இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ரேடியோ ஜாக்கி, பாடகி, பாடலாசிரியர், டப்பிங் கலைஞர், நடிகை என பன்முக திறமைகளோடு ஒரு காலகட்டத்தில் பிரபலமான பெண்மணியாக ஜொலித்துக் கொண்டிருந்தவர்தான் சுச்சித்ரா. கடந்த சில நாட்களாக இவர் சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறார். அதற்கு மிக முக்கிய காரணம் ஆய்ந்து, ஓய்ந்து கிடப்பில் போடப்பட்ட விவகாரமான சுச்சி லீக்ஸ்தான். 2016-ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் முடிந்துவிட்டது, இனி அவ்வளவுதான் என்று எல்லோரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்திவந்த நேரத்தில் திடீரென்று இந்த விவகாரம் “எனக்கு எண்டே கிடையாது” என்னும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி போல மீண்டும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மூடுவிழா நடத்தி குப்பையோடு குப்பையாக போடப்பட்டிருந்த விவகாரத்தை திரும்பவும் கையில் எடுத்து பாடகி சுச்சி பேசியுள்ளதற்கான காரணம் என்ன? நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயத்திற்கும், சுச்சித்ராவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் சம்பந்தப்பட்டிருப்பதாக சுச்சி கூறுவது உண்மைதானா? இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்ற பின்னரும் மோதிக்கொள்வதற்கான பின்னணி என்ன? போன்ற தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

யார் இந்த சுச்சித்ரா?


ரேடியோ ஜாக்கி, பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முகங்களை கொண்ட சுசித்ரா

மயக்கும் மாய குரலுக்குச் சொந்தக்காரரான சுச்சித்ரா, ராமதுரை மற்றும் பத்மஜா தம்பதியருக்கு மகளாக 1974-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருக்கு சுனிதா என்ற சகோதரி உள்ளார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த சுச்சித்ரா, பள்ளி படிப்பை முடித்த கையோடு, இளங்கலை பட்டத்தை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானியோஸ் கல்லூரியில் முடித்தார். இதற்கு பிறகு மேற்படிப்பை தொடர முடிவு செய்தவர் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் எம்.பி.ஏ பாடப்பிரிவில் சேர்ந்து பட்டம் பெற்றார். அங்கு பயிலும்போது கல்லூரியின் இசை குழுவில் கலந்துகொண்டு பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் இசை ஆர்வம் என்பது சிறுவயதில் இருந்தே அவருக்குள் இருந்துள்ளது. பட்டப்படிப்பை முடித்தவுடன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தவர், சிறிதுகாலம் அங்கு பணியாற்றிவிட்டு, பின்னர் ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே-வுக்கான விளம்பரத்தினை பார்த்து நேர்காணலில் கலந்துகொண்டு, தன் தனித்துவமான குரலுக்காக தேர்வு செய்யப்பட்டு அங்கு தொகுப்பாளராக பணியில் அமர்ந்தார். பணியில் சேர்ந்த சிறிது நாட்களில் இவர் தொகுத்து வழங்கிய ‘ஹலோ சென்னை’ ஷோ மிகவும் பிரபலமாகவே, அந்த நிகழ்ச்சி வாயிலாக இவரின் மாயாஜால குரலுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அதிலும் மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை சர்வதேச நிகழ்வுகள் குறித்து சுவாரஸ்யமாக பேசி தொகுத்து வழங்கிய ‘ஃப்ளைட் 983’ எனும் நிகழ்ச்சி இவரை மேலும் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த புகழால் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினை பெற்ற சுச்சித்ரா, அடுத்ததாக திரைப்படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராகவும், பாடகியாகவும் உச்சம் பெற்று உயர்ந்தார்.


பாடகி சுச்சித்ரா பாடிய "ஒரு சின்ன தாமரை" பாடலின் காட்சி

அதன்படி 2002-ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் ஷாம், த்ரிஷா, மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘லேசா லேசா’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சின்ன குயில் கே.எஸ்.சித்ராவுடன் இணைந்து “என்னைப் போலவே காற்று” பாடலை பாடி பாடகியாக அறிமுகம் ஆனார். முதல் பாடல் அவருக்கு பெரிய அடையாளமாக இல்லாவிட்டாலும் மாதவனின் ஜே.ஜே படத்தில் பரத்வாஜ் இசையில் வரும் மே மாதம் 98-ல் பாடலை சோலோவாக பாடி தனித்துவமான பாடகியாக அடையாளம் பெற்றார். இதற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா, மணி சர்மா, ஜி.வி.பிரகாஷ், டி.இமான், தரன், எஸ்.தமன், அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், வித்யாசாகர் என்று பலரின் இசையிலும் “உயிரின் உயிரே”, “என் ஆசை மைதிலியே”, “கனவுகள் பெரிய கனவுகள்”, “எம்மாடி ஆத்தாடி”, “ஒரு சின்ன தாமரை”, “ராக்கம்மா ராக்கு ராக்கு” என பல ஹிட் பாடல்களை பாடி தன்னை ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியாக நிலை நிறுத்திக் கொண்டார். இதனால் புகழ் உச்சம் பெற்ற சுச்சித்ரா பாடகியாக வலம் வந்த அதே நேரத்தில், 2006-ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால் நடிப்பில் வெளிவந்த ‘திருட்டு பயலே’ படத்தில் ரூபிணியாக வரும் நடிகை மாளவிகாவுக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங் கலைஞராகவும் கால் தடம் பதித்தார். இது தவிர அதே ஆண்டில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'காஃபி வித் சுச்சி' நிகழ்ச்சி மூலம் சின்ன திரையிலும் கலக்கியவர், பல்வேறு மேடை நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவற்றை தொகுத்து வழங்கி அதன் மூலமாகவும் தனக்கான ரசிகர் படையை உருவாக்கி கொண்டார்.

