இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திரைப்படங்களில் நடிப்பு, இசை, பாடல்களுக்கு ஏற்ப நடனத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு திரைப்படம் வெளியானவுடன் அதில் நடித்த நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு, படத்தின் இசை, சண்டைக் காட்சிகள் போன்றவற்றுடன் நடனக் காட்சிகளும் பெரிதும் பேசப்படுகின்றன. அதிலும் கதாநாயகன், கதாநாயகியின் நடனங்கள் அதிகம் சிலாகித்துப் பேசப்படுகின்றன. இத்தகைய நடனக் காட்சிகளுக்குப் பின்னணியில் இருப்பவர்கள்தான் நடன இயக்குநர்கள். எவ்வளவு பெரிய நடிகை, நடிகராக இருந்தாலும் சரி, நடன இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ்தான் சிறந்த நடனத்தை வெளிப்படுத்த முடியும். திரைக்குப் பின்னால் இருந்து நடிகர் நடிகைகளை ஆட்டுவிக்கும் நடன இயக்குநர்கள் இல்லாவிட்டால், பருப்பில்லாத பாயாசம் போல திரைக்காட்சிகள் சோபிக்காது. திரைப்படத் துறையில் ஆண் பெண் இருவருமே நடன இயக்குநர்களாகப் பங்களித்து வருகின்றனர். திரைத்துறையில் நடன இயக்குநர்களை, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் பெயருக்குப் பின்னால் மாஸ்டர் என்ற அடைமொழியிட்டு அழைக்கப்படுவது வழக்கம். பெண்களுக்கு இயல்பாகவே நாட்டியம், இசை போன்ற கலைகளில் ஆர்வம் அதிகம் என்பதால், பெண் நடன இயக்குநர்களின் பங்களிப்பு திரைத் துறையில் சற்றே அதிகம். அந்த வகையில், தமிழ் திரைத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் பெண் நடன இயக்குநர்கள் சிலரைப் பற்றிக் காண்போம்.

புலியூர் சரோஜா

சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட புலியூர் சரோஜா, திருவனந்தபுரத்தில் பிறந்தவர். சரோஜாவின் தந்தை பெயர் பாலசுப்ரமணியம். தாயார் ராஜலட்சுமி. சிறு வயதிலியே தெலுங்கு கீர்த்தனைகள் பாடும் அளவிற்கு இசையில் நல்ல பயற்சி பெற்றார் சரோஜா. அவர் ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் படித்து வந்தபோது ஒருமுறை பள்ளி மைதானத்தில் `தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் வட்டரங்குக் குழு முகாமிட்டிருந்தது. அதைப் பார்த்த சரோஜாவுக்கு சர்கஸ் வித்தையைக் கற்றுக்கொள்ள ஆர்வமேற்பட்டது. வகுப்புக்கு அடிக்கடி மட்டம் போட்டுவிட்டு, மைதானத்திலேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்து கொண்டிருந்தார். சர்க்கஸ் பயிற்சியாளர் டி.எம். நாமசிறீ என்பவர் சிறுமி சரோஜாவின் ஆர்வத்தைக் கண்டு அவளுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். அவரிடமிருந்து முழுக் கலையையும் கற்றுக்கொண்டார். தனது 12-வது வயதில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காக சரோஜா காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.

காலங்கள் உருண்டன. சர்க்கஸிலிருந்து நடனத்துக்கு மாறினார் சரோஜா. 1941-ஆம் ஆண்டு வெளியான `மதன் காமராஜன்’ திரைப்படக் குழு நடனம் மூலம் திரைத்துறையில் தனது முதல் அடியை எடுத்துவைத்தார். 1943-ஆம் ஆண்டு ஜூபிட்டர் நிறுவனத் தயாரிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படமான `குபேர குசேலா’வில் டி.ஏ.ஜெயலட்சுமியுடன் இணைந்து நடனமாடி பிரபலமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக 1978-ஆம் ஆண்டு முதல் ராஜாவுக்கு ஏத்த ராணி, கடவுள் அமைத்த மேடை, மழலைப் பட்டாளம், துடிக்கும் கரங்கள், நிர்ணயம் போன்ற பிரபல திரைப்படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றினார். அதுமட்டுமின்றி ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி போன்ற திரைப்பிரபலங்களை ஆட்டுவிக்கும் அளவுக்கு நடனத்தில் உச்சம் தொட்டார். 1980-களில் நடன இயக்கத்தில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த புலியூர் சரோஜா, கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார்.


