இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ்நாட்டில் இப்போது வெப்ப அலை எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ அதே அளவிற்கு அரசியலில் தேர்தல் அலையும், சினிமாவில் கில்லி அலையும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சோஷியல் மீடியா பக்கம் போனாலே ‘கில்லி’ திரைப்படத்தின் டயலாக்குகளும், டான்ஸ் ரீல்ஸ்களும், மீம்ஸ்களும்தான் ட்ரெண்டில் இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படத்திற்கு ஏன் திடீரென இவ்வளவு ஹைப்? என்பது பலருக்கும் தெரியும். ஆம், தேர்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதம் புதுப்படங்கள் பெரியளவில் வெளியாகாத நிலையில், பழையப்படங்களை ரீரிலீஸ் செய்து காசு பார்த்து வருகின்றனர் தியேட்டர் ஓனர்கள். அப்படி பல ப்ளாக்பஸ்டர் படங்கள் இதுவரை ரீரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியான ‘கில்லி’ படம் அவை அனைத்தையும் ஓவர்டேக் செய்துவிட்டது என்றே சொல்லலாம். படத்தின் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட அனைவருமே ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் பார்த்து பிரமித்து போய்விட்டதாக கூறிவருகின்றனர். ஏன் ரசிகர்கள் இப்படத்தை இந்த அளவிற்கு கொண்டாடுகிறார்கள்? பார்க்கலாம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கில்லி’

2003ஆம் ஆண்டு தெலுங்கில் ஞானசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஒக்கடு’. இப்படத்தில் மகேஷ் பாபு, பிரகாஷ் ராஜ் மற்றும் பூமிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி அடைந்ததையடுத்து, அதனை தமிழில் ரீமேக் செய்ய நினைத்த இயக்குனர் தரணி முதலில் விக்ரமைத்தான் அணுகினாராம். ஏற்கனவே தரணி - விக்ரம் கூட்டணியில் ‘தில்’, ‘தூள்’ போன்ற படங்கள் வெளியாகி மெகா ஹிட்டடித்திருந்தன. எனவே அடுத்து தரணியின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக விஜய் கூறிய நிலையில், விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கலாம் என்ற முடிவுடன் தயாரிப்பாளரை அணுகியிருக்கிறார் தரணி. இப்படி அமைந்ததுதான் ‘கில்லி’ கூட்டணி. தெலுங்கு ‘ஒக்கடு’ கதையை அப்படியே எடுக்காமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அதில் சில மாற்றங்களை செய்ததாக இயக்குநர் தரணி கூறியிருந்தார். குறிப்பாக, ‘ஒக்கடு’வில் மெலோடி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், ‘கில்லி’யில் குத்து பாடல்கள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோல் ‘அர்ஜுனரு வில்லு’, ‘கொக்கரகொக்கரக்கோ’ மற்றும் ‘அப்படி போடு’ போன்ற மூன்று பாடல்களுமே வைப் கொடுத்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றே சொல்லலாம். வித்யாசாகர் அந்த அளவிற்கு வித்தியாசம் காட்டியிருப்பார். எப்போதுமே ஹீரோக்களுக்குத்தான் இன்ட்ரோடக்‌ஷன் சாங் இருக்கும் என்ற பாணி மாறிக்கொண்டிருந்த சமயம் அது என்பதால், திரிஷாவிற்கு ‘ஷைலாலா ஷைலாலா’ பாடலை அறிமுகப் பாடலாக வைத்திருப்பார்.


தெலுங்கில் வெளிவந்த ‘ஒக்கடு’ vs தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ‘கில்லி’

கடைசியில் காதலனை பிரியும் காதலியின் சோகத்தை உருக உருக ரசிக்கவைக்கும் வகையில் ‘காதலா காதலை’ பாடலை மெலோடி ரகத்தில் இயக்கியிருப்பார் வித்யாசாகர். அதுபோலவே இப்படத்திற்கு மற்றொரு பக்கபலம் பின்னணி இசை. படத்தில் ஹீரோ விஜய் எந்த அளவிற்கு தனது அசால்ட்டான நடிப்பை கொடுத்தாரோ அதே அளவிற்கு தனது அசாத்திய நடிப்புத்திறமையை காட்டியிருப்பார் முத்துப்பாண்டியாக வரும் பிரகாஷ்ராஜ். இந்த படம் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் என அனைவருக்குமே திரைத்துறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக, விஜய்யின் சினிமா கேரியரை கில்லிக்கு முன், கில்லிக்கு பின் என பிரித்து பார்க்கும் அளவிற்கு மார்க்கெட் உயர்ந்தது. ‘ஒக்கடு’வில் தான் மிஸ் செய்த சின்ன சின்ன ஆக்டிங் ஸ்கில்ஸை ‘கில்லி’யில் விஜய் பூர்த்தி செய்திருப்பதாக நடிகர் மகேஷ் பாபு புகழாரம் சூட்டியிருந்தார். ‘கில்லி’ படத்திற்கு இசையமைத்தது பற்றி வித்யாசாகர் கூறுகையில், “கில்லி படத்தால் தமிழ் சினிமாவின் ஃபார்முலாவை மாற்றியமைத்துவிட்டார் இயக்குனர் தரணி. தரணியை பொருத்தவரை பாடல்கள் ஸ்லோவாக இருக்கக்கூடாது. அதேபோல் மூன்றரை நிமிடத்திற்கு மேலும் இருக்கக்கூடாது. ‘கில்லி’ படத்தால் விஜய் superstardom-ஐ அடைந்துவிட்டார்” என்றே சொல்லலாம்” என்று கூறியிருந்தார்.

