
இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் மிக முக்கியமான யதார்த்தமான படைப்பாளிகளில் ஒருவர். 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை', 'அசுரன்', 'விடுதலை' போன்ற இவரது திரைப்படங்கள் சமூகத்தின் ஆழமான அடுக்கில் உள்ள உண்மைகளைப் பேசியதோடு, தனக்கென ஒரு தனித்த முத்திரையைப் பதித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன. இருப்பினும், அவரது சில படைப்புகள் சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. இவரது திரைப்படங்கள் ஆழமான கருத்துகளை வலியுறுத்துபவை என்றாலும், அவரது கதைகளை இரண்டு பாகங்களாகப் பிரித்து வெளியிடும் பாணி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் அதே சமயம் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளன. ஏற்கனவே நடிகர் தனுஷை வைத்து எடுத்த 'வடசென்னை' (இரண்டாம் பாகம் வரவில்லை), சமீபத்தில் வெளியான 'விடுதலை' (இரண்டு பாகங்கள்) ஆகியவற்றின் தொடர்ச்சியாக, தற்போது நடிகர் சிம்புவை (STR 49) வைத்து இயக்கவுள்ள படமும் இரண்டு பாகங்களாக வர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதேபோல் இப்படமும் வடசென்னை பின்னணியில் உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி சாதிக்குமா? ஏன் வெற்றிமாறன் தனது கதைகளைச் சுருக்கிச் சொல்லாமல், நீளமான இரண்டு பாகங்களாகப் எடுக்கிறார்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த தொகுப்பு.
நீண்ட நாள் எதிர்பார்ப்பு
வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணி பற்றிய பேச்சு பல ஆண்டுகளாகத் திரையுலக வட்டாரத்தில் இருந்தும், பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. சிம்பு ரசிகர்களுக்கு இது ஒரு நிறைவேறாத கனவாகவே மாறியது. இந்த நிலையில்தான் தற்போது இந்தக் கூட்டணி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு, படப்பிடிப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான, தேசிய விருது பெற்ற வெற்றிமாறனுடன் சிம்பு இணைவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. சிம்புவின் நடிப்புத் திறமையை புதிய தளத்திற்கு கொண்டு சென்று, அவருக்கு மீண்டும் ஒரு சாதனைப் பதிவை உருவாக்க வெற்றிமாறனால் மட்டுமே முடியும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.
'மாநாடு' திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் சிம்பு
சொல்லப்போனால் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் ‘மாநாடு’ படத்திற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவிலான தொடர் வெற்றிகள் எதுவும் அமையவில்லை. கடந்த ஜூன் மாதம் வெளியாகி, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தக் லைஃப்' திரைப்படமும் எதிர்பார்த்த பிரம்மாண்ட வெற்றியைப் பெறத் தவறியது. மேலும், 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமார் இயக்கவிருந்த படம் மற்றும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவிருந்த படம் உள்ளிட்ட சிம்புவின் அடுத்தடுத்த திட்டங்களும் தற்போது தள்ளிப்போகும் சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், சிம்புவுக்கு சினிமா வாழ்க்கையில் உடனடியாக ஒரு பிரம்மாண்டமான 'ஹிட்' அத்தியாவசியமாகிறது. இந்த வெற்றிடத்தை வெற்றிமாறனின் திரைப்படம் நிச்சயம் நிரப்பும் என்றும், சிம்புவின் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மீண்டும் இரண்டு பாகம் !
இயக்குநர் வெற்றிமாறன் என்றாலே, அது காலதாமதத்துடன் வரும் ஒரு தரமான படைப்பு என்ற எழுதப்படாத விதி தமிழ் சினிமாவில் உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் அவர் எடுத்துக்கொள்ளும் கூடுதல் கால அவகாசம், அந்த கதைக்கான அதிகப்படியான உழைப்பையும், நேர்த்தியான தரத்தையும் உறுதி செய்வதற்காகத்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகலாம் என்ற தகவல், சிம்பு ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிம்புவின் படங்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகாத நிலையில், அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளிவர மேலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம் என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒருபுறம், வெற்றிமாறன் என்றாலே அது தரமான, அழுத்தமான படைப்பாக அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும், மறுபுறம் சிம்புவின் திரைப் பயணத்தில் ஏற்படும் இந்த நீண்ட காலதாமதம், அவரது ரசிகர்களால் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சவாலான கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிம்பு
எனினும், இந்தப் படத்தை தயாரிக்கும் தாணுவின் உறுதியான வார்த்தைகளும், நடிகர் சிம்புவின் மீது அவர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ரசிகர்களைப் பொறுமை காக்க தயார் செய்துள்ளது. முக்கியமாக, சமீபத்தில் சிம்புவின் செயல்பாடு இந்தப் படத்தின் மீதான அவரது அக்கறையை தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. ஏனெனில் இந்த படத்திற்காக படக்குழுவினர் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டபோது, தயாரிப்பாளரின் நிதிச் சுமையை கருத்தில் கொண்டு, சிம்புவே முன்வந்து 'லைவ் லொகேஷனிலேயே' படப்பிடிப்பை நடத்தி முடிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார். இருப்பினும் நடிகர்களின் பாதுகாப்பு கருதி தற்போது பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறது. இது, சிம்பு இந்தப் படத்தின் மீது கொண்டிருக்கும் தீவிரமான அக்கறையையும், இந்த வெற்றிக் கூட்டணி எப்பாடுபட்டாவது சாதிக்க வேண்டும் என்ற அவரது உறுதியையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இதனால், காலதாமதம் ஏற்பட்டாலும், ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருக்க ரசிகர்கள் தயாராகவே உள்ளனர்.
