்

70-களின் பிற்பாதியில் நாவல்களைத் தழுவி வெளிவந்த பெரும்பாலான படங்களில் கே.ஆர் விஜயா, லட்சுமி, லதா, ஸ்ரீவித்யா போன்ற அனுபவம் வாய்ந்த நடிகைகள் மட்டுமல்லாமல், ஸ்ரீதேவி, சுஜாதா, ஸ்ரீப்ரியா, பாடாபட், சரிதா, சுமித்ரா, ஷோபா, பிரமீளா, அஸ்வினி என அப்போது அறிமுகமான நடிகைகளை கொண்டும் பல புதிய முயற்சிகளை அப்போதைய இயக்குநர்கள் முன்னெடுத்தனனர். புரட்சி பெண்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அறிமுக நடிகைகளை முன்னிறுத்தி அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய காலம் என்றால் அது 1970-களின் பிற்பாதி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சமயங்களில் வெளிவந்த படங்களில் பெண்மையின் துணிவு, தியாகம், வீரம், அன்பு, ஏமாளித்தனம், ஏன் அவர்கள் செய்த தவறை கூட சுட்டிக்காட்ட இயக்குனர்கள் தயங்கவில்லை. குறிப்பாக, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இவ்வாறுதான் சிந்திக்க வேண்டும், ஆண்களை சார்ந்தே வாழ வேண்டும் என அப்போதுவரை இருந்த பல பிம்பங்களை சில்லு சில்லாக உடைத்தனர். இதன் தாக்கம் 80களின் இறுதி வரையிலும் தொடர்ந்தது.


புரட்சி கதாபாத்திரத்தில் ஜொலித்த நடிகைகள்

பெண்மையின் துணிவும், வீரமும்...

தமிழ் சினிமாவில் பெண்மையின் துணிவு மற்றும் வீரத்தை உரக்க சொல்ல துவங்கிய காலம் என்றால் அது நிச்சயம் 70களின் இறுதியாக மட்டும்தான் இருக்க முடியும். இதற்கு உதாரணமாக அந்த சமயங்களில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு, அவர்கள், பத்ரகாளி, 16 வயதினிலே போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களைச் சொல்லலாம். மேயர் மீனாட்சி, ஆட்டுக்கார அலமேலு போன்ற வெற்றிப் படங்களும் பெண்மையின் வீரத்தை அடிக்கோடிட்டு காட்டின. குறிப்பாக, குடும்பத்துக்காகவே ஓடி ஓடி உழைக்கும் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் கதாநாயகி கவிதாவை துணிச்சல் மிக்க பெண்ணாகக் காட்டியதுடன், அவள் எடுக்கும் தீர்க்கமான முடிவுகளிலும், வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலை வந்தாலும் அதனை கடந்து செல்லும் மனபக்குவத்திலும் பெண்மையின் புதிய பரிமாணத்தைக் காட்டியிருப்பார்கள். அதேபோல் 'மூன்று முடுச்சு' படத்தின் செல்வி பாத்திரமும், வேறு ஒரு வகையில் புதுமைப் பெண்ணாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தார். தன் கண் முன்னாலேயே காதலனின் மரணம் கயவனின் நயவஞ்சகத்தால் அரங்கேறும்போது துடிதுடித்துப் போனாலும், அவனுக்கே சித்தியாக மாறி வஞ்சம் தீர்க்கும்போது பெண் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருப்பார். இவர்கள் மட்டுமா, 'அவர்கள்' திரைப்படத்தில் மிகவும் மன உறுதி படைத்த பெண்ணாக வந்து அந்த பாத்திரப்படைப்பாகவே வாழ்ந்து கட்டியிருக்கும் அனுவாக இருக்கட்டும், கிராமத்து பின்னணியை மையமாக வைத்து வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மயிலாக இருக்கட்டும், 'பத்தரகாளி' படத்தில் கால சூழ்நிலையினால் பைத்தியமாக மாறி இறுதியில் பழி தீர்க்கும் காயத்ரியாக இருக்கட்டும் அன்றைய ஒவ்வொரு பெண் கதாபாத்திரங்களுமே சக்தியாக, துர்க்கையாக, காளியாக அவதாரம் எடுத்து ஆணுக்கு நிகரான துணிச்சலையும், வீரத்தையும் வெளிக்காட்டி இருப்பர்.