ரஜினிகாந்த்துக்கு நடனப் பயிற்சி அளிக்கும் நடன இயக்குனர் புலியூர் சரோஜா

கலா `மாஸ்டர்’

தென்னிந்தியாவின் சிறந்த நடனக் கலைஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் கலா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை தன் நடன அசைவுகளால் மெருகேற்றியுள்ளார். 1971-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கலா. இவருடன் பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள். இவர் ஆறாவது பெண். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே நடனத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது பள்ளிப்படிப்பை விட்டு விலகினார் கலா. 1982-ஆம் ஆண்டு தனது பன்னிரண்டாவது வயதில் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார்.

தென்னிந்திய சினிமாவின் மூத்த நடனக்கலை இயக்குனரான கலா, அனைவராலும் `கலா மாஸ்டர்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் கலா சிறிது காலம் ரகு மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராகப் பணியாற்றினார். தனது தொடர் முயற்சியாலும், உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி திரைத் துறையில் அழுத்தமாகக் காலூன்றினார். தமிழ் மற்றும் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர்களான கே.எஸ்.ரவிக்குமார், கமல்ஹாசன், கே.பாலச்சந்தர், ஃபாசில், பிரியதர்சன், மணிரத்னம் போன்றவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இவர் நடன இயக்குநராகப் பணியாற்றிய திரைப்படங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கவை: ப்ரணயவர்ணங்கள், ரோஜா, வானமே எல்லை, பாசக்கிளிகள், சந்திரமுகி, புது புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல. இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய் போன்ற பல நாடுகளிலும் 300-க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார் கலா. 1996-இல் பெங்களூரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் இவரது நடனப் பயிற்சிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சென்னையில் `கலாவின் கலாலயா’ என்ற சினிமா நடனப் பள்ளியைத் தொடங்கி நடனப் பயிற்சிகளை பலருக்கும் அளித்து வருகிறார். இப்பள்ளிக்கு சென்னையில் மட்டுமே ஐந்து கிளைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. `நாட்டிய தாரகை விருது’ பெற்ற கலா தனது சிறந்த நடன அமைப்புக்காக ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். `கொச்சு கொச்சு சந்தோசங்கள்’ என்ற மலையாளத் திரைப்படம் இவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. அப்போது இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவப்படுத்தினார்.


கலா ‘மாஸ்டர்’

பிருந்தா `மாஸ்டர்’

