இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர் பட்டாளத்துடன் தனது மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து நிலைத்து நிற்பது சற்று சிரமம்தான். மலையாளத்தில் பல படங்களில் நடித்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக பூங்கொடி என்னும் கதாபாத்திரத்தில் தமிழில் நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவில் பிரபலமானார் மாளவிகா மோகனன். பெரும்பாலான மலையாள நடிகைகள் தமிழில் நடிப்பதுண்டு. அப்படி 2013 ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் மாஸ்டர் படமே அவருக்கு மாஸ்டர் பீசாக அமைந்தது. முன்னணி நடிகர் மம்முட்டியின் ஃபேர்னஸ் கிரீம் படப்பிடிப்பு தளத்திற்கு தனது அப்பா மற்றும் ஒளிப்பதிவாளரான கே.யு. மோகனனுடன் சென்ற போது, மம்முட்டி அவரிடம் உங்க பொண்ணுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என கேட்டார். எனது மகன் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்னும் படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம். இப்படியாக ஒரு துணை நடிகையாக தமிழ் சினிமாவில் வந்து இன்றளவில் தனக்கென முக்கிய இடத்தை தக்கவைத்துள்ள நடிகை மாளவிகா மோகனன் பற்றி ஒரு விரிவான பதிவு.


'பட்டம் போலே' என்னும் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் மாளவிகா மோகனன்

யார் இந்த மாளவிகா மோகனன்?

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே பையனூரில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனன் மற்றும் பீனா மோகனன் இருவருக்கும் மகளாக பிறந்தவர். அவருடைய சகோதரர் ஆதித்யா மோகனன். மும்பை வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியா படித்து முடித்தார் மாளவிகா. சினிமாவில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. மாளவிகாவுக்கு நடனம் ஆடுவதும், பாடல்கள் கேட்பதும் மிகவும் பிடித்தமான ஒன்றாம்.


மாளவிகா மோகனனின் குடும்ப புகைப்படம்

மாளவிகாவின் திரைப்பயணம்

மாளவிகாவின் தந்தை திரைத்துறையை சேர்ந்தவர் என்பதால் முதல் படமான 'பட்டம் போலே' என்னும் மலையாள படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மானுடன் ஜோடியாக ரியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், 2015-ல் வெளியான நீர்நாயகம் என்னும் படமே அவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க உதவியது. அதுவரை மலையாளத்தில் மட்டுமே வாய்ப்பு கிடைத்துவந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 'நானு மாட்டு வரலக்ஷ்மி' என்னும் கன்னட படத்தில் வரலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு ஹிந்தியிலும் 'பியாண்ட் தி கிளவுட்ஸ்' என்னும் படத்தில் துணிகளை அயன் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிட்டியது. இதில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருப்பார். இதற்கு பிறகுதான் லோகேஷ் கனகராஜ் இயக்கி இளையதளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்லூரி பேராசிரியராக நடித்தார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'மாறன்' படத்தில் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார் மாளவிகா. இவ்வாறு தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என மாளவிகா மோகனன் நடிப்பில் 9 படங்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் அடுத்தடுத்து மூன்று படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.


'பேட்ட' மற்றும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் மாளவிகா மோகனன்

தொடர்ந்து சர்ச்சைகளுக்கு ஆளாகும் மாளவிகா மோகனன்:

தனது பேச்சால் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் தருணங்கள் மாளவிகாவுக்கு வழக்கமான ஒன்றுதான். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில், சக நடிகைகளில் ஒருவரான நயன்தாராவை பற்றி பேசிய மாளவிகா, அதனால் தனக்கெதிராக பல்வேறு கருத்துக்களை எதிர்கொண்டார். அத்துடன் அரைகுறை ஆடையை அணிந்து போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதற்காக நிறைய விமர்சனங்களை சந்தித்தார். உடை குறித்து இன்ஸ்டா பக்கம் மூலம் பதில் அளித்த அவர், “நான் எதை அணிய விரும்புகிறேனோ அதை அணிந்து மிகவும் மரியாதையாக உட்கார்ந்திருக்கிறேன்” என மிகவும் கிளாமரான உடையில் தனது மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அண்மையில், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய கருத்து என்ன என்று அவரிடம் கேட்கப்பட்ட நிலையில், எதற்காக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள்? என மாளவிகா பேசியதற்கு, எதிர்ப்புகள் வலுத்தன. இதனால் மாளவிகா மற்றும் நயன்தாராவிற்கு இடையே மீண்டும் பிரச்சினை என பேசப்பட்டதையடுத்து, தனது X தளப் பக்கத்தில் விளக்கம் அளித்தார் மாளவிகா. "ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சூப்பர் ஸ்டார் என்று சொல்லுங்கள். பெண் என்பதற்காக லேடி சூப்பர் ஸ்டார் என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என பதிவிட்டிருந்தார்.


'தங்கலான்' பட ட்ரெய்லரில் மாளவிகா மோகனன் வரும் காட்சி

தங்கலான் திரைப்படமும், மாளவிகா மோகனனும்:

பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான சியான் விக்ரம், பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் 'தங்கலான்' திரைப்படத்தில், முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கையெழுத்தான நிலையில், அவருக்கு பதிலாக மாளவிகா மோகனன் மாற்றம் செய்யப்பட்டார். இப்படத்திற்காக கடந்த ஒரு வருடமாக தான் டயட்டில் இருப்பதாகவும், சிலம்பம் பயிற்சியும், நிறைய சண்டை பயிற்சிகளும் மேற்கொண்டதாகவும் விருது விழா ஒன்றில் சொல்லியிருந்தார். இயக்குநர் பா.ரஞ்சித் பற்றி கூறுகையில், அவர் ரொம்ப நல்லவர், ஒரு அற்புதமான இயக்குநர், அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக சொன்னார். தங்கலான் திரைப்படத்தில் நடித்ததை 20 வருடங்கள் கழித்து பார்த்தாலும் வருத்தப்பட மாட்டேன் என்றும், இந்த படத்தில் நான் நானாக இல்லை, தைரியமானவளாக, வலுவானவளாக, பயமற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார். தங்கலான், விக்ரம் சாரோட படம், அதில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக உள்ளது என மாளவிகா மோகனன் கூறினார். கடந்த ஏப்ரல் மாதமே தங்கலான் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், தேர்தல் காரணமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் இப்படம் 5 மொழிகளில் வெளிவரவிருக்கிறது.

Updated On 17 Jun 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story