கார்த்திக் குமார், சுச்சி லீக்ஸ் பிரச்சினை


முன்னாள் கணவர் கார்த்திக் குமாருடன் சுச்சி எடுத்துக்கொண்ட புகைப்படம்

சென்னையில் பிறந்து வளர்ந்த கார்த்திக் குமார், சிறு வயதில் இருந்தே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தவர். பார்ப்பதற்கு ஹீரோ போன்று இருந்தாலும் இவர் ஒரு மிகச்சிறந்த மேடை நாடக நடிகர் ஆவார். இவர், படங்களில் நடித்ததை விட, மேடை நாடகங்களில் நடித்ததுதான் அதிகம். தொடர்ந்து 4 மணி நேரம் கூட, ஆணாதிக்கம், பாடி ஷேமிங் தொடர்பான விழிப்புணர்வு நகைச்சுவை நாடகங்களை நடத்தக்கூடிய வல்லமை பெற்றவர். அப்படிப்பட்ட திறமையாளரான இவர் மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் அமெரிக்க மாப்பிள்ளையாக வந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தில் மாதவன் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் கார்த்திக்குமார்தானாம். ஆனால், மணிரத்னம் எடுத்த ஃபோட்டோ டெஸ்ட்டில் பார்ப்பதற்கு மிகவும் சின்ன பையன் போல் இருந்ததால், பிறகு ரிஜெக்ட் செய்யப்பட்டு அவருக்கு ஒரு சிறிய வேடம் மட்டும் இதில் வழங்கப்பட்டதாம். அவரும் ஒரு மிகப்பெரிய லெஜெண்டின் படத்தில் நடிக்கிறோம், அது எப்படிப்பட்ட பாத்திரமாக இருந்தாலும் என்னவென்று சந்தோஷமாக நடித்து கொடுத்தாராம். இதன்பிறகு ‘வானம் வசப்படும்’, ‘கண்ட நாள் முதல்’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். இந்த நிலையில்தான், 2005-ஆம் ஆண்டு பாடகி சுச்சிக்கும் இவருக்கும் பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுச்சித்ராவும் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து பாடி வரவேற்பை பெற்றதுடன், மேடை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாடி புகழ்பெற ஆரம்பித்தார். இந்த நேரத்தில் கார்த்திக்குமாரும் அடுத்தடுத்து படங்களில் துணை வேடங்களில் நடிக்க, அப்படி 2008-ஆம் ஆண்டு நடிகர் தனுஷுடன் இணைந்து ‘யாரடி நீ மோகினி’ படத்தில் இரண்டாம் நாயகனாக, தனுஷிற்கு நண்பனாக நடித்து புகழ்பெற்றார். இதனை தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் பலரின் படங்களிலும் கமிட் ஆனார்.


சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் வெளிவந்த புகைப்படங்கள்

இப்படி அவரவர் கேரியரில் கவனம் செலுத்திக்கொண்டு புரிதலோடு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்துவந்த இந்த தம்பதிகளின் வாழ்வில் யார் கண்பட்டதோ, இருவர் வாழ்விலும் பூகம்பத்தை ஏற்படுத்தும் விதமாக 2016-ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. அதுதான் சுச்சி லீக்ஸ் பிரச்சினை. திடீரென்று ஒருநாள் சுச்சியின் எக்ஸ் தள பக்கமான ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த வீடியோக்களில் நடிகர் தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா, அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிக்கி தவித்தனர். அந்த சமயம் இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு அதில் சிக்கிய அத்தனை நட்சத்திர நடிகர், நடிகைகளும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களின் இமேஜ் டேமேஜ் செய்யப்பட்டது என்று கூட சொல்லலாம். மேலும் இந்த நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயத்திற்கும், பாடகி சுச்சித்ராவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த விவகாரம் அவர் மூலமாக வெளியானது எப்படி போன்ற பல விதமான கேள்விகளும் கேட்கப்பட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையே அதிரவைத்தது. இந்த நேரம் சுச்சித்ராவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்த கார்த்திக் குமார் திடீரென ஒருநாள் சுச்சியின் மனநிலை மிகவும் மோசமாக உள்ளதாக வீடியோ வெளியிட, இன்னொரு புறம் பாடகி சுச்சித்ரா தனது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது, இந்த சம்பவத்தை செய்தது யார்? என்று தெரியாது எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக திடீரென 2017-ஆம் ஆண்டு ஒருநாள் கார்த்திக் குமாரும், சுச்சித்ராவும் பிரிவதாக அறிவித்தனர். இதன் பிறகு இருவருக்குமே திரைத்துறையில் இருந்து பெரிதாக வாய்ப்புகள் ஏதும் வராததால் சுச்சி லண்டன் சென்று சமையல் கலை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த, கார்த்திக் குமார் தன்னுடைய தியேட்டர் கலையான மேடை காமெடி ஷோக்களை நடத்தி வந்தார். சில ஆண்டுகளில் இந்த பிரச்சினை ஓய்ந்து அவரவர் தங்கள் பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி சுமூகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் சுச்சி லீக்ஸ் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