சோஷியல் மீடியாவால் ஹைப் பெற்ற ‘கில்லி’ - கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

கில்லி ரீ ரிலீஸ் ஆவதற்கு முன்பே மீம்ஸ்களின் மூலம் இப்படத்தின் பல காட்சிகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன. இன்றுவரை லவ் ப்ரபோஸ் காட்சிகளை கிண்டல் செய்யும் மீம்ஸ்களில் முத்துப்பாண்டியின் ‘செல்லோ... ஐ லவ் யூ’ என்ற டயலாக் கட்டாயம் இடம்பெறும். குறிப்பாக சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகமானதிலிருந்து அவ்வப்போது ‘ஜஸ்டிஸ் ஃபார் முத்துப்பாண்டி’ என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்வதுண்டு. மேலும் முத்துப்பாண்டியின் காதல் உண்மையானது என்றும் இன்றுவரை கலாய்த்து வருகின்றனர்.


விஜய் - திரிஷா நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படத்தின் மாஸ் காட்சிகள்

அதுபோக, விஜய்யின் நண்பனாக வரும் தாமுவின் ‘வெள்ளிக்குடம்’ டயலாக்காக இருக்கட்டும், தங்கையாக வரும் ஜெனிபரின் ‘அன்னையர் தினம்’ டயலாக்காக இருக்கட்டும் எல்லாமே ஹிட்தான். குறிப்பாக விஜய்யின் ‘ப்ளேடு மேல வெச்ச நம்பிக்கைய உன்மேல வை’, ‘ஆல் ஏரியாலயும் ஐயா கில்லிடா’ போன்ற டயலாக்குகள் வெரி ஃபேமஸ். அதேபோல் ஹீரோவுக்கு இணையாக பிரகாஷ்ராஜுக்கும் ‘இது முத்துப்பாண்டி கோட்டைடா’, ‘வாடி வாடி...கபடி விளையாடலாம்’, ‘அதெல்லா நீ ஏன் சொல்ற?’ போன்ற டயலாக்குகளை வைத்திருப்பார் இயக்குனர். இப்படத்தில் வருகிற ஆதிவாசி, ஒட்டேரி நரி, டுமீல் குப்பம் வௌவாலு போன்ற பெயர்களும் மிகவும் பிரபலம். இதுபோல் சீனுக்கு சீன் மாஸ் பிஜிஎம், டயலாக்ஸ் என வைத்து ரசிகர்களை ஈர்த்திருப்பார் இயக்குனர் தரணி. கிட்டத்தட்ட 2.45 மணிநேரம் இப்படம் ஓடினாலும் அதற்குள் முடிந்துவிட்டதா? என்றுதான் கேட்கத்தோன்றும். அந்த அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஒவ்வொரு சீனையுமே ரசிகர்கள் டீகோடு செய்துவருகிறார்கள். உதாரணத்திற்கு, கபடி செமி ஃபைனல்ஸில் கலந்துகொள்ள போனபோதுதான் தனலட்சுமியை காப்பாற்ற சரவண வேலு போய்விடுவார். அதனால் அந்த போட்டியில் இவர்களுடைய டீம் தோற்றுவிடும். அப்படி இருக்கும்போது எப்படி ஃபைனல்ஸில் விளையாட முடியும்? என ஒருபுறம் கேள்வி எழுப்ப, செமி ஃபைனல்ஸ் ஒருமுறை மட்டுமே நடக்காது என மற்றொருபுறம் பதிலளித்து வருகின்றனர்.

20 கோடியை தொட்ட வசூல்

2004ஆம் ஆண்டு வெளியானபோதே கிட்டத்தட்ட ஒரு வருடம் ‘கில்லி’ திரையரங்குகளில் ஓடியது. அப்போதே ரூ. 50 கோடி வசூல் சாதனை படைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்தனர். ஏப்ரல் 20ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், முன்பதிவிலேயே ரூ.3 கோடி வசூலித்து புதுப்பட ரிலீஸுக்கு கிடைக்கும் அதே வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் 300 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 350 திரையரங்குகளிலும் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.


