இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றிருக்கும் தமிழ் திரைப்படம் டைனோசர். இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாயிருப்பவர் உதய் கார்த்திக். அவருடைய திரையுலக அறிமுகம், திரைப்பயணம், முதல் வெற்றி மற்றும் அனுபவங்களைப் பற்றி அவர் கூறுவதைக் கேட்போம்.


‘டைனோசர்’ திரைப்பட நாயகன் உதய் கார்த்திக்

டைனோசர் படத்துக்காக சென்னை பையனாகவே மாறி விட்டீர்களே… சென்னை பாஷை, உடல்மொழி எல்லாத்தையும் எப்படி கச்சிதமாக செய்தீர்கள்?

இயக்குநரின் பயிற்சிதான் காரணம். ஆரம்பத்தில் அது எனக்கு பயமாகத்தான் இருந்தது. படப்பிடிப்பு தொடங்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே சென்னைவாசிகளுடன் பேசிப்பழகி கற்றுக் கொண்டேன். முக்கியமாக, இந்த மாதிரி விஷயங்களை நான் உள்வாங்கி பயணிப்பதற்கு எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர் இயக்குநரின் நெருங்கிய நண்பர் பிரபுதான்.

வசனத்தில் நீங்க சக்கைப்போடு போடுறீங்களே... ‘சும்மா கிடைப்பாளா சுகுமாரி’ என்றெல்லாம் பேசுகிறீர்களே… இதை யார் சொல்லித் தந்தது?

எல்லாம் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததுதான். வசனத்தை அவர் சொல்லிக் கொடுத்தவாறு அப்படியே உள்வாங்கிப் பேசினேன்.


‘டைனோசர்’ திரைப்படத்தின் காட்சிகள்

கதை பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டீர்களா? அல்லது இந்த கதைதான் உங்கள் லட்சியமா?

உண்மையில் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். இந்தக் கதைக்கு நான் பொருந்துவேனா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. ஆனால் இயக்குநர் என் மேல் நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கைக்கு நான் என்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டேன். பயிற்சி பெற்று நடிப்போம் என்ற உறுதியோடு களத்தில் இறங்கினேன். ஆரம்பித்து நான்கு ஐந்து நாட்களுக்குள்ளாகவே நான் அந்தப் பாத்திரத்துடன் ஒன்றிப் போய்விட்டேன்.

டைனோசர் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றி மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன?

வன்முறையை கையிலெடுத்து வாழ்க்கையை வீணாக்காதீங்க என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே இந்தப் படத்தின் காட்சிகளை தங்கள் வாழ்வோடு தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். இதை நான் என் கண்ணால் காசி தியேட்டரில் பார்த்தேன். நிறைய பேர் கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்ததோடு, “இதுபோன்ற நிகழ்வுகள் எங்கள் வாழ்விலும் நடந்திருக்கு சார். என் நண்பருக்கு இந்த மாதிரியான வன்முறை நடந்திருக்கு சார். இந்த படத்துல வர்ற மாதிரி ஒரு பொண்ணு பைக்ல ஒரு பையனோடு வந்து எங்க அண்ணனிடம் லவ் பிரேக்அப் பண்ணினாங்க” அப்படின்னு இயக்குநரிடம் சொல்லி படத்தின் கதையை தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசினார்கள். இயக்குரின் வசனங்களும் பயிற்சியும் திரையில் அந்தளவுக்கு யதார்த்தமாக இருக்கிறது. அதைத்தான் இந்தப் படத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன்.


திரைப்படத்தை விமர்சிக்கும் ரசிகர்கள்

இந்தப் படத்திற்கு பிறகு பொது வெளியில் உங்களை யாரேனும் அடையாளம் கண்டுகொண்டு பாராட்டினார்களா?

காசி திரையரங்கில் இரவு 11 மணி காட்சிக்குப் போயிருந்தேன். படம் முடிவதற்கு கிட்டத்தட்ட நள்ளிரவு 2 மணி ஆகிவிட்டது. முக்கியமான காட்சிகளுக்கு கிடைத்த கைதட்டல், விசில் சத்தம் எனக்கு பிரமாண்டமாகத் தெரிந்தது. காட்சி முடிந்ததும் விளக்குகளை எரியச் செய்ததும் ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். தியேட்டரின் மையப் பகுதியில் சுமார் முப்பது முப்பத்தைந்து நபர்கள் “மண்ணு மண்ணு” என்று எனது கேரக்டர் பெயரைச் சொல்லி ஆர்பரித்தார்கள். அந்த உணர்வை என்னால் விவரிக்கவே முடியவில்லை. காற்றில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு. அதை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

கேமரா பின்னால் இயங்கியதையும் கேமரா முன்னால் பணியாற்றியதையும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை எதிர்பாராமல் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். “சார் நான் உங்கள் பெரிய ஃபேன். காக்க காக்க படம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது. உங்களோடு சேர்ந்து பணியாற்ற வாய்ப்புத் தாருங்கள்” என்று கேட்டேன். அப்போது அவருக்கும் உதவிக்கு ஆள் தேவைப்பட்டிருந்தது போல. அதனால் உடனே உதவி இயக்குநராக வந்து சேர்ந்து கொள் என்று கூறி விட்டார். இப்படித்தான் என் சினிமா பயணம் ஆரம்பமானது. வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அந்தப் படத்தில் சூர்யாவின் நண்பராகவும் திரையில் தோன்றினேன்.

