
40 வருடம் தென்னிந்திய சினிமாவை கலக்கிய உச்ச நட்சத்திரம்.. அனைத்து ஜாம்பவான் நடிகர்களோடும் ஈடு கொடுத்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த பேரழகி.. இதுவரை எந்த ஒரு ஆணவமான பேச்சையோ, தான் ஒரு பெரிய நடிகை என்ற பந்தாவையோ துளியும் காட்டாமல் எல்லோரிடமும் எளிமையான புன்னகை, எதார்த்தமான குணம், பணிவான பேச்சு என்று பலரது மனதுக்கும் நெருக்கமான ஒருவராக திரையுலகில் வலம் வருபவர்… அவர்தான் "காந்த கண்ணழகி" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து தன் கவர்ச்சியான நடிப்பாலும், கண்களாலும் ரசிகர்களைக் கவர்ந்ததன் மூலம் பேரழகி, அழகு தேவதை என்றெல்லாம் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறார். இருப்பினும், இன்றைய சூழலில் தனியொரு பெண்ணாக பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் மீனா, கணவரின் மறைவுக்கு பிறகு எல்லா பெண்களையும் போன்று பலவிதமான விமர்சனங்களையும், மோசமான வசைவுகளையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை மீனா புதிதாக அரசியல் களத்திலும் குதிக்க இருப்பதாகவும், எடுத்த எடுப்பிலேயே பா.ஜ.க.வில் மத்திய அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் தீயாய் பரவி வருகின்றன. அதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தது எப்படி?
அம்மா ராஜமல்லிகா துணை நடிகையாக இருந்ததாலோ என்னவோ மீனாவும் குழந்தையிலேயே திரையுலகில் அதுவும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்துவிட்டார். 1982-ல் சிவாஜி கணேசனின் 'நெஞ்சங்கள்' திரைப்படத்தின் வாயிலாக குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான மீனா தொடர்ந்து, 'எங்கேயோ கேட்ட குரல்', 'பார்வையின் மறுபக்கம்', 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்', 'சுமங்கலி', 'திருப்பம்' போன்ற பல படங்களில் நடித்தார். ஆனாலும், அவருக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்றுத்தந்த படம் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படம்தான். இப்படத்தில் அன்று இவர் பேசிய வசனமான ரஜினி அங்கிள் என்ற வார்த்தைகள் இன்றும் மீனாவை நினைவுபடுத்த தவறுவதில்லை. அந்த அளவுக்கு குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்ற மீனா 1991-ல் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக 'சோலையம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது 15-வது வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் பெற்றார். இந்தப் படத்தின் வெற்றி, மீனாவுக்குத் தமிழில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது. இதற்கு பிறகு தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று பிற மொழிப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தவர், அத்தனை மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து சிறிது காலத்திலேயே யாராலும் அசைக்க முடியாதபடி உச்ச நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
அன்புள்ள ரஜினிகாந்த்தில் குழந்தை நட்சத்திரமாக மற்றும் தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலில் மீனா
இயக்குநர் சேரனின் ‘பொற்காலம்’ திரைப்படத்தில் வரும் “தஞ்சாவூரு மண்ணு எடுத்து… தாமிரபரணி தண்ணி எடுத்து… சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்ம” என்று இவருக்காகவே எழுதப்பட்ட பாடலை போன்று ஒவ்வொரு படங்களிலும் தன் கவர்ச்சிகரமான அழகாலும், நடிப்பாலும், காந்த கண்களாலும் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப்போட்ட மீனா அவ்வளவு எளிதாக அந்த உச்சத்தை தொட்டு விடவில்லை. அதற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்… போராடினார். இவை எல்லாவற்றையும் தாண்டி தன் கனிவான குணத்தினால், பணிவான நடத்தையால் உடன் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் நல்லதொரு நன்மதிப்பை பெற்றதாலோ என்னவோ அதுவும் இவரின் உச்சபட்ச வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இப்படி 2009-வரை திரையுலகில் கொடிகட்டி பறந்த மீனா மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் போதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை மணந்து குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தார். பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார். இப்படியான சூழ்நிலையில்தான் நடிகை மீனாவை நோக்கி வேறுவிதமான விமர்சனங்கள் உலாவர தொடங்கின.
நடிகை மீனாவை சுற்றிய விமர்சனங்கள்…
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் கோளாறு காரணமாக 2022-ல் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவரது இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரவின. புறாக்களின் எச்சம் காரணமாக ஏற்பட்ட அலர்ஜிதான் அவரது மரணத்திற்குக் காரணம் என்பது போன்ற போலியான செய்திகள் பரப்பப்பட்டன. இதையடுத்து, நடிகை மீனா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தனது கணவர் இறப்பால் மிகுந்த துயரத்தில் இருப்பதாகவும், இந்த நேரத்தில் தங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து, தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் ஊடகங்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவரது கணவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்ததாகவும், ஆனால் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாகவும் மீனா தெளிவுபடுத்தினார்.