‘கில்லி’ ரிலீஸ் வெற்றி கொண்டாட்ட போஸ்டர்

விஜய்யின் புதுப்பட ரிலீஸுக்கு கொடுக்கும் அதே வரவேற்பை இதற்கும் கொடுத்தது மட்டுமில்லாமல், ரசிகர்கள் திரையரங்குகளில் பாடல்களுக்கு அதே ஸ்டெப்ஸ் போட்டு டான்ஸ் ஆடுவது, டயலாக்ஸை கூடவே பேசுவது மற்றும் பிஜிஎம்மை ரீகிரியேட் செய்வது என திரையரங்குகளை தெறிக்கவிடுகின்றனர். அதுபோக, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை அதே காஸ்டியூம் மற்றும் ஸ்டெப்ஸ் போட்டு இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து வருகின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், ஹேமா மாலினி நடிப்பில் வெளியான ‘ஷோலே’ என்ற இந்திப் படத்தின் ரீரிலீஸ் ரூ.10 கோடி வசூல் சாதனை படைத்திருந்த நிலையில், ‘கில்லி’ அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.

இயக்குனர்களும், நடிகர்களும் என்ன சொல்கிறார்கள்?

‘கில்லி’ ரீரிலீஸ் வெற்றி குறித்து பதிவிட்டுள்ள திரிஷா, “அசுரவெற்றி கொண்டாட்டத்துடன் மீண்டும் ‘கில்லி’ பொழுது விடிந்திருக்கிறது. 2004-இல் தொடங்கிய இப்பயணம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்பதுடன் 2024-இல் முழுமையாக நிறைவடைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் ரீரிலீஸ் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமும், இயக்குனர் தரணியும் விஜய்யை ‘கோட்’ பட ஷூட்டிங்கில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் விஜய்க்கு நன்றியும் தெரிவித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. ‘கில்லி’ ரீரிலீஸ் அனுபவம் குறித்து படத்தின் இயக்குனர் தரணி கூறுகையில், “ரீரிலீஸாகி முதல் நாளில் பயங்கர வரவேற்பு, கொண்டாட்டம் என கேள்விப்பட்டு, இரண்டாம் நாள் தியேட்டருக்கு போனேன். எதிர்பார்த்ததைவிட அவ்வளவு கொண்டாட்டம். ‘காரப்பொரி’க்கு க்ளாப்ஸ், ‘மணப்பெண் தோழிகள்’க்கு க்ளாப்ஸ், முத்துப்பாண்டியை பார்த்ததும் அவ்வளவு சத்தம் என பார்ப்பதற்கே ஆச்சர்யமாக இருந்தது. க்ளைமாக்ஸில் கையை சுற்றும் சீன் மீண்டும் துப்பாக்கியில் ரீகிரியேட் செய்திருப்பார்கள். அப்போதே ரசிகர்கள் கில்லியுடன் அதனை கனெக்ட் செய்துவிட்டார்கள். 20 வருடங்களாக ரசிகர்கள் இந்த படத்திற்கு உயிரூட்டி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்போது கொண்டாட்டம்” என்று கூறியிருந்தார்.


நடிகர் விஜய்யுடன் இயக்குனர் தரணி - நடிகை திரிஷா

விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜானகி கணேஷ் தனது அனுபவத்தை பகிர்கையில், “எங்கு போனாலும் ‘கில்லி’ படத்தில் வருகிற விஜய் அம்மாதானே என்று கேட்கிறார்கள். அந்த அளவிற்கு அந்த படம் எனக்கு மரியாதையை பெற்றுக் கொடுத்திருக்கிறது. விஜய் மிகவும் சாஃப்டான நபர். பேசுவதே கேட்காது. அந்த படத்தில் ரொம்ப அப்பாவியான அம்மாவாக நடித்திருப்பேன். ‘கில்லி’ படத்தில் நடித்ததே இறைவன் அருளாக கருதுகிறேன்” என்று கூறியிருந்தார். ரீரிலீஸுக்கு பிறகு, படத்தின் ஒவ்வொரு சீனையும் டீகோடு செய்துவரும் ரசிகர்கள் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜானகி, விஜய்யைவிட 3 மாதம் வயதில் சிறியவர் என்பதையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிஃபர் கூறுகையில், “எப்போதும் விஜய் சார் என்னை பக்கத்திலேயே உட்கார வைத்திருப்பார். ‘டேய் பதில சொல்றா...’ டயலாக்கை திரும்ப திரும்ப சொல்லச் சொல்லி கேட்பார். ஜாலியா சிரித்து பேசுவார். திரிஷா மேம் எப்போதும் சாக்லேட் சாப்பிடுவார். அவரை பார்த்து, ‘பாரு எவ்ளோ சாப்பிட்டாலும் இப்படி வெயிட் போடாம இருக்கணும்’ என்று அவரை கலாய்ப்பார். என்னை அவருடைய தங்கையாகவே நினைத்தார் விஜய். படத்தில் நிறைய டயலாக்குகளில் அவரை வாடா போடா என கூப்பிட வேண்டி இருந்தது. அப்போது நான் டா போட்டு பேச தயக்கப்பட்டேன். அவர்தான் என்னை தயங்காமல் பேசச்சொல்லி ஊக்குவித்தார்” என்று தனது நினைவலைகளை பகிர்ந்தார். இதுபோக பிற தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விஜய்க்கும், படக்குழுவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ‘ஒரு படம் எடுத்தாலும் கில்லி போல எடுக்கணும்’ என புகழ்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Updated On 6 May 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story