இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(02.02.1975 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

குட்டி நட்சத்திரமாக இருந்து, குமாரி நட்சத்திரம் ஆகி இருப்பவர், ஸ்ரீதேவி!. ஸ்ரீதேவி 6 வயதில் சினிமாவில் நுழைந்தார். முதன் முதலில் சினிமா வாய்ப்பைக் கொடுத்தவர், டைரக்டர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்! நடித்த படம் "குலவிளக்கு." அதை தொடர்ந்து எந்தப் படத்தில் முருகன் வேடம் என்றாலும், ஸ்ரீதேவிதான். "கணீர்" என்ற குரல் அவருக்கு சிறப்பு அளித்தது.

குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே ஸ்ரீதேவி மூன்று மொழிப் படங்களில், "சிறந்த குழந்தை நட்சத்திரம்" ஆக தேர்ந்து எடுக்கப்பட்டு பரிசு பெற்றார். தமிழில் “பாபு” வும், மலையாளத்தில் "பூம் பாட்டா" என்ற படமும், தெலுங்கில் "நாத்தம்புடு" என்ற படமும் ஸ்ரீதேவிக்கு "சிறந்த குழந்தை நட்சத்திரம்" என்ற பெருமையை தேடிக்கொடுத்தன.

ஸ்ரீதேவி "குமாரி" ஆனதும் நான்கு மொழி நடிகையாகிவிட்டார். இந்தியில் எடுக்கப்படும் "சட்டைக்காரி" படத்தில், நடிகை லெட்சுமிக்கு தங்கையாக நடிக்கிறார். ''குமாரி" ஆன பிறகு ஸ்ரீதேவி ஒப்பந்தம் ஆன முதல் படமும் இதுதான்!

பக்குவம் வேண்டும்


நடிகை ஸ்ரீதேவியின் குழந்தை பருவம் மற்றும் குமாரி ஆகி இந்தி திரையுலகில் நடிக்க ஆரம்பித்த தருணம்

"குமாரி" ஆன பிறகு 'தமிழ்ப் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லையா??" என்று நிருபர் கேட்டார்.

"நிறைய படத் தயாரிப்பாளர்கள் வந்து பார்த்தார்கள். "இன்னும் கொஞ்சம் பக்குவப்பட வேண்டும். உடம்பில் சதைப்பிடிக்க வேண்டும்" என்று அம்மா சொல்லி அனுப்பிவிட்டார்கள். எனது ஆசையும் அதுதான்!, அதற்காக, இப்பொழுது உடற்பயிற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன்” என்று சொன்னார் ஸ்ரீதேவி!!

நிருபர்: இனிமேல் கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பீர்களா?

ஸ்ரீதேவி: நான் கற்று முடித்தவள் அல்ல. கற்க வேண்டியவள். எடுத்த எடுப்பிலேயே உயர்ந்துவிட நான் விரும்பவில்லை. படிப்படியாக முன்னேறவே ஆசைப்படுகிறேன். சிறு பாத்திரங்கள் கிடைத்தாலும், அவை ரசிகர்கள் மனதில் பதியும்படியாக இருந்தால், நிச்சயம் ஏற்று நடிப்பேன்.

"பாபி"யே, வா!


பாலிவுட் நடிகையான பிறகு ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

நிருபர்: நீங்கள் புதுமலர்! உங்களை கவர்ச்சிக் கன்னியாக அறிமுகப்படுத்த படத்தயாரிப்பாளர்கள் முன் வந்தால், ஏற்றுக் கொள்வீர்களா?

ஸ்ரீதேவி: நான் வெறும் கவர்ச்சிப்பாவையாக மட்டும் இருக்க விரும்பவில்லை. நடிக்கவும் வேண்டும். கதைக்கு கவர்ச்சி தேவை என்றால், மறுக்கமாட்டேன். "பாபி"யைப் பாருங்கள். டிம்பிள் கபாடியா சில காட்சிகளில் குறைந்த ஆடையோடு வருகிறார். ஆனாலும் அது ஆபாசமாகத் தெரியவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அப்படி! கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதுதானே - நடிப்பு!

நிருபர்: "சடைக்காரி" இந்திப் படத்தில் நடிக்கிறீர்களே! தொடர்ந்து இந்தியில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?

ஸ்ரீதேவி: “சட்டைக்காரி"யில் நடிகை லெட்சுமிக்கு தங்கையாக நடிக்கிறேன். என் வயதுக்கும் உடல் வாகுக்கும் ஏற்ற பாத்திரமாக இருந்ததால், நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்திப் பாடகர் கிஷோர் குமார் சொந்தமாக தயாரிக்கும் படத்தில் கூட என்னை நடிக்க அழைத்தார். "இன்னும் கொஞ்ச நாள் கழித்துப் பார்க்கலாம்" என்று அம்மா சொல்லிவிட்டார்கள்.

நிருபர்: உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லவில்லையே!

ஸ்ரீதேவி: எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனாம்பட்டி கிராமம். அப்பா அய்யப்பன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக இருக்கிறார். அம்மா, ராஜேசுவரி. அம்மாதான் நான் நடிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். இப்பொழுதும் எடுத்து வருகிறார்கள்.

கட்டுப்பாடு


அழகிய நடன மங்கையாக காட்சியளிக்கும் ஸ்ரீதேவி

நிருபர்: படப்பிடிப்பு இல்லாதபோது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

ஸ்ரீதேவி; குமாரி ஆன பிறகு, என் வாழ்க்கையே மாறிவிட்டது. முன்பு நினைத்த நேரத்தில் தோழிகள் வீட்டுக்குப் போவேன். வீட்டுக்கு வருகிறவர்களிடம் பேசிக் கொண்டு இருப்பேன். ஆனால், இப்பொழுது அப்படி முடிவதில்லை. க(ன்)னி அல்லவா? அம்மாவின் துணை இல்லாமல் வெளியே போக முடிவது இல்லை. மற்றவர்களுடன் அரட்டை அடிக்கவும் முடிவது இல்லை. வயது வந்ததும், கட்டுப்பாடும் தானாக வந்து விட்டது!

நிருபர்: ரசிகர்களுக்கு என்ன கூறுகிறீர்கள்?

ஸ்ரீதேவி: ஒரு நட்சத்திரத்தின் வளர்ச்சி ரசிகர் கையில்தான் உள்ளது! நான் குட்டி நட்சத்திரமாக இருந்தபோது எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த ரசிகர்கள், அதைத் தொடர்ந்து தர வேண்டும். தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

Updated On 24 Jun 2024 6:09 PM GMT
ராணி

ராணி

Next Story