இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(12-07-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)

வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர், சந்திரசேகர். "புதிய வார்ப்புகள்" படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சந்திரசேகர், "சுமை", "பாலை வனச் சோலை" படங்களின் மூலம் கதாநாயகன் இடத்தைப் பிடித்துவிட்டார். "கதாபாத்திரங்கள்", "அர்ச்சனை பூக்கள்", "பஞ்சமி", "எச்சில் இரவுகள்" மற்றும் பல படங்களில் கதாநாயகன் ஆக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

தாடி கதை!

நன்றாகத் தமிழ் பேசி நடிக்கும் சந்திரசேகரிடம் உள்ள மற்றொரு சிறப்பு, தாடி! முகத்தில் நிரந்தரமாக தாடி வைத்துக் கொண்டே நடிக்கும் ஒரே நடிகர் சந்திரசேகர்தான்.

சரி, இந்த தாடியின் இரகசியம் என்ன? என்று கேட்டல் ''ஒன்றுமில்லை" என்கிறார், சந்திரசேகர்.

"கல்லுக்குள் ஈரம்" படத்தில் அந்த பாத்திரத்துக்கு இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தாடி வைத்து இருந்தேன். அந்த தாடியும் ஓர் அழகாக இருந்ததால், "ஒருதலை ராகம்” படத்திலும் தாடியோடு நடித்தேன். அதைத் தொடர்ந்து "சுமை", "பாலைவனச் சோலை" என்று ஐந்தாறு படங்களில் தாடியோடு நடிக்க வைத்துவிட்டார்கள். இப்பொழுது நடித்துக்கொண்டு இருக்கும் சில படங்களிலும் தாடி வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். இந்தப் படங்களை முடித்துக் கொடுத்ததும் தாடியை எடுத்துவிடுவேன்" என்று அவர் சொன்னார். சந்திரசேகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் கருமாத்தூர்!


இரு வெவ்வேறு தோற்றங்களில் தாடியுடன் நடிகர் வாகை சந்திரசேகர்

நடிகர் ஆனது எப்படி?

சந்திரசேகர் நடிகர் ஆனது எப்படி? அவரே சொன்னார்.

"நான் சிறுவயதில் சினிமா, நாடகம் அதிகம் பார்ப்பேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது நாடகங்களிலும் நடித்தேன். ஆனால், என் அம்மா, அப்பாவுக்கு சினிமா-நாடகம் கட்டோடு பிடிக்காது. நான் வகுப்பு அறைக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமாவுக்கு செல்வேன். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததும், தண்டனை தயாராக இருக்கும். என் அம்மா என்னை தண்டிக்க கொஞ்சமும் தயங்க மாட்டார்கள். அந்தத் தண்டனையை ஏற்க நானும் தயங்க மாட்டேன்.

ஒருநாள் நண்பர்களுடன் - பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு, சினிமாவுக்குப் போனேன். அம்மாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. என் வரவுக்காக, அம்மா கோபக்கனலோடு நின்று கொண்டு இருந்தார்கள். நான் வீட்டுக்குள் நுழையவும், "போய் முட்டங்கால் போடு" என்று சொன்னார்கள். அம்மா அன்று, முட்டங்கால் போட விசேஷமாக தரையில் உப்புக்கல் பரப்பியிருந்தார்கள்.


"புதிய வார்ப்புகள்" படத்தின் மூலம் சந்திரசேகரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பாரதிராஜா

நான் மறுபேச்சு பேசவில்லை. அமைதியாகச் சென்று உப்பு மீது முட்டங்கால் போட்டேன். சிறிது நேரத்தில், உப்புக் கல் குத்தி, முட்டியில் இருந்து இரத்தம் கொட்டியது. ஆனாலும், அம்மா எழுந்திருக்கச் சொல்லும் வரை, நான் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. இப்படியாக அம்மா தண்டனை கொடுத்தும், நான் படம் பார்ப்பதை நிறுத்தவில்லை. அதில் ஒரு பைத்தியம் ஆகிவிட்டது.

1977-ல், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு வந்தேன். டி. வி. நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டே, சினிமா வாய்ப்பு தேடினேன். பாரதிராஜா, "16 வயதினிலே" படத்தை எடுத்து முடிக்கும் நேரத்தில் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. "புதிய வார்ப்புகள்" படத்தில், எனக்கு சினிமா வாய்ப்பு அளித்தார். என்னை நடிகன் ஆக்கிய பாரதிராஜாவை, ஒரு தெய்வமாகவே இன்னும் நான் மதித்து வருகிறேன்'' என்று சொன்னார், சந்திரசேகர். சந்திரசேகரோடு பிறந்தவர்கள் 4 பேர், இரண்டு அண்ணன்; இரண்டு அக்காள், சந்திரசேகர் கடைக் குட்டி!

Updated On 1 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story