பெண்மையின் அன்பும், தியாகமும்...

பொதுவாகவே தமிழ் சினிமாக்களில் பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் பொறுமை, அன்பு, தியாகம் போன்ற குணம் கொண்ட நபர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். 1970-களின் பிற்பகுதியிலும் அந்த நிலை மாறாமல் பல திரைப்படங்கள் வெளிவந்த போதிலும், சற்றே வித்தியாசமாக அன்பு, தியாகம் என்ற வார்த்தைக்கு வேறு சில புதிய அர்த்தங்களையும் கொடுக்க இயக்குனர்கள் முயற்சித்திருந்தனர். உதாரணமாக, 'அன்னக்கிளி' படத்தில் வரும் அன்னம் தன் காதலனின் குழந்தைக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்தாள் என்றால், 'வட்டத்துக்குள் சதுரம்' படத்தின் அனுவோ தன் தோழிக்காக தன் உயிரையும், உடலையும் சேர்த்தே மெழுகாக கரைத்திருப்பாள். ஆறிலிருந்து அறுவது வரை லக்ஷ்மி கதாபாத்திரம், சூழ்நிலையால் மனைவியான போதும், சொந்தங்கள் அனைத்தும் தன் கணவனை விட்டு விலகிச் சென்ற பிறகும், நிழலாக இருந்து அவன் மீது அன்பு காட்டியதோடு, தன் குழந்தைகளுக்கு ஆபத்து வரும்போது தீயில் குதித்து தாய்மையை வெளிப்படுத்திய சமயங்களில், நம் நிஜங்களையும் சேர்த்தே சுட்டெரித்து சென்றிருப்பாள். அதேபோல் அண்ணன் தங்கை பாசத்தின் வேறுவித கோணத்தை காட்டிய 'முள்ளும் மலரும்' படத்தின் வள்ளி, மங்கா காதாபாத்திரங்கள் இரண்டுமே வெவ்வேறு வித அன்பை வெளிக்காட்டியிருந்தாலும், நம் மனங்களில் நீங்கா இடம்பிடித்த பெண்களாக வாழ்ந்துவிட்டுச் சென்றிருப்பர்.


இன்றைய பெண்ணிய படங்களுக்கு வித்திட்ட 70-களின் இறுதி

1970 மற்றும் 1980-களின் இறுதிவரை பெண்களை முன்னிறுத்தி அதிகமாக படங்கள் வந்த நிலையில், 90-களுக்குப் பிறகு பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி வெளிவந்த படங்களின் வரவு என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. பெண்கள் மீதான வெறுப்பு, காதல் தோல்விக்கு பெண்களை குற்றம் சுமத்துவது, காதலிக்க மறுக்கும் பெண்களை குற்றவாளியாக்குவது என்று பெரும்பாலான படங்கள் பேசின. 90-களின் இறுதியில் வெளிவந்த சில படங்களில், படித்த நகரத்துப் பெண்கள் திமிர் பிடித்தவர்களாகவும், கிராமத்துப் பெண்கள் நல்லவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். 2000-த்திற்கு பிறகு காதலிக்க, டூயட் பாட, அழ மட்டுமே பெண் பாத்திரப் படைப்புகள் வைக்கப்பட்டது போன்ற உணர்வுகள் தோன்றின. இதனால் பெண்களின் கனமான பாத்திரங்ளுக்கான முக்கியத்துவம் குறைய ஆரம்பித்து விட்டதோ என்ற உணர்வும் ஏற்பட்டது. எப்போதாவது ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள் வந்தன. இப்போது அந்த நிலை மாறி, இந்தக் காலத்திற்கேற்ப பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் வரத்தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், 2016-இல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’, அருண்பிரபு இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'அருவி', மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கும் மதிவதனி என்கிற மாவட்ட ஆட்சியரின் போராட்டமாக வெளிவந்த இயக்குனர் கோபி நயினாரின் ‘அறம்’, 2019-இல் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்றின் மொழி’ என எண்ணற்ற திரைப்படங்களை சொல்லலாம். ஆனால் இப்படங்கள் அனைத்திற்கும் வித்திட்டது, 1970-களின் இறுதியில் வெளிவந்த திரைப்படங்களின் தாக்கமே என்று சொன்னால் அது மிகையாகாது.



Updated On 4 Sep 2023 6:37 PM GMT
ராணி

ராணி

Next Story