இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(30-08-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

"கல்லுக்குள் ஈரம்" படத்தில் கதாநாயகியாக பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகை அருணா, அந்தப் படத்தில் சிறப்பாக நடித்து இருந்தும், அடுத்து நடிக்க ஒரு படம்கூட இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தார். இப்பொழுது, "ஒரு பெண்ணின் வாழ்க்கை" படத்துக்குப் பிறகு, அருணா பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். ஏ.வி.எம். படப்பிடிப்பு தளத்தில் "நீதி பலித்தது" என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருந்த அருணாவை "ராணி" நிருபர் சந்தித்துப் பேசினார்.

அருணா சொன்னார்...

"பாரதிராஜாவினால், “கல்லுக்குள் ஈரம்" படத்தில் அறிமுகமானதும் அதிர்ஷ்டம் வந்துவிட்டது என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. படிப்பை விட்டுவிட்டு, சினிமாவை நம்பி வந்தோமே என்றுகூட கலங்கினேன். நடிகை முத்திரையைக் குத்திக்கொண்டு, மீண்டும் படிக்கப்போகவும் மனம் இல்லை. ஆனால், எவ்வளவு நாள் சென்னையில் சும்மா உட்கார்ந்து இருப்பது? நான் செல்லமாக வளர்ந்த பெண். என் அப்பா, ஐதராபாத்தில் ஏ.ஜி. ஆபீசில் பெரிய அதிகாரி. அண்ணன் பம்பாயில் என்ஜினீயர்.

அந்த இன்பமான வாழ்க்கையை விட்டு, நான் ஏன் நடிக்க வந்தேன் என்று எண்ணி வருந்தினேன். வாய்ப்புதான் இல்லையே, ஊருக்கே திரும்பிப் போய்விடுவோம் என்றால், அதற்கும் மனம் வரவில்லை. கண்ணைக் சுட்டி காட்டில் விட்டவளைப் போல தவித்தேன்" என்றார், அருணா.


'கல்லுக்குள் ஈரம்' திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அருணா

"இப்பொழுது உங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?" என்று நிருபர் கேட்டார்.

"நீதி பலித்தது", "கானலுக்கு கரை ஏது?" ஆகிய படங்கள் உட்பட 5 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் நடித்த "சிவப்பு மல்லி", "மகரந்தம்” ஆகிய இரு படங்கள் சுதந்திர தினம் அன்று வெளிவந்தன என்று சொன்னார், அருணா.

"கல்லுக்குள் ஈரம்" படத்தில் உங்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவும் நிவாசும் ஏன் தங்களது அடுத்த படத்தில் வாய்ப்பு தரவில்லை? என்று கேட்டதற்கு, அருணா சொன்னார்...

நான் சினிமா வாய்ப்புக்காக தேடி அலைந்தவள் அல்ல. ஐதராபாத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது, தனது லட்சிய கதாநாயகி பாத்திரத்துக்கு ஒரு புதுமுகத்தைத் தேடி, பாரதிராஜா எங்கள் கல்லூரிக்கு வந்து இருந்தார். பல மாணவிகளைப் பார்த்து, கடைசியில் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே "சினிமாவில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. எனக்கு படிப்பைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நடித்து, நடனம் ஆடி பழக்கம் இல்லை. தமிழும் தெரியாது என்றேன், நான். (இருவரும் ஆங்கிலத்தில் பேசினோம்)

ஆனால், பாரதிராஜா விடவில்லை. "நான் தேடிக்கொண்டு இருக்கும் அப்பாவிப் பெண் வேடத்துக்கு உன் முகம்தான் சரியாக இருக்கும். மொழி ஒரு பிரச்சனை இல்லை, உனக்கு நடிக்கவும், பேசவும் நான் கற்றுத் தருகிறேன்" என்றார். அம்மா, அப்பாவிடம் போய் நான் விஷயத்தைச் சொன்னேன். "அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வந்து இருக்கிறது. சரி என்று சொல்" என அவர்கள் என்னை உற்சாகம் ஊட்டினார்கள்.


சோலையாக பாரதிராஜாவுடன் அருணா

நான் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, பாரதிராஜாவையும் நிவாசையும் நம்பி, சென்னைக்கு வந்தேன். ஆனால், "கல்லுக்குள் ஈரம்" படத்துக்குப் பிறகு, அவர்களிடம் இருந்து எனக்கு நடிக்க அழைப்பு வரவில்லை; நடிக்கவில்லை. மற்றபடி, எனக்கு அவர்களிடம் விரோதம் எதுவும் கிடையாது.

இப்பொழுது பாரதிராஜாவின் "அலைகள் ஓய்வதில்லை" படத்தை தெலுங்கில் எடுக்கிறார்கள். அதில் நான் கதாநாயகியாக நடிக்கிறேன். பாரதிராஜாவின் அடுத்த தமிழ்ப் படத்தில் எனக்கு வாய்ப்பு தருவார் என்றும் நம்பிக் கொண்டு இருக்கிறேன் என்று அருணா, கூறினார்.

17 வயது ஆகும் அருணா, இன்னும் சதைப்பிடிப்பு இல்லாமலே இருக்கிறார். "உடம்பை வளர்த்துக் கொள்வதுதானே!" என்று நிருபர் சொன்னதற்கு, சிரித்தார், அருணா.


புன்னகையுடன் இரு மாறுபட்ட தோற்றங்களில்...

"இதைத்தான் எல்லோரும் சொல்லுகிறார்கள், உடம்பில் கொஞ்சம் சதைப்பிடிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, இப்பொழுது தினசரி அதிக அளவில் தயிர் சாப்பிட்டு வருகிறேன். எல்லோரும் மெலிய மருந்து சாப்பிடும்போது, நான் தடிக்க தயிர் சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது!" என்று மீண்டும் கலகல வென்று சிரித்தார், அருணா. அருணா, இப்பொழுது வசதியாக, உற்சாகமாக இருப்பதை, அந்த சிரிப்பு வெளிப்படுத்தியது.

Updated On 8 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story