இதுக்கு எண்டே கிடையாதா?

சுச்சி லீக்ஸ் பிரச்சினையில் இருந்து வெளியில் வந்த பாடகி சுச்சித்ரா தனக்கென்று ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் முதலில் தான் கற்று வந்த சமையல் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்தார். பிறகு நண்பரும், பாடகருமான ரஞ்சித்துடன் இணைந்து ஆல்பம் அமைத்து பாடுவது, அதனை வெளியிடுவது, சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பது என்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருந்த நேரத்தில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் கவனத்தை பெற்றார். இதற்கிடையில், ஆர்.ஜே.வாகவும் தனது பணியை தொடர்ந்துவந்த சுச்சித்ரா அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், அவரிடம் மீண்டும் சுச்சி லீக்ஸ் பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது வெடித்தெழுந்த சுச்சித்ரா 2016-ஆம் ஆண்டில் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு தனக்கே தெரியாமல் அந்த சம்பவங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக கூறினார். இதற்கு பின்னால் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும், நடிகர் தனுஷும் இருக்கிறார்கள், இது தன்னுடைய கையை மீறி நடந்த ஒரு செயல், இந்த செயலில் சம்பந்தப்பட்ட ஒரு நடிகை கூட இதுவரை இது தொடர்பாக யார் மீதும் புகார் கொடுக்கவில்லை, இதில் இருந்தே தெரிகிறது, எல்லாம் தெரிந்தே நடத்தப்பட்ட செயல் என பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் அதிர்ச்சிகரமான விஷயங்களை தெரிவித்தார். அதில் முக்கியமான விஷயம் அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்று அவர் கூறியதுதான். தங்களுக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்ற பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றபோது இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்பிறகுதான், கார்த்திக் தன் ஆண் நண்பர்களுடன் எப்படி நெருங்கி பழகுகிறார் என்பதை கவனிக்க ஆரம்பித்ததாகவும், அவரும் தனுஷும் சேர்ந்து பல கேவலமான வேலைகளை செய்துள்ளதாகவும் சுச்சித்ரா கூற, பதிலுக்கு இதனை கேள்விப்பட்ட கார்த்திக் குமார் கோபத்தில் வெடித்து தள்ளினார். தன் நீண்டகால தோழியை திருமணம் செய்துகொண்டு மிகவும் சந்தோஷமாக பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறு என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.


நேர்காணல் ஒன்றின்போது சுச்சித்ரா

இதுதான் சமயம் என்று எப்போதும் புயலை கிளப்புவதுபோல் பலரை பற்றிய தவறான விமர்சனங்களை முன் வைத்து பேசும் மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், பாடகி சுச்சித்ரா தன் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரிடம் பேசிய ஆடியோவை, தனக்கு அனுப்பியதாக சொல்லி சில ஆடியோக்களை வெளியிட்டார். இதனால் இன்னும் இந்த சர்ச்சை வெடித்து கார்த்திக்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதேநேரம் சுச்சித்ரா, தன்னிடம் பேட்டி எடுத்த யூடியூப் சேனல்கள் எல்லாம் வேண்டும் என்றே தங்கள் சேனலின் ரேட்டிங்குக்காக கேவலமான தலைப்புகளை வைத்து தன்னை வருத்தப்பட வைத்துவிட்டதாகவும், இனி யாருக்கும் பேட்டி தர போவது இல்லை என்றும், இனி தன்னுடைய சேனலில் மட்டும் படங்கள் தொடர்பான விமர்சனங்களை போடவுள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தன்னை தொடரலாம் என்றும் கூறி வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சுச்சி லீக்ஸ் பிரச்சினை இப்படியே சென்று கொண்டிருந்தால் இதற்கு என்றுதான் தீர்வு கிடைக்கும்? இந்த செயலுக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் யார் யார்? என்று எப்படி கண்டறிவது போன்ற கேள்விகளும், குழப்பங்களும் மட்டுமே நீண்டு கொண்டே செல்கின்றன. இதற்கு காலம் மட்டுமே பதில் சொல்லும்.

Updated On 3 Jun 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story