இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘அமுல் பேபி’, ‘குட்டி குஷ்பூ’ என்றெல்லாம் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என வலம்வரும் ஹன்சிகா, தனது நீண்டகால நண்பரை காதலித்து கடந்த ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். அந்த திருமணத்தால் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். முன்பு சப்பியாக இருந்த ஹன்சிகா, கடுமையான உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து மெலிந்தார். அதன்பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் அவ்வப்போது கிளாமரான போட்டோ ஷூட்களை செய்து ரசிகர்களை கிறங்கடித்துக்கொண்டிருக்கிறார். ஹன்சிகாவின் திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

குழந்தை நட்சத்திரம் ஹன்சிகா

மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா 2003ஆம் ஆண்டு வெளியான ‘ஹவா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவரானார். என்னதான் இந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தாலும் ஹன்சிகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தெலுங்கு திரையுலகிலிருந்து தேடிவந்தது.


குழந்தை நட்சத்திரமாக மற்றும் அறிமுகப் படங்களில் ஹன்சிகா

2007ஆம் ஆண்டு ‘தேசமுத்ருடு’ என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்தார். அந்த படத்துக்கு அவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிவர, தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதன்பிறகு ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழிலும் அறிமுகமானார். ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா நடித்த ‘எங்கேயும் காதல்’ திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்களையும் பெற்றுத்தந்தது. ஹன்சிகாவின் கியூட் மற்றும் சப்பினெஸ்க்கு ரசிகர்கள் இருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்ததென்னவோ உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம்தான். முழுக்க முழுக்க காமெடி படமான இதில் ஹன்சிகா தனது நகைச்சுவையான கதாபாத்திரத்தை சிறப்பான கையாண்டிருப்பார். ஓகே ஓகே திரைப்படத்தின் மாஸ் ஹிட்டை தொடர்ந்து சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடிசேர்ந்தார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.


தனது கணவர் சோஹேல் கதுரியாவுடன் ஹன்சிகா

நீண்ட கால நண்பருடன் திருமணமும் சர்ச்சையும்

கியூட், துறுதுறுப்பு மற்றும் முக சாயல் போன்றவை நடிகை குஷ்பூ போன்றே இருப்பதால் குட்டி குஷ்பூ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா திடீரென உடல் எடையை குறைத்து மெலிந்தார். என்னதான் ஃபிட்டாக தெரிந்தாலும் ரசிகர்கள் லைக் செய்தது என்னவோ கொழுகொழு ஹன்சிகாவைத்தான். உடல் எடை குறைப்புக்கு பிறகு ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் சற்று தொய்வடைந்தது. இதற்கிடையே தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணம் ஜெய்ப்பூரிலுள்ள முந்தோடா கோட்டையில் வெகு பிரம்மாண்டமாக நடந்தது.

தனது திருமண நிகழ்வை ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி’ என்ற பெயரில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்தனர். அதில் தனது திருமணம் சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்களை மட்டும் காட்டாமல், தனது திருமணம் குறித்து ஊடகங்களில் பரவிய வதந்திகள் குறித்தும் பேசியிருந்தார் ஹன்சிகா.


டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி’

தனது கணவரின் முதல் திருமணத்தில் ஹன்சிகா இடம்பெற்றிருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதுடன், முதல் திருமண முறிவுக்கு ஹன்சிகாதான் காரணம் என்றும், தனது நெருங்கிய தோழியின் கணவரை திருடிக்கொண்டார் என்றும் அவர்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதுகுறித்து மனம்திறந்த ஹன்சிகா, “சோஹேலின் முதல் திருமணம் முறிந்ததற்கு நான்தான் காரணம் என்று செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் அவை ஆதாரமற்றவை. ஏற்கனவே அவரைத் தெரிந்திருந்ததால் நான்தான் பிரச்சினை ஏற்படுத்தியிருப்பேன் என்று அர்த்தமாகாது. நான் ஒரு பிரபலம் என்பதால் என்னை சுட்டிக்காட்டி குற்றப்படுத்துவது மிகவும் எளிதானது” என்றார். தொடர்ந்து பேசிய சோஹேல், “எனக்கு 2014-இல் நடந்த திருமணம் மிகக் குறுகிய காலத்திற்குத்தான் நீடித்தது. ஏற்கனவே நாங்கள் நண்பர்களாக இருந்ததாலும், எனது திருமணத்தில் ஹன்சிகா கலந்துகொண்டதாலும் அந்த புகைப்படங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று விளக்கமளித்தார். எப்படியாயினும் தற்போது தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் ஹன்சிகா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார்.


உடல் எடை குறைப்புக்கு முன் - பின்

வெப் தொடரில் ஹன்சிகா

தற்போது தமிழில் 5 படங்கள் மற்றும் தெலுங்கில் 2 படங்கள் என கைவசம் வைத்திருந்தாலும், மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள பிற முன்னணி நடிகைகளின் பாணியையே பின்பற்றுகிறார் ஹன்சிகா. ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற ஹிட் படங்களை இயக்கிய எம். ராஜேஷின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ‘மை3’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. ரொமான்டிக் காமெடி பாணியில் உருவாகிவரும் இந்தத் தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, அஷ்னா ஜவேரி மற்றும் ஜனனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘மை3’ வெப் தொடரில் ஹன்சிகாவின் லுக்

இந்தத் வெப் தொடருக்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய, கணேசன் இசையமைக்கிறார். எடிட்டிங் வேலைகளை அஷிஷ் கையிலெடுத்திருக்கிறார். ரோபோவின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘மை3’-இல் ஹன்சிகா ரோபா வேடத்தில் நடித்திருத்திருக்கிறார். இதற்கு முன்பு ரோபோ வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுத்த எமி ஜாக்சனுக்கு ஹன்சிகா டஃப் கொடுப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

Updated On 25 Oct 2023 4:53 AM GMT
ராணி

ராணி

Next Story