கதையின் தேவையா ?
வெற்றிமாறன் தனது சமீபத்திய திரைப்படங்களை இரண்டு பாகங்களாக வெளியிடுவதற்கான காரணம், அவரது கதையின் வீச்சு மற்றும் ஆழமான உள்ளடக்கம்தான். இதை வெறும் 'கதை சுருக்கத் தெரியாதது' என்று சுருக்கிவிட முடியாது. அவரது திரைப்படங்கள் வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதைவிட, ஒரு சமூக அமைப்பின் ஆழமான அரசியல், பண்பாடு மற்றும் வரலாற்றுப் பின்னணியைப் பேசுகின்றன. எடுத்துக்காட்டாக, 'விடுதலை' திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக வெளிவந்தது. அத்தகைய ஒரு கதையை இரண்டரை மணி நேரத்திற்குள் சுருக்க முயற்சிப்பது, கதையின் ஆழத்திற்குச் செய்யும் துரோகமாக இருக்கும் என அவர் கருதுகிறார். இரண்டு பாகங்களாக எடுப்பதன் மூலம், அவர் தன் கதாபாத்திரங்களின் மனநிலைகள், அவர்களின் சமூகப் பின்னணி, அவர்கள் சந்திக்கும் சிக்கல்களின் முழுமையான பரிமாணங்கள் என அனைத்தையும் நுணுக்கமாகக் காட்ட முடிகிறது. இது படத்தின் ஆழமான உள்ளடக்கம் குறையாமல், முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற அவரது நோக்கத்தை நிறைவேற்ற உதவுகிறது.
தனுஷின் வட சென்னை பாணியில் சிம்புவையும் இயக்க இருக்கும் வெற்றிமாறன்
எனினும், இவ்வாறு இரண்டு பாகங்களாக பிரித்து எடுப்பது, வெளியீட்டில் தாமதத்தை ஏற்படுத்தி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் கால ரீதியாகவும் நெருக்கடிகளை உருவாக்கலாம். இருப்பினும், அவ்விரண்டு பாகங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால், அது மிகவும் லாபகரமான முதலீடாக மாறும். இதற்கு ‘பாகுபலி’ மற்றும் ‘கே.ஜி.எப்’ போன்ற திரைப்படங்களே உதாரணம். ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற போதும், வணிக ரீதியாகச் சுமாரான வெற்றியையே பெற்றதுடன், அதன் இரண்டாம் பாகம் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது சிம்புவை வைத்து அவர் இயக்கவுள்ள 'STR 49' திரைப்படமும் இரு பாகங்களாக வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது அச்சம் கலந்த மகிழ்ச்சியை சிம்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. காரணம் இது 'வடசென்னை' இரண்டாம் பாகம் இதுவரை வெளியாகாதது போலவோ அல்லது சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படம் கைவிடப்பட்டது போலவோ, இப்படமும் ஆகிவிடுமோ என்ற எண்ணம்தான். ஆனால், 'STR 49' திரைப்படம் நிச்சயமாக உருவாகும் என்பது தயாரிப்பு தரப்பின் உறுதியான நம்பிக்கை.
சாதிப்பாரா வெற்றிமாறன் ?
வெற்றிமாறன் மற்றும் சிம்பு இணையும் STR 49 திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெற்றிமாறனின் கனவுப் படமான 'வாடிவாசல்' தற்காலிகமாகக் கைவிடப்பட்ட நிலையில், இந்த புதிய கூட்டணி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனை தேவைப்படும் சிம்புவுக்கு, இந்தப் படம் சினிமா எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. இந்தப் புதிய கதையை இரண்டு பாகங்களாக உருவாக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பது சில கேள்விகளை எழுப்பினாலும், ஒட்டுமொத்தப் படைப்பின் மீதான ரசிகர்களின் நம்பிக்கையை அது சிறிதும் குறைக்கவில்லை. வெற்றிமாறன் படங்களின் தரமும், நடிகர் சிம்புவின் அபாரமான நடிப்புத் திறமையும் ஒருங்கே இணையும்போது, இந்த படத்தின் வெளியீட்டுத் தாமதத்தை ரசிகர்கள் ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள்.
கைவிடப்பட்ட வாடிவாசல், தொடங்கப்பட்ட சிம்பு 49
அதிலும் சமீப காலமாக வெற்றிமாறன் பல பேட்டிகளில், இந்தப் படம் சிம்புவின் முழு நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வரும் என்று அழுத்தமாகச் சொல்லி வருவது, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும், இந்தப்படம் 'வட சென்னை' திரைப்படத்தின் நேரடித் தொடர்ச்சியாக (பாகம் 2) இருக்காது என்றும், ஆனால் அதே காலகட்டத்தில், அதே யூனிவர்ஸில் நிகழும் ஒரு சம்பவமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், இந்தப் படம் வெளியாகும் போது, அது தரமான ஒரு படைப்பாகவும், தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பேசப்படும் ஒரு படமாகவும் இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. அதிலும் STR 49, சிம்புவின் சினிமா பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாகவும், வெற்றிமாறனின் திரைப்பயணத்தில் மற்றொரு அழுத்தமான பதிவாகவும் அமையும் என்று உறுதியாக நம்பலாம். இதேநேரம் ரசிகர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை, இந்தப் படத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிட வேண்டும் என்பதுதான்.