கேமராவுக்கு முன்னால் நிற்கும்போது பதற்றம், பயம் எல்லாம் இருந்ததா?

முதல் நாள் பயமாகத்தான் இருந்தது. காகிதத்தில் இருக்கும் எழுத்தை கேமரா வழியே எப்படி உயிர் கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் இருந்தது. நாங்கள் மேற்கொண்ட பயிற்சி, இயக்குநரின் அர்ப்பணிப்பு போன்றவை நல்ல பலனைத் தந்தது. பெரும்பாலும் நாங்கள் எடுத்தது எல்லாமே லைவ் லொகேஷன்தான். மறுநாள் போனால் எல்லாம் மாறி விடும். அதனால் எடுக்கும்போதே சரியாகவும் துல்லியமாகவும் எடுத்திருந்தோம்.


‘டைனோசர்’ படப்பிடிப்பு தளத்தில்

இந்த படத்தில் எல்லோருமே புதுமுகம். அதனால் படப்பிடிப்புக்கென பிரத்யேகமாக ஆலோசனை எதுவும் வழங்கப்பட்டதா அல்லது எல்லாமே குழுவாக பேசி முடிவு செய்து கொண்டீர்களா?

படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் மாதவன்தான் கேப்டன். நாங்கள் எல்லோருமே அவரை கண்மூடித்தனமாக நம்பினோம். நாங்கள் மொத்தமாக எங்களை அவரிடம் ஒப்படைத்து விட்டோம். அவர் என்ன நினைத்தாரோ அதை எங்களைக் கொண்டு செய்ய வைத்தார். அவருடைய வசனங்களை நாங்கள் பெரிதும் நம்பினோம். அந்த வசனத்தைப் படித்தாலே நமக்குள் ஊக்கம் பெருகிவிடும்.

படத்தின் உச்சக்கட்டக் காட்சி நகைச்சுவையாகி விட்டது என்று விமர்சனம் வந்திருக்கிறதே. நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?

அதை நகைச்சுவை என்ற எண்ணத்தில் வைக்கவில்லை. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால்தான் அப்படி படமாக்கப்பட்டது. பழிவாங்குவது என்பது தீர்வாகாது. அவரவர்க்கு கிடைக்க வேண்டியதை இயற்கையே வழங்கி விடும். கத்தி எடுத்தால் கத்தியால்தான் முடிவு. அதைத்தான் நாங்கள் அப்படி சொல்லியிருந்தோம்.

இனிமேலும் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பீர்களா? அல்லது வேறுபட்ட பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பீர்களா?

என்னைப் பொறுத்தவரை கதைதான் முக்கியம். எனக்கு கதை பிடித்ததாக இருக்க வேண்டும். பிடித்த கதையாக இருந்தால் எந்தப் பாத்திரமாக இருந்தாலும் நான் நடிப்பேன்.

வில்லன் கேரக்டரிலும் நடிப்பீர்களா?

செய்யலாமே. அதில் ஒன்றும் தப்பில்லையே.

‘மண்ணு’ என்ற கதாப்பாத்திரத்தின் பெயரை நீங்கள் ஒப்புக் கொண்டீர்களா? மாற்றியிருக்கலாம் என்று தோன்றியதா?

உண்மையில் மண் என்பது சக்தி வாய்ந்த பெயர். மண்ணில் பிறக்கும் நாம் மண்ணுக்குத்தான் செல்கிறோம். அதை உணர்த்துவதாகத்தான் அந்தப் பெயர் அமைந்திருந்தது. அந்தப் பெயரை காக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு மனதில் இருந்தது. வேறு ஒன்றும் தோன்றவில்லை.


‘மண்ணு’ தோற்றத்தில் உதய் கார்த்திக்

உங்கள் அண்ணனாக நடித்தவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…

ரிஷி சார் அந்த படத்தில் அரிவாளை வைத்து விளையாடியிருப்பார். இந்த படத்தில் அவர் நடித்ததற்காக நான் அவருக்கு நன்றி கூற சென்றிருந்தேன். “நீங்கள் ஏற்கனவே கதாநாயகனாக நடித்தவர். உங்களுக்கு என்று ரசிகர்கள்கூட இருக்கிறார்கள். இருந்தாலும் நான் நாயகனாக நடிக்கும் படத்தில் அண்ணன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு எனது நன்றி” என்று சொன்னேன். அதற்கு அவர், “நீங்கள் கதாநாயகனாக இருந்து கொண்டு எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தந்திருக்கிறீர்கள். நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார். அந்தளவுக்கு அவர் தங்கமான மனிதர்.

Updated On 28 Aug 2023 7:00 PM GMT
ராணி

ராணி

Next Story