இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமா பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன? பொழுதுபோக்கு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது படங்கள்தான். அதற்கு எந்த விதத்திலும் குறைச்சலில்லாமல் பார்த்துக்கொள்கிறது நமது திரையுலகம். திரை பிரபலங்களிடையே என்ன நடக்கிறது? வெளியான படங்கள் எப்படி? அடுத்து என்ன படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது? படங்களை சுற்றும் சர்ச்சைகள் என்ன? எந்த ஹீரோ, எந்த ஹீரோயின் ஹாட் டாப்பிக்? என பல செய்திகளையும் வதந்திகளையும் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து பார்க்கமுடிகிறது. அப்படி இந்த வாரம் ட்ரெண்டாகும் சில சினி பிட்ஸ் பற்றி இப்பகுதியில் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம் வாங்க!

செப்டம்பரில் குழந்தை - தீபிகா படுகோன் அறிவிப்பு

பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியர் தங்களது முதல் குழந்தையை வரவேற்கவுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணமானதிலிருந்தே தீபிகா கர்ப்பந்தரித்திருப்பதாக அவ்வப்போது வதந்திகள் பரவிவந்தன. ஆனால் கணவன் மனைவி இருவருமே திரைப்படங்கள், விளம்பரங்கள், போட்டோஷூட், பார்ட்டீஸ் மற்றும் டூர் என மாறி மாறி பிஸியாக சுற்றிவந்தனர். மேலும் இவர்களது திருமண சமயத்தில்தான் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதிக்கு திருமணமானது. அவர்களுக்கு 2 வயதில் மல்டி மேரி என ஒரு பெண் குழந்தை இருக்கிற நிலையில் இந்த இரண்டு தம்பதிகளையும் ஒப்பிட்டு பேசிவந்தனர் பாலிவுட் ரசிகர்கள். மேலும் சக நடிகை ஆலியாவுக்கு குழந்தை பிறந்தபோதும் தீபிகாவுக்கு எப்போது? என்ற கேள்வியை முன்வைத்தனர்.


தீபிகா - ரன்வீர் தம்பதியின் கர்ப்பம் குறித்த அறிவிப்பு

இந்நிலையில் திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா கர்ப்பமடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தீபிகாவின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் கர்ப்பமாக இருப்பதாக சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டானது. ஆனால் இத்தம்பதி அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் தீபிகா. அதில் தீபிகா & ரன்வீர் என குறிப்பிட்டு, வருகிற செப்டம்பர் மாதம் குழந்தையை எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பதிவுக்கு பாலிவுட் பிரபலங்களான சோனு சூட், பிரியங்கா சோப்ரா, ஹன்சிகா, மௌனி ராய், பிபாஷா பாசு, கரீனா கபூர், கிரிதி சனோன், ஸ்ரேயா கோஷல், மிருணால் தாகூர், ரகுல் ப்ரீத் சிங், சோனம் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தீபிகா கர்ப்பமடைந்திருப்பதால் பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ‘கல்கி 28 98 ஏடி’ மற்றும் ‘சிங்கம் again’ போன்ற படங்களின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட்டில் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்

இந்திய சினிமாவிலேயே வித்தியாசமான கதைகளை இயக்குவதில் மலையாள திரையுலகம் என்றுமே தனித்து நிற்கிறது. அப்படி உருவான ஓரிரு படங்கள் மலையாளம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையுமே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அப்படி ஒரு திரைப்படம்தான் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம்’. 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் பாகம் மலையாள திரையுலகில் ரூ. 50 கோடி வசூல் சாதனையை படைத்த நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழி என பலமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ‘பாபநாசம்’ என தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்தையும் இயக்கி அதையும் வெற்றிப்படமாக்கினார் ஜீத்து ஜோசப்.


ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ள ‘த்ரிஷ்யம்’ மலையாளப்படம்

இந்நிலையில் இப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது. படத்தின் இரண்டு பாகங்களையும் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றிருக்கிறது பனரோமா ஸ்டூடியோஸ். ஆங்கிலம், தென் கொரியா மற்றும் ஸ்பானிஷ் என அடுத்தடுத்து 10 மொழிகளில் 5 வருடங்களுக்குள் இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. 10 நாடுகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெறுகிறது ‘த்ரிஷ்யம்’

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கித்தவிக்கும் இயக்குநர் பாலா

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து ‘சேது’ படத்தின்மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் பாலா. அதுவரை திரையுலகில் போராடிக்கொண்டிருந்த விக்ரமின் வாழ்க்கையையே அப்படம் தலைகீழாக புரட்டிப்போட்டது என்றுகூட சொல்லலாம். அதேபோல் என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் திரையுலகில் தனக்கான தனியிடத்தை பிடிக்க தவித்துக்கொண்டிருந்த சூர்யாவையும் ‘நந்தா’ படத்தின்மூலம் கைதூக்கிவிட்டவர் இயக்குநர் பாலா. இந்த இரண்டு படங்களும் பாலாவுக்கு முதல் இரண்டு படங்களும்கூட. இதனாலேயே குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரானார் பாலா. பாலா இயக்கத்தில் உருவான ‘பிதாமகன்’, ‘பரதேசி’ போன்ற படங்களை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு பெயர்பெற்ற இயக்குநராக இருந்தாலும், அவர் படத்தில் ஒரு சீனிலாவது நடித்துவிட வேண்டும் என பலர் ஆசைப்பட்டாலும், பாலா சார் என்றால் பயம் என்றுதான் நிறையப்பேர் சொல்வார்கள். அதற்கு காரணம், ஷூட்டிங்கில் நன்றாக நடிக்காவிட்டால் அவர்களை பாலா அடிப்பார் என்பதுதான். சமீப காலமாக பாலா இயக்கத்தில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற பெயரில் படத்தை இயக்கினார். அப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்ள அருண் விஜய்யை வைத்து படத்தை இயக்கியுள்ளார் பாலா. ஆனால், ஏற்கனவே கமிட் ஆகியிருந்த கிரித்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜூ போன்ற நடிகைகளும் அடுத்தடுத்து படத்திலிருந்து விலகிக்கொண்டனர். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்ற கேள்விதான் பலருக்கும் இருந்தது.


இயக்குநர் பாலா சர்ச்சை குறித்து நடிகை மமிதா பைஜு விளக்கம்

இதுகுறித்து மமிதா அளித்த ஒரு பேட்டியில், “ஒரு சீனில் பாடிக்கொண்டே ஆடவேண்டி இருந்தது. அதற்கான பயிற்சியையும் எடுத்தேன். ஆனால் பதற்றத்தில் நான் சொதப்பிவிட்டேன். சில டேக்குகள் போனதால் பாலா சார் பின்னாலிருந்து எனது தோள்பட்டையில் அடித்துவிட்டார். நல்லவேளையாக நான் அப்படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்று கூறியிருந்தார். மமிதாவின் இந்த நேர்க்காணல் பாலாவுக்கு சர்ச்சையாக அமைந்தது. இந்நிலையில் அதுகுறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் மமிதா. “பாலா சாருடன் ஒரு வருடம் பயணித்திருக்கிறேன். அவரது டீம் நன்றாக பார்த்துக்கொள்வார்கள். நான் கொடுத்த பேட்டியில் ஒருபகுதியை மட்டும் கட் செய்து சர்ச்சையாக்கி இருக்கிறார்கள். பாலா சார் ஸ்ட்ரிக்ட் தான். ஆனால் அதுதான் அவரது வொர்க்கிங் ஸ்டைல்” என்று விளக்கமளித்திருக்கிறார்.

‘குணா மட்டும் இல்லேனா...’ - மஞ்சுமெல் பாய்ஸ் டைரக்டர் நெகிழ்ச்சி!

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. கேரளாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10 கோடி வசூல் சாதனையை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த படத்தில்? என்ற கேள்விதான் பலருக்கும் இருக்கும். இதற்கு காரணம், கமல்ஹாசன். ஆம், பொதுவாகவே கமல்ஹாசன் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல சோதனைகளை தனது திரைப்படங்களில் செய்ய தவறாத ஒருவர். அதனால்தான் திரையுலகம் அவரை ‘உலக நாயகன்’ என கொண்டாடுகிறது. கமல் திரைப்படங்களில் ‘குணா’ படத்திற்கு முக்கிய இடமுண்டு. மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல என கமல் கூவிய குகைதான் குணா. சரி ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என கூறிவிட்டு ஏன் ‘குணா’ என்று கேட்க தோன்றுகிறதல்லவா? இரண்டிற்கும் சம்பந்தம் இருக்கிறது. 1991ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிற படம்தான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.


‘குணா’ பட போஸ்டர் மற்றும் கமல்ஹாசனுடன் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரம்

நட்பை மையக்கருவாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் 7 நாட்களில் 50 கோடி வசூல் சாதனை புரிந்திருக்கிறது. குணா குகையில் மாட்டிக்கொள்ளும் இளைஞர்கள் எப்படி நட்பை வைத்து தப்பிக்கின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதை. ‘குணா’ படம் இல்லையென்றால் இப்படியொரு படமே உருவாகியிருக்காது என அப்படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் கூறியதையடுத்து சமூக ஊடகங்களில் மீம்ஸ் மூலம் ட்ரெண்டானது இப்படம்.

இதனையடுத்து ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ டீமை சென்னைக்கே அழைத்து சந்தித்து வாழ்த்தியிருக்கிறார் கமல்ஹாசன். மேலும் நடிகர் தனுஷையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருக்கிறார் இயக்குநர் சிதம்பரம். இப்படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து அவரையும் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ டீம். சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவான ‘பிரம்மயுகம்’ படத்தின் 10 நாள் வசூல் சாதனையை இப்படம் 7 நாட்களிலேயே எட்டிவிட்டது.

Updated On 11 March 2024 6:11 PM GMT
ராணி

ராணி

Next Story