கணவர் வித்யாசாகருடன் அழகான தருணம் ஒன்றில் மீனா
அதோடு நிற்கவில்லை. இந்த சமூகத்தில் ஒரு பெண் தனிமையாகிவிட்டால் அவளைச்சுற்றி என்னவெல்லாம் கட்டுக்கதைகள் பின்னப்படுமோ அது மீனாவின் வாழ்விலும் அரங்கேறத்தொடங்கியது. அதன் முதல்படிதான் கணவரின் மறைவுக்குப் பிறகு, நடிகை மீனா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல். அதுவும் விவாகரத்து பெற்ற ஒரு நடிகருடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதனால் மீனா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த வதந்திகள் மீனாவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தின. இந்த வதந்திகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பதிலளித்து, தான் இன்னும் கணவர் இழப்பின் துயரத்தில் இருந்து மீளவில்லை என்பதைத் தெரிவித்தார். நடிகை சாந்தி வில்லியம்ஸ் போன்ற சக கலைஞர்களும், மீனா குறித்து பரவும் இத்தகைய வதந்திகள் வருத்தம் அளிப்பதாகவும், இதைத்தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்தத் துயரமான காலகட்டத்தில், இத்தகைய போலியான விமர்சனங்களையும், தவறான தகவல்களையும் மிகவும் பொறுமையாகவே கையாண்டது மட்டுமின்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையை மிகுந்த பொறுமையுடனும், கண்ணியத்துடனும் கையாண்டார் மீனா.
அரசியல் பிரவேசம்
சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலிக்கும் நடிகை மீனா, தற்போது அரசியலில் கால் பதிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் பண்டிகையின்போது டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரின் பொங்கல் விழாவில் அவர் பங்கேற்றது, இந்தச் செய்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது. மீனா இந்தக் தகவல்களை மறுத்து வந்தாலும், சமீபத்தில் அவர் டெல்லி சென்று குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் அது உண்மையாகத்தான் இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் குடியரசு தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட மீனா, அதனுடன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பயணிக்க வைக்க உதவும் என்ற பதிவையும் போட்டிருப்பது மேலும் மீனாவின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துவதாக தெரிகிறது.
நடிகைகள் குஷ்பூ, ராதிகாவை தொடர்ந்து பாஜக.வில் இணைகிறாரா மீனா?
ஏற்கனவே மீனாவின் நெருங்கிய தோழியான நடன கலைஞர் கலா தொடங்கி நடிகைகள் குஷ்பூ, ராதிகா என பல நட்சத்திரங்கள் பாஜக.வில் இணைந்து பணியாற்றிவரும் நிலையில், மீனாவும் அவர்கள் வழியை பின்பற்றி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து மீனா தரப்பில் எந்விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. பா.ஜ.கவும் மீனா போன்ற நடிகைகளை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க காத்திருக்கும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் மீனாவையும் கட்சிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற யூகங்களும் எழ ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே காங்கிரசில் இருந்து வந்த குஷ்பூ, கணவரின் கட்சியை கலைத்துவிட்டு வந்த ராதிகா ஆகியோரை வெறுமனே எண்ணிக்கைக்கு மட்டுமே பாஜக பயன்படுத்தி வரும் நிலையில், மீனாவின் வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மீனாவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
மீனா விரைவில் பாஜகவில் இணைந்து மத்திய இணையமைச்சர் பதவியைப் பெறக்கூடும் என்ற வதந்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. மீனாவுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல், பாஜகவின் பெண் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக.வில் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்ற மூத்த மற்றும் நீண்டகாலத் தலைவர்கள் இருக்கும்போது, கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது "அளவுக்கு அதிகம்" என்று அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
மீனாவுக்கு எதிராக அதிருப்தியை தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன்
காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியைத் துறந்து கட்சிக்கு வந்த பிறகும் இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் இருக்கிறார். இதுகுறித்து அவர் மேடையிலேயே தனது ஆதங்கத்தைப் புலம்பியபோதும் எந்தப் பலனும் இல்லை என்ற வருத்தம் அவருக்குள் சுழன்றுகொண்டிருக்கிறது. தற்போது தென் மண்டலத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராகிவிட்ட நிலையில், தனக்கு ஏதாவது நல்ல பொறுப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விஜயதரணிக்கு இந்தச் செய்தி மீண்டும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. கட்சியில் இன்னும் இணையாத மீனாவுக்கு இணையமைச்சர் பதவியா என்ற கோபத்தில் அவரும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இதுவரை தன்னை நோக்கி வந்த எதிர்மறை விமர்சனங்களை எப்படி பொறுமையாக கையாண்டாரோ அதுபோலவே அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளுக்கும் விரைவிலேயே சரியான பதிலை மீனா தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அவர் தனியொரு பெண்மணியாக சாதிக்க போகிறாரா? அல்லது விமர்சனங்களுக்கு பயந்து ஒதுங்கிப்போகப் போகிறாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