தென்னிந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்களுள் ஒருவரான பிருந்தா, நடன இயக்குநர் கலாவின் சகோதரி. இந்தியாவின் பல்வேறு மொழித் திரைப்பட பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் இவர். பள்ளிப் பருவத்தில் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டாத மாணவியாக இருந்தாலும், விளையாட்டு, நடனம், இசை போன்றவற்றில் அதீத ஈடுபாட்டுடன் இருப்பாராம் பிருந்தா. 1987-ஆம் ஆண்டு இவர் முதன்முதலில் துணை நடன இயக்குநராக `இன்சாப் கி புகார்’ என்ற திரைப்படத்தில் பணிபுரிந்தார். 1999-ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் விஜயின் `மின்சார கண்ணா’ திரைப்படம்தான் இவர் நடன இயக்குநராகப் பணியாற்றிய முதல் திரைப்படம். தமிழில் வெளிவந்த முகவரி, காக்க காக்க, மதுர, ஆதி, தீபாவளி, வாரணம் ஆயிரம், மான் கராத்தே, புல்லட் ராஜா, தெறி, கடல் , காற்று வெளியிடை, தலைவா, காலா, சர்க்கார் போன்ற பல திரைப்படங்களுக்கும் நடன இயக்குனராக இருந்து நடிகர் நடிகைகளை ஆட்டுவித்திருக்கிறார் இவர். சமீபத்தில் வெளிவந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிரம்மாண்ட திரைப்படமான `பொன்னியின் செல்வன் 1` மற்றும் `பொன்னியின் செல்வன் 2’-லும் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற பல பிரபலங்களுக்கும் நடன இயக்குநராக இருந்துள்ளார். 1995-ஆம் ஆண்டு வெளிவந்த `நம்மவர்’ திரைப்படத்தில் நிர்மலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார். அந்த கதாபாத்திரம் இன்றளவுக்கும் பெரிதும் பேசப்படுகிறது. நடன இயக்குநர், நடிகை என்பதைத் தாண்டி, 2020-ஆம் ஆண்டு `ஹே சினாமிகா’ என்ற திரைப்படத்தை இயக்கி, தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதையும் நிரூபித்திருக்கிறார். இவரின் உழைப்புக்கும், நடனத் திறனுக்கும் கிடைத்த விருதுகள் ஏராளம். 1997-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடன இயக்குநருக்கான ஃபிலிம் பேர் விருது, 1998-ஆம் ஆண்டில் `தயா’ திரைப்படத்திற்காக கிடைத்த சிறந்த நடன இயக்குநர் விருது, 2007-ஆம் ஆண்டு சிறந்த நடன இயக்குநருக்கான தமிழக அரசு விருது (`தீபாவளி’ திரைப்படத்திற்காக) என எண்ணற்ற விருதுகள் இவரது புகழுக்குப் பெருமை சேர்த்து வருகின்றன. திரைத்துறையில் இடைவிடாது தொடர்ந்து பங்களித்து வரும் பிருந்தா, நடன இயக்குநராக விரும்பும் பெண்களுக்கு சிறந்ததொரு முன்னுதாரணம்.


நடன இயக்குனர் பிருந்தா ‘மாஸ்டர்’

ராதிகா

சென்னையைச் சேர்ந்த ராதிகா, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமது ஆறாவது வயதில் உடுப்பி லட்சுமண நாராயணனிடம் பரதம் பயின்ற ராதிகா, பன்னிரண்டாவது வயதில் சினிமா பயணத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்தார். டி.கே.ராஜேந்திரன் இயக்கிய `தாலாட்டு’ திரைப்படத்தில் நடனக் கலைஞராக அறிமுகமானார். ஆரம்ப காலங்களில், பிரபல நடன இயக்குநர்களின் கீழ் பல படங்களில் குழு நடனக் கலைஞராகவும் நடித்துள்ளார்.

கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் மென்மேலும் வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறிய ராதிகா, இன்று தமிழ் சினிமாவின் நடன இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்கிறார். தருண் குமார், பிருந்தா, ராஜுசுந்தரம், சின்னி பிரகாஷ் மற்றும் ராகவா லாரன்ஸ் போன்ற பிரபல நடன இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன், அர்ஜுன் என அனைத்து முன்னணி நடிகர்களையும் ஆட்டுவித்திருக்கிறார். ராதிகாவின் கணவர், இசையமைப்பாளர் இளையராஜாவின் குழுவில் கீபோர்டு வாசித்து வருகிறார். தாம் கற்ற நடனக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், 300-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட நடன அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார் ராதிகா.


நடன இயக்குனர் ராதிகா

இயக்குநர் மிஸ்கினின் `முகமூடி’ திரைப்படத்தின் நடனக் காட்சிகள் முழுவதையுமே வடிவமைத்துத் தந்ததன் மூலம், தான் ஒரு சிறந்த நடன இயக்குநர் என்பதை நிரூபித்தார் ராதிகா. அழகன் அழகி, சட்டம் ஒரு இருட்டறை, குறும்புக்கார பசங்க, மரியான், சிகரம், தாரை தப்பட்டை, மீண்டும் ஒரு காதல் கதை, ரோமியோ ஜூலியட் என பல திரைப்படங்கள் இவரது நடனத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நடன இயக்குநர்கள் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் ராதிகா.

Updated On 8 Aug 2023 4:43 AM GMT
ராணி

ராணி

Next Story