
தமிழ் சினிமாவில் இன்றைய காலக்கட்டத்தில், ஒரு படம் ஒரு வாரத்திற்கும் மேல் வெற்றிக்கரான ஓடியது என்றாலே அது வெற்றிதான். காரணம் ஓடிடி தளங்களும், சமூக ஊடகங்களும்தான். ஒரு படம் குறித்து யூடியூப்களில், சினிமா சேனல்களில், செய்தி ஊடகங்களில் கொடுக்கப்படும் ரிவியூக்கள்தான் அதன் வெற்றியை தீர்மானிக்கின்றன. இந்நிலையில் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு திரைப்படங்களின் ஆன்லைன் விமர்சனத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? எதனால் இந்த மனு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது ? என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம்.
ஹரிதாஸ் படத்தில் தியாகராஜ பாகவதர், டி. ஆர். ராஜகுமாரி - சந்திரமுகி ரஜினிகாந்த்
3 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஓடிய படம்...
இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரத்தை திரையரங்குகளில் தாண்டுமா என சந்தேகம் எழுகிறது. அதற்கு முன்பெல்லாம் மூன்று வருடங்கள்வரை எல்லாம் தொடர்ந்து ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுமாம். அப்படி ஓடி சாதனை படைத்த திரைப்படம் எது தெரியுமா? இந்திய சுதந்திரத்திற்கு முன்பு 1944ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹரிதாஸ். இப்படம்தான் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம். இப்படத்தை சுந்தர ராவ் இயக்கி இருந்தார். இதில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஓடி சாதனை படைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’. 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி 890 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை, பயணங்கள் முடிவதில்லை, ஒருதலை ராகம், கரகாட்டக்காரன் போன்ற படங்கள் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள் என்ற வரிசையில் அடுத்தடுத்து உள்ளன. இந்த படங்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடியவை.
பிரபல ஓடிடி தளங்கள்
தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை...
இந்தியாவில் தற்போது பல ஓடிடி தளங்கள் வந்துவிட்டன. ஓடிடி தளங்கள் தலைதூக்கியதிலிருந்து திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கினர். இதனால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடமும், தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றை வைத்தது. அதாவது ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் 8 வாரம் கழித்தும், அதற்கடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படங்கள் 6 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் திரையிடவும், தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில்தான் திரையிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டன. சில மாநிலங்களில் திரைப்படங்கள் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழ்நாட்டில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவித்தனர். இருப்பினும் பல படங்கள் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.
கங்குவா படத்தில் சூர்யா - ராட்சசி படத்தில் ஜோதிகா
கங்குவா சொதப்பல்... நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் சங்கம் மனு..
ரெட்ரோ திரைப்படத்திற்கு முன்பு, ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பான் இந்தியா படமாக வெளியானது சூர்யாவின் ‘கங்குவா’. சிறுத்தை சிவா இயக்கத்தில், ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம்தான் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமாகும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இப்படம் உலகளவில் ரூ.2,000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் தெரிவித்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. ஆனால் வெளியான அன்றே முதல் காட்சியில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற தொடங்கியது கங்குவா. சிவாவின் இயக்கம், பிரம்மாண்டமான அதிரடி காட்சிகள், என கங்குவா ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருந்த போதிலும், படத்தின் கதை மிகவும் மோசமாக உள்ளது என்று யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. எதிர்மறையான விமர்சனங்கள் பரவின. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையத் தொடங்கி ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கவில்லை. பலரும் OTT வெளியீட்டிற்காக காத்திருந்தனர். விமர்சனங்களால் அடிவாங்கிய கங்குவா, மந்தமான வசூலை பெற்று, படக்குழுவினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அப்போது கங்குவா பெரிதாக பேசப்பட்டது. இதனால் கோபமடைந்த ஜோதிகா கூட தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கங்குவா குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு காட்டமாக பதிலளித்திருப்பார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான கங்குவா தோல்வியை தழுவியது தயாரிப்பாளர்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது. கங்குவாவின் தோல்விக்கு யூடியூப் ரிவியூக்களால் எழுந்த விமர்சனங்களே முக்கிய காரணம் என்பதை அறிந்த தயாரிப்பாளர் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் திரையரங்குகளில் வெளியான முதல் 3 நாட்களுக்கு திரைப்படங்களின் ஆன்லைன் விமர்சனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்
திரைப்படங்கள் மீதான விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது...
ஆன்லைன் விமர்சனத்தைத் தடை செய்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனு ஜூன் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பிரதான ஊடகங்கள் மற்றும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் புதிதாக வெளியிடப்பட்ட திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும். எனவே, தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. இன்று நீதிபதிகள் பற்றி கூட மக்கள் எதிர்மறை மதிப்புரைகளை வழங்கும் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம்.
நீங்கள் இங்கே ஒருவரைத் தடுத்தால், அஜர்பைஜானில் இருந்து மற்றொருவர் அதைச் செய்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் கோரியபடி நான் ஒரு உத்தரவைப் பிறப்பித்தாலும், அந்த உத்தரவை எவ்வாறு செயல்படுத்த முடியும்? செயல்படுத்த முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த நீதிமன்றத்தின் முன் நீங்கள் சாத்தியமற்றதைத் தேடுகிறீர்கள். திரையரங்குகளில் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு திரைப்படங்களின் ஆன்லைன் விமர்சனத்தைத் தடை செய்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம். எனவே ரிட் மனுவில் மனுதாரர் கோரும் நிவாரணம் நிலைத்தன்மையற்றது, இந்த நீதிமன்றத்தால் அதை வழங்க முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விடாமுயற்சி அஜித் - தக் லைஃப் போஸ்டர்
விமர்சனங்களால் வீழ்ந்த படங்கள்...
விமர்சனங்களால் தமிழ் சினிமாவில் பல படங்கள் அடிவாங்கியுள்ளன. அதில் அண்மையில் வெளியான உச்ச நட்சத்திரங்களான அஜித்தின் விடாமுயற்சியும், கமலின் தக்லைஃப் திரைப்படமும் அடங்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில், எந்த அலட்டலும் இல்லாமல் அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் ‘விடாமுயற்சி’. இது நல்ல வரவேற்பை பெறும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், அஜித் ரசிகளுக்கே ஏமாற்றத்தை அளித்தது. காரணம் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் இதுபோன்ற கதைகளத்தை தேர்வு செய்ததுதான். மகிழ் திருமேனி நல்ல படத்தை கொடுக்கக்கூடியவர் என்பதால், படத்தின் காட்சிகள் தரமானதாக இருந்தது. ஆனாலும், அஜித்தின் மாஸ் இல்லாத கேரக்டரை அவரது ரசிகர்களே ஏற்கவில்லை. அதேநேரம் படம் குறித்து வெளியான கருத்துகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்தது. இதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதுபோல கமல்ஹாசனின் தக் லைஃப். கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்ற அறிவிப்பே பலரது எதிர்பார்ப்பை எகிற செய்தது.
கூடுதலாக சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் என பெரும் நடிகர் பட்டாளமே இணைகிறார்கள் என்ற அறிவிப்பு மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்தது. இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடலும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இந்த நிலையில் கர்நாடகா தவிர்த்து உலகம் முழுவதும் கடந்த ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியானது. 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான படம் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது. ஒரு விமர்சனம் கூட தக் லைஃப் படத்திற்கு ஆதரவாக இல்லை. இதனால் படம் பெரிதாக ஓடவில